/ கண்மணித்தமிழ் 2 /
  1. பெண்ணியப்பார்வ …

9. பெண்ணியப்பார்வையில் பதிற்றுப்பத்து- காக்கைப்பாடினியாரின் நோக்கும் பெண்மொழியும்

முன்னுரை:

சங்ககால அரசியல்நிலையையும், சமூக வரலாற்றையும் அறிந்து கொள்ளத் துணை செய்வன சங்க இலக்கியங்களே. அவற்றுள்ளும் பதிற்றுப்பத்து சேர நாட்டிற்கும், சேரர் ஆட்சிக்கும் மட்டுமே சிறப்பிடம் கொடுத்துப் பாடப்பட்டது. அந்நூலில் பெண்மை போற்றப்பட்ட முறையைக் காண்பது கட்டுரையின் நோக்கமாகும். புலவர் எண்மரில் காக்கைப்பாடினியார் மட்டுமே பெண்பாற் புலவராதலால் அவரது பாடுபொருளில் இருக்கும் தனித்தன்மை சிறப்பாக நோக்கப்படுகிறது. "தங்களை ஆண்களின் ஆளுகைக்கு உட்பட்டவர்களாகக் கருதும் மரபுத்தளையிலிருந்து விலகி வந்தால் மட்டுமே பெண்ணியத்தைப் பெண்களாலும் சரிவரப் புரிந்து கொள்ள இயலும்" என்று கூறுகிறார் முனைவர் இரா.பிரேமா (பெண்ணியம்- முன்னுரை). இந்த இலக்கணத்துக்கு ஏற்ற பாடினியாக காக்கைப்பாடினியாரும்; அவரது பாடல்களும் அமைந்திருக்கும் பாங்கினைக் காண்போம்.

சேர மன்னர்களின் மனைவியரும், பாரியின் மனைவியும் பதிற்.பாடல்களில் போற்றப்படுகின்றனர். அப்பாடற்பகுதிகளில் அக்காலப் பெண்ணியக் கொள்கை பிரதிபலிக்கிறது. ஒரு ஆணின் நோக்கிலும், மொழியிலும் சித்தரிக்கப்படும் பெண்மை; ஒரு பெண்ணின் நோக்கிலும், மொழியிலும் சித்தரிக்கப்படும் பெண்மை இரண்டிற்கும் வேறுபாடு காணப்படுகிறது. பதிற்றுப்பத்துச் செய்திகள் முதன்மை ஆதாரம் ஆக அமைய புறநானூற்றுச் செய்திகள் துணை ஆதாரங்களாக அமைகின்றன. 20ம் நூற்றாண்டு ஆய்வாளர்களின் கருத்துக்கள் மூன்றாம் நிலைத் தரவுகளாக அமைகின்றன.

'பெண் எழுத்துக்கள் ' என்ற தலைப்பில் எழுதும் முனைவர் எம்.ஏ .சுசீலா பெண்ணிடமிருந்து உற்பவித்துத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு காலகட்டங்களிலும் பதிவாகியுள்ள எழுத்துக்கள்; என்ற பொருளை வரையறுத்து புனைகதை இலக்கியத்தை மட்டுமே தன் கட்டுரையில் ஆய்வுப்பொருள் ஆக்கியுள்ளார் (தமிழ் இலக்கியத்தில் பெண்ணியமும் தலித்தியமும்- ப.- 1-11) வெள்ளிவீதியாரின் பாடல்களில்

பெண்மொழி பற்றி சு.மலர்விழி கட்டுரை வரைந்துள்ளார் (காவ்யா- தமிழிதழ்- ப.- 29-32). ஒளவையார், வெள்ளி வீதியார் பாடல்களில் இடம்பெறும் பெண்ணியக்கோட்பாடுகளை அரங்க மல்லிகா தொட்டுக் காட்டியுள்ளார் (பெண்ணின் வெளியும் இருப்பும்- 'சங்க இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும்'- ப.- 8-18).

மன்னன் வாழ்வில் அவனது உரிமை மனைவி பெற்ற இடம், அவளது பெருமையின் காரணம் முதலியன, ஆண் வர்க்கத்தின் பார்வையிலும் பெண்வர்க்கத்தின் பார்வையிலும் எவ்வாறு வேறுபடுகின்றன என்று பெண்ணியநோக்கில் இக்கட்டுரை ஆராய்கிறது.

மன்னனை அழைக்கும் முறை:

ஒவ்வொரு வேந்தனையும் அழைக்கும் முறையில் அவனது உரிமை மனைவிக்குக் கொடுக்கப்படும் சிறப்பிடம் புலப்படுகிறது. வேந்தனால் அவன் மனைவிக்கு அடையாளம் கிடைப்பதை விட மனைவியால் வேந்தனுக்கு அடையாளம் கொடுக்கப்படுவதையே பதிற்றுப்பத்தில் காண முடிகிறது.

"ஒடுங்கீரோதிக் கொடுங்குழை கணவ" (பதிற்.14)

குமட்டூர் கண்ணனார் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடியது .

"நன்னுதல் கணவ " (பதிற்.42)

பரணர் கடல் பிறக்கோட்டிய குட்டுவனைப் பாடியது .

"ஆன்றோள் கணவ" (பதிற்.55)

காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் ஆடுகோட்பாட்டுச்சேரல் ஆதனைப் பாடியது.

"பாவை அன்ன நல்லோள் கணவன்" (பதிற்.61)

கபிலர் பாரியைச் சுட்டியது.

"சேணாறு நறுநுதற் சேயிழை கணவ" (பதிற்.65) &

"கமழும் சுடர் நுதற் புரையோள் கணவ" (பதிற்.70)

கபிலர் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடியது.

"சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ" (பதிற்.88) &

"வண்டார் கூந்தல் ஒண்டொடி கணவ" (பதிற்.90)

பெருங்குன்றூர் கிழார் இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடியது.

இம்மேற்கோள் பகுதிகளில் மனைவியால் வேந்தனுக்கு அடையாளம் தரப்பட்டுள்ளது.

புறநானூறிலும் இவ்வண்ணமே;

"செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ" (பதிற்.3)

என்று பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த் தலையார் விளிக்கிறார் .

"அறம் பாடிற்றே ஆயிழை கணவ" (பதிற்.34)

என்று கிள்ளி வளவனை ஆலத்தூர் கிழார் அழைக்கிறார்.

"ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்" (பதிற்.138)

என்று நாஞ்சில் வள்ளுவனை மருதன் இளநாகனார் குறிக்கிறார்.

வேந்தன் மனைவியை அடையாளப்படுத்தும் முறையில் காக்கைப்பாடினியார் கையாளும் பொருள் மட்டும் வேறுபட்டுக் காணப்படுகிறது . பெண்ணின் ஆளுமையை முன்னிலைப்படுத்தி மன்னன் மனைவியை 'ஆன்றோள்' என்கிறார். பிற புலவர்கள் எல்லாம் ஐம்புலன்களால் அறியக்கூடிய இன்பங்களோடும், கற்போடும் தொடர்புபடுத்தியே அரச மகளிரைக் குறிக்கின்றனர். அதாவது அப்பெண்களின் கூந்தல், நெற்றி, அழகு, மணம், அணிகலன், கற்பு, கற்பினால் உண்டான புகழ் முதலியவையே ஆண்பாற் புலவர்கள் மகளிர்க்குக் கொடுக்கும் அடையாளச் சொற்கள். ஆனால் காக்கைப் பாடினியாரின் பெண்மொழி புலனின்பத்திற்கும், காட்சிக்கும் அப்பாற்பட்டு மனதாலும், அன்றாட வாழ்வியல் அனுபவத்தாலும் அறியக்கூடிய சிறப்பும், அறிவும் பொருந்திய ஆன்றோளின் கணவனாக ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைச் சிறப்பிக்கிறது. 1975ம் ஆண்டு ஆனிட் கொலொட்னியன் வெளியிட்ட Critical Inquiry என்ற கட்டுரை பெண் படைப்பாளர்களின் நோக்கையும் ,போக்கையும் இனம்காட்டுதல்; அவர்களது படைப்புகள் ஆண் படைப்புகளிலிருந்து வேறுபடும் பாங்கை இனம்காட்டுதல் என்ற பெண்ணியக் கோட்பாடுகளை எடுத்துரைக்கிறது (இரா.பிரேமா- மேற். ப.91). இக்கோட்பாட்டை ஒட்டி காக்கைப்பாடினியாரின் பெண்மொழி இடம்பெறும் பாங்கைத் தொடர்ந்து காணலாம்.

புறத் தோற்றம்

அரசமகளிரின் புறத்தோற்றமும், அவர்களது ஒப்பனையும் பதிற்றுப்பத்தில் ஆங்காங்கு இடம் பெறுகின்றன.

விண்ணுலக மங்கையர் சேரன் மனைவிக்கு நிகராதல் வேண்டித் தம்முள் மாறுபட்டு இகலும் அளவிற்கு இமயவரம்பன் மனைவி மெய்நலம் உடையவள். தலை ஆபரணங்களால் மறைப்புண்ட வண்டு மொய்க்கும் கூந்தலை உடையவள். மண்ணி நெய்ப்புற்ற கூந்தல்

ஒடுங்கிய செவியில் வளைந்த குழைகளை அணிந்திருந்தாள் என்று இமயவரம்பனின் மனைவி வருணிக்கப் படுகிறாள் (பதிற்.14).

பல்யானைச்செல்கெழு குட்டுவனின் மனைவி மயிர்ச்சாந்து பூசாமலே மணம் மிகுந்த கூந்தலுடையவள்; மழைக்காலத்தில்

முல்லை மணம் கமழும் நீண்ட அடர்ந்த கூந்தலுடன், காம்பினின்றும் நீக்கப்பட்ட நீர்ப்பூ போல முகத்தில் சுழலும் கருமையான கண்களுடன், காந்தள் போன்ற கைகளுடன், மூங்கிலை ஒத்த பெரிய தோள்களையும் உடையவள் ஆவாள் (பதிற்.21).

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் மனைவி வண்டு மொய்க்கத் தழைத்த கூந்தலையும், காதில் அணிந்த குழைகட்கு விளக்கம் தரும் ஒளி பொருந்திய நெற்றியையும், தான் அணிந்த பொன்னாலான அணிகட்கு விளக்கம் தரும் மேனியையும், அழகிய வளைந்த உந்தியையும் உடையவள் (பதிற்.31&38).

ஓவியத்தைப் போன்ற வேலைப்பாடமைந்த மனையில் பாவை போன்ற அழகுடையவளாக பாரியின் மனைவி இருந்தாள் (பதிற்.61).

செல்வக்கடுங்கோ வாழியாதனின் மனைவி; வேளாவிக்கோமான் பதுமன் தேவி இழை அணிந்து எழில் பெற்ற இளமுலையும், மாட்சிமைப்பட்ட வரிகளை உடைய அல்குலையும், அகன்ற கண்களையும், மூங்கிலை ஒத்த அழகிய தொடியணிந்த பருத்த தோளையும், சேய்மையிலும் மணம் பரப்பும் நறு நுதலையும் கொண்டு; செவ்விய அணிகளையும் அணிந்திருந்தாள் (பதிற்.65&70).

அந்துவன் செள்ளை பிறப்பால் மட்டுமே திருமகளுடன் மாறுபட்டவள் (பதிற்.74). ஒளி பொருந்திய நெற்றியை உடைய அவள் நுண்ணிய கருமணலை ஒத்த அடர்ந்த நீளமான கூந்தலை உடையவள். பெருஞ்சேரல் இரும்பொறை வேள்வி செய்த போது புள்ளிமானின் தோலைத் தூய்மை செய்து அதனை வட்டமாக அறுத்து சுற்றிலும் முத்துக்களையும், அரிய கலன்களையும் கட்டி நடுவே மாணிக்க மணிகளைத் தைத்துத் தோளில் அணிந்திருந்தாள். கூந்தலைச் சுருட்டி முடித்திருந்தாள் (பதிற்.74).

இளஞ்சேரல் இரும்பொறை மனைவி நீண்ட கண்களை உடையவள். அவளது ஒளி வீசும் நெற்றியில் சுருண்ட கூந்தல் விழுந்து அழகூட்டியது. வண்டுகள் மொய்க்கும் கருமையான கூந்தல் மறையும்

படியாகத் தலையணியும், வளைந்த குழைகளும் அணிந்திருந்தாள் (பதிற்.81). தகர நீவிய துவராக் கூந்தல் உடையவள் (பதிற்.89).

ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் மனைவி அசைகின்ற மாலையும், பரந்த தேமலையும் உடையவள் என்கிறார் காக்கைப்பாடினியார்.

ஆவூர் மூலங்கிழார் பாடும் கௌணியன் விண்ணந்தாயனின் மனைவியர் சிறு நுதலும், பேரல்குலும் சில சொல்லிற் பல கூந்தலும் உடையவர் என வருணிக்கப்படுகின்றனர் (புறம்.166).

வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் பாடலில் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனின் மனைவி 'அருவி தாழ்ந்த பெருவரை போல ஆரமோடு பொலிந்த மார்பினை உடையவளாய்க்' குறிக்கப்படுகிறாள் (பதிற்.198).

பதிற்றுப்பத்தின் பிற புலவோர் அரச மகளிரை வருணிப்பதற்கும், காக்கைப்பாடினியார் வருணிப்பதற்கும் இடையிலுள்ள வேறுபாடு நோக்கத்தக்கது. மாலையும் தேமலும் தவிர வேறெந்தப் புறத்தோற்ற வருணனையும் காக்கைப்பாடினியார் பாடல்களில் இல்லை (பா-52). அறிவும் திறமையும் மட்டுமே அவளைப் பற்றிப் பாடத்தக்க பொருட்களாக அவருக்குத் தோன்றியுள்ளது. மேனியின் வெளிப்புற அழகும், ஆபரணங்களும் ஒரு பொருட்டாக அவருக்குத் தோன்றவில்லை எனலாம். மேனியழகும் அணிகளும் ஒரு பெண்ணின் ஆளுமைக்கு தேவையற்றவையாக ஒதுக்கப்பட்டு விட்டதைக் காணமுடிகிறது.

பாரிமனைவியைக் குறிப்பிடும் கபிலர் சுருக்கமாக அவள் பாவை போன்றவள் என்று வருணிப்பதன் காரணம்; பாரி சேர மன்னன் அல்லன். அவன் இறந்தபின் உன்னையே நாடி வந்தேன் என்று பாடும் இடத்தில் பாரிமனைவிக்குச் சிறப்பிடம் இல்லை .அதனால் அவளைப் பற்றிய வருணனை சுருக்கமாகவே அமைகிறது. இதே கபிலர் செல்வக்கடுங்கோவின் மனைவியை வருணிக்கும் போது அவளது அணிகலன், இளமுலை, அல்குல், கண், தோள், நுதல் என மிக விரிவாகப் பாடியுள்ளார். இவ்வாறு அரசமகளிரின் புறத்தோற்ற வருணனையிலும் காக்கைப்பாடினியாரின் பெண்மொழி தனித்துவத்துடன் காணப்படுகிறது.

அரச மகளிரின் பெருமையாகச் சொல்லப்படுபவை

கற்பு

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மனைவி 'ஆறிய கற்பி'னை

உடையவள் (பா-16). சீறுதற்குரிய காரணம் இருப்பினும் சீற்றமுறாது தணிந்தொழுகும் தன்மையுடையவள்; ஆதலால் ஆறிய கற்புடையவளாம்.

கற்பு அருந்ததி என்னும் செம்மீனுடன் தொடர்புபடுத்தி பெருமைக்குரியதாகப் பேசப்படுகிறது .

"விசும்புவழங்கு மகளி ருள்ளும் சிறந்த

செம்மீன் அனையள்நின் தொன்னகர்ச் செல்வி" (பதிற்.31)

எனக் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலின் மனைவி புகழப்படுகிறாள் .

"காமர் கடவுளும் ஆளும் கற்பிற்… … ...சேயிழை" (பதிற்.65) என்னும் புகழ்ச்சி செல்வக்கடுங்கோ வாழியாதன் மனைவிக்குரியது . வடமீன் எனப்படும் அருந்ததியை ஒத்தவள் என்பதே பொருள் .

“பெண்மைசான்று பெருமடன்நிலைஇக் கற்பிறைகொண்ட" (பதிற்.70) மேன்மையுடையவள் என்று பாராட்டுப் பெறுகிறாள் செல்வக்கடுங்கோ வாழியாதனின் மனைவி.

"மீனொடு புரையும் கற்பின் வாணுதல் அரிவை" (பதிற்.89)

என்று இளஞ்சேரல் இரும்பொறையின் மனைவியைப் பாடும் போதும் அதே ஒப்புமையையும் பொருளையும் காண்கிறோம்

புறநானூற்றிலும்;

"வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை" (பதிற்.122)

என காரியின் மனைவி வடமீனொடு ஒப்புமைப் படுத்தப்படுகிறாள்.

"கடவுள் சான்ற கற்பிற் சேயிழை மடவோள்" (பதிற்.198)

என பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் மனைவியும் போற்றப்படுகிறாள்.

அடக்கம் ,இன்சோல், சிரித்த முகம், சுடர்நுதல் & அமர்த்த கண்

"ஆறிய கற்பின் அடங்கிய சாயல்

ஊடினும் இனிய கூறும் இன்னகை

அமிர்து பொதி துவர்வாய் அமர்த்த நோக்கிற்

சுடர் நுதல் அசைநடை" (பதிற்.16)

எனும் அடிகளில் அடக்கம் பொருந்திய மென்மையும், ஊடல் காலத்தில் கூட இன்மொழியே கூறி இனிய முறுவல் காட்டும் பெருமையும் உடையவளென இமயவரம்பன் மனைவி புகழப்படுகிறாள்.

அத்துடன் அவளது துவர்வாயின் வாலெயிறூறிய நீர் அமிழ்து போல் மகிழ் செய்வது என்று கூடல்காலத்து இன்பத்தைக் கோடிட்டுக் காட்டியவுடன் அவளது பார்வை எப்படிப்பட்டது என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது. அவளது கண்கள் உள்ளத்து

வேட்கையை ஒளிப்பு இன்றிக் காட்டுவன என்னும் பொருள்படவே 'அமர்த்த நோக்கு' என்ற தொடர் அமைகிறது. அதாவது தன் வேட்கையை வெளிப்படையாகக் காட்ட மாட்டாள் என்பதாம். அழிவில் கூட்டத்து அயரா இன்பம் செறித்தலால் 'சுடர்நுதல்' உடையவள் என்பதாகவும் பழைய உரை கூறுகிறது. கற்புடைப் பெண்ணுக்குரிய இவ்வைந்து பண்புகள்; பெண்ணோடு கூடி இன்புறும் ஆண் சமூகத்தின்; மனைவியோடு கூடி இன்புறும் கணவனின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன.

இளஞ்சேரல் இரும்பொறையின் மனைவியும்

"பெருந்தகைக் கமர்ந்த மென்சொல்" (பதிற்.81)

உடையவளாகப் போற்றப்படுகிறாள். பெருமை பொருந்திய பண்பிற்கேற்ற மென்மையான சொற்களைப் பேசுபவள் என்பதே பொருள். முற்சுட்டிய இன்சொல்லே இங்கு மென்சொல் என்று குறிக்கப்படுகிறது. அவன்பால் சென்று ஒடுங்கிய அன்பால்; புலத்தற்குரிய காரணங்கள் இருப்பினும் வன்சொல் பேசாதவள் (பதிற்.89).

நாணமும் மடமும் :

"பெண்மை சான்று பெருமடன் நிலைஇக் கற்புஇறை

கொண்ட" (பதிற்.70)

செல்வக்கடுங்கோவின் மனைவி பெண்மைக்குரிய நாணமும், மடமும் பொருந்தியதால் கற்பிற் சிறந்தாள் என்கிறார் புலவர். இங்கு பெண்மை என்று சுட்டப்படுவது நாணம்; ஏனெனில் தொடர்ந்து இடம் பெறுவது நாற்பண்புகளில் மூன்றாவதாகிய மடம்; அறிந்தும் அறியாதது போன்றிருக்க வேண்டியது. இது ஆண் வர்க்கத்தின் எதிர்பார்ப்பு.

புறநானூறில் வடமவண்ணக்கன் பேரிசாத்தனார் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் மனைவியை ‘மடவோள்’ (பதிற்.198) என்றே அழைக்கிறார்.

பிரிவில் உடல் மெலிதலும், கனவில் இன்புறலும்:

கணவன் வினைமேற் சென்று பிரிந்திருக்கும் காலத்தில் இமயவரம்பன் மனைவி பகலில் பிரிவை ஆற்றியிருந்து இரவில் அரிதாகப் பெற்ற உறக்கத்தில் கனவில் பெற்ற சிறு மகிழ்ச்சி காரணமாக உயிர் தாங்கி இருக்கும் பெருஞ்சால்பு உடையவளாம் (பதிற்.19). இதனால் உடல்சுருங்கி; பார்ப்பவரெல்லாம் வருந்திப் பேச அதற்கு நாணம் கொண்டாள் என்றும் புகழப்படுகிறாள். இங்கு கணவன் பிரிந்த காலத்தில் மனைவி உடல் மெலிவது பெருமைக்குரிய செய்தி என்பது நோக்கற்குரியது.

இளஞ்சேரல் இரும்பொறையின் மனைவி தன் கனவிலும் அவனை விட்டுப்பிரியாது இன்பப்பயனைப் பெற்றாள் (பதிற்.89).

புதல்வர்ப் பெறல்

மையூர் கிழான் வேண்மாள் அந்துவன் செள்ளை கருவில்;

"எண்ணியல் முற்றி ஈரறிவு புரிந்து

சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்

காவற்கு அமைந்த அரசுதுறை போகிய

வீறுசால் புதல்வற் பெற்ற"மையால் (பதிற்.74)

விதந்து போற்றப்படுகிறாள். பெருஞ்சேரலிரும்பொறையின் குடிவழி நீடு வாழ்வதன் பொருட்டு; எண்ணப்படுகின்ற பத்து மாதமும் நிறைவடைய, இருவகை (இயற்கை& செயற்கை) அறிவும் அமைந்து; சால்பும், நடுவுநிலைமையும் உளப்பட பிற நற்பண்புகளாகிய அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை முதலியன நிறைந்து; நாடு காத்தற்கு உரிய அரசியலறிவும் பொருந்திய புதல்வனைப் பெற்றாள் என்பர் பழைய உரைகாரர்.

புறநானூறும் மகப்பேறைக் கற்புடைப் பெண்ணின் பெருமைகளில் ஒன்றாக வரிசைப்படுத்துவதைக் காணலாம். இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் மனைவி;

"மணிமருள் அவ்வாய்க் கிண்கிணிப் புதல்வர்ப்" (பதிற்.198)

பயந்தவளாகப் பெருமைப் படுத்தப் படுகிறாள்.

மேற்கூறிய விளக்கங்களால் கற்புடைப் பெண்ணுக்குரிய பண்புகள் இன்னின்ன என்று பதிற்றுப்பத்துப் புலவர்கள் நோக்கில் நம்மால் தொகுக்க முடிகிறது. இங்கே பெண்ணுக்குக் கிடைத்துள்ள

அடையாளங்கள் ஆணின் ஆதிக்க மொழியின் புனைவுகள் என்கிறார் முனைவர் க.பஞ்சாங்கம் (பெண்- மொழி - புனைவு- ப.70) அவையாவன :

  1. அடக்கம்

  2. இன்சொல்

  3. சிரித்த முகம்

  4. கணவன் மேல்கொண்ட காதல்வேட்கையை வெளிக்காட்டாமை

  5. கணவனோடு அழியாக் கூட்டத்திலும் அயராமை

  6. நாணம்

  7. மடமை

  8. கணவனைப் பிரியின் உடல் மெலிதல்

  9. பிரிவுக் காலத்தில் கனவில் கணவனோடு மகிழ்தல்

  10. ஏற்ற வாரிசாக புதல்வரைப் பெறல்

முதலியனவாம்.

காக்கைப்பாடினியாரின் பெண்மொழி

பெண்டிருக்குரிய பத்து பண்புகளாக ஏழு புலவர்கள் பாடுவதினின்று மாறுபட்டு காக்கைப்பாடினியாரின் பாடற்பொருள் அமைகிறது. அவர் ஆண்களின் மதிப்பீடுகளைத் தலைகீழாக மாற்றுகிறார் (பெண்ணெனும் படைப்பு- ப.118). இவரது பாடலில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் விறலிக்குத் தலைக்கை கொடுத்து துணங்கை ஆடியது கண்டு அவன் மனைவி ஊடல் கொள்கிறாள். அவள் பேரியல் அரிவை; அதனால் அவளது பார்வையில் குளிர்ச்சியும் இருந்தது. ஆனாலும் சினத்தால் அவள் விரைந்து நடக்கிறாள். காலில் அணிந்திருந்த கிண்கிணி அச்சினத்தை வெளிப்படுத்தி ஒலித்தது. கரையை அலைக்கும் நீர்ப் பெருக்கால் அசையும் தளிர் போல அவளது உடல் கோபமிகுதியால் நடுங்கியது. தன் கையிலிருந்த சிறுசெங்குவளை மலரை அவன் மீது எறிய ஓங்கினாள். அவன் 'ஈ' என்று இரந்து நின்றான். அவள் சினம் தணியாமல் 'நீ என்பால் அன்புடையை அல்லை' என்று சொல்லி அகன்றாள். பல எதிரிகளின் வெண்கொற்றக் குடையையும், எயிலையும் தன் கையகப்படுத்திய அவனால் தன் மனைவியின் கையிலிருந்த குவளை மலரைக் கையகப்படுத்த இயலவில்லை (பதிற்.52).

இவர் பெண்பாற் புலவர்; ஆதலின், இவரது பாடல்மொழியில் ஆண்களின் எதிர்பார்ப்பு இல்லை. ஊடலில் பெண்கட்கு இயல்பாக

எழும் வெகுளியையும், படபடப்பையும் தயக்கமின்றிச் சித்தரிக்கிறார். ஊடும்போது மகளிர் தம் சினத்தை வெளிப்படுத்துவதால் அவர்களது நற்பண்பிற்கு இழுக்காகாது என்று கூறுவதற்கேற்பப் பாடுகிறார். இங்கே இன்சொல் இல்லை; இனிய முறுவல் இல்லை; ஊடலை மறைக்கும் அடக்கம் இல்லை; நாணம் இல்லை; மடமை இல்லை. குமட்டூர் கண்ணனார் இமயவரம்பன் மனைவியிடம் இருந்ததாகப் பாடும் 'ஆறிய கற்பு' ஆண்களின் எதிர்பார்ப்பு; இயற்கை அன்றென காக்கைப்பாடினியாரின் பெண்மொழி நிறுவுகிறது.

மதிப்பீடு

இதுகாறும் கண்டவற்றான் பதிற்றுப்பத்தைப் பாடியுள்ள ஏழு ஆண்பாற் புலவர்கள் அரச மகளிரைப் போற்றும் போக்கிற்கும்; பெண்பாற் புலவரான காக்கைப்பாடினியார் போற்றும் போக்கிற்கும் அடிப்படையில் அமைந்துள்ள வேறுபாடு புலப்படுகிறது. பெண்ணை ஐம்புலன் இன்பத்திற்குரிய பொருளாகப் பார்க்காமல் நற்பண்புகளையும், பிற பெருமைகளையும் முன்னிலைப்படுத்துவது பெண்மொழியாக அமைகிறது. மேனியெழிலைப் பாடுதற்கும்; அலங்காரத்திற்கு சிறப்பிடம் அளிப்பதற்கும்; அதாவது தோற்றச் சிறப்பிற்கும் பெண்மொழி மிகச் சிறிதளவே இடம் கொடுத்துள்ளது. கற்பிற்குரிய பண்புக்கூறுகளாக ஆண்கள் கூறும் நாணம், மடமை, அடக்கம், இன்சொல், இனிய முறுவல் ஆகியவற்றை பெண்மொழி ஒதுக்கியுள்ளது. மரபு வழிவந்த இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுள்ள பெண் பற்றிய போலியான கருத்தாக்கங்களை உடைத்தெறிவதே பெண்ணியத் திறனாய்வு என்பார் முனைவர் இரா.பிரேமா (மேலது- ப.87). காக்கைப்பாடினியார் பெண் பற்றிய போலியான கருத்தாக்கங்களை உடைக்கிறார்.

முடிவுரை

பெண்மை, கற்பு முதலிய கொள்கைகள் ஆண்பாலினரின் எதிர்பார்ப்புக்கேற்ப உருவாக்கப்பட்டவை. நடைமுறை வாழ்க்கையில் அவற்றால் பெண்பாலாருக்கு மிகுந்த சோதனைகள் உண்டாகின்றன. இயற்கையான ஆசைகளையும், உணர்வுகளையும் ஒதுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உட்பட வேண்டிய சூழலை அக்கோட்பாடுகள் ஏற்படுத்துகின்றன. ஆனால் ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பற்றிப் பாடும்போது அக்கொள்கைகள் காலாவதியாகி நீர்த்துப்

போவதை காக்கைப்பாடினியாரின் பாடல் உணர்த்துகிறது. சங்க இலக்கியத்திலுள்ள ஒவ்வொரு பெண்பாற்புலவரின் பாடல்களையும் இத்தகைய ஆய்விற்கு உட்படுத்தும் போது; பெண்கள் அன்று தொட்டுப் போராடுவது புலப்படும்.