- எப்படிப் …
12. எப்படிப் பொருள் கொள்ள வேண்டும்?
உலகப் பொதுமறை என்று புகழப் பெறும் திருக்குறள் நூலைத் தேசிய இலக்கிய வரிசையில் சேர்ப்பது பற்றி தினமணி கதிர் எனும் வாரஇதழில் பெருத்த எதிர்ப்பும், விவாதமும் எழுந்தது. சிறந்த நாவலாசிரியர் என்று புகழ் பெற்ற படைப்பாளி ராஜம் கிருஷ்ணன் ‘திருக்குறளில் இருக்கும் பெண்வழிச் சேறல் என்ற அதிகாரத்தை நீக்கிய பிறகே அதைத் தேசீய இலக்கிய வரிசையில் சேர்க்க வேண்டும்; பெண்களை இழிவுபடுத்தும் குறள்கள் அந்த அதிகாரத்தில் உள்ளன’ என்று தெரிவித்தார். மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் இருக்கையில் வீற்றிருந்த முனைவர் திருமதி மீனாட்சி முருகரத்தினமோ ‘திருக்குறளைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் வைக்கப்படும் குற்றச்சாட்டு’ என்று எதிர்வாதம் செய்து எழுதினார்.
திருக்குறள் உரைவளம் என்ற நூல் தொகுத்துக் காட்டும் பல்வேறு உரைகளிலும் குறிப்பிட்ட அதிகாரத்திலுள்ள குறள்களுக்கு முழுமையான பொருள் சொல்லப்படவில்லை என்னும் கருத்தை முன்வைத்து; எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்று தெளிவுறுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
நூலின் அமைப்பு
திருக்குறள் ஒரு நீதிநூல் ஆகும். அந்நூல் மனிதனின் அகவாழ்க்கைக்கும், புறவாழ்க்கைக்கும் தேவையான நீதிகளை 133 அதிகாரங்களில் சொல்கிறது. பாயிரம் அல்லது கடவுள் வாழ்த்து என்று சொல்லப்படும் நான்கு அதிகாரங்களை அடுத்து அறத்துப்பால் அமைந்துள்ளது. மனிதன் அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்கள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. இல்லறவியல்,துறவறவியல் இரண்டும் அதனுள் அடங்கும். இரண்டாவதாக அமைந்துள்ள பொருட்பாலில்; அரசனுக்குச் சொல்ல வேண்டிய அறங்களை அடுத்து அமைச்சனுக்குச் சொல்ல வேண்டிய அறங்கள் இடம் பெற்றுள்ளன. தொடரும் அங்கவியலில் குடிமக்கள் புறவாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விழுமியங்கள் தொகுத்துக் கூறப்படுகின்றன. இவ்விடத்திலேயே பெண்வழிச்சேறல் என்ற அதிகாரம் அற்புதமான
மதிப்பீடுகளை பத்துக் குறள்களில் எடுத்துச் சொல்கிறது.
வள்ளுவரின் கொள்கைகள்
அறத்துப்பாலில் வள்ளுவர் இரு கொள்கைகளை நிலைநாட்டுகிறார். இல்லறத்தில் ஈடுபடும் ஒவ்வொரு கணவனும் மனைவியைச் சார்ந்தே வாழ்கிறான்; அவள் இல்லையெனில் அவனுக்கு வாழ்க்கையே இல்லை என்பது இல்லறவியலில் வள்ளுவர் நிறுவிய முதல்கொள்கை ஆகும்.
இல்லறத்தில் கணவனின் கடமைகளுக்குத் துணைக்கரம் நீட்டக்கூடிய தகுதி சுற்றத்திற்கும் நட்பிற்கும் இல்லை; மனைவிக்கு மட்டுமே உண்டு.. அதனால் தான் அவள் ‘வாழ்க்கைத்துணை’ என்று அழைக்கப்படுகிறாள்.
காலச்சூழல்
திருக்குறளைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் திருவள்ளுவர் வாழ்ந்த காலச்சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் முனைவர் தமிழண்ணல் (திருக்குறள் உணர்த்தும் தமிழர் சமயம்- ப.93). திருக்குறள் வீரயுகம் என்று அழைக்கப்பட்ட காலத்தை அடுத்த நீதி இலக்கியக் காலத்தில் தோன்றியது. காதலும், வீரமும் மட்டுமே போற்றப்பட்டு; புலால் உணவையும், கள்ளையும் மிதமிஞ்சி நுகர்ந்த வீரயுகத்தை அடுத்துச்; சீர்படுத்த வேண்டிய சமுதாயத்திற்காக எழுந்த நீதிநூலே திருக்குறள். வெற்றி அல்லது வீரமரணம் என்ற கொள்கையே முதன்மை மதிப்பீடாக இருந்த வீரயுகச் சமூகம் ஆணாதிக்கச் சமூகம் என்பதில் ஐயமில்லை. அவரது காலத்தில் பொதுவாழ்வில் ஈடுபட்ட பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. எனவே ஆணாதிக்கத்தில் கால்கொண்டு எதிர்வரும் காலத்திற்குரிய அறங்களை வலியுறுத்த வேண்டிய சூழல் இருந்தது. இச்சூழலில் தான் திருவள்ளுவர் குடிமக்கள் கடமையை ஒரு ஆணுக்குச் சொல்வது போல் அமைத்துள்ளார். அம்மதிப்பீடுகள் அனைத்தும் அப்படியே பெண்களுக்கும் பொருந்தும். ஆய்வாளர் திருவள்ளுவரைப் பற்றிக் கூறுகையில் ‘அவர் ஒருபோதும் பெண்ணினத்தை வேதியர் போலவோ சமணர் போலவோ வெறுப்போடு பார்ப்பவர் இல்லை’ என்கின்றனர் (மேற்.ப.101).
இக்காலத்திற்கும் பொருந்தும் வகையில்; தான் மேற்கொண்ட
பணியைத் திறம்படச் செய்துள்ளார் திருவள்ளுவர். மு.வரதராசனார் தன் நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் ‘திருக்குறள் நம் காலத்திற்கும் பொருத்தமான பொருளைத் தரவல்ல திறனுடையது’ என்கிறார் (திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்- ப.- 32).
பொதுவாழ்க்கை மதிப்பீடுகள்
எந்த ஒரு குறளுக்கும் திருவள்ளுவரின் மனநிலைப்படியே பொருள்கொள்ள வேண்டும் என்பர் ஆய்வாளர் (இளங்குமரனார்,இரா.- இக்குறளுக்கு ஏன் இப்பொருள்?- ப.22) அறத்துப்பாலில் வள்ளுவர் நிலைநாட்டும் இரு கொள்கைகளையும், அவரது காலச்சூழலையும், நூலின் அமைப்பையும் மனத்தில் கொண்டு பெண்வழிச்சேறல் என்னும் தலைப்பின் கீழுள்ள குறட்பாக்களுக்குப் பொருள் காண்போம். ஒவ்வொரு குறளும் இரண்டடிகள் கொண்டனவே; ஆயினும் அவை உணர்த்தும் பொருளாழம் விலைமதிப்பு அற்றது என்கிறார் மூத்த தமிழ் ஆய்வாளர் திரு.அ.க.நவநீத கிருஷ்ணன் (தாமரைச் செல்வர் திரு.வ.சுப்பையா பிள்ளை- திருக்குறள் பதிப்பும் ஆய்வும்- ப.131).
“மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது” (குறள்-901)
கணவன் ஒரு குடிமகனாக அரசியலிலோ, சமூகசேவையிலோ ஈடுபடும் போது தன் மனைவியின் விருப்பத்திற்கு முதன்மை இடம்கொடுத்துச் செயலாற்றினால் மாட்சிமை பொருந்திய பயனை அடைய இயலாது. வெற்றிகரமாகச் செயலாற்ற நினைப்பவன் அவ்வழியைப் பின்பற்ற மாட்டான். அதுபோல மனைவி ஒரு குடிமகளாக அரசியலிலும் சமூகசேவையிலும் ஈடுபடும் போது தன் கணவனின் விருப்பத்திற்கு முதன்மை இடம்கொடுத்துச் செயலாற்றினால் மாட்சிமை பொருந்திய பயனை அடைய இயலாது. வெற்றிகரமாகச் செயலாற்ற நினைக்கும் பெண் அவ்வழியைப் பின்பற்ற மாட்டாள். இப்பொருள் மு.வரதராசனார் கருத்தோடு பொருந்தி வருவதாகும் (மேற்.ப.- 216-221).
“மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்தல் இன்று” (குறள்-904)
சமூகத்தின் குடிமகனாகக் கடமையாற்றும் கணவன் மனைவிக்கு அஞ்சிச் செயல்படின் அவன் இப்பிறவியில் வெற்றி பெறவும் இயலாது;
மறுமையின்பமும் அவனுக்குக் கிட்டாது. அதுபோல சமூகத்தின் குடிமகளாகக் கடமையாற்றும் தலைவி கணவனுக்கு அஞ்சிச் செயல்படின் அவள் இப்பிறவியில் வெற்றி பெறவும் இயலாது; மறுமையின்பமும் அவளுக்குக் கிட்டாது. திருவள்ளுவர் படைத்திருக்கும் மனைவி என்ற பாத்திரம் அறிவு, திறமை, மனவலிமை அனைத்தும் பொருந்திய முழுமையான வடிவம் என்ற கருத்தை ஏற்கெனவே பெண்ணியவாதிகள் முடிபாகக் கூறியுள்ளனர் (சக்திபெருமாள், முனைவர்- “வள்ளுவர் முப்பாலில் பெண்ணியச் சிந்தனைகள்”- தமிழ் ஞாலம்- 2006- ப.54).
“பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து” (குறள்-907)
பொதுவாழ்க்கையில் தன் மனைவியின் கட்டளைப்படி பணியாற்றும் ஏவலாளனை விடக் கணவன் முன்னர் நாணி நிற்கும் பெண்ணே பெருமைக்குரியவள் ஆகிறாள். அதேபோலப் பொதுவாழ்க்கையில் தன் கணவனின் கட்டளைப்படி பணியாற்றும் ஏவல்மகளை விடத் தன் கணவனுக்கு முன் நாணி நிற்கும் பெண்ணே பெருமைக்குரியவள் ஆவாள். ஆய்வாளரும் மிகப்பெரும்பான்மையான குறள்கள் நடைமுறை நீதிகளை நம் பொதுஅறிவின் துணையுடன் அறியச்செய்கின்றன என்பர் (Gabriella Eichinger Ferrzzo- Luzzi- தமிழ் ஞாலம்- May 2004- pp.- 3-4).
முடிவுரை
உலகமுழுமையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் திருக்குறள் கருத்துக்கள் பொதுவான நீதிகளை வலியுறுத்துகின்றன என்பதில் ஐயமில்லை. எனவே திருக்குறள் உலகஇலக்கிய வரிசையில் சேர்க்கும் தகுதியைப் பெறுகிறது.