/ கண்மணித்தமிழ் 2 /
  1. கோயில் …

11. கோயில் வழிபாடும் கோட்டவழிபாடும்

0.0 முன்னுரை

0.1 சிலப்பதிகாரத்தில் சுட்டப்பெறும் கோயில்கள், கோட்டங்கள் முதலியன பற்றிய இருப்பிடத்தையும்; அங்கு நிகழ்ந்த வழிபாட்டு முறையையும் ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். எனவே சிலப்பதிகாரம் இக்கட்டுரையின் ஆய்வெல்லை ஆகிறது.

0.2 முதல்நிலைத் தரவுகள் சிலப்பதிகாரத்திலிருந்தும், இரண்டாம் நிலைத்தரவுகள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, மணிமேகலை முதலிய இலக்கியங்களில் இருந்தும் எடுத்தாளப்பட்டுள்ளன.

1.0 இருப்பிடங்களும் நடைமுறைகளும்

1.1.0 கோயில்கள் தலைநகரங்களிலும் பிற ஊர்களிலும் இருந்தன. அங்கெல்லாம் வேதமுறைப்படி வேள்விகள் நிகழ்ந்தன.கோட்டங்கள் தலைநகரங்களிலும், பிற ஊர்களிலும், ஈமப்புறங்காட்டிலும் கூட இருந்தன. அங்கு வைதீக நெறியின் தீமுறை வழிபாடு இல்லை. குழந்தையின் சடலத்தோடு கூடச் செல்லக்கூடிய வழிபாட்டு இடமாக அவை இருந்தன.

1.1.1 சோழர் தலைநகரமாகிய புகாரில் பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானுக்குக் கோயில் இருந்தது (சிலப். இந்திர.அடி.- 169-175). இந்திரவிழாவின் போது அங்கு வேள்வி நிகழ்ந்தது. சிவன் அதிபதியாக இருக்கும் கைலாயத்தின் பெயரால் ஊர்க்கோட்டமும் இருந்தது (சிலப்.கனாத்.அடி-11). அங்கு மாலதி மாற்றாள் மகவின் சடலத்தோடு சென்று இறைஞ்சினாள்.

1.1.2 முருகன் ஆறுமுகத் தோற்றத்தின் அழகுடன் எழுந்தருளிய கோயிலும் புகார் நகரில் இருந்தது (சிலப்.இந்திர.அடி.- 169-175). அங்கு இந்திரவிழாவின் போது வேள்வி நிகழ்ந்தது. முருகனின் ஆயுதமாகிய வேலின் பெயரால் வழிபாடு நிகழ்ந்த வேற்கோட்டமும் அதே ஊரில் இருந்தது (சிலப்.கனாத்.அடி-11). அங்கு மாலதி பால்விக்கிச் சோர்ந்த பாலகன் உடலோடு சென்று; உயிரை மீட்டுத்தரும்படி வேண்டினாள்.

புறநானூறு தமிழகத்தில் இருந்த ஒரு முருகன் கோட்டம் பற்றிப் பேசுகிறது (புறம்.299). அணங்குடை முருகன் கோட்டத்தில் கலந்தொடா மகளிர் ஒதுங்கி இருந்ததைப் போலக் குதிரைகள் ஒதுங்கி நின்றன என்று பொன்முடியார் பாடியுள்ளார். விலக்கான பெண்கள் கூட ஒதுங்கி இருக்கக் கூடிய இடமாகக் கோட்டங்கள் நிலவின எனத் தெரிகிறது.

1.1.3 புகார் நகரில் இருந்த திருமால் கோயில் நீலமேனி நெடியோன் கோயில் என்று சுட்டப்படுகிறது (சிலப்.இந்திர.அடி.- 169-175). அங்கு இந்திரவிழவின் போது வேள்வி நிகழ்ந்தது. அத்துடன் திருமாலுக்குக் கோட்டமும் இருந்தது (சிலப்.நாடு.அடி-10). அது மணிவண்ணன் கோட்டம் என்று அழைக்கப்பட்டது. கண்ணகியும் கோவலனும் கங்குல் கனைசுடர் கால் சீயா முன் தம் இல்லத்து நீள்நெடுவாயில் நெடுங்கடை கழிந்து யாரும் அறியாமல் மணிவண்ணன் கோட்டம் வலம்செய்து சென்றனர்.

1.1.4 இந்திரனுக்குப் புகார் நகரில் கோயில் ஒன்று இருந்தது (சிலப்.இந்திர.அடி.- 169-175). மாலை வெண்குடை மன்னவனாகிய அவன் கோயிலில் இந்திர விழவின் போது வேள்வி செய்தனர். அவனது ஆயுதத்தின் பெயரால் வச்சிரக் கோட்டமும்; அவனது வாகனத்தின் பெயரால் வெள்யானைக் கோட்டமும்; அவன் அதிபதியாக இருக்கும் சொர்க்கத்திலுள்ள கற்பகத் தருவின் பெயரால் ஒரு கோட்டமும் அந்நகரில் இருந்தன. மாலதி தன்னிடம் பாலருந்தி விக்கிச் சோர்ந்த பாலகனின் சடலத்தோடு அங்கெல்லாம் சென்று அழுது புலம்பினாள் (சிலப்.கனாத்.அடி.- 9-20). இந்திரவிழா தொடங்கியவுடன் வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசினைக் கச்சையானைப் பிடர்த்தலையில் ஏற்றி விழா அறைந்தனர்; வால்வெண் களிற்றரசு வயங்கிய கோட்டத்தில்; அதாவது ஐராவதக் கோட்டத்தில் விழாக்கால் நாட்டினர்; தருநிலைக் கோட்டத்தில் மங்கல நெடுங்கொடியை வானுற எடுத்தனர் என்கிறார் இளங்கோவடிகள் (சிலப்.இந்திர.அடி.- 141-146).

மணிமேகலையிலும் இந்திரவிழா தொடங்கியவுடன் வச்சிரக் கோட்டத்து முரசினையே அறைந்து சாற்றியதாகச் சாத்தனாரும் பாடியுள்ளார் (மணி.விழா.அடி.- 27-72).

1.1.5 பலதேவனுக்குப் புகார் நகரில் கோயிலும் கோட்டமும் இருந்தன

(சிலப்.இந்திர.அடி-171; கனாத்.அடி-10) வால் வளை மேனி வாலியோன் ஆகிய அவன் கோயிலில் இந்திரவிழாவுக்காக வேள்வி நடத்தினர். புகர் வெள்ளை நாகராகிய அவன் கோட்டத்தில் மாலதி குழந்தையின் சடலத்தோடு தவித்து வணங்கினாள்

1.1.6 மதுரை மாநகரில் சிவபெருமானுக்குக் கோயிலும் முருகனுக்குக் கோட்டமும் இருந்தன. சிவன் கோயிலிலும், முருகன் கோட்டத்திலும் காலை முரசின் ஒலி சங்கொலியுடன் கேட்டது என்கிறார் இளங்கோவடிகள் (சிலப்.ஊர்.அடி.- 5-14). அத்துடன் சிவபெருமான் கோயிலிலும், மன்னனின் அரண்மனையிலும் நான்மறை அந்தணர் நவின்ற ஓசையும் கேட்டது (சிலப்.புறஞ்.அடி.- 137-142).

1.1.7 வஞ்சி மாநகரில் சிவன் கோயிலில் மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை செங்குட்டுவனது மாலையின் நல்லகம் வருத்த அவன் தொழுதான் (சிலப்.கால்.அடி.- 55-60). இங்கு காப்பிய ஆசிரியர் கோயில் என்ற சொல்லை நேரடியாக எடுத்தாளவில்லை எனினும்; புகார்க்காண்ட மதுரைக்காண்டச் செய்திகளை ஒட்டி; மறையோர் பற்றிய குறிப்பு இடம்பெறுவதால் கோயில் என்று தெளிய முடிகிறது. அந்நகரில் திருமால் எழுந்தருளி இருந்ததாக அடிகள் சுட்டும் ஆடகமாடம் கோயிலா; அன்றிக் கோட்டமா என்று சொல்லக் கூடிய சான்று ஆதாரம் இல்லை.

1.1.8 மாசாத்தன் என்ற புறம்பணையான் கோட்டம், பகல்வாயில் உச்சிக் கிழான் என்ற சூரியன் கோட்டம், பாசண்டச் சாத்தன் கோட்டம், நிலாக்கோட்டம், நிக்கந்தக்கோட்டம், எனப் பல கோட்டங்கள் புகாரில் இருந்தன (சிலப்.கனாத்.அடி.- 9-20). மாலதி இறந்த பிள்ளையின் உடலோடு இங்கெல்லாம் சென்று அரற்றி ஏங்கினாள்.

1.1.9 சுடுகாட்டுக் கோட்டம் புகார் நகரின் ஈமப்புறங்காட்டில் இருந்தது. இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளில் சென்று தான் பறித்த பிணத்தைத் தின்றது (சிலப்.கனாத். அடி.- 15-22).

மணிமேகலை புகார் நகரத்து ஈமப்புறங்காட்டைப் பற்றி விரிவாகப் பேசுகிறது (மணி.சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை). அங்கு சக்கரவாளக் கோட்டம், காடுகிழாள் கோட்டம், இறந்த அரசர்க்கு

அமைந்த கோட்டங்கள், எனக் குறியவும்; நெடியவும்; குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டங்களாகப் பல இருந்தன.

1.1.10 புகார் நகரத்து நெய்தலங்கானலில் காமவேள் கோட்டம் இருந்தது. அங்கு சென்று சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகிய துறைகளில் மூழ்கித் தொழ வேண்டும் என தேவந்தி கண்ணகியிடம் கூறுகிறாள் (சிலப்.கனாத்.அடி.- 58-61).

பட்டினப்பாலை காமவேள் கோட்டத்தையும், நிலாக் கோட்டத்தையும் ஒருங்கு குறிப்பிடுகிறது.

“மதி சேர்ந்த மக வெண்மீன்

உருகெழு திறல் உயர்கோட்டத்து

… … ...

இருகாமத்து இணையேரி” (பட்டி.அடி.- 35-39)

என்று பாடுவது நோக்கத்தக்கது.

1.1.11 புகார் நகரிலிருந்து மதுரை செல்லும் வழியில் எயினர் குடியிருப்பில் ஐயை கோட்டம் இருந்தது (சிலப். வேட்டுவ. அடி-4). எயினர் குலக்குமரியைக் கொற்றவையாக அலங்கரித்து வழிபாடு நிகழ்த்தினர்.

1.1.12 பாண்டிய நாட்டுத் தங்காலில் ஐயை கோயிலும் இருந்தது.

“மையறு சிறப்பின் ஐயை கோயில்” (சிலப்.கட்டு.அடி-107)

கதவு; வேதமந்திரங்களைச் சிறப்பாக ஓதிய அந்தணப் பாலகன் தக்கிணனின் தந்தை வார்த்திகனைக் குற்றமுள்ளவன் என்று தவறாகக் கருதிச் சிறை செய்தவுடன்; மூடிக்கொண்டது என்றும் சிலப்பதிகாரம் சொல்லக் காண்கிறோம்.

1.2 நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் கோயில், கோட்டம் என்ற இரு பதங்களையும் பயன்படுத்தவில்லை. ஆனால் வேதமரபைப் பின்பற்றிய வழிபாட்டு இடங்களையும், வேதநெறி அல்லாத மரபினைப் பின்பற்றிய வழிபாட்டு இடங்களையும் தனித்தனியாகப் பட்டியலிடுகிறார். அலைவாய், ஆவினன்குடி, ஏரகம் ஆகிய தலங்களில் வேதநெறி பின்பற்றப் பட்டமையைக் குறிப்பிட்டுச் சொல்கிறார் (திருமுருகு.அடி.- 78-189). அலைவாயிலில் எழுந்தருளிய முருகனின் திருமுகங்களில் ஒன்று வேள்வியை

நோக்கிக்கொண்டிருந்தது. ஆவிநன்குடியில் எழுந்தருளிய முருகனை வழிபட நூறு வேள்விகளையும் செய்து முடித்த இந்திரனும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து சென்றனர் என்கிறார். ஏரகத்தில் எழுந்தருளிய முருகனை வழிபட வேதநெறிப்படி வழிபடும் அந்தணர் வந்தனர் என்கிறார். இவ்வாறு கோயில் என்று சொல்லக்கூடிய மூன்று தலங்களைப் பாடிய பின்னர் முச்சந்தி, நாற்சந்தி, ஐஞ்சந்தி, ஆற்றங்கரை, குளத்தங்கரை, மலைநிலத்துக் குடியிருப்புகள், வெறியாட்டு அயர்களங்கள், மன்றங்கள், பொதியில்கள், என நீளமாக அவர் வரிசைப்படுத்தும் வழிபாட்டு இடங்கள் கோட்டங்கள் என்று சொல்லக்கூடியவையாக உள்ளன (மேற்.அடி.- 189-226).

2.0 கோயில் கோட்டமாவதும்; கோட்டம் கோயிலாவதும்

கோட்டத்தில் வேள்விச்சாந்தி நிகழ்த்தும் போது அது கோயில் என்று அழைக்கப்பட்டது. வேதமரபை மீறும் போது மீண்டும் கோட்டம் என்றே வழங்கினர்.

செங்கோட்டு உயர்வரையில் மலைமகளிர் கண்ணகியை வணங்குவதாக இளங்கோவடிகள் காட்டுகிறார். அவர்கள் தொண்டகம் தொட்டு; சிறுபறை தொட்டு; கோடு வாய் வைத்து; கொடுமணி இயக்கி; குறிஞ்சி பாடி; நறும்புகை எடுத்து; பூப்பலி செய்து; காப்புக்கடை நிறுத்தி; விரவுமலர் தூவிப் பரவினர் (சிலப்.குன்றக்.அடி.- 11-22). அவர்கள் வழிபட்ட இடத்தை மாடலன் ‘மங்கல மடந்தை கோட்டம்’ என்று சுட்டுகிறான் (சிலப்.வரந்தரு காதை அடி.- 56-88). மலைவளம் காணவந்த செங்குட்டுவன் கண்ணகி வரலாற்றை அறிந்து; இமயக்கல்லெடுத்துக் கங்கையில் நீர்ப்படை செய்து; நூல்நெறி மாக்கள் பாற்பட வகுத்த பத்தினிக்கோட்டத்தில் நடுகல்லாக்கிக் கடவுள் மங்கலம் செய்தான் (சிலப்.நடு.அடி-224). பின்னர் மாடலமறையோன் அறிவுறுத்த நூன்மரபின் படி வேள்விச்சாலை அமைத்துத் தீமுறையும் செய்தான். வேள்வியும் விழாவும் நாள்தோறும் வகுத்தான். அவ்விடத்திற்கு தேவந்தியும், ஐயையும், காவற்பெண்டும் வந்து சேர்ந்த பொழுது இளங்கோவடிகள்;

“கோமகள் தன் கோயில்” (சிலப்.வாழ்த்துக்காதை

உரைப்பாட்டு மடை) என்கிறார். ஆனால் வேள்வி முடிந்து; கண்ணகி காட்சி அளித்து; வாழ்த்தி; வரம்தந்து; பின்னர் வேதமரபினின்று மாறிச்; செங்குட்டுவன் தேவந்தியை அங்கேயே தங்கி நித்தல் விழாவணி

நிகழ்த்திப் பலிபூசை செய்ய ஏவியபோது; ‘பத்தினிக்கோட்டம்’ என்றே சுட்டுகிறார் (சிலப்.வரந்தரு காதை- உரைப்பாட்டுமடை). இதனால் வேதமரபு பின்பற்றப்படும் போது மட்டும் கோட்டம்; கோயில் என்று அழைக்கப்படுவது கண்கூடு.

3.0 கோட்டங்களுக்குரிய மரபுகள்

கோட்டங்களில் தெய்வக்கோலத்தை மானிடர்க்குப் புனைந்து வழிபடும் வழக்கமும், வரிப்பாடல் பாடிக் குரவை அயரும் வழக்கமும் இருந்தன. தெய்வம் ஏறி ஆடி வருவதுரைக்கும் முறையும் இருந்தது.

எயினர் குடியிருப்பில் இடம்பெறும் ஐயை கோட்டத்து வழிபாட்டில் இவற்றைக் காண்கிறோம் (சிலப்.வேட்டுவ.அடி.- 4-74). எயினர் வரிப்பாடல்கள் பாடினர். சாலினி கண்ணகியைப் பார்த்துக் ‘குடமலையாட்டி’ என்று குறிப்பிட்டு வருவதுரைக்கிறாள். செங்கோட்டு உயர்வரையில் மங்கலமடந்தை கோட்டத்தில் மலைநாட்டுப் பெண்கள் குரவை ஆடி; முருகனையும், வள்ளியையும்; பின்னர் கண்ணகியையும் வழிபட்டனர் (சிலப்.- குன்றக்.).

திருமுருகாற்றுப்படையில் முருகனின் கோட்டங்கள் என்று கருதத்தக்க பட்டியலில் வேலன் தெய்வமேறி ஆடும் வருணனை உள்ளது (அடி.- 189-215). குரவையர் துணங்கையர் அணங்கெழுந்தாடும் வழக்கத்தை பல சங்கஇலக்கியப் பாடல்களில் காண இயல்கிறது (மது.அடி.- 610-615; கலி.10). அங்கெல்லாம் வேதமரபு அல்லாத வழிபாட்டு முறை வருணிக்கப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது.

முடிவுரை

பண்டைத் தமிழகத்தில் கோயில் வழிபாடு வேதமரபைப் பின்பற்றி அமைந்தது என்றும்; கோட்ட வழிபாடு வேதமரபு அல்லாத நடைமுறைகளைக் கொண்டு இருந்தது என்றும் புலப்படுகிறது.