/ கண்மணித்தமிழ் 2 /
  1. இரட்டைக்காப்பி …

7. இரட்டைக்காப்பியப் பாத்திரங்களின் முடிவெடுக்கும் திறன்

முன்னுரை

சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி, மாதவி முதலிய தலைமைப் பாத்திரங்கள், கவுந்தி, தேவந்தி, மாடல மறையோன், செங்குட்டுவன், பாண்டிய மன்னன், சேரமாதேவி ஆகிய துணைப் பாத்திரங்கள்; மாநாய்கன், மாசாத்துவான் முதலான சிறுபாத்திரங்கள் அனைவரும் வாழ்வில் முடிவெடுக்கின்றனர். இம்முடிவுகளால் ஏற்படும் திருப்பங்கள் காப்பியத்திற்குச் சுவை கூட்டுகின்றன. மணிமேகலையில் உதயகுமரன், மணிமேகலை ஆகிய இரண்டு தலைமைப் பாத்திரங்களும் எடுக்கும் முடிவுகள் காப்பியத்தை வழிநடத்திச் செல்கின்றன.

முடிவெடுப்பது பற்றிய கொள்கைகள்

முடிவெடுக்கும் திறனுக்குரிய கொள்கைகளைத் திருக்குறள் கோடிட்டுக் காட்டுகிறது.

"இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்" (குறள்-517)

என வள்ளுவர் வகுத்த விதி பொது வாழ்வில் தெரிந்து வினையாற்ற; அதாவது முடிவெடுப்பதற்கு உரிய வழிமுறை ஆகும்.

"முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்" (குறள்-676)

என்று வினையாற்றுபவன் கருத்தில் கொள்ள வேண்டிய செய்திகளில் முடிபை முதன்மைப்படுத்தும் வள்ளுவர் தொடர்ந்து பின்வரக் கூடிய இடையூறுகளை நினைவிற் கொள்ள வலியுறுத்துகிறார். அத்துடன் ஒரு செயலின் வெற்றி அதனால் விளையும் பயனை அடியொட்டியது என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார்.

சாமானிய மனிதர் சரியான முடிவை எடுப்பதற்கு ஏற்ற அடிப்படைத் தேவை என்ன என்பதை பகவத் கீதையின் ஸாங்க்ய யோகம் சொல்கிறது. பொறிகள் கட்டுப்படுத்தப்பட்ட ஒழுக்கச் சீர்மையில் இருந்தால் அறிவு தெளிந்து ஒரு நிலைப்பட்டு இருக்கும். இல்லையேல் புலனடக்கமின்மை> ஆசை> சினம்> மனக்குழப்பம்> நினைவிழத்தல்> அறிவு செயல்படா நிலை; என்ற படிநிலைகளில்

அழிவு ஏற்படும். சிற்றின்பத்தைப் பெரிதாக எண்ணி ஒரு மனிதன் வாழ்கின்ற போது அவனுள் பற்று எழுகிறது. அக்கவர்ச்சி உடைமையாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் இச்சையைத் தூண்டுகிறது. ஆசை அடங்காதபோது வெறியாகிக் கோபமாக உருப்பெறுகிறது. சினம் மனக்குழப்பத்தை ஏற்படுத்த; நினைவு தப்பி; கடமையை மறந்து; பகுத்தறிவு சிதைவடையும் (இராமசாமி தேவராசன், மொ.பெ.ஆ., பகவத் கீதை, அத்.2, ஸ்லோகம்-63, ப.82). இப்படிநிலைகள் சிலப்பதிகாரத்தில் முறையாகப் பொருந்திச் சிக்கலை முறுக்கேற்றுகின்றன.

முடிவெடுக்கும் தளத்தின் இருகூறுகள்

அகவாழ்வு புறவாழ்வு என வாழ்வு இருகூறு படுவது போன்றே முடிவெடுக்கும் தருணங்களையும் பொதுவாழ்வு, குடும்பவாழ்வு என இருபிரிவுகளுக்குள் அடக்கலாம். புறவாழ்வில் சமூகநலனுக்கு ஆக்கம் அளிக்கும் முடிவே சிறந்த முடிவாகும். தம்மைச் சார்ந்த குடும்பத்தார்க்கு ஊறு விளைவிக்காத முடிவே குடும்பவாழ்வில் சிறந்த முடிவு எனலாம்.

செங்குட்டுவனும் சேரமாதேவியும்

அகவாழ்விலும் அரசியலிலும் செங்குட்டுவன் முடிவெடுக்கும் போக்கு சிறப்பாக உள்ளது. யார்யாரிடம் எவ்வெச் சிக்கலுக்குக் கருத்து கேட்க வேண்டுமோ அவரவரிடம் தேவைக்கேற்பக் கலந்து ஆலோசித்துத் தன் அறிவையும் பயன்படுத்தி முடிவெடுக்கிறான். மனைவியோடும் பரிவாரத்தோடும் நாட்டின் எல்லைப் பகுதியில் வலம்வந்து கடமையைச் செய்வதோடு மலைவளமும் கண்டு களிக்கும் அவனிடம்; மலைவாழ் மக்கள் கண்ணகி வேங்கை மரத்தடியில் வந்து இருந்து தேவலோகம் சென்றதைக் கூற; அவளது வரலாற்றைச் சாத்தனார் மூலம் அறிந்து கொண்டவன் மனதில் பாண்டிமாதேவி, கண்ணகி இருவரின் பெருமையும் ஒருங்கு கிளர்ச்சியை ஏற்படுத்தின. இருவரில் யார் மிகுந்த வணக்கத்திற்குரியவர் என்ற ஐயம் எழுந்தது. தயக்கமே இல்லாமல் அதைத் தன் மனைவியிடம் தீர்த்துக் கொள்கிறான்.

"உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும்

செயிருடன் வந்தஇச் சேயிழை தன்னினும்

நன்னுதல் வியக்கும் நலத்தோர் யார்" (சிலப்.காட்சி.அடி.-

107-109) என்று கேட்டுத் தன் மனைவியின் கருத்தை அறியத் துணிகிறான். 'கணவனின் இறப்பைக் கண்ணால் காணுமளவில் உயிர்விட்ட ஒப்பற்ற பாண்டிமாதேவி தேவலோகத்தில் பெருமை பெறுவாள். அத்திறம் நிற்க; நம் அகல்நாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்' என்று முடிபுரைக்கிறாள் சேரமாதேவி. இரண்டு பெண்களின் பெருமையை ஒப்பிட்டு முடிபுரைக்கும் தகுதி இன்னொரு பெண்ணுக்குரியது என்ற செங்குட்டுவன் மனப்பாங்கு இங்கு நோக்கற்குரியது. காரணத்தோடு அதற்குத் தீர்வு சொல்லும் சேரமாதேவியும் சிறந்த முடிவைக் கூறிய பெருமைக்குரியவள் ஆகிறாள். இருவரும் வள்ளுவர் வகுத்த விதிக்கேற்பச் செயலாற்றுகின்றனர்.

பத்தினியை வழிபட வேண்டும் என்ற மனைவியின் கருத்தைக் கேட்டதும் மேல்விளக்கத்திற்கு நூலறி புலவரை நோக்குகிறான். அவர்கள் பொதியிலில் கல்லெடுத்துக் காவிரியில் நீராட்டக் கருத்துரைத்த போது தான் மாறுபட்டு; இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் நீர்ப்படை செய்ய முடிவெடுக்கிறான். இமயத்தாபதர் வடநாட்டு மன்னர் பற்றி உணர்த்திய செய்தியும்; அங்குள்ள தவமுனிவர்களைப் பேணும்படிக் கேட்டுக் கொண்ட அவர்களது விண்ணப்பமும் அவன் தனது முடிபை முனைப்புடன் செயல்படுத்தக் காரணம் ஆகின்றன. வில்லவன் கோதை, அழும்பில் வேள் ஆகியோரிடமும் கலந்து பேசி; சஞ்சயன் வந்து நூற்றுவர் கன்னரின் நட்பு மொழிகளைச் சொன்ன பிறகும் அவன் பின்வாங்கவில்லை. போரிட்டு வெற்றி பெற்றவுடன் கொடுத்த வாக்கு மறவாமல் வில்லவன் கோதையை ஏவித் தவம் செய்பவர்களுக்கு வேண்டுவன செய்யச் சொல்கிறான். வினை செயல் வகை பற்றிய திருக்குறள் விதிக்கு ஏற்ப முடிவெடுக்கும் திறன் பெற்றவனாகச் செங்குட்டுவன் திகழ்கிறான்.

சமயம் சார்ந்த பாத்திரங்களும் செங்குட்டுவனும்

கவுந்தியடிகள், மாடலமறையோன் ஆகியோர் குறிப்பிட்ட சமயம் சார்ந்தவராக இடம் பெற்றுத் தத்தம் சமயக்கொள்கைக்கு ஏற்ப முடிவெடுத்து நகர்கின்றனர். ஆனால் செங்குட்டுவன் சமயப்பொறையுடன் தான் சமுதாயத்திற்கு வழிகாட்டுபவனாக முடிவு எடுக்கிறான்.

சோழநாட்டிலிருந்து மதுரைக்குச் செல்லும் மூன்று வழிகளில் நடுவிலிருந்த வழியைத் தேர்ந்தெடுக்கும் கவுந்தியின் போக்கு சமணம் சார்ந்த முடிவாகும். இது 'காமுறு தெய்வம் கண்டு அடி பணிய நீ போ' என மாங்காட்டு மறையோனைச் சாடுவதில் தெரிகிறது (சிலப்.காடு.அடி.- 160-161). தன்னைத் துணையாகத் தேடி வந்து சேர்ந்த கண்ணகியின் துன்பத்தையும் கோவலன் இறப்பையும் கேட்டவுடன் உண்ணா நோன்பிருந்து உயிரை விடுவதும் சமண சமயக் கொள்கையைப் பின்பற்றிய போக்கே ஆகும். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு எதுவுமில்லை.

மாடலமறையோன் தன் வாய்மொழி கேட்டு; கண்ணகியின் தாயும் கோவலன் தாயும் இறந்ததால்; தீர்த்தமாடிப் பாவம் போக்க முனைவது அவன் சார்ந்த சைவசமயக் கொள்கை அடிப்படையில் எடுத்த முடிவே ஆகும் (சிலப்.நீர்ப்.அடி.- 109-110). இம்முடிவால் சமுதாயத்திற்குப் பயனேதும் இல்லை. ஆனால் செங்குட்டுவனின் செயல்பாடு சமுதாயத்திற்கு நல்வழி காட்டுவதாக அமைந்துள்ளது. வடநாட்டுப் போருக்குக் கிளம்பும் முன் ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன் சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த; சிவபெருமானை வழிபட்டுக் கொடுத்த மாலையைத் தலையில் அணிந்தமையால்; அதை வாங்கித் தன் தோள்களில் சேர்த்துக் கொண்டான் (சிலப்.கால்.அடி.- 62-67). சைவமாயினும் வைணவமாயினும் அதனதன் பெருமை போற்றுதற்குரியது; அதில் ஏற்றத்தாழ்வோ விருப்பு வெறுப்போ கொள்ள வேண்டிய தேவை இல்லை என்ற செங்குட்டுவனின் முடிவு சமுதாயத்திற்கு நல்வழி காட்டக் கூடியதாகும்.

காப்பியத்தலைவரும் பாண்டியனும்

தவறான முடிவெடுப்பவராகக் கதைத்தலைவர் இருவரும் பாண்டிய வேந்தனும் காணப்படுகின்றனர். மூவரும் தவறிழைக்கக் காரணம் புலனடக்கம் இன்மையே. பொறிகளைக் கட்டுப்படுத்தாமல் அழிவெய்துகின்றனர்.

கோவலன் யாரிடமும் கலந்து பேசாமலே ஊரை விட்டுச் செல்ல முடிவெடுத்து அழிவெய்துகிறான். ஊரார் கண்டேத்தும் செவ்வேளாகவும், மண் தேய்த்த புகழினானாகவும், செல்லாச் செல்வனாகவும், இல்லோர் செம்மலாகவும் வாழ்ந்த கடமை மறவன்

கோவலன் அழிவெய்துதற்குரிய காரணங்களாக இளங்கோவடிகள் பின்னிக்காட்டும் நிகழ்ச்சிகளுக்குக் கீதைக் கருத்துகள் அரணாகின்றன. மாதவிபால் கொண்ட ஆசை காரணமாக ஆயிரத்தெண் கழஞ்சு பொன் ஒருமுறையாகக் கொடுத்து மாலை வாங்கி அவள் இல்லத்தில் நுழைகிறான். அவள் தனக்குரியவள் என்னும் இச்சை அளவிலாது ஏற்பட்டதால் தான்; அவள் இந்திர விழாவில் ஆடிய போது ஊடல் கொள்கிறான். அதே தன்னுடைமை உணர்ச்சி அவள் பாடிய கானல்வரிக்கும் சினம் கொள்ளச் செய்கிறது. சினம் காரணமாக மனம் குழம்பிய கோவலன் சிந்திக்காமல் மாதவியைப் பிரிகிறான். அதே குழப்பநிலையில் கூலமறுகில் நின்று கொண்டிருந்த போது வசந்தமாலை கொண்டு வந்த மாதவியின் காதல் கடிதத்தைப் பெற மறுக்கிறான். அவனது மனக்குழப்பம் மாதவியைப் பொல்லாதவளாக; உண்மை அன்பு இல்லாத ஆடல்மகளாகவே அவனுக்குத் தோற்றியது. கண்ணகியை அடைந்த கோவலன் தன் உற்றார், பெற்றார் பற்றிய நினைவை இழந்தான். தான் வாழும் நகரின் ‘பதியெழுவறியாப்’ பண்பு மேம்பட்ட குடிகள் வாழும் பெருமையையும் உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபத்தில் தலைசிறந்த நிலையையும் மறந்தான். மதுரைக்கு மனைவியுடன் புறப்பட்டான். அந்த எண்ணம் மனதில் தோன்றிய பின்; மறுமுறை சிந்தித்துப் பார்த்தானில்லை. மனைவியை உடனழைத்துச் செல்வது சரியா? அவளது உடல்நிலையும் இதுவரை கொண்ட வாழ்வுமுறையும் தொலைதூரப் பயணத்திற்கு ஒத்து வருமா? பல சேடிகளுடன் செல்வவளத்தில் வாழ்ந்த கண்ணகி யாருமறியாப் புதுச்சூழலில் தனிமையில் எப்படி இருப்பாள்? என்ற சிந்தனை ஏதுமில்லாது தன்நிலை மறந்து செயலாற்றுகிறான் கோவலன். நீண்ட பயணத்தின் போது மாதவியின் கடிதத்தைக் கோசிகமாணி மூலம் பெற்ற போது; தான் செய்த தவறுகளைத் தானே உணர்கிறான். மாதவி எழுதியனுப்பிய முடங்கலை அப்படியே தன் பெற்றோருக்கு அவன் அனுப்புவதன் மூலம்; மாதவி தன் தீது இலள் என்றும்; தான் தீதுடையவன் என்றும்; அவன் உணர்ந்த போது மனம் சோர்வடைகிறான். வையையைக் கடந்த பின் கவுந்தியடிகளுடன் பேசும் போதும் அம்மனச் சோர்வுடனேயே பேசுகிறான். ஆயர்சேரியில் தன் மனைவியுடன் பேசும்போதும்; தன் தவறுகளைத் தானே வரிசைப்படுத்துகிறான் கோவலன்.

"வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு

குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்

பொச்சாப் புண்டு பொருளுரை யாளர்

நச்சுக் கொன்றேற்கு நன்னெறி உண்டோ?

இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்

சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்

வழுவெனும் பாரேன்" (சிலப்.கொலை.அடி.- 63-69)

என்று புலம்பியவன் கண்ணகியின் காற்சிலம்பை எடுத்துக் கொண்டு மன்னர் பின்னோரான தன் குலமுதல்வர் எவரையும் பாராமல்; தன் தந்தை பெயரைச் சொன்னாலே தன்னை விருந்தினனாக ஏற்று உபசரிக்கக் கூடிய வணிகரைப் பார்க்க முயலாமல்; பொற்கொல்லனிடம் தன் மனைவியின் காற்சிலம்பை விலை பேசும் போது பகுத்தறிவு சிதைந்த நிலையில் காட்சியளிக்கிறான். வஞ்சக மனத்துடன் சேவகரிடம் பொற்கொல்லன் உரையாடிய நேரத்திலோ; கல்லாக் களிமகன் வாள் வீசிய நேரத்திலோ; கோவலன் செயல்படும் நிலையிலேயே இல்லை. புத்தி நாசமடைந்த நிலையில் அவன் இருந்தமையால் கடக்களிறடக்கிய அவன் கைகள் செயலற்றுப் போயின. தான் வாழ்ந்த சமூகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை உன்னதமாகச் செய்த கோவலன்; மனைவிக்கும் பெற்றோர்க்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் தவறாக முடிவெடுத்தமைக்கு புலனடக்கமின்மையே மூலகாரணம் ஆகிறது.

பாண்டியன் ஆடல்மகளிரை ஆர்வம் மீதூரப் பார்த்து ரசிக்க; பாண்டிமாதேவி ஊடல் கொண்டு பொய்க்காரணம் சொல்லி அந்தப்புரம் செல்ல; அவ்வூடலைத் தணிக்க எண்ணி விரைந்தவன் யாரிடமும் ஆலோசிக்காமல் அவசரப்பட்டுக் 'கொன்று அச்சிலம்பு கொணர்க' என்று ஏவலர்களை அனுப்பிக் கோவலனைக் கொல்லச் செய்கிறான்; செங்கோல் வளைந்தமை புரிந்தவுடன் அறமே அவனுக்குக் கூற்றாகி விட உயிரை விடுகிறான். புலனடக்கம் இன்மையால் தவறாக முடிவெடுத்து அழிவெய்துகிறான்.

உதயகுமரன் மணிமேகலை மேல் விளைந்த ஆசையால் அவளைப் பின்தொடர்கிறான் (eve teasing). அவனிடமிருந்து தப்பிக்க மணிமேகலை காயசண்டிகை உருவில் உலவுகிறாள். உண்மையைத் தெரிந்து கொண்ட உதயகுமரன் பின்னொருநாள் மணிமேகலை என்று எண்ணிக் காயசண்டிகையிடமே வம்பு வளர்க்கிறான். இதைக்கண்ட அவள் கணவன் விஞ்சையன் உதயகுமரனைக் கொன்று விடுகிறான். புலனடக்கமின்றித் தவறான செயல்பாட்டால் அழிகிறான்.

கண்ணகியும் மாதவியும்

புகார்க் காண்டத்தில் அமைதி காக்கும் கதைத்தலைவி கண்ணகி பேசும் சொற்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சோமகுண்டம், சூரியகுண்டம் துறை மூழ்கிக் காமவேள் கோட்டம் கைதொழுவது ‘பீடன்று’ என்று தேவந்தியிடம் கூறும் கண்ணகியின் பேச்சு தமிழ்ச்சமுதாயத்தை ஈர்த்த காரணம் அவள் கணவனைத் தவிர வேறு தெய்வத்தை வணங்காத பெருமை உடையவள் என்ற குறுங்கோண மனநிறைவு தானேயன்றி; வாழ்க்கைக்குப் பயன்படுவது அன்று. ‘சிலம்புள கொண்ம்’ என்று அவள் கோவலனிடம் எடுத்துக் கொடுப்பதும் அறிவுபூர்வமானது இல்லை. ‘ஏடலர் கோதாய் எழுக’ என்று கோவலன் சொல்ல மறுபேச்சு இல்லாமல் எழுந்து சென்றது கண்ணகி எடுத்த தவறான முடிவு. மதுரை சென்று ஒருவேளை உணவு உண்டவுடன் அவனே ‘எழுகென எழுந்தாய் என் செய்தனை?’ என்று கேட்கிறான். அவன் மறந்த கடமைகளை எல்லாம் மாதவி கோசிகமாணி மூலம் கடிதம் அனுப்பி நினைவூட்டி விட்டாள். மாற்றா உள்ள வாழ்க்கையள் ஆகக் கண்ணகி முடிவெடுத்தது; அவளது கணவனுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்கவில்லை.

"அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்

வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்

குரவர் பணியன்றியும் குலப்பிறப் பாட்டியொடு

இரவிடைக் கழிதற்கு என்பிழைப் பறியாது

கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்

பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி" (சிலப்.புறஞ்.அடி.-

87-92) என்ற மாதவியின் எழுத்துகள் அவன் மறந்த கடமையை நினைவூட்டின. வாழ்க்கைத்துணை என்னும் பொறுப்புக்குத் தகுதி வாய்ந்த பெண்ணாகக் காணப்படும் மாதவி சிறந்த முடிவையும் எடுக்கிறாள். கோவலனின் அகால மரணத்தையும் கண்ணகி பட்ட துன்பத்தையும் கேள்விப்பட்ட மாதவி தன் கணிகையர் குலவாழ்வைத் துறந்து பௌத்த மடத்தில் சேர்ந்து மகளைத் துறவுக்கோலம் பூணவைக்கிறாள் (சிலப்.நீர்ப்.அடி.- 103-109). அவளது முடிவு புகார் நகர மக்களுக்குச் சிறந்த சமூகசேவகியைத் தந்ததால் மிகச் சிறந்த முடிவு என்னும் பெருமையைப் பெறுகிறது. தனக்கும் கோவலனுக்கும் பிறந்த மகள் மணிமேகலையை;

"மாபெரும் பத்தினிமகள் மணிமேகலை" (மணி.ஊர்.அடி-55)

என்று சொல்லிக் கணிகையர் கூட்டத்திலிருந்து ஓரங்கட்டித் துறவின் மேன்மையை உணர்த்துகிறாள்.

சமூக சேவை ஆற்றும் பாத்திரங்கள்

தந்தை கோவலன் வணிகன் எனினும்; கணிகைக்குப் பிறந்ததால்

தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று;

"இகழ்ந்தனனாகி நயந்தோன் என்னாது

புதுவோன் பின்றைப் ,போனதென் நெஞ்சம்

இதுவோ அன்னாய் காமத்து இயற்கை

இதுவே யாயின் கெடுக அதன்திறம்" (மணி.மணிமேகலா.

அடி.- 68-71) என்று உதயகுமரன் பால் சென்ற பதின்மவயது இளமனதின் ஆசையை அடக்கும் சிறப்பான முடிவை மணிமேகலை எடுப்பதால் அவளது வாழ்க்கை பசிப்பிணி போக்கிப் பேரறம் செய்யும் சமூகப் பணியில் ஈடுபடுவதாக அமைகிறது. மாசாத்துவானும் மாநாய்கனும் தம் மக்களுக்கு நேர்ந்த அவலமுடிவை மறக்கத் துறவிகளோடு சேர்ந்து தம் பொருளைத் தானமாக அளித்துச் சமூக சேவையில் ஈடுபடும் நன்முடிவை எடுக்கின்றனர்.

முடிவுரை

தன் மனைவியிடம் கருத்துக் கேட்டும்; அரசவை அங்கத்தினருடன் ஆலோசித்தும்; சமயப்பொறையுடனும் முடிவுசெய்து இருபத்தொன்றாம் நூற்றாண்டுச் சமுதாயத்திற்கு நல்லுதாரணமாக வழிகாட்டுகிறான் செங்குட்டுவன். கதைத்தலைவி கண்ணகி சரியான முடிவெடுக்கத் தவறியவளாக இருக்க; மாதவியிடம் அக்குறை இல்லை. பாண்டியனும் கதைத்தலைவர்களாகிய கோவலனும் உதயகுமரனும் புலனடக்கம் இன்மையால் தவறான முடிவெடுத்து வாழ்க்கையில் முடிவெய்துகின்றனர். கதைத்தலைவி மணிமேகலையோ முடிவெடுப்பதில் தன் தாயையும் மிஞ்சியவளாகத் தன்னை நிரூபிக்கிறாள். சமயம் சார்ந்த பாத்திரங்கள் எடுக்கும் முடிவு இன்றைய சமூகநலனுக்குச் சற்றும் துணை செய்வன அல்ல.