- ஒளவை என்னும் …
10. ஒளவை என்னும் ஆளுமை
முன்னுரை
சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று முருகப் பெருமானிடம் கேட்ட புராணத்து ஒளவை தவிர; தமிழ் இலக்கிய வரலாற்றில்- ஆத்திசூடி பாடிய 12ம் நூற்றாண்டுக்கால ஒளவை, விநாயகர் அகவல் பாடிய 14ம் நூற்றாண்டு ஒளவை, அதியனிடம் நெல்லிக்கனி பெற்ற பண்டைத் தமிழக ஒளவை என காலந்தோறும் இருந்த ஒளவைகளின் எண்ணிக்கை நீள்கிறது. ஒளவை பாடியதாக எட்டுத்தொகையில் மொத்தம் 59 பாடல்கள் உள்ளன. அவற்றுள் 26 பாடல்கள் அகப்பாடல்கள். பிற புறப்பாடல்கள். இப்பாடல்கள் அவளது வாழ்க்கை பற்றிய வரைவியலையும், அவளது ஆளுமையையும் அறியத் துணை செய்கின்றன.
பெயரின் பொருளும் காரணமும்
ஒளவை என்னும் பெயர் அழகிய தலைவி என்னும் பொருள் உடையதாகும். ஒளவை = அவ்வை = அ + ஐ (ஐ =அய் என்றாற்போல் ஒள = அவ்) அ = அழகிய; ஐ=தலைவி; ஒளவை = அழகிய தலைவி. அவ்வை என்னும் பெயர் அவள் குட்டையாக இருந்ததால் இடப்பட்ட காரணப் பெயர் எனவும் கருதலாம் .
பிறப்பு
பாணர் குலத்தில் தோன்றியவள் ஒளவை. இதற்கு சான்றாக அமைவன அவளது பாடலில் உள்ள அகச்சான்றுகள். ஒளவை பாணர்குழுத் தலைவி. அவளது குழுவில் விறலியும், கிணைப் பொருநரும் இருந்தனர். இதனை புறம்.103 காட்சிப்படுத்துகிறது. தன் மண்டை (உண்கலம்) கவிழ்ந்திருக்க அதை மலர்த்தி மெழுகு மெல்லடையிற் கொழுநிணம் பெருப்ப ஊட்டுவான் என்று தன் கூட்டத்து விறலியிடம் பேசுவதாகப் பாடுகிறாள். தன் குழுவிலிருந்த கிணைப்பொருநன் அதியனிடம் பெற்று உவந்த வரிசைகளை அவள் பாடுவதும் நோக்கத் தக்கது. அதியன் இறந்த பிறகு அவன் மகன்
பொகுட்டெழினியிடமும் அவளது கிணைப்பொருநன் பல சிறப்புக்களைப் பெற்றதாக அவளே பாடியிருக்கிறாள் (புறம்.பா.390&392 ). இவ்விரு பாடல்களை அடியொட்டி ஒளவை பாடல்கள் கற்பனையின் அடிப்படையில் பாடப்பட்டவை என்றும்; அவள் பாண்மகள் என்பது ஐயத்திற்குரியது என்றும் ஆய்வாளர் கருத்துரைத்துள்ளனர் (க.கைலாசபதி- The Heroic Poetry). இதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய தேவை உள்ளது. கிணைப்பொருநன் பாடுவதாக ஒளவை பாடக் காரணம் உள்ளது (பார்க்க- கலைக்குழுத் தலைவியின் மேலாண்மைத் திறன்). பின்வரும் தரவுகள் ஒளவை பாணர்மகள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
பாண்பாட்டு என்னும் துறையிலமைந்த பாடலும் ஒளவையின் பாடல்களில் ஒன்று. இது வீரமரணமடைந்த ஒருவனின் ஆற்றல் பாடி ஈமக்கடன் செய்வது. 'களிறெறிந்து வீழ்ந்தவரைக் கைவல் யாழ்ப்பாணர் கடன் இறுப்பது பாண்பாட்டு' ஆகும் என புறப்பொருள் வெண்பாமாலையும் கூறுகிறது. 'செருவத்து ஒருவருமில்லை மாதோ ' என புறம்.311ம் பாடல் சுட்டி; வீரமரணம் அடைந்த ஒருவனுக்கு ஈமக்கடன் செய்ய யாருமில்லை என்பது குறித்து ஒளவை வருந்தித் தானே அக்குறை தீர்க்க முனைவதைக் காட்டுகிறது. பாணர் குலத்தைச் சேர்ந்தவளாதலால் யாருமில்லாத வீரனுக்குத் தன் குழுவோடு சேர்ந்து இறுதிக்கடன் ஆற்றுகிறாள்.
புறம்.206ல் "எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே" எனச் சினந்து எழும்போது, "காவினம் கலனே" என 'விசுக்'கென்று தன் இசைக் கருவிகளைக் காவடியில் கட்டி எடுப்பதைத் தன்கூற்றாகப் பாடியிருப்பது நோக்கத்தக்கது. சினத்தோடு வெளிப்படும் பாடலில் உண்மை வெளிப்படும். இல்லாத கற்பனை இடம்பெற வழியில்லை. அவள் பாணர் குலப்பெண் ஆதலால் இசைக்கருவிகளைக் கட்டித் தூக்குவது; கிளம்பும் முன் அவள் செய்யும் முதற்செயல் ஆகிறது.
அதியமான் மறைந்தபோது அவன் மார்பைத் துளைத்த வேல் பாணரின் உண்கலத்தைத் துளைத்து இரந்து நிற்பவர் கைகளைத் துளைத்து புலவர் நாவில் சென்று வீழ்ந்தது என்கிறார் (புறம். 235). இங்கே முதலிடம் பெறுவது பாணர் உண்கலமே.
தமிழ்ச் சமுதாயம் ஒளவைப்பாட்டி என்று அழைத்த காரணத்தை
ஆய்வாளர் கூறுவதும் நோக்கத்தக்கது (சிறகு- மின்னிதழ் 7.7.18- தேமொழி- ஒளவைப்பாட்டி). பாணன் என்ற இனப்பெயர்க்குரிய பெண்பாலாக 'பாட்டி' என்ற சொல் வழங்கியமை தொல்காப்பியப் பொருளதிகார கற்பியல் சூத்திரம் 52ல் விளக்கமுறுகிறது. அத்துடன் அச்சொல்லை அதே பொருளில் பரணர், மாங்குடி மருதனார், கரும்பிள்ளைப் பூதனார் மூவரும் தம் பாடல்களில் எடுத்தாண்டுள்ளமையை எடுத்துக்காட்டியுள்ளார் (அகம்.196, மது.அடி.- 748-750, பரி.10- அடி- 36-37).
பாணர்கள் வாய்மொழிப்பாடல்கள் பாடியோர் ஆவர். எனவே அவர்களது பாடல்களில் வாய்மொழிக் கூறுகள் மிகுந்திருப்பது இயற்கை. ஒளவையின் பாடல்களிலும் வாய்மொழிக் கூறுகள் மிகுதியாக உள. அதியன் இறந்த போது அவள் பாடிய ஒப்பாரி குறிப்பிடத்தக்கது. தமிழகத்து ஒப்பாரியில் இடம் பெறும் இரண்டு தவிர்க்க முடியாத கூறுகள்: இழுவையும் ,சிளுக்கும் ஆகும். இழுவை என்பது ஒலியோடு நீண்ட மூச்சை உள்வாங்குவது. சிளுக்கு என்பது உள்வாங்கிய மூச்சை ஏக்கம் கலந்த ஒலியோடு சேர்த்து வெளிவிடுவது. இந்த ஒப்பாரி தான் புறம்.235. இது வாய்மொழி இலக்கிய வகைகளுள் ஒன்றான ஒப்பாரி என்பதற்கு இதன் யாப்பமைதியே சான்று. முதலடியில் நான்கு சீர்கள்; இரண்டாமடியில் இரண்டு சீர்கள்; இங்கு மூன்றாவது சீராக அமைய வேண்டியது இழுவை; நான்காவது சீராக அமைய வேண்டியது சிளுக்கு; எட்டாவது அடியில் மீண்டும் ஒரு இழுவையும் சிளுக்கும் இடம்பெறும்; அதற்கேற்ப அந்த அடியில் மூன்று சீர்களே உள்ளன. அதேபோல் பதினொன்று, பதினான்கு, பதினைந்தாம் அடிகளிலும் உள்ளன. (நாட்டார் பாடல்களைப் பாடி நிகழ்ச்சிகள் நடத்தும் திருமதி. விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் 1990ல் ஒளவையின் ஒப்பாரியை இழுவையோடும் சிளுக்கோடும் எம் கல்லூரி இலக்கியமன்றக் கூட்டத்தில் பாடிக்காட்டி நேரில் கேட்டிருக்கிறேன். அது ஒரு வெள்ளிக்கிழமை; சுமங்கலிப் பெண்கள் வெள்ளிக்கிழமையன்று மாரடிக்கக் கூடாது. ஆகையால் மாரடிப்பது போல் சைகை செய்து பாடினார். இழுவை, சிளுக்கு என்ற பெயர்களும் அவை ஒளவை பாட்டில் பொருந்தியுள்ளன என்பதும் திருமதி. விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணனிடம் இருந்து தெரிந்து கொண்டவை.)
அவளது கலைப்பயணம் நாஞ்சில் வள்ளுவனிடம் தொடங்குகிறது (புறம்.140). இப்பாடலிலும் தன் குழுவிலிருந்த விறலி
பற்றிக் குறிப்பிடுகிறாள். எனவே ஒளவை பாண்மகளே .
வளரிளம் பருவம்
எல்லோரையும் போல் ஒளவைக்கும் இளமைக்கால நிகழ்வுகள் உண்டு. தான் காதலித்த தலைவனோடு அவள் பொழிலில் விளையாடினாள். (நற்.187) அவளது காதலன் தேரில் வந்து அவளைச் சந்தித்துத் திரும்பினான். அவளுக்காக அறத்தொடு நிற்பதற்கும் ஒரு தோழி வாய்த்திருந்தாள் (குறு.23). அவளது காதலும் சமுதாயம் போற்றும் திருமணத்தில் முடிந்தது (குறு.15).
அகவாழ்க்கை
தன் இல்லறத்தில் பெரும் அவலத்தை அனுபவித்தவள் ஒளவை. தனக்கும் தன் கணவனுக்கும் இடையிலிருந்த பாலுறவுச் சிக்கலை வெள்ளந்தியாக வெளித்தெரிய விட்டவள். தனது காமம் நெஞ்சில் வேர்விட்டு; ஊரார் தம்முள் கூடிப் பேசும்படி கிளைத்து; காதல் பரப்பி; புலவோர் போற்றும் நாணமே சிறிதும் இல்லாத பெரிய மரமாக மாறி; நிலம் முழுதும் பரவி; அலர்ந்த அரும்புகள் கொத்துக் கொத்தாகச் சொரியும் நிலை அடைந்து விட்டது (அகம்.273) என்று தன் ஏமாற்றத்தை விவரிக்கிறாள். மேற்சுட்டிய பாடலில் தன் உணர்ச்சியைத் தான் அவள் பாடுகிறாளே அன்றி இந்த ஏமாற்றம் அடுத்தவர் உணர்வைக் கடன் வாங்கிப் பாடுவதன்று. ஒளவையின் அகப்பாடல்கள் தன்னுணர்ச்சிப் பாடல்கள் ஆகும் தகுதி பெற்றவை.
ஒளவையின் காமஉணர்வை அவளது தலைவன் முற்றும் தணிக்கவில்லை என்று முனைவர் மு.பழனியப்பன் கூறும் விளக்கம் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும், அவளது நிலையைத் தெளிவிப்பதாகவும் அமைகிறது ('பெண்ணிய வாசிப்பும் பெண்ணெழுத்துத் திறனாய்வும்'- பெண்ணிய வாசிப்பு- ப.68). இயல்பாக ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பாலியல் வேட்கை நிறைவேறாத போது சினம் ஏற்படுவதும் இயற்கையே. ஒளவையின் சினத்தைப் பின்வரும் பாடல் வருணிக்கிறது.
"முட்டுவேன் கோல் ? தாக்குவேன் கோல்?
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
'ஆஅ ', 'ஓ ', 'ஒல்' எனக் கூவுவேன் கொல் ?
அலமரல் அசைவளி அலைப்ப என்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே" (குறு.28)
என்னுங்கால் அவளது நிறைவடையாத வேட்கை; தான் மருவியவனின் இயலாமையால் ஏற்பட்ட சிக்கல் வெளிப்படுகிறது. பாவப்பட்ட நிலையில் இருந்தவள் யார்மேல் தன் சினத்தைக் காட்டுவாள்? தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் மனநிலைக்கு ஆளாகிறாள். அதனால் தான் 'முட்டுவேனோ என்று கேள்வி கேட்கிறாள்; யாரைத் தாக்குவேன் என்று படபடக்கிறாள்; நிதானமாக சிந்திக்கவும் இயலவில்லை; ஏதாவது காரணத்தைக் கூறி கத்திக்கத்தி இந்த ஊரை எழுப்பலாமா? புறம் பேசத் தெரிந்த ஊருக்கு பிரச்சினையைத் தீர்க்கும் வழிசொல்லத் தெரியவில்லையே; வாடைக்காற்றில் பெருகும் என் துயரம் அறியாமல் இவ்வூர் தூங்குகிறதே.' என்று அங்கலாய்க்கிறாள். இது தான் அவளது அகவாழ்க்கையின் நிலை.
நற்.295ம் பாடலில்; தன் துன்பத்தை அறிந்து தோழியர் கூட்டம் துன்புற்றது என்கிறாள். அன்னைக்கும் எல்லாம் புரிந்து விட்டது; என்னை இற்செறித்து விட்டாள் என்கிறாள். கள்ளின் சாடி போன்ற தன் இளமைநலம் வீட்டிற்குள்ளேயே இருந்து முதுமை அடையும் என்கிறாள். ஏன்?
கொண்டவன் இயலாமையை மறைக்கத் தெரியாமல்; தன் ஆறாக்காதலையும் மூடி வைக்கத் தெரியாமல்; தோழியர் தொடங்கி ஊர் முழுதும் அம்பலாக்கக் காரணமான மகளாகிய ஒளவையை இற்செறிக்காமல் பெற்றவளால் வேறென்ன செய்ய இயலும்? அந்த இற்செறிப்பு தானே அவளுக்குப் பாதுகாப்பு என்று தாய் எண்ணுவாள் !?
அதையடுத்து அவள் வாழ்வில் நிகழ்ந்த சோகம்; அந்த சோகத்தை எண்ணிப் பார்க்கும் பொழுது அவள் மனம் வெந்து சாம்பலானது. அந்த சோகத்தை எண்ணாமல் புறந்தள்ளி விட்டு; எல்லோரையும் போல் கலகலப்பாக அன்றாடம் பொழுது போக்கினால்; காமநோய் வானளவு உயர்ந்து; துன்பத்தைக் கொடுத்தது (குறு.102). ஆனால் அந்நோய்க்குக் காரணமான தலைவன் திரும்பவில்லை. சிக்கலுக்குக் காரணம் ஆனவனுக்குத் தப்பிக்கும் எண்ணம் தவிர வேறேதும் தோன்ற வழியில்லை என்பது உலகறியும். அதனால் தான் அவன் ஒளவையைத் தேடி மீண்டு வரவில்லை. பொருளைக் காரணம் காட்டிப் பிரிந்து சென்ற கணவன்; மீண்டு வருவேன் என்று சொன்ன காலம் கடந்தும் வரவே இல்லை.
அவர்களது இல்லறச் சிக்கல் கணவனைத் துரத்தியது. தன் கணவன் வந்து விடுவான் என்று எல்லாப் பெண்களையும் போல் அவளும் காத்திருந்தாள் (குறு.158,183&200). இந்தப் பிரிவு நிரந்தரம் என்று புரிந்தபோது அவள் நொந்து புலம்புவதையும் அவளது பாடலில் காணலாம். இருவருடைய உடற்கூறியல் அடிப்படையிலான சிக்கலைக் கூடப் பொருட்படுத்தாமல் அவள் ஒருவாறு தன்னைத் தேற்றிப் பாடுவதாக அமைந்துள்ளது இப்பாடல். அவளது காதல்மனம் தன் கணவனின் இயலாமையைப் பொருட்படுத்தாமல் சேர்ந்து இருக்கும் வழியையே நாடுகிறது. பிரிந்து சென்ற தலைவனுடன் தானும் சென்றிருந்தால்; காட்டாற்றின் கரையிலே மரக்கிளைகள் தாழ்ந்துள்ள மணல்மேட்டில்;
"மெய்புகுவன்ன கைகவர் முயக்கம் அவரும் பெறுகுவர் மன்னே" (அகம்.11) என்கிறாள். இங்கு தம் இருவருக்கும் இடையிலிருந்த பாலுறவுச் சிக்கலை அடியொற்றி அதற்கு மாற்றாகவே; 'கலவிக்கூட்டம் இல்லாமல்; அதையொத்து கைகளால் அணைத்துத் தன் கணவனோடு இருந்தால் அவனும் இன்புறுவான்; தானும் அழ நேராது' என்கிறாள். ஆனால் தன்னை அவன் நிரந்தரமாகப் பிரிந்த காரணமும் அவளுக்குத் தெரிந்ததால் அவள் ஆற்றாது அரற்றியதை குறும்.39ல் காண்கிறோம். அந்த விரக்தியின் எல்லையில் தான் அவள் தன் கணவனை 'முலையிடை முனிநர்' என்கிறாள்.
ஒளவைக்கும் அவளது கணவனுக்கும் இடையில் பாலுறவுச் சிக்கல் இருந்தபோதும் அவர்களிடையே இருந்த காதல் மறையவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டவர்; ஆதலால் வினைவயின் பிரிவைத் தன் கணவன் கூறிய போது அவள் அதைப் பெரிது படுத்தவில்லை. உன்னோடு சேர்ந்து வந்தால் காட்டுவழிச் செலவும் இனிதாகவே இருக்கும் என்று சொல்லி நின்றாள் (குறு.388).
ஒளவையும் வெள்ளிவீதியும்
ஒளவை போலவே அகவாழ்வில் துன்புற்ற இன்னொரு பெண் வெள்ளிவீதி. வெள்ளிவீதியாரின் பெண்மொழி பற்றி சு.மலர்விழி ஒரு ஆய்வுக்கட்டுரையில் 'பெண்கள் வெளிப்படையாகப் பேசக்கூடாது என்று வரையறுக்கப்பட்ட காமத்தை வெளிப்படுத்தி; பிரிந்து சென்ற காதலனுக்காக காத்திருக்க வேண்டும் என்ற மரபை உடைத்து; அவனைத் தேடி அலைந்து; தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தையும்,
நோயையும் நுட்பமாகப் பதிவு செய்ததன் மூலம் சமூகக் கட்டுக்களைத் தகர்த்து; தன் இருப்பைப் பதிவு செய்த ஒற்றைக் கலகக் குரல்' என்று முடித்துள்ளார். (காவ்யா- தமிழ் இதழ்- ஏப்ரல்-ஜூன் 2018- சு.ஷண்முக சுந்தரம்- ப.ஆ., சென்னை. ப.32).
"நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே"
என்று பாடி ஊர் ஊராய், காடுகளைக் கடந்து; ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு குடியிருப்பிலும் சென்று தன் காதலுக்குரியவனைத் தேடி அலைந்தவர் வெள்ளிவீதியார். இந்த வெள்ளிவீதியின் செயலை ஒளவை தன் பாடலில் விபரமாகவே எடுத்துச் சொல்கிறார். (அகம்.147) வெள்ளிவீதியைப் போல நானும் தேடித்தேடி அலைய என் மனம் நாடுகிறது என்கிறாள். அவன் சொன்னபடி வந்து விடுவான் என்று நம்பி வீட்டில் தனித்து இருந்து துன்புறுபவள் நான் (நற்.129). சொன்ன காலம் கடந்து விட்டது; இனி அவனைத்தேடி யானும் செல்வேன் என்று தன் மனதோடு பேசுகிறாள் (அகம்.303).
பெண்ணியவாதி ஒளவை
பெண் எழுத்து ,பெண் மொழிக்குச் சான்றாக ஒளவையார் பாடல்களைச் சுட்டலாம் என்கிறார் அரங்க மல்லிகா (பெண்ணின் வெளியும் இருப்பும்- அரங்க மல்லிகா- ப.13). தனது அடங்காத காமநோயை "முலையிடைத் தோன்றிய நோய்" என்றே ஒளவை சுட்டுகிறாள். ஒரு பெண்ணின் காமத்தை அவளது மார்பு வெளிப்படுத்தும் என்பதால் ஒளவை அதை வெளிப்படையாகப் பாடும் போது; காமம் ஆணுக்கு மட்டும் அங்கீகரிக்கப்பட்டதாக உள்ள கருத்தாக்கத்தை ஒளவையின் பாடல் உடைக்கிறது. பெண்ணின் ஆழ்மனஉணர்வுகளை கட்டற்று வெளிப்படுத்த அனுமதிக்கப்படாத சூழலில் ஒளவையின் பாடல் இயல்பாக வீரியமிகுதியுடன் வெளிப்படுத்துகிறது. அகம்.273ம் பாடலின்படி ‘தனது காமம் ஒருதலை க்கு ஒருகால் பெருகிச் செல்வதன்றித் தணியவில்லை; தோழி ஆற்றியும் அடங்கவில்லை; ஊரெல்லாம் அறிந்து பேசும்படி வெளிப்பட்டுவிட்டது’ என்று பாடியிருப்பதால் அது 'தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்' என்று வ.சுப.மாணிக்கனார் கூறுவதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
கடக்க இயலாக் காமவேட்கைப்பட்டவளாகவே ஒளவையின் குறு.102ம் பாடலும் அவளைக் காட்டுகிறது. தன் காமம் வானளவு மிகுதியானது என்றும்; தன்னால் மருவப்பட்ட தலைவன் சான்றோன் அல்லன் என்றும் பாடுகிறாள். நிறைவுறாப் பாலுணர்வு வேட்கையை வெளிப்படுத்தத் தயங்காத பெண்ணாக ஒளவை காணப்படுகிறாள். இன்றைய 21ம் நூற்றாண்டில் கூட பெண்கள் வெளிப்படையாகப் பேசத் தயங்கும் சிக்கல் இது. இந்தச் சிக்கலால் ஏற்படும் மனஉளைச்சலைத் தான் அவளது பாடல் சித்தரிக்கிறது.
"... ... … நம் துயர் அறியார் கொல்லோ
தாமேஅறியினும் நம்மனத்தன்ன மென்மை இன்மையின்
நம்முடை உலகம் உள்ளார் கொல்லோ
யாங்கென உணர்கோ யானே" (அகம்.273)
என்றெல்லாம் புலம்புவதும்; இறுதியில் அத்தலைவன் தன்னை நாடி வராமல் இருப்பதைக் கூறி நோவதும்; ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே சமூகக் கட்டுப்பாடுகளைத் தகர்த்து தனக்கென ஒரு மொழிச்சுதந்திரத்தைத் தானாகவே அங்கீகரித்துக் கொண்ட பெண்ணியவாதியாகக் காட்சியளிக்கிறாள் .
பிரிவைப் பற்றித் தன் கணவன் பேச்செடுத்த போது 'செல்வார் அல்லர்' என்று இகழ்ந்து இருந்தாள். அவள் கணவனோ 'இவள் பிரிவுக்கு ஒருப்படமாட்டாள்' என்று நன்கு அறிந்து அமைதியாகவே இருந்தான். இருவருடைய அழுத்தமான மனங்களும் இரண்டு பேராண்மைகளாகத் தம்முள் பூசலிட்டன (குறு.43). இப்பாடலில் ஒளவை கையாளும் 'இரு பேராண்மை' என்ற தொடர் அவளது ஆளுமையை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. தன்மனம் ஆண்மைத் தன்மை கொண்ட வலிமை வாய்ந்தது என்கிறாள். இப்படிச் சொல்வதற்கே எத்துணை துணிவு வேண்டும்!
பெற்றோர் பாதுகாப்பிலிருந்து மாறித் தன் சொந்தக்காலில் நிற்கவேண்டிய நிலை வந்த போது; ஒரு கலை வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் ஏற்றுக்கொண்டு பாரதத்தில் முதல் பெண்தூதராக அதியமானிடம் இருந்து தொண்டைமானிடம் சென்று சாதனை படைத்த முதல் தமிழ்ப் பெண்ணியவாதி ஒளவை.
தமிழ்ச் சமுதாயத்தின் பார்வையும் ஒளவையின் நிலையும்
பெண்ணுக்குத் தோன்றும் வேட்கை இயற்கை; எனினும் அது
பற்றிப் பெண் தன் வாயால் பேசுவதே இழுக்கு என்று எண்ணும் உற்றார், உறவினர் , பெற்றோர், பெரியோர், உடன்பிறப்புகள், உடன்பிறவா நட்புகள், ஊரார் அனைவரும் நிறைந்த சமூகத்தில் தன் வேதனையை மறைக்கவும் முடியாமல், உடலைத் துன்புறுத்திக் கொள்ளவும் அறிவு இடம் கொடுக்காமல் வாழ்ந்து சாதித்தவள் ஒளவை.
உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைந்தனென் அல்லனோ பெரிதே நினைந்து
மருண்டனென் அல்லனோ, உலகத்துப் பண்பே
நீடிய மரத்த கோடு தோய் மலிர்நிறை
இறைத்து உணச் சென்று அற்று ஆங்கு
அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக் கொளவே" (குறு.99)
இது தன்மை இடம் சுட்டி ஒளவை பாடியது. இதன் பொருளாவது:
‘நான் எண்ணிப் பார்த்தேன்; எண்ணும் போது உலக இன்பங்களிற் பெரிதாகிய காமஇன்பத்தை நினைத்துப் பார்த்தேன். நினைத்தபோது உலகத்துப் பண்பைக் கருத்தில் கொண்டு மருண்டேன். நீண்டு உயர்ந்த மரம்; அதன் கிளை ஒன்று ஆறோடும் போக்கில் குறுக்கே தாழ்ந்து உள்ளது; ஓடிவரும் பெருவெள்ளம் அந்தக் கிளையைத் தோய்ந்து செல்கிறது; கிளையில் இருந்து கொண்டு அந்த வெள்ளநீரை இறைத்து உண்டு தாகம் தீர்க்க இயலுமா? வெள்ளத்தின் வேகம் கிளையில் அமர்ந்து இருப்பவரையும் அடித்துச் செல்லும்; கிளையையும் சேதமாக்கும்; அத்தகைய காமம் என்னிடம் உள்ளது.’ இத் தன்னுணர்ச்சிப்பாவில் தன்னுடைய வேட்கை தன் உயிரைக் கொல்லும் தன்மை உடையது என்கிறாள். பாடலின் இறுதி மூன்றடிகள் இறைச்சிப் பொருள் தருகின்றன. தனக்கும் தான் மருவிய தலைவனுக்கும் இடையே இருந்த பாலுறவுச் சிக்கலை குறிப்பாகச் சொல்கிறாள்.
இப்பாடலுக்குப் பொருள் எழுதிய பெருமழைப் புலவரும் அவருக்கு முன்னர் கொளு எழுதியோரும் இது ஒரு தலைவன் கூற்று என்கின்றனர். அவன் பொருள் தேடித் சென்ற பொழுது தலைவியை நினைத்தானா என்று தோழி கேட்டாளாம். அதற்குத் தலைவன் பதில் கூறினானாம். பாடலை வரிசைப்படுத்துவோரும், உரை எழுதுவோரும் இவ்வளவு வலிந்து ஒரு கற்பனை செய்யக் காரணம்? வெள்ளம் போல் பெருக்கெடுக்கும் காமம் பற்றி ஒரு பெண் பேசுவது அவளுக்கு இழுக்கு என்னும் கொள்கையே இப்பொருத்தமற்ற விளக்கத்தின் காரணமாகும். எனவே உரைக்கும் கொளுவிற்கும் பனுவல் செய்திக்கு அடுத்த சிறப்பிடமே தர வேண்டும்.
ஒளவையின் இன்னொரு பாடலையும் தலைமகன் கூற்றாகவே உரையாசிரியரும், கொளு எழுதியோரும் பார்க்கின்றனர். அவ்வாறு சொல்வதன் காரணம் அதில் இடம் பெற்றிருக்கும் உவமை.
"நல்லுரை இகந்து புல்லுரை தாஅய்ப்
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தங்கா வெள்ளம் நீந்தி
அரிது அவா உற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல் உயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே" (குறு.29)
மழை நீர் நிறையும் பச்சை மண் பானை கரைந்து ஓடுவதைப்போல; உள்ளத்தால் தாங்க முடியாத ஆசைப்பெருக்கை நீந்திக்கடக்க அவா உற்ற நெஞ்சே என்று தன் மனதோடு புலம்புகிறாள். இவ்வாறு ஒரு பெண் பேசுவது அழகல்ல என்று நினைத்தோர் பாடலைத் தலைமகன் கூற்றாக்குகின்றனர். இதை அடுத்து இன்னொரு உவமையும் இப்பாட்டில் இடம்பெற்று நம்மை நெஞ்சு நெகிழ வைக்கிறது. ஒளவையை இற்செறித்த அவளது தாய் தன் ஆற்றாமையை எங்கே கொட்டியிருப்பாள்? தன் மகள் மீது தானே; பெற்றவளிடமிருந்து பாசத்தில் நனைந்த நல்ல சொற்களை ஔவையால் கேட்க முடியவில்லை. மாறாக சுடுசொற்களை மட்டுமே கேட்கிறாள். மரத்தின் உச்சியில் குட்டியைத் தழுவிக் கொண்டிருக்கும் மந்தி போல என்னைத் தன் நெஞ்சோடு தழுவி என் குறையைக் கேட்பவர் எவருமில்லையே என்று விம்முகிறாள். அவளுக்கு துன்பத்திற்கு மேல் துன்பம் பெருகுகிறது. இந்தப் பாடலை இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சை நோக்கிப் பேசுவதாகப் பொருள் கூற முயன்றுள்ளனர். ஆனால் குட்டியை அணைக்கும் தாய்க்குரங்கு என்னும் உவமை இப்பாடல் ஒளவையின் தன்னுணர்ச்சியைப் புனைகிறது என்ற கருத்தை உறுதி செய்கிறது.
கலைக்குழுத் தலைவியின் மேலாண்மைத் திறன்
ஒளவையின் கலை வாழ்வும் அரசியல் வாழ்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. புறம்.390&392ம் பாடல்கள்; ஒரு கிணைப் பொருநன் பாடுவதாக ஒளவை பாடியன. பெண்ணாகிய ஒளவை ஒரு
ஆண் பாடியது போல் பாடியிருப்பதன் காரணம் தன் குழுவைச் சேர்ந்த பொருநனின் நன்றியுணர்வை குழுத்தலைவி என்ற முறையில் மன்னனிடம் இவள் மட்டுமே வெளிப்படுத்தும் மேலாண்மை நடைமுறை எனலாம்.
அரசியல் தொடர்பு
நாஞ்சில் வள்ளுவனை விட்டு வடக்கு நோக்கி மேலே சென்ற ஒளவை தன் பாணர் குழுவோடு கொங்கு நாட்டுப் பகுதியில் இருந்த இனக்குழுக்களில் ஊடாடுகிறாள். பசுக்கள் மிகுந்த கொங்கு நாட்டுப் பகுதியில் வெட்சிப் போர், கரந்தைப்போர் நிகழ்ந்த இடங்களில் அவளது பாடல்கள் பிறந்துள்ளன. அத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.(புறம்.269& 290)
முதன்முதலாக அதியமானைக் காணச் சென்ற அவளது சொல்லாடல்; பரிசில் வாழ்க்கைக்குரியோரின் செம்மாந்த பண்பைத் தாங்கி நிற்கிறது (புறம்.206). அதியனைச் சந்தித்த ஒளவை உடன் அவனோடு நிரந்தரமாகத் தங்கவில்லை. தன் பாணர் குழுவோடு அவள் பல்லூரும் சுற்றி வந்தாள். நற்.உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் ‘பாடினோர் வரலாறு’ கூறுங்கால் ஒளவை கொண்கானத்து நன்னனைப் பாடியதைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்குரிய பாடல் சான்று கிட்டவில்லை (ப.11) மீண்டும் மீண்டும் அதியனிடம் வந்து பாடிப் பரிசில் பெற்றாள் (புறம்.101, 103). அதியனுடன் அவள் தங்கியிருந்த காலத்தில் அவன் தன்னைச் சூழ்ந்திருந்த ஏழு இனக்குழுத் தலைவரோடும் வேளிரொடும் திருக்கோவலூர் மலையமானோடும் தொண்டைமானோடும் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையோடும் பகையுற்றிருந்தான்; போரிட்டான் என்ற வரலாற்றுச்செய்திகள் புறநானூறில் பதிவாகி உள்ளன. இனக்குழுத் தலைவருடன் செய்த போர் புறம்.87, 88, 89, 90 ஆகிய பாடல்களிலும்; தொண்டைமானுடன் கொண்ட பகை காரணமாக ஒளவை தூது செல்வது புறம்.95லும்; கதிர்நெல்லின் செம்மல் மூதூருடைய வேளிருடன் செய்த போர் புறம்.97&98லும் உள்ளன. காரியின் திருக்கோவலூரை வென்றமை புறம்.99&93ல் உளது.
ஒளவை அதியன் உறவு
அதியனுக்கும் ஒளவைக்கும் இடையிலிருந்த உறவு தந்தையின் முன் நிற்கும் புதல்வரின் உறவு போன்றது என்று அவளது பாடலே பகர்கிறது. ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்த நிகழ்வு (புறம்.91) அவர்களது நட்பின் நெருக்கத்தைக் காட்டுகிறது. உன் அன்பால் என்சொல் தந்தையர்க்குப் புதல்வர் சொல்லும் சொல் போல் அருள் சுரக்கும் தன்மையன என்கிறாள் (புறம்.92). எனக்கு நீ இனியவன்; பகைவர்க்கு நீ கொடியவன் (புறம்.94) என்கிறாள். அதியனை தாட்படு சின்னீரில் இருப்பினும் களிற்றைக் கொல்லும் முதலை போன்றவன் என்கிறாள் (புறம்.104). தீக்கடை கோல் போல அதியனின் வீரமும் வலிமையும் மறைந்திருக்கும் (புறம்.315). அதியனின் மகன் எழினி பிறந்த போது ஒளவை உடனிருந்தாள். அதியனின் இறப்பு வரை அவள் இருப்பு தொடர்ந்தது. அதியன் இறந்த போது அவள் கையற்றுப் பாடினாள் (புறம்.231, 232, 235). பின்னர் எழினி மன்னனாக இருந்த காலத்தும் அவள் தகடூரிலேயே இருந்தாள் (புறம்.96, 100).
ஔவையார் பாடல்கள்
அனைத்திலும் தன்னுணர்ச்சியே இடம்
பெறுவது கண்டோம். குறுந்.80 ஒரு பெண் தன் சுற்றத்தை அழைத்துப் புனலாடச் செல்வதாக அமைந்துள்ளது. தொகுத்தோர் இப்பாடலுக்கு எழுதிய அடிக்குறிப்பில் இது பரத்தை கூற்று என்கின்றனர். ஔவையை இது இழிவுபடுத்துவதாக அமைகிறது. அதியனால் புரக்கப்பட்ட ஔவைக்கு அந்த அரண்மனையில் நிலவிய அசூயையான சூழலை இப்பாட்டு காட்டுகிறது. புனல் விளையாடத் தன் கலைக்குழுவினரோடு கிளம்பும் ஔவை; 'தலைவி (அதியனின் மனைவி) தன் கணவனைப் (அதியனை) பங்காளிகளோடு சேர்ந்து காத்துக் கொள்ளட்டும்; நாம் புனலாடச் செல்வோம்' எனும் பொருள்பட;
"கிளையொடும் காக்க தன் கொழுநன் மார்பே"
எனப் பாடியுள்ளாள். இவ்வாறு பொருள் கொள்வதில் இடர்பாடு எதுவும் ஏற்படவில்லை. வேந்தனின் அரண்மனையில் நிலையாகத் தன் குழுவினரோடு தங்கிய ஔவைக்கு இத்தகு சிக்கல் எழுவது இயற்கையே.
புறவாழ்க்கையில் சமுதாயத்தோடு ஒளவை கொண்ட உறவு
புறம்.286ல் பொதுமக்களுடன் நெருங்கிய உறவுடைய ஒளவையைப் பார்க்கிறோம். வெற்றி அல்லது வீரமரணம் தான்
புத்தேள் உலகிற்கு இட்டுச் செல்லும் என்னும் கொள்கை உடைய சமுதாயத்தில் வாழ்ந்தவள் அவள். தன் மகனின் வீரத்தைப் போற்றித் தலைவன் அவனுக்கு சிறப்பாகக் கள் வழங்குவது கண்ட மறக்குடித்தாயை அருகிருந்து நெருங்கிப் பார்த்து அவளது உள்ளக்கிடக்கையைப் பாடுகிறாள்.
புறம்.290ல் கரந்தைப்போர் தொடங்கப் போகிறது. முன்னதாக தலைவன் எல்லோருக்கும் கள் வழங்குகிறான். மக்களது நெருங்கிய உறவும் பழக்கமும் ஒளவைக்கு இருந்ததால் அவள் பின்வருமாறு கூறுகிறாள். "நுந்தை தந்தைக்கு இவன்றந்தைதந்தை கண்ணிமையாமல் பகைவர் எறிந்த படைகளை எல்லாம் தானேற்று மாண்டான். அதனால் முதலில் இவனுக்கு கள்ளைக் கொடு" என்கிறாள்.
புறம்.295ல் தன் மகன் வீரமரணமடைந்ததைக் கண்ட மறக்குடித் தாயின் மெய்ப்பாட்டு மாற்றத்தை விதந்தோதுகிறாள். இது சமுதாய மக்களோடு அவள் கொண்ட நெருக்கத்தின் விளைவே.
புறம்.311 போர்க்களத்தில் வீரமரணமடைந்து ஈமக்கடன் செய்ய யாருமற்ற வீரனுக்குத் தன் குழுவோடு சேர்ந்து இறுதிக்கடன் செய்யும் சமுதாயக் கடப்பாடுள்ளவளாக அவளைக் காட்டுகிறது.
அன்றாட வாழ்வில் சாமானிய மக்களோடு ஒளவை கொண்ட நெருக்கமான உறவே அதியன் இறந்த போது கூடியிருந்து ஒப்பாரி பாட வைக்கிறது. ஒப்பாரி பாடும் பெண்கள் வட்டமாக அமர்ந்து இருபுறமும் அருகிருப்பவர் தோளில் கை போட்டுச் சேர்ந்து தான் குனிந்து இராகத்தோடு அழுதுகொண்டு பாடுவர் (புறம்.235).
பாலிமொழி அறிந்தவள்
தம்மபதப் பாடலைத் தழுவி ஒரு புறப்பாடல் பாடியிருக்கிறாள் ஒளவை. அவள் பாலி மொழியும் பௌத்தக் கொள்கைகளும் அறிந்தவள் என்பது இதனால் புலனாகிறது.
"காடா கொன்றோ நாடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே" (புறம்.187)
காடாக இருந்தாலும், நாடாக இருந்தாலும், மேடாக இருந்தாலும்,
பள்ளமாக இருந்தாலும்; ஆடவர் செல்லும் வழியைப் பொறுத்தே நாட்டிற்கு நன்மை விளையும் என்பது பொருள்.
ஒளவைக்குப் பிடித்தவை** **
ஒளவையார் ரசித்துக் கள் அருந்தியவர். அதியமான் இறந்தவுடன் அவருக்கு முதலில் நினைவுக்கு வந்தது அவன் கொடுத்த கள் தான். தான் பாடிய ஒப்பாரியில் "கள் கொஞ்சமாக இருந்தால் அதை அப்படியே எனக்குக் கொடுத்து விடுவான்; மிகுதியான கள் இருந்தால் என்னைப் பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டே அவன் குடித்து மகிழ்வான்" என்று தான் தொடங்குகிறார்.
விரும்பி ஊன் உணவை மிகுதியாக உண்டவர். சேர்ந்து உணவுண்ண அமர்ந்தால் பருத்த கறித்துண்டுகள் எலும்போடு சேர்ந்தனவாய் இருப்பதையெல்லாம் ஒளவைக்குக் கொடுத்து விடுவானாம் அதியமான் .
அதியமானின் தந்தைமை மேலோங்கப் 'புலவு நாறும் என்தலை தைவந்தனன்' என்கிறார். கலைக்குழுத் தலைவியாகிய தன்மேல் அதியமானுக்கு இருந்த பற்றையும் பாசத்தையும் அந்த ஒப்பாரிப் பாடலில் சொல்லோவியமாகக் கொடுக்கிறார் .
தமிழ்நாட்டின் வெற்றிகரமான எதிர்காலம் ஒளவைக்குப் பிடித்த கனவு ஆகும். அரசியலில் ஈடுபட்டிருந்த இனக்குழுத் தலைவர்கள், வேளிர்கள், நாஞ்சில் வள்ளுவன், அதியமான் ,அவனது மகன் எழினி, தொண்டைமான் இளந்திரையன், சேரன் மாவண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி, சோழன் இராசசூயம் வெட்ட பெருநற்கிள்ளி அனைவருடனும் அவ்வப்போது தொடர்பு கொண்டவள் ஒளவை. ஒவ்வொருவருடனும் அவள் ஒரு தலைமைத் தன்மை வாய்ந்த மதியூகி போல உரையாடுவதைப் பார்க்கிறோம். புறம்.367ம் பாடல் தக்க சான்று. இப்பாடல் சேரன் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் ராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய மூவரும் சேர்ந்து இருந்தமையை அவர் பாடியதாகக் கூறுகிறது.
"நாகத்தன்ன பாகார் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா
வேற்றோராயினும் நோற்றோர்க்கு ஒழியும்
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து"
என்று பாடுகிறார். அதாவது 'நாகலோகத்தைப் போன்ற தமிழகம்; மூவேந்தர்க்குரியதெனினும் அவர்கள் இயற்கை எய்தும் போது அவர்களோடு செல்வதில்லை. தொடர்பற்ற
வேற்றுநாட்டவர் புகுந்து தமிழகத்தை அடிப்படுத்துவதற்கும் வாய்ப்புண்டு. எனவே பார்ப்பனருக்கு பூவும் பொன்னும் தாரை வார்த்து தானம் செய்க. இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசுக; அதாவது தன்னைப் போன்ற பாணர் கூட்டத்திற்கும் வரையாது வழங்க வேண்டும். அதுவே நல்வினை. இறக்கும் போது உயிர்க்குத் துணையாவது தாம் ஆற்றும் ஈகையே. ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத்தீ போல அழகுற வீற்றிருக்கும் வெண்கொற்றக்குடை வேந்தர்களே!' என்பது பொருள். இப்பாடல் ஒளவையின் அரசியல் அறிவையும், தமிழகத்து மக்களின் அன்றைய நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் தெளிவாக்குகிறது. தமிழகத்தை மூவேந்தர் ஒழிந்த பிற வடநாட்டு அரசர்கள் அடிப்படுத்தும் முயற்சியில் இருந்தனர்.
பார்ப்பனருக்குப் பூவும் பொன்னும் தாரை வார்த்துக் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்பினர். மூவேந்தரும், ஒளவை போன்ற பாணர், பிற இனக்குழுக்களும் நால்வருணப் பாகுபாட்டையும் அந்தணர் தலைமைத் தன்மையையும் ஏற்றுக்கொண்டனர். மூவேந்தரும் வைதீகம் போற்றினர்.
ஒரு சராசரிப் பெண்ணாக சமுதாய மக்களுடன் ஊடாடிய ஒளவை; நாஞ்சில் வள்ளுவனிடம் முதலில் தன் கலைக்குழுவோடு சென்று பரிசில் பெற்ற பின்னர்; அவள் சுற்றித் திரிந்த கொங்குநாடு; அங்கு நிகழ்ந்த அரசியல் கொந்தளிப்பில்; வேளிர், அதியன், மலையமான், தொண்டைமான், சேரர், சோழர் அனைவர்க்கும் இடையே நிகழ்ந்த அதிகாரப் போட்டியில் சிக்கித் தத்தளித்துக் கொண்டு இருந்தது, கொங்குநாடு சேரரால் முற்றிலும் வசப்படுத்தப்பட்டதையும், அதியன் இறப்பில் தன் கண் முன்னர் கண்டாள். அதியனின் மகன் எழினி சேரனிடம் சிற்றரசனானான். இந்தச் சூழலின் இறுக்கம் தளர்ந்து சேரனும், சோழனும், பாண்டியனும் சேர்ந்து இருந்தபோது ஒளவை முதிர்ந்த அரசியல்வாதியாக தமிழகத்தில் அந்நியரின் ஆதிக்கத்திற்குரிய போர்மேகம் சூழ்ந்து இருந்தமையைக் கூறி; அவர்கள் ஒற்றுமையை வலியுறுத்துகிறாள். அவள் அவ்வாறு உரையாட மூவேந்தரும் இடம் கொடுத்தனர். அன்றைய தேவை;
வெற்றி அல்லது வீர மரணத்திற்குத் தயாராக இருக்கும் இளைஞர்கள். அதனால் தான்;
தன் மகன் மன்னனிடம் வாங்கும் சிறப்பான சலுகைகளைக் காட்டிலும் அவன் கால்கழி கட்டிலில் வெள்ளுடை போர்த்திப் பெரும்பேறு பெற வேண்டுமென்று அவா கொண்ட தாயை ரசிக்கிறாள் (புறம்.286).
தன் மகனின் வீர மரணத்தைக்கேட்டவுடன் அவனுக்குக் குழந்தைப் பருவத்தில் பாலூட்டிய தன் வற்றிய மார்பில் மீண்டும் பால் சுரந்தது என்ற வீரத்தாயைப் பாடுகிறாள் (புறம்.295).
கரந்தைப்போருக்குக் கிளம்பும் முன்னர் யாருக்கு முதல் சிறப்பு செய்யவேண்டும் என்று அறிவுறுத்தி அந்தப்போரில் ஈடுபட இருந்த வீரக்குடிமகனை ஊக்குகிறாள் (புறம்.-290).
அரசியல்வாதியாகிய அவளின் சமுதாய ஊடாடல் தமிழகத்திற்கு வீரர்கள் தேவை என்பதை உணர்கிறது. அவள் எழுதிய தம்மபதத் தழுவல் பாடலில் இடம்பெறும் 'ஆடவர்' போர்வீரர் ஆவர். அப்பாடலில் அவள் சுட்டும் நிலன்; தமிழகம். அதனால் தான் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று அகப்பாடல்கட்குரிய கலைச்சொற்களைக் கையாளாமல்;
நாடு=மருதம்;
காடு=முல்லை;
அவல்=நெய்தல்;
மிசை=மலை
எனத் தமிழகம் முழுவதையும் இரண்டடிக்குள் அடக்குகிறாள். தமிழகத்து இளைஞர்கள் எந்த அளவுக்கு வீரயுகக் கொள்கைகளை ஏற்று நடக்கிறார்களோ; அந்த அளவுக்கு தமிழகம் நல்லநிலையில் இருக்கும் என்பதைப் புலப்படுத்துகிறாள்.
முடிவுரை
தமிழக வரலாற்றில் முதல் பெண்ணியவாதியாகிய ஒளவை என்னும் ஆளுமை ஒரு திறமையான கலைக்குழுத் தலைவி, ஒரு தேர்ந்த அரசியல்வாதி, ஒரு சராசரிப்பெண் என்ற மூன்று பரிமாணங்களை உள்ளடக்கியது. மூன்று பட்டைகளைக் கொண்ட கண்ணாடி - prism - போல. ஊனும், கள்ளும் விரும்பியவள். பாளி மொழியும் பௌத்தக் கொள்கையும் அறிந்த அவள் தலைசிறந்த
மேலாண்மையாளர். வேளிர் ஆண்ட நாஞ்சில் நாடு முதல் கொங்கு நாடு முழுமையும் சுற்றித் திரிந்தவள். தொண்டைமானிடம் தூது சென்றவள். அதியனின் அன்பிற்குப் பாத்திரமானவள். தந்தை முன் நிற்கும் புதல்வன் போல அவன் சொற்கேட்டு நின்றவள். வேளிருடனும், இனக்குழுத் தலைவருடனும் ஊடாடித் தமிழகத்தின் நிலைமையை நன்கு புரிந்து வைத்திருந்தாள்.
ஒளவையை முதியவளாக தமிழ்ச் சமூகம் சித்தரித்த காரணம் 'பாட்டி' என்ற சொல்லின் பொருளை மறந்தமை ஆகும். எல்லாப் பெண்டிரும் இளமையைக் கடந்து தானே முதுமை அடைவர். அவளது இளமையின் மன அவசத்தை ஏறிட்டுப் பார்க்கக் கூடத் தயாராக இல்லாத சமூகம் நம்முடையது என்பதை நாம் ஜீரணித்துத் தான் ஆகவேண்டும். ஒளவையின் அகவாழ்க்கையில் அவள் ஏங்கி அழுது; கணவனைப் பிரிந்து; தனித்து இற்செறிக்கப்பட்டு; ஆதரவான தாய் அணைப்பும் கிடைக்காமல் நொந்து புலம்புவதைப் பார்த்தோம். ஆனாலும் அவளது காதல்மனம் தன் கணவனின் இயலாமையைப் பொருட்படுத்தாமல் சேர்ந்து இருக்கும் வழியையே நாடியது. ஒளவைக்கு வெள்ளை ஆடை உடுத்தி கோல் ஒன்றைப் பிடித்துக் கொண்டு வளைந்த முதுகுடன் நிற்கும் உருவமாகக் காட்டுவது அவளது முழுப்பரிமாணத்தையும் அறியாதோர் செய்த செயலாகும் . நமது சமூகம் தனது விருப்பத்திற்கு ஏற்பக் கொடுத்த உருவமே கிழவி உருவம்.