நன்றி: இராம.கி/
தேமா, புளிமா, கூவிளம் கருவிளம் என்ற வாய்ப்பாடுகள் பற்றி ஒரு கேள்வி எழுந்தது. இனிப்பான மாம்பழம் தேமா. இதுபொதுப்பெயர் தான். விதப்புப்பெயரல்ல. பொதுவாய் எல்லா மாம்பழங்களிலும் காய்நிலையில் புளிப்பிருந்து, பழுக்கப்பழுக்க, இனிப்புக் கூடும். ஒருசில மாவகைகளில் பழமாகிய நிலையிலும் புளிப்புச்சுவை போய்விடாது. காட்டாக மூக்கு மாம்பழம், பங்கனப் பள்ளி போன்றவை. மாறாக அல்பான்சோ, சவ்வாது போன்றவை இனிப்பைச் சற்று கூடக் காட்டும். புளிக்கும் மா (இங்கே பழத்தையே குறிக்கிறேன்) புளிமா. .
அடுத்தது விளம்பழங்கள். புள்>பிள்>விள் என்ற வேர் ”பிள, பிரி, உடை” எனும் பொருள்சுட்டும் விள்ளித்தின்னும் பழம் விளம்பழம். இதில் இருவகை. கூவிளமென்பது சங்கதப்பலுக்கில் வில்லுவம்> வில்வமாகும். சிவனுக்கு உகந்தது என்பார். இந்தி, அசாமி, வங்காளி, மராத்தியில் bael. குசராத்தியில் பீலி. Aegle marmelos புதலியற்(Botanical) பெயர். கருவிளமென்பது நமக்கறிந்த விளாம்பழமாகும். கபிப்ரியா, கபித்தமென்ற சங்கதப் பெயரோடு, wood apple, Feronia elephantum என்றுஞ்சொல்வர். (பிள்ளையார் சதுர்த்தி, கலைவாணி பூசை, தமிழாண்டுப் பிறப்பு, பொங்கல் நாட்களில் விருந்தினர்க்கு விளாம்பழந் தருவது தமிழர்க்கு ஒரு மரபு.)
யாப்பில் நிரைச்சீருக்குக் கூவிளம், கருவிளமென்று பெயர்களுண்டு. இவற்றின் அடையாளந் தெரியாது பலரும் வாய்ப்பாடு சொல்வர். வடக்கே விளையும் கூவிளமும், தெற்கே விளையும் கருவிளமும் இனிய கனிகள். அதிக இனிப்பிற்கு வெல்லஞ்சேர்த்துக் குடிப்பதுமுண்டு. பல்வேறு மருத்துவ குணங்களை இரண்டிற்குஞ் சொல்வர். (இங்கு விரிக்கின் அவை பெருகும்.) 2 பழங்களுக்கும் பசுமை தோய்ந்த மஞ்சள்நிற ஓடுகளுண்டு. உடையும் பழங்களாதலால் இவை விளவம் பழங்களாயின. (விளவல் = உடைதல்.) கூம்பிய விளம் கூவிளமாயிற்று. (கூவிள இலை கூர்வேலாகும்.) விளா மரப்பட்டை கருநிறமெனவே உருண்டை விளம் கருவிளமாயிற்று. முள்ளுள்ள 2 மரங்களும் வறள் நிலத்தில் வளரக்கூடியவை பழத்தின்பெயரே அந்தந்த மரங்களுக்குப் பெயர்களாயின. .மாம்பழப் பெயர் மரத்திற்கு ஆகவில்லையா? அதுபோல இவற்றைக் கொள்ளலாம்.
தேமா, புளிமா போல் கூவிளம், கருவிளம் என்ற வாய்ப்பாடுகள் நெடுகவும் பழகியவையல்ல. இவற்றோடு, பாதிரி, கணவிரி என்ற வாய்ப்பாடுகளும் புழங்கியதாய் நச்சினார்க்கினியர் சொல்வார். வாய்ப்பாடு என்பது பட்டவத்தைக் (pattern) குறிக்கும் சொல். யாப்பருங்கலத்தின் தாக்கம் பிற்காலத்தில் கூடியமையால் முன்னையத் தொல்காப்பிய விளக்கங்கள் இப்போது குறைந்துபோயின. தொல்காப்பியம் நேரசை, நிரையசையோடு, நேர்பு அசை, நிரைபு அசை என இன்னும் 2 அசைகளைச் சொல்லும். இன்றும் வெண்பாவின் ஈற்றசைகளாய் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்ப்பாடாக இவை புழங்கும். காசு, பிறப்பின் வழியாக இன்றும் நேர்பு, நிரைபு போன்றவற்றைப் புழங்குகிறோம். யாப்பருங்கலம் கூட நேர்பு, நிரைபு குறிக்காது இந்த வாய்ப்பாடுகளை மட்டும் புழங்கும்.
4 ஈரசைச் சீர்களையே (தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்) யாப்பருங்கலம் சுட்டும். தொல்காப்பியமோ 16 ஈரசைச் சீர்களைக் காட்டும். இளம்பூரணர்,
நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை = தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் நேர்நேர்பு, நிரைநேர்பு, நிரைநிரைபு, நேர்நிரைபு - மாங்காடு, களங்காடு, கடிகுரங்கு, பாய்குரங்கு நேர்புநேர், நிரைபுநேர், நிரைபுநிரை, நேர்புநிறை - ஆற்றுக்கால், குளத்துக்கால், குளத்துமடை, ஆற்றுமடை நேர்புநேர்பு, நிரைபுநேர்பு, நிரைபுநிரைபு, நேர்புநிரைபு – ஆற்றுநோக்கு, வரகுசோறு, வரகுதவிடு, ஆற்றுவரவு
என்று இவற்றின் வாய்ப்பாடுகளைத் தருவார். நச்சினார்க்கினியரும் இதைப் பின்பற்றுவார். மூவசைச்சீர் என்பது தொல்காப்பியத்தின் படி 64 வகை,
மா வாழ் கான், மா வாழ் நெறி, மா வாழ் காடு, மா வாழ் பொருப்பு மா வரு கான், மா வரு நெறி, மா வரு காடு. மா வரு பொருப்பு மா போகு கான், மா போகு நெறி, மா போகு காடு, மா போகு பொருப்பு மா வழங்கு கான், மா வழங்கு நெறி, மா வழங்கு காடு, மா வழங்கு பொருப்பு
புலி வாழ் கான், புலி வாழ் நெறி, புலி வாழ் காடு, புலி வாழ் பொருப்பு புலி வரு கான், புலி வரு நெறி, புலி வரு காடு. புலி வரு பொருப்பு புலி போகு கான், புலி போகு நெறி, புலி போகு காடு, புலி போகு பொருப்பு புலி வழங்கு கான், புலி வழங்கு நெறி, புலி வழங்கு காடு, புலி வழங்கு பொருப்பு
களிறு வாழ் கான், களிறு வாழ் நெறி, களிறு வாழ் காடு, களிறு வாழ் பொருப்பு களிறு வரு கான், களிறு வரு நெறி, களிறு வரு காடு. களிறு வரு பொருப்பு களிறு போகு கான், களிறு போகு நெறி, களிறு போகு காடு, கலிறு போகு பொருப்பு களிறு வழங்கு கான், களிறு வழங்கு நெறி, களிறு வழங்கு காடு, களிறு வழங்கு பொருப்பு
பாம்பு வாழ் கான், பாம்பு வாழ் நெறி, பாம்பு வாழ் காடு, பாம்பு வாழ் பொருப்பு பாம்பு வரு கான், பாம்பு வரு நெறி, பாம்பு வரு காடு. பாம்பு வரு பொருப்பு பாம்பு போகு கான், பாம்பு போகு நெறி, பாம்பு போகு காடு, பாம்பு போகு பொருப்பு பாம்பு வழங்கு கான், பாம்பு வழங்கு நெறி, பாம்பு வழங்கு காடு, பாம்பு வழங்கு பொருப்பு
என்று இந்த வகைகள் அமையும். யாப்பருங்கலமோ நேர்பசையையும், நிரைபசையையும் ஏற்காக் காரணத்தால் மூவசைச்சீரை 8 ஆய்ச் சொல்லும்
தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிலங்கனி, கூவிளங்கனி
என்று வாய்ப்பாடுகள் அதிலமையும். சங்கப்பாடல்கள் அனைத்தையும் தொல்காப்பிய நெறிமுறையாலும் அலகுபிரிக்க முடியும். (இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் அப்படித்தான் சொல்கிறார்.) ஆனால் பிற்காலத்தில் வந்தோர் யாப்பருங்கலம் பின்பற்றி, தொல்காப்பிய யாப்பியலைப் பின்பற்றாது போனார். தொல்காப்பியம் 4 அசைச் சொற்கள் பற்றிக் கூறாது. யாப்பருங்கலம் நாலசை பேசும்,
தேமாந் தண்பூ, தேமாந் தண்நிழல், தேமா நறும்பூ,, தேமா நறுநிழல் புளிமாந் தண்பூ, புளிமாந் தண்நிழல், புளிமா நறும்பூ,, புளிமா நறுநிழல் கருவிளந் தண்பூ, கருவிளந் தண்நிழல், கருவிள நறும்பூ,, கருவிள நறுநிழல் கூவிளந் தண்பூ, கூவிளந் தண்நிழல், கூவிள நறும்பூ,, கூவிள நறுநிழல்
என்று 16 நாலசை வாய்ப்பாடு பேசும். இருவேறு போக்குகளையும் ஒப்பிட்டு சங்க இலக்கியத்தை அலசியவர் நானறிய யாருமில்லை. ஏனோ தெரியவில்லை. தொல்கப்பிய யாப்பியல் இன்று பயன்படாது போய்விட்டது. மரப்புப்பா சார்ந்த எல்லோரும் யாப்பருங்கலமே பயன்படுத்துகிறார், (யாப்பருங்கலம் விலங்குகளை வாய்ப்பாட்டில் பயன்படுத்தாது. தொல்காப்பீயம் பயன்படுத்தும். யாப்பருங்கலம் அதிலுங் கூச்சப்பட்டு முற்றிலும் நிலத்தினைக்கு வந்துவிடும்.)
புதுக்கவிதையாளர் அதையும் துறந்துவிட்டார். ஏராளம் வழுக்களுடன் “யாப்புச் சுதந்திரம்” பேசி இன்று கவிதை நடைபோடுகிறது. பா செத்துவிட்டது.
அன்புடன், இராம.கி/
நன்றி: கண்மணி
தேமா, புளிமா, கூவிளம்காய், கருவிளம்காய் எல்லாமே பழங்களையும், பூக்களையும் குறிக்கின்றது. புளிய மரத்தின் பூக்களையும் பார்த்தேன், காயையும் பார்த்தேன், விளா/வில்வ மரத்தின் காயையும் பார்த்தேன் ஆனால் என்னால் சீரையும், இந்த பூக்களையும், காய்களையும், பழங்களையும் தொடர்புபடுத்த முடியவில்லை!///
பண்டைத் தமிழில் செய்யுள் எழுதும்போது அது வெண்பாவாகவோ /ஆசிரியப்பாவாகவோ /வஞ்சிப்பாவாகவோ /கலிப்பாவாகவோ /வேறு ஏதேனும் பாவினமாகவோ அமைய வேண்டுமெனில் அதற்கு அடிப்படையாக அமைவது யாப்பிலக்கணம் . இந்த யாப்பிலக்கணத்தின் அடிப்படை அலகு எழுத்து எழுத்து தனித்தோ /சேர்ந்தோ அமைவது அசை அசை ஒன்றோ /சேர்ந்தோ அமைவது சீர் (ஈரசைச்சீர் ,மூவசைச்சீர் ,நாலசைச்சீர் முதலியன.) சீர்கள் ஒன்றோடொன்று பிணைவது தளை . குறிப்பிட்ட செய்யுளின் பா எந்த வகையைச் சேர்ந்தது என்பதை இந்த தளையும் சீரும் தான் முடிவு செய்யும்.
அசைகள் இரண்டு வகைப்படும் அவையாவன :
- நேரசை
- நிரையசை
நேரசைகள் எவை?
- குறில் தனித்து
- குறில் தனித்து ஒற்றடுத்து
- நெடில் தனித்து
- நெடில் தனித்து ஒற்றடுத்து
நிரையசைகள் எவை?
- குறில் இணைந்து
- குறில் இணைந்து ஒற்றடுத்து
- குறில் நெடில் இணைந்து
- குறில்நெடில் இணைந்து ஒற்றடுத்து
சான்றுகள் :
‘அம்மா’,’தீர்வு ‘,’புறப்படு’,’இசைக்கலை’ என்ற சொற்களை அலகிட்டுப் பார்க்கலாம்.
அம்மா
--
அம் ---குறில் தனித்து ஒற்றடுத்து
மா ---நெடில் தனித்து
தீர்வு
--
தீர்---நெடில் தனித்து ஒற்றடுத்து
வு ---குறில் தனித்து
புறப்படு
--
புறப் ---குறில் இணைந்து ஒற்றடுத்து
படு ---குறில் இணைந்து
இசைக்கலை
--
இசைக் ---குறில்நெடில் இணைந்துஒற்றடுத்து
கலை ---குறில் நெடில் இணைந்து
ஈரசைச் சீர்களுக்குரிய குறியீடுகள்
இவ்வசைகள் சேர்ந்து வரும்போது அவற்றுக்கு அளிக்கப்படும் வாய்பாடுகளே
- தேமா
- புளிமா
- கருவிளம்
- கூவிளம்
பிற குறியீடுகள்
இவ்வாறே
- மூவசைச்சீர்கள்
- நாலசைச்சீர்கள்
நாலசைச்சீர்கள்
- தேமாந்தண்பூ
- புளிமாந்தண்பூ
- கருவிளந்தண்பூ
- கூவிளந்தண்பூ
- தேமாநறும்பூ
- புளிமாநறும்பூ
- கருவிளநறும்பூ
- கூவிளநறும்பூ
பெரும்பாலும் செய்யுளில் இடம் பெறா .(ஒரோ வழி இடம்பெறும்.)
எல்லாவற்றுக்கும் குறியீடுகள் மரபிலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ளன.
–கண்மணி
நன்றி: திருத்தம் பொன். சரவணன்
தேமா, தேமாம்பூ, தேமாங்காய், தேமாங்கனி, தேமாந்தண்நிழல் என்றெல்லாம் வாய்ப்பாடு விரியும்.
- பூ நெடில்
- காய்நெடில் ஒற்று
- கனி குறில்குறில்
- நிழல் குறில்குறில்ஒற்று
இப்படி வாய்ப்பாட்டிற்கு ஏற்ப வசதியாக எழுத்துக்களை உடைய பெயர்கள் மரங்களின் உறுப்புக்களாக இருப்பது தமிழ்மொழியின் பெருமை. :))
நன்றி, திருத்தம் பொன். சரவணன்.