/ கண்மணித்தமிழ் 2 /
  1. ஒரு …

6. ஒரு ஆய்வுக்கட்டுரை வழிவகுக்கும் புதிய ஆய்வுக்களங்கள்

0.0 முன்னுரை:

0.1 முனைவர் ஜார்ஜ் L.ஹார்ட் 1987ல் எழுதிய “Early Evidences for Caste in South India” என்னும் ஆய்வுக்கட்டுரையின் போக்கு தூண்டும் சிந்தனைகள் எத்தகைய புதிய ஆய்வுப்பொருண்மைகளை நமக்குத் தருகின்றன என்று கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

0.2 சங்ககாலத்தில் இருந்த சமூக அமைப்பு பற்றி எழுதிய அவரது கட்டுரை உலகஅளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. சங்ககாலத்தில் ஜாதி வேறுபாடு இருந்தது என்பதில் ஐயமில்லை. அக்கட்டுரைச் செய்திகளைத் தொகைநூற் செய்திகளோடு ஒப்பிடுங்கால்; செவ்விலக்கிய காலத்திலும் அதற்கு முன்னரும் வாழ்ந்த திணைமாந்தரது சமூக வரலாற்றிற்குத் துணைசெய்யும் ஆய்வுக்களங்கள் தென்படுவதால்; இவ்ஆய்வு சிறப்புப் பெறுகிறது. முதன்மைத் தரவுகள் மேற்சுட்டிய கட்டுரையின் முதல் ஒன்பது பக்கங்களில் இருந்தும், தொகைநூல்களில் இருந்தும் தரப்பட்டு உள்ளன. சிலப்பதிகாரமும், பிற ஆய்வாளர் கருத்துகளும் இரண்டாம் நிலைத்தரவுகளைத் தருகின்றன.

1.0 பாணரும் கிணையரும்:

‘தற்காலப் பறையன் போன்ற கிணையன் பாணனைக் காட்டிலும் தாழ்ந்தவனாகக் காணப்படுகிறான்' என்பது முனைவர் ஜார்ஜ் ஹார்ட்டின் கட்டுரை தரும் செய்தி (“The Kiïaiyaú seems to have been a bit lower than the Påïaú….He was probably the same as the modern Paõaiyaú” p.3). கிணையன் பாணனைக் காட்டிலும் தாழ்ந்தவன் என்று சொல்லப்படுவதற்குரிய சான்று எங்கும் இல்லை.

1.1 தொகைநூல்களில் பாணர் தலைமை தாங்கிச் செல்லும் கலைக்குழு பற்றிய வருணனை சிறு.அடி.- 13-40, பெரு.அடி.- 1-22, பொரு.அடி.- 1-59, மலை.அடி.- 1-50 என; பலவிடத்தும் காணப்படுகின்றன. பாணர் பாடும் கலைநிகழ்ச்சியில் யாழ் முதன்மைக் கருவி; தாளத்திற்கு உரிய கிணை பக்கவாத்தியம். தொழில் முறையில் பாணன் யாழ் வாசிப்பதால் தலைமை சான்றவன்

ஆகிறான். கிணையன் பாணனுக்குக் கீழே பணி ஆற்றுகிறான். தடாரிப் பறை முழக்கும் குழுவில் பறை முழக்குபவனே முதன்மை பெறுகிறான். (புறம்.376, 381, 384). இவர்களது சமூகப் பிரிவைச் சுட்டிக்காட்டும் மாங்குடி கிழார்; பாணன், துடியன், பறையன், கடம்பன் அனைவரையும் ஒப்பவே பெருமைப்படுத்துகிறார் (புறம்.335). ஒளவையார், காக்கைப் பாடினியார் எனப் பலரது கலைக்குழுக்கள் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன. இக்குழுக்களின் அமைப்பு பற்றிய ஆய்வு நிகழ்த்த வேண்டிய ஒன்றாகிறது.

1.2 கிணையன் மேல்தட்டு மக்கள் வீட்டில் நுழைய அனுமதி இல்லை என்று சொல்லிக் (“The kiïai drummer… we do not encounter him in the houses of the upper classes” p.9); கரும்பனூர் கிழான் பற்றிய பாடலைச் சுட்டுகிறார் (புறம்.384). இப்பாடல் நீர் வறண்ட கோடையில் அவன் எவ்வாறு விருந்தயர்ந்தான் என்கிறது. இன்னொரு பாடலில் கரும்பனூர் கிழான்; ‘மன்னர் மனை சென்று ஊனுணவிற்காகக் காத்துத் துன்புற வேண்டாம்; எவ்வளவு தொலைவில் இருந்தாலும் வறட்சிக் காலத்தில் என்னிடம் வந்து பாலிற் கரைத்தும், பாகுடன் சேர்த்தும் வயிறார உண்டு செல்க’ என்கிறான் (புறம்.381). ஆதரிப்பாரைத் தேடிப் பசியோடு செல்லும் கிணையனை அம்பர் கிழான் அருவந்தை; முதலில் நல்ல உடையைத் தந்து பின்னர் விருந்தளித்தான் எனப் பார்க்கிறோம் (புறம்.385). கிணையன், கிழான் இருவரும் திணைமாந்தர் என்றிருக்க; பாடல்தலைவன் வீட்டில் நுழைய அனுமதியில்லை என்னும் கருத்திற்கு ஆதாரமில்லை. எனவே இவர்களது சமூகநிலை பற்றித் தெளிவுபடுத்தும் ஆய்வு அவசியமாகிறது.

2.0 கடம்பன்:

‘கடம்பன் முருகவழிபாட்டில் பூசாரி’ என அவர் கருதுகிறார். (“the Kaìampaú; probably a priest of Murugan, as that god wore a garland of kaìampu flowers” p.6).

2.1 கடம்பர் முருகவழிபாட்டில் பூசாரிகளாக இருந்தமைக்கு ஆதாரம் ஏதும் கிட்டவில்லை. கடம்பமரம் முருகனின் அம்சமாகக் கருதப்பட்டது. முருகவழிபாட்டில் வெறியாடுவோனை வேலன் என்று தான் தொகை நூல்கள் சுட்டுகின்றன. சிலப்பதிகாரம் முருகனைக் ‘கடம்பமாலை சூடியவன்’ எனும் பொருள்பட சுட்டகிறதேயன்றி (குன்றக். பா.10,13,18) அப்பெயரால் அவனை விளிப்பது இடைக்கால வழக்கே ஆகும்.

இமயவரம்பனும், கடல்பிறக்கோட்டிய குட்டுவனும் கடற்கடம்பரை அடக்கினர் (பதிற்.11, 12, 17, 20, 41, 45, 46, 48; அகம்.127). இதனால் கடம்பர் என்னும் மக்கள் இனத்தவர் மேலைக் கடற்கரையை ஒட்டிய தீவுகளில் இருந்தனர் என்று பெறுகிறோம்.

ஆய்வேள் கொங்கரைக் குடகடல் ஓட்டிய ஞான்று விட்டுச்சென்ற வேலின் மிகுதி அவன்நாட்டு யானைக்கூட்டத்திற்கு உவமையாகிறது (புறம்.130). கொங்கு நாட்டு மக்களினம் ஒன்றைக் கடலுக்குள் ஓட்டினான் எனும் செய்தி; தம் வாழ்வாதாரத்திற்காகப் போராடிய வீரமிகுந்த மக்கட்கூட்டம் ஒன்றை நமக்குக் காட்சிப்படுத்துகிறது. வந்தேறிய வேளிர் நெல் வேளாண்மை செய்யத் தமிழகத்துத் திணைமாந்தருடன் போராட்டம் நிகழ்த்த வேண்டிய தேவை ஏற்படுவது இயற்கையே. வருணத்தார் வருகையால் கடம்பர் வாழ்வின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டனரா என்னும் கேள்வி எழுகிறது.

வரலாற்றுக் காலத்தில் கடம்பரில் பல பிரிவினர் இருந்தனர். சிலப்பதிகாரம் பாடிவீட்டில் செங்குட்டுவனைக் காணவந்த பல்வேறு இனத்தவருள் ‘பங்களர்’ என்னும் கூட்டத்தினரைக் குறிக்கிறது (காட்சிக்.அடி-157). இவர்கள் கடம்பர் இனத்தின் ஒரு பிரிவினராவர் (புலவர் குழந்தை, கொங்கு நாடு, ப.125).

மேலைநாட்டார் குறிப்புக்களில் கடற்கொள்ளையர்; வெள்ளைத்தீவு என்று பொருள்படும் லியுகேத்தீவில் தூவக்கல் என்று அழைக்கப்படும் பலிப்பாறையில், வேற்று நாட்டு வணிகரைப் பலியிட்டமை பற்றிய செய்திகள் உள்ளன (கிருஷ்ணசாமி ஐயங்கார்,S., சேரன் வஞ்சி, ப.7-10). மாங்குடி கிழார் சுட்டும் கடம்பருக்கும் இக்கூட்டத்திற்கும் தொடர்புள்ளதா? என்பது ஆய்விற்குரியது.

3.0 துடியன்:

புலையன் என்று தொகைநூல்கள் குறிக்கும் துடியரையும் கலைஞர் என்கிறார் (“may divide these performers into four broad groups: the Påïaús...the tuìi drummers” p.8). துடியர் ஒரோவழி கலைக்குழுவில் சேர்த்துப் பேசப்படினும் அலுவலராகவே பெரிதும் காணப்படுகின்றனர்.

3.1 தொகை நூல்களில் துடி அடிப்பவர் பலதரப்பட்டவராக இருப்பதைக் காண்கிறோம். ஆற்றில் வெள்ளம் பெருகினால் துடியடித்து அறிவித்தனர் (பரி.7); போரின் போது துடி முழக்கினர்

(கலி.15; நற்.77; புறம்.260, 269, 287, 291; அகம்.89, 159, 372 ); கொள்ளைக்கு எயினர் துடி அடித்தனர் (பட்டி. அடி.265; அகம்.79); நடுகல் வழிபாட்டில் துடிக்கு இடம் உண்டு (அகம்.35) வேட்டையின் போது துடி முழகிங்கியது (புறம்.170). கள்ளுண்டு களிக்கும் போதும் துடி முழங்கியது (அகம்.261) துடியர் என்ற இனம் யாரை எல்லாம் குறிக்கும்? யாரெல்லாம் துடியை முழக்கினர்? என்பது ஆய்விற்குரியது.

4.0 மாங்குடிகிழார் கொள்கை :

‘மாங்குடி கிழாரின் பாடல் சொல்லும் நான்கு குடிகள் வாழ்ந்த காட்டில் நாகரிகத்தின் அறிகுறியாகிய நெல் பயிரிடப்படவில்லை; பிராமணர் வழிபட்ட வடஇந்தியத் தெய்வங்கள் இல்லை; அவரது சமய நம்பிக்கை சீரற்ற சக்தியை அடியொட்டியது’ என்கிறார். (“they are associated with a wilderness area that is out of the civilized area marked by rice cultivation, and out of the area to which the Brahmins and others had brought the newer North-Indian gods…The life of some of these low-status groups, especially of the performers… signifies a dangerous and disordered power associated with…” p.6-8)

4.1 மாங்குடிகிழாரின் பாடல் பின்வருமாறு:

“அடலருந் துப்பின் …

குரவே தளவே குருந்தே முல்லையென்

றிந்நான் கல்லது பூவுமில்லை

கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே

சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையோடு

இந்நான் கல்லது உணாவும் இல்லை

துடியன் பாணன் பறையன் கடம்பன்என்று

இந்நான் கல்லது குடியும் இல்லை…

கல்லே பரவின் அல்லது

நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே” (மேற்.)

இப்பாட்டு தமிழ்ச்சமூக வரலாற்றைப் பதிவு செய்துள்ளது. வருணத்தார் வருகைக்குப் பின்னர் தமிழகத்துச் சூழல் எப்படி மாறியது என்று தொகுத்துரைக்கிறார். குரவு, தளவு, குருந்து, முல்லை முதலிய பூக்கள் தவிர்ந்த பிற பூக்களின் பயன்பாடு போர்முறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது; வேந்தர்க்கும் வேளிர்க்கும் இடையில் உருவான அதிகாரப் போட்டியில் திணைமாந்தர் சிக்குண்டனர்

என்பதைக் குறிப்பாகச் சொல்கிறார். வெட்சி முதல் வாகை ஈறாகப் போரின் பல்வேறு நிலைகட்கேற்ப அடையாளப் பூக்களின் தேவை ஏற்பட்டது. வரகு, தினை, கொள், அவரை போன்ற புன்செய்ப்பயிர் செழித்த வேளாண்மை மாறி நெற்பயிர் செய்தமையைக் கோடிட்டுக் காட்டுகிறார். நடுகல்லைத் தெய்வமாக வழிபட்ட நிலை மாறிக் கடவுள் உருவங்களுக்கு நெல்லைத் தூவி வழிபடும் வழக்கம் தோன்றியதை ஆவணப்படுத்துகிறார். உரையாசிரியர்கள் இப்பாடலைச் சமூக வரலாற்று அடிப்படையில் விளக்க முற்படவில்லை.

4.2 தொகைநூல்கள் திணைமாந்தரை அணங்குக் கொள்கை உடையோர் எனக் காட்டுகின்றன. அச்சம், வியப்பு என்ற காரணிகளின் அடிப்படையில் ஆல், கடம்பு, வேம்பு, கள்ளி, ஓமை முதலிய மரங்கள்; மலை, காடு, நிலம், திசைகள், நீர், நிலவு, மலர்கள், விலங்குகள், காகம், சுறாக்கொம்பு என இயற்கையின் பல்வேறு பரிமாணங்களையும் வழிபட்டமைக்குச் சான்றுகள் உள்ளன (நற்.7, 34, 37, 83, 155, 165, 168, 216, 258,281, 288, 343; குறு.164, 178; பதிற். 88; பரி.2; கலி.101, 106, 131; அகம்.22, 72, 152, 198, 272, 287, 309, 359, 381; புறம்.158, 199, 260; பொரு.அடி-52; நெடு.அடி- 77-78; குறி.அடி- 176-177, 208; பட்டி.அடி- 35-36, 86-87). தொல்தமிழரின் இயற்கை வழிபாடு சீரற்றது என கூறியிருப்பது பொருந்துமா? வேதியரின் உருவவழிபாட்டு நாகரிகத்தைத் தொல்தமிழரின் இயற்கை வழிபாட்டு நாகரிகத்துடன் ஒப்பிட்டு ஆராய வேண்டியுள்ளது

4.3 வேளிர் நெல் வேளாண்மையில் ஈடுபட்டமைக்கும்; வேந்தர் அவரது விளைநிலத்தைத் தீக்கிரை ஆக்கி அவர்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமைக்கும் பல சான்றுகள் உள (பதிற்.13; பட்டி.அடி- 240-270; மது.அடி.- 126, 154-156, 169-176). திணைமாந்தரின் மரபு; குறைவான நீரே போதுமானதாகும் புன்செய் வேளாண்மை ஆகும். வேளிர் வருகைக்குப் பின் அவர்க்கு நெல்வேளாண்மையில் உதவிய உழவரில் திணைமாந்தரும் அடங்குவர் (அகம்.54, 177; புறம்.70, 155, 180,181, 338, 384, 385, 388, 391, 395). இங்கு நெல் வேளாண்மையே மேம்பட்ட நாகரிகம் என்ற கோணம் ஆய்விற்கு உரியதாகிறது.

4.4 வேந்தர் திணைமாந்தர், வேளிர், நலிந்த வேந்தர் அனைவரிடத்தும் வலுக்கட்டாயமாகப் பெண்கேட்டுத் துன்புறுத்தினர் (புறம். 336-355).

பெண் தர மறுத்தோர் யாராயினும் அவரது ஊரைச் சூறையாடினர் (புறம்.336, 337, 341-345, 347-349, 354). இதனால் வருணத்தார் நாகரிகமும் திணைமாந்தர் நாகரிகமும் ஒப்பிட வேண்டிய செய்திகள் ஆகின்றன.

முடிவுரை:

பண்டைத் தமிழகக் கலைக்குழுக்களின் அமைப்பு; பாணர், கிணையர் துடியர் சமூகநிலை; கடம்பர் யார்? தொல்தமிழரின் இயற்கை வழிபாடு சீரற்றதா? நெல் வேளாண்மையே மேம்பட்ட நாகரிகமா? உருவ வழிபாடும் தொல்தமிழர் இயற்கை வழிபாடும்; வலுக்கட்டாயமாகப் பெண்கேட்கும் வேந்தர் நாகரிகமும் திணைமாந்தர் நாகரிகமும் போன்ற ஆய்வுகள் நிகழ்த்த வேண்டி உள்ளன.