loading

இந்தி பொது மொழியா 7 இந்தி மொழி வரலாறு

பதிவுற்ற நாள் 05 Jun 2019 | மறைமலை அடிகள்

7 இந்தி மொழி வரலாறு

மற்று, இந்தி, உருது முதலான வடநாட்டு மொழிகளோ தமிழைப்போற் பழமையானவைகள் அல்ல; மகமதிய மதத்தவரான மொகலாய அரசர்கள் வட நாட்டின்மேற் படையெடுத்துப் போந்து, ‘தில்லிப்‘ பட்டினத்தைத் தலைநகராகக் கைக்கொண்டு, அதன் கண், அரசு வீற்றிருக்கத் துவங்கிய பின்னரே அம்மொழிகள் தோன்றியனவாகும். ‘மகமது கோரி‘ என்னுந் துலுக்க மன்னன் வடநாட்டின் மேற் படையெடுத்துப் போந்து இந்திய அரசர்களை வென்று அதனைக் கைக்கொண்டது கி.பி. 1175 – ஆம் ஆண்டின் கண்ணதாகும்; அதாவது இற்றைக்கு773 ஆண்டுகட்கு முன்னதாகும். அதுமுதல் துலுக்க மன்னரது ஆட்சியானது நாளுக்கு நாள் வேரூன்றி வரலாயிற்று. கடைசியாக ‘மகமது பின் துக்ளக்‘ என்னும் மன்னனால் கி.பி. 1340 – ஆம் ஆண்டில் துலுக்க அரசு தில்லி நகரில் நிலைபெற்றது. அக்காலத்தில் தில்லி நகரிலும், அதனைச் சூழ்ந்த இடங்களிலும் பிராகிருதச் சிதைவான ஒரு மொழி வழங்கிக் கொண்டிருந்தது. அப்போது அது வெறும் பேச்சு வழக்கில் மட்டும் இருந்த்தல்லாமல், நூல் வழக்கிற் சிறிதும் இல்லை. ஏனென்றால், அது நாகரிமில்லா மக்களாற் பேசப்பட்டுப் பலப்பல மாறுதல்கள் அடைந்த வண்ணமாய் நடைபெற்று வந்ததனாலும், அறிவுடையோர் தோன்றி அம்மொழியைச் சீர்திருத்தி இலக்கண இலக்கிய நூல்களியற்றி எழுத்து வடிவில் அதனை நிலைப்படுத்தி வையாத்தனாலும் அதற்கு அந்நாளில் நூல்வழக்கு இலதாயிற்று. தில்லியில் துலுக்கரசு நிலைபெற்றபின், அவர் கொணர்ந்த அராபிமொழி பாரசிக மொழிச் சொற்கள் அம்மொழியின் கண் ஏராளமாய்க் கலக்கப் பெற்று, அவரால் அஃது ‘உருது‘ எனவும் பெயர் பெறலாயிற்று. ‘உருது‘ என்னுஞ் சொல்லுக்குப் பொருள் பாசறை, பாடி அல்லது படைவீடு என்பதேயாகும். எனவே, துலுக்கமன்னர் தாங்கைக் கொண்ட நகரையடுத்து முன்னமே பேசப்பட்டு வந்த பிராகிருதச் சிதைவான ஒரு மொழியில், தாங் கொணர்ந்த அராபிச் சொற்கள் பாரசிகச் சொற்களையும் மிகக் கலந்து தமது பாசறையிருப்பின்கட் பேசயி கலவை மொழியே அவரது காலநதொட்டு ‘உருது‘ மொழியெனப் பெயர் பெற்று நடைபெறலாயிற்று. இதனால் ‘உருது‘ என்பது துலுக்க மன்னரது படைவீட்டு மொழியாய் முதன் முதற் றோன்றி நடைபெற்ற வரலாறு நன்கு விளங்கா நிற்கும்.

அதன் பின், நூல் வழக்குடையதாய் இஞ்ஞான்று வழங்கும் இந்தி மொழியானது ‘ல்ல்லு ஜிலால்‘ என்பவரால் உருது மொழியினின்றும் பிரித்துச் சீர் திருத்தஞ் செய்யப்பட்டதொன்றாகும். இதற்கு முன் உள்ளதான பிராகிருதஞ் சிதைவு மொழியிற் கலந்த பாரசிக அராபிச் சொற்களை அறவேயொழித்து; சமஸ்கிருத மொழிச் சொற்களை மிகுதியாய் எடுத்துச் சேர்த்து அவர் இந்தி மொழியைப் புதிதாய் உண்டாக்கினார். இங்ஙனம் அவரால் ஆக்கப்பட்ட இந்தி மொழிக்கும், இதற்கு முன்னே தொட்டு நாகரிகமில்லா வடநாட்டு மக்களால் ஆங்காங்குப் பேசப்படும் பிராகிருதச் சிதைவான இந்தி மொழிக்கும் வேறுபாடு மிகுதியாய் இருக்கின்றது; அதற்குக் காரணம் என்னென்றால் முன்னையது வடசொற்கலப்பு நிரம்ப உடையதாயிருத்தலும், பின்னையது அஃதின்றிப் பிராகிருத மொழிகளின் சிதைவாயிருத்தலுமே யாமென்பதனை நன்கு நினைவிற் பதித்தல் வேண்டும். ஆகவே, வடசொற் கலப்பினால் ஆக்கப்பட்டுச் சிறிது காலமாக இப்போது நூல் வழக்கிற் கொணரப் பட்டிருக்கும் இந்தி மொழியை நம் தென்னாட்டவர் கற்றுத் தெரிந்து கொள்வதனால், இவர்கள் வடநாட்டவரெல்லாருடனும் பேசி அளவளாவிவிடக்கூடும் என்று சிலர் மடிகட்டி நின்று கூறுவது நம்மனோரை ஏமாற்றும் பொய்யுரையேயாம்.


அடுத்த பக்கம்