loading

இந்தி பொது மொழியா 8 இந்தி மொழி நூல்கள்

பதிவுற்ற நாள் 05 Jun 2019 | மறைமலை அடிகள்

8 இந்தி மொழி நூல்கள்

இனி, மேற்காட்டிய கலவைப் புதுமொழியான இந்தியில் நூல்கள் உண்டான வரலாற்றைச் சிறிது விளக்குவாம். கி.பி. 1400- ஆம் ஆண்டு முதல் 1470 – ஆம் ஆண்டு வரையில், அதாவது இற்றைக்கு 478 ஆண்டுகளுக்கு முன்னிருந்த ‘இராமனந்தர்‘ எனப்பெயரிய ஒரு துறவி இராமனையே முழுமுதற் கடவுளாக வைத்து வழிபடல் வேண்டுமென வற்புறுத்திச் சொல்லி வடநாட்டின்கட் பல இடங்களிலும் இராம வணக்கத்தைப் பரவச்செய்து வந்தார். கல்வியறிவில்லா வடநாட்டுப் பொது மக்கட்கு, இராமன் தன் தந்தையின் கட்டளையால் அரசு துறந்து கானகம் ஏகி, அங்குந் தன் மனையாளைப் பறிகொடுத்து அடைந்த துயரக் கதை மிக்கதொரு மனவுருக்கத்தை யுண்டாக்கி, அவரையெல்லாம் எளிதிலே இராம வணக்கத்தின் பாற்படுப்பித்து. இராமனந்தர் இராமன் மேற் பாடிய பாடல்கள்தாம் முதன் முதல் இந்தி மொழியில் உண்டானவை; அதனால் அவருடைய பாடல்கள் அடங்கிய இந்திமொழி நூல் ‘ஆதிகிரந்தம்‘ என வழங்கப்படுகின்றது.

இனி, இராமனந்தர்க்குப்பின், அவர்தம் மாணாக்கருள் ஒருவரான ‘கபீர்தாசர்‘ என்பவர் இற்றைக்கு 441 ஆண்டுகளுக்குமுன் காசிநகரில் தோன்றினார். நெசவு தொழில் செய்யும் ஒருமகமதிய குடும்பத்தில் இவர் பிறந்தவரென ஒரு சாரரும். ஒருபார்ப்பனக் கைம் பெண்ணுக்கு இவர் பிள்ளையாய்ப் பிறந்து அவறாற் கைவிடப்பட்டுப் பிறகு ‘நீரு‘ எனப் பெயரிய ஒரு மகதிய நெசவுகாரரால் இவர் எடுத்து வளர்க்கப்பட்டனரென மற்றொரு சாரருங் கூறுகின்றனர். இவருங், கடவுளை இராமன், அரி, கோவிந்தன், அல்லா என்னும் பெயர்களாற் பாடி வழுத்தினர். ஆனாலும், கடவுள் பலபிறவிகள் (அவதாரங்கள்) எடுத்தாரெனக் கூறுவது அடாதென்றும், இறைவனைக் கல், செம்பு, கட்டைவடிவில் வைத்து வணங்குதல் பெருங்குற்றமாகுமென்றும், இந்து சமயக் கிரியைகளுஞ் சடங்குகளும் பொருளற்ற புன் செயல்களாகுமென்றும் இவர் தம்முடைய பாடல்களில் மிகவும் கடுமையாக மறுத்துப் பாடியிருக்கின்றார். இந்தி மொழியின் ஒரு பிரிவான ‘அவதி‘ மொழியில் இவருடைய பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன. இந்தியின் மற்றொரு பிரிவான ‘மைதிலி‘ மொழியைக் கற்பவர்கள், ‘அவதி‘ மொழியிலிருக்குங் கபீர்தாசரின் பாடல்களை எளிதிலே அறிந்து கொள்ளல் இயலாது. தாம் இயற்றிய ‘விப்ரமதீசி‘ என்னுஞ் செய்யுள் நூலிற் கபீர்தாசர் பார்ப்பனருடைய கொள்கைகளை மிகுகடுமையுடன் தாக்கிமறுத்திருக்கின்றார். கபீர்தாசர் இந்தி மொழியில் இயற்றிய செய்யுள் நூல்கள் பற்பல. இவர் இறந்தபின், இவர்தம் மாணாக்கர் இயற்றிய நூல்களும் இவரது பெயரால் வழங்கப் படுகின்றன. கபீர்தாசருடைய பாடல்கள் இந்தி மொழியில் உண்டான பிறகுதான், அதாவது சென்ற நானூறு ஆண்டுகளாகத்தாம் இந்திமொழியின் ஒருபிரிவுக்கு ஓர் ஏற்ற முண்டாயிற்று.

இனிக், கபீர்தாசருக்குப்பின், அவர்தம் மாணாக்கரான ‘நானக்‘ என்பவர் ‘சீக்கிய மத்த்தைப்‘ பஞ்சாபு தேயத்தில் உண்டாக்கினார். இவருடைய பாடல்கள், பஞ்சாபியும் இந்தியுங் கலந்த ஒரு கலப்பு மொழியிற் பாடப்பட்டிருத்தலால், இந்தியைப் பயிலும் நம் நாட்டவர் இவருடைய பாடல்களையும் எளிதிலே அறிந்து கொள்ளல் இயலாது.

இனி, இற்றைக்கு 491 ஆண்டுகளுக்கு முன், தர்பங்கா மாகாணத்தின் கண்ணதான ‘பிசபி‘ என்னும் ஊரில், ‘வித்யாபதி தாகூர்‘ என்னும் பெயர் பூண்ட வைணவர் ஒருவர் தோன்றிக், கிருஷ்ண மத்த்தை உண்டாக்கி, அதனை வடகீழ் நாடுகளில் மிகவும் பரவச் செய்தனர். இந்தி மொழியின் மற்றொரு பிரிவான ‘மைதிலி‘ மொழியில் இவர், கண்ணனுக்கும் அவன் காதலி இராதைக்கும் இடையே நிகழ்ந்த காதல் நிகழ்ச்சிகளை விரித்துப் பல பாடல்களைப் பாடியிருக்கின்றனர். இப்பாடல்களையே பின்னர்ப் ‘பங்காளி‘ மொழியிற் ‘சைதன்யா‘ என்பார் மொழி பெயர்த்து, அவற்றை வங்காள தேயமெங்கும் பரவ்வைத்தனர். இதுகொண்டு, இந்திமொழி வங்காள தேயத்திலுள்ளார்க்குள் வழங்காமை அறியப் படுகின்றதன்றோ? வடநாட்டிற் பெரும்பரப்பினதான வங்காள தேயத்தார்க்கே தெரியாததான இந்தி மொழியைத் தென்னாட்டிலுள்ளவர்கள் பயின்றாலும், இவர்கள் வங்காள மக்களுடன் அதிற்பேசி உறவாட முடியாதன்றோ?

இன்னும் இங்ஙனமே கபீர்தாசர் காலம்முதல், அதாவது சென்ற 500 ஆண்டுகளாக வடநாட்டின் கட்டோன்றி சில மொழிகளில் உயர்த்துப்பாடி அவற்றை வடநாடுகளிற் பரவச் செய்த இந்திமொழிப் புலவர்களின் வரலாறுகளையெல்லாம் எடுத்துரைக்கப் புகுந்தால் இக்கட்டுரை மிக விரியும். ஆதலால், இதுவரையிற் கூறியது கொண்டு, இந்திமொழியானது 500 ஆண்டுகளுக்கு முன் நூல்வழக்கில்லாமற், கல்வியறிவில்லா வடநாட்டு மக்களால் அந்நாட்டின் பல பகுதிகளிலும் பலவாறு திரித்துப் பேசப்பட்டு, ஒரு பாலார் பேசும் மொழி மற்றொரு பாலர்க்குத் தெரியாத வண்ணம் வழங்கினமையால், அஃது இஞ்ஞான்றுங்கூடப் பற்பல மொழிகளாகவே பிரிந்துவழங்குகன்றதென்பதும், அதனால் இந்தியை வட நாட்டவர் எல்லார்க்கும் பொது மொழியெனக் கூறுவாருரை மெய்யாகதென்பதும், ஆகவே இத்தென்னாட்டவர் இந்தியைப் பயிலுதலால் அதனுதவி கொண்டு வடநாட்டவரெல்லாரோடும் உரையாடி உறவாடல் இயலாதென்பதும் நன்கு விளங்கா நிற்கும்.

அஃதுண்மையே யாயினுங், கபீர்தாசர் முதலான புலவர்கள் பாடியிருக்கும் பாடல்களைப் படித்து இன்புறுதற்காவது, இந்திமொழிப் பயிற்சி உதவி செய்யுமன்றோ வெனின்; தமிழ்மொழியிலுள்ள பழைய இலக்கியங்களைப் பயினறறியாதார்க்கு இந்தி மொழிப் புலவர்கள் பாடிய பாட்டுகள் இனிகுமேனுங், கலித்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், திருக்கோவையார், தேவாரம், பெரியபுராணம், சிவஞானபோதம் முதலிய ஒப்புயர்வில்லா நூல்களைப் பயின்று அவற்றின் அமிழ்தன்ன சுவையில் ஊறப்பெற்ற மெய்யறிவினார்க்கு, அவ்விந்தி மொழிப்பாட்டுகள் இனியா. மேலும், வடநாட்டு இந்தி முதலான மொழிகளின் பாடல்களிற் பெரும்பாலன, நம் போற் பல பிறவிகள் எடுத்துழன்று இறந்து போன சிற்றரசர்களான இராமன், கிருஷ்ணன், பலராமன், வசுதேவன் முதலானவர்களைக் கடவுளாகவைத்து உயர்த்துப்பாடியிருத்தலால், அவை பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுளாகிய எல்லாம் வல்ல சிவத்தை மக்கள் அறிந்து வழிபட்டுத் தமது பிறவியைத் தூய்மை செய்து உய்தற்குதவி செய்யாமையோடு, அவை உண்மைச் சிவ வழிபாட்டை அவர் அடைய வொட்டாமலுந் தடை செய்து மக்கட் பிறவியைப் பாழாக்குகின்றன. மற்று, மேற்காட்டிய தமிழ் நூல்களோ மெய்யான ஒரு தெய்வம் சிவமேயாதலை விளங்கத் தெருட்டி மக்களுக்கு மெய்யறிவையும் மெய்யன்பையும் ஊட்டி, அவர் இம்மையிலும் மறுமையிலும் அழியாப்பேரின்பத்திற் றிளைத்திருக்குமாறு செய்து, அவரது பிறவியைப் புனிதமாக்குத் திறத்தன. அதுவல்லாமலும், இந்தி முதலான வடநாட்டு மொழிகள், தமிழைப்போற் பழையன அல்லாமையாலும்; அவற்றை வழங்கும் மக்கள், பழமை தொட்டு நாகரிக வாழ்க்கையில் வாழ்ந்த தமிழ் மக்களைப்போல், நாகரிக வாழ்வு வாயாதவர்களாகையாலும்; சென்ற 400 அல்லது 500 ஆண்டுகளாகத் தோன்றிய வடநாட்டுப் புலவர்கள் பலரும், பண்டுதொட்டுத் தனித்த பேரறிவுவாய்ந்த தமிழ்ப் பெரும் புலவர் போலாது, சமஸ்கிருத புராணப் பொயக்கதைகளை நம்பி அவற்றின் வழிச்சென்ற மயக்க வறிவனராகையாலும்; உயிர்க்கொலை, ஊன் உணவு, கட்குடி, பல சிறுதெய்வ வணக்கம், பலசாதி வேற்றுமை முதலான பொல்லா ஒழுக்கங்களை அகத்தடக்கிய ஆரிய நுஹல்நெறிகளைத் தழுவிய வடவர், அவற்றை விலக்கி அருளொழுக்கத்தையும் ஒரே முழுமுதற்கடவுள் வணக்கத்தையும் வற்புறுத்தும் அருந்தமிழ் நூல்நெறிகளைத் தழுவாமையாலும்; அவருடைய மொழிகளையும் அவற்றின்கட் புதிது தோன்றிய நூல்களையும் நந்தமிழ்மக்கள் பயிலுதலால், இவர்கள் ஏதொருநலனும் எய்தார் என்பது திண்ணம்.

இனி, இந்திமொழிகள் நாலுகோடி மக்களாற் பேசப்படுதலாகிய தொகை மிகுதியை வற்புறுத்திக் காட்டுவார்க்கு வங்காள மொழி ஐந்து கோடி மக்களாலுந், தமிழுந் தமிழோடினமான மொழிகளும் ஆறுகோடி மக்களாலும், பேசப்படும் பெருந்தொகை எடுத்துக் காட்டப்படும். இந்தியைப் பொதுமொழியாக்கல் வேண்டுமென்று ஒரு சாரார் கூறுவரேல், அதனினும் பெருந்தொகையனிரான மக்களாற் பேசப்படும் ‘வங்காளமொழி‘ யைப் பொதுமொழியாக்கல் வேண்டுமென்று வங்காளரும் இவ்விந்திய நாட்டின் நால் எல்லை வரையிலும் பரவியிருக்குந் திராவிட மக்கள் எல்லோர்க்கும் முதன் மொழியாவதும், இந்தியாவில் மட்டுமேயன்றி இலங்கை, பர்மா, மலாய், தென் ஆப்பிரிக்கா முதலான நாடுகளிற் குடியேறி வாணிக வாழ்க்கையிற் சிறந்தாராயிருக்குந் தமிழ் மக்கள் அனைவராலும் வழங்கப்படுவதும் ஆன தமிழையே பொதுமொழியாகப் பயில்ல் வேண்டுமென நந்தமிழ் மக்களும் வலியுறுத்துவரல்லரோ?
-


அடுத்த பக்கம்