loading

இந்தி பொது மொழியா 6 இந்தி பொது மொழியன்று

பதிவுற்ற நாள் 05 Jun 2019 | மறைமலை அடிகள்

6 இந்தி பொது மொழியன்று

இந்தி மொழியானது வடநாட்டவரெல்லாராலும் பொது மொழியாக வைத்துப் பேசப்படுகின்றதென்பது உண்மையாகாது. ஏனென்றால், அது வடக்கே பற்பல நாடுகளிற் பற்பல மாறுதல்களோடு பேசப்படுகின்றதே யல்லாமல், அஃதெங்கும் ஒரே வகையாகப் பேசப்படவில்லை. அங்கே ஒரு நாட்டவர் பேசும் இந்தியை, அதற்கடுத்த நாட்டிலுள்ளார் தெரிந்து கொள்ள மாட்டாதவாரயிருக்கின்றனர். இங்ஙனம் பலவகை மாறுதல்களுடன் பேசப்படும் இந்தி மொழியை ஆராய்ச்சி செய்த ஆசிரியர்கள் அதனை ‘மேல்நாட்டு இந்தி‘, ‘கீழ்நாட்டு இந்தி‘ ‘பிகாரி‘ என்னும் மூன்று பெரும் பிரிவுகளாகவும், அப்பெரும் பிரிவுகளினுள்ளே இன்னும் பல சிறு பிரிவுகளாகவும் பகுத்திருக்கின்றனர். கங்கை யாற்றுக்கு மேற்கே பஞ்சாப்பின் தென்கிழக்கில் மேட்டுப் பாங்கான ஊர்களிற் பேசப்படுவது ‘பங்காரு‘ எனவும், வட மதுரையிலும் அதனைச் சூழ்ந்த இடங்களிலும் பேசப்படுவது ‘பிரஜ் பாஷா‘ எனவும், கங்கைக்கும் யமுனை யாற்றுக்கும் இடையேயுள்ள நாடுகளின் தெற்கிற் பேசப்படுவது ‘கனோஜ்‘ எனவும், பந்தல் கண்டிலும் நருமதையாற்றையடுத்த இடங்களிலும் பேசப்படுவது ‘பந்தேலி‘ எனவும், தில்லி நகரத்திலும் அதனைச் சூழ்ந்த ஊர்களிலும் பேசப்படுவது ‘உருது‘ எனவும் வழங்கப் படுகின்றன. இவ்வாறு இந்தியாவின் வடமேற் பகுதிகளிற் பேசப்படும் இவ்வைந்து மொழிகளும் ‘மேல்நாட்டு இந்தி‘ என்னும் பெரும் பிரிவில் அடங்குவனவாகும்.

இனி, ‘கீழ்நாட்டு இந்தி‘ என்னும் பெரும் பிரிவில் அடங்குவன; ‘மைதிலி‘, போஜ்புரி‘, ‘மககி‘, என்னும் மொழிகளாகும். இம் மூன்றனுள் முதன்மை வாய்ந்தது, கங்கையாற்றின் வடக்கே மிதிலை நாட்டில் வழங்கும் ‘மைதிலி‘ என்னும் மொழியேயாகும். இப்போது இந்தி மொழி நூல்களென வழங்கப்படுவனவெல்லாம் இந்த மைதிலி மொழியிலே தான் எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் இந்தி மொழியின் பிரிவுகளாக ஆங்காங்கு வடநாட்டின்கட் பேசப்படுஞ் சிறு சிறு மொழிகள் மேலும் பற்பல உள. இவ்வாறு இந்தி மொழியின் பல பிரிவுகளாக வழங்கும் பற்பல மொழிகளைப் பேசும் பற்பல நாடுகளில் உள்ளாரும், ஒரு நாட்டவர் மொழியை மற்ற நாட்டவர் அறியாராய் உயிர் வாழ்ந்து வருதலின், இந்தி அவ்ரெல்லார்க்குந் தெரிந்த பொது மொழி என்றுரைப் பாருரை எங்ஙனம் பொருந்தும்? எங்ஙனம் உண்மையாகும்? இங்ஙனம் பற்பல பற்பல நாடுகளில் பற்பல மாறுதல்களுடன் வழங்கும் பலவேறு இந்தி மொழிகளில் எதனை இத்தென்னாட்டவர் கற்றுத் தேர்வது? எதனை இவர் கற்றாலும் அதனுதவி கொண்டு இவர் வடநாட்டவரெல்லாரோடும் பேசுதல் இயலுமா? இயலாதே. மேற்குறித்த இந்தி மொழிகளேயன்றிச், ‘சிந்தி‘, ‘லந்தி‘, ‘பஞ்சாபி‘, ‘குஜராத்‘, ‘ராஜபுதானி‘, ‘குமோனி‘, ‘கடுவாலி‘, ‘நேபாலி‘, ‘உரியா‘, ‘பங்காளி‘, ‘மராட்டி‘, ‘சிணா‘, ‘காஸ்மீரி‘, ‘கவர்படி‘, முதலான இன்னும் எத்தனையோ பல மொழிகளாலும் வடக்கே பற்பல நாட்டின்கணுள்ள பற்பல மாந்தர்களாலும் பேசப்பட்டு வருகின்றன. இம் மக்கட் பெருங்கூட்டத்துடனெல்லாம், இந்தி மொழியில் ஒன்றை மட்டுந் தெரிந்த தென்னாட்டவர் உரையாடி அளவளாவுதல் கூடுமோ? சிறிதுங் கூடாதே. வடநாட்டவரிலேயே இந்தி மொழியை அறியாமற் பலதிறப்பட்ட பன்மொழிகளை வழங்கும் மக்கட் கூட்டம் பலவாயிருக்க, இத்தென்னாட்டவர் மட்டும் இந்தி மொழியைக் கற்றுப் பேசுதலால் யாது பயன் விளைந்திடக் கூடும்? இவ் வியல்புகளை யெல்லாம் நடுநின்று எண்ணிப் பார்க்கவல்ல அறிஞர்க்கு, இத் தென்னாட்டவர்கள் தமக்கு எவ்வகையிலும் பயன்படாத்துந் தெரியாததுமான இந்தி மொழிகளில் ஒன்றை வருந்திக் கற்றலால் வீண் காலக் கழிவும் வீண் உழைப்பும் வீண் செலவும் உண்டாகுமே யல்லாமல் வேறேதொரு நன்மையும் உண்டாகதென்பது நன்கு விளங்கும். இனி இத்தென்னாடு முழுதும், இலங்கை, பர்மா, மலாய்நாடு, தென்னாப்பிரிக்கா முதலான அயல் நாடுகளிலும் பெருந்தொகையினராய் இருக்குந் தமிழ் மக்கள் எல்லாரும் பேசுந் தமிழ் மொழி ஒரே தன்மையினதாய், இந்நாட்டவரெல்லாரும் ஒருவரோடொருவர் உரையாடி அளவுளாவுதற் கிசைந்த ஒரே நிலையினதாய் வழங்கா நிற்க, வடநாட்டின்கட் பேசப்படும் இந்தி, உருது முதலான மொழிகளும் அவற்றின் உட்பிரிவான பல சிறு சிறு மொழிகளும் பலப்பல மாறுதல் வாய்ந்தனவாய், ஒருவர் பேசுவது மற்றொருவர்க்குப் புலனாகதபடி திரிபுற்றுக் கிடப்பது ஏனென்றால், அவ்விருவேறியல்புகளையுஞ் சிறிது விளக்குவாம்.

தமிழ் மொழி பேசுந் தமிழ் மக்கள் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள இத்தென்னாட்டில், இதற்குத் தெற்கேயிருந்து பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே கடலுள் அமிழ்ந்திப்போன குமரிநாட்டிலும் நாகரிகத்திற் சிறந்தோங்கிய வாழ்க்கையில் இருந்தவர்கள். இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னே தொட்டுத் தமிழ் மொழியை நன்கு கற்ற ஆசிரியர்கள்: முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை, பெரும் பரிபாடல்இ தொல்காப்பியம், பெருங்கலித் தொகை, குருகு, வெண்டாளி, வியாழமாலை, முத்தொள்ளாயிரம், நற்றிணை, நெடுந்தொகை, அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, சிற்றிசை, பேரிசை, பதிற்றுப்பத்து, எழுபதுபரிபாடல், குறுங்கலி, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், திருக்கோவையார், சீவகசிந்தாமண, திருத்தொண்டர் புராணம், சிவஞானபோதம் முதலான அரும்பெருந் தமிழ் இலக்கண இலக்கிய வீட்டு நூல்களும், அவை தமக்குச் சொற்பொருள் நுட்பமுஞ் சுவையும் மலிந்த சிற்றுரை பேருரைகளும் இயற்றி, தமிழ் மாறா நாகரிக இளமை வளத்தில் இன்றுகாறும் இனிது வழங்கச் செய்து வருதலால், அதனை வழங்குந் தமிழ் மக்களெல்லாரும் ஒருவர் ஒருவர்க்கு நெடுந்தொலைவில் இருப்பினும் இதனாற் பேசியும் எழுதியும் அளவளாவி ஓரிடத்திலுள்ள ஒரே மக்களினம்போல் உயிர் வாழ்ந்து வருகின்றனர்.


அடுத்த பக்கம்