முன்னுரை
தொகுப்பில் உள்ள 13 கட்டுரைகளும் அவ்வப்போது மாணவர் முன்னரோ அன்றி ஆய்வறிஞர் முன்னரோ; நேரிலோ அல்லது இணைய வழியிலோ; வழங்கியவை அல்லது வழங்கியவற்றின் மேம்படுத்திய வரைவுகளாம்.
'ஆற்றுப்படையும் ஆறுபடையும்' எனும் ஆய்வுக்கட்டுரை 2010ல் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரித் தமிழ்மாணவர் முன்னர்; மொழி வெறுப்பைத் தவிர்க்கவும்; ஆங்கிலமும் கைவரும் என அவர்கள் நம்பிக்கையை மேம்படுத்தவும் அளித்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ஆகும்.
'பொம்மைக் கல்யாணம் என்ற விளையாட்டின் வேர்' 19-21.12.1997ல் தஞ்சையில் நடந்த ஆறாம் உலகச்சைவ மாநாட்டில் 'அம்பாவாடல் திருவிழா' எனும் தலைப்பில் வாசித்த கட்டுரையின் திருத்தம் பெற்ற வடிவம் ஆகும்.
'கூத்தராற்றுப்படையில் உணவும் உருக்காட்சியும்' என்ற தலைப்பில் அமைந்த ஆய்வுக்கட்டுரை விருதுநகர் இந்து நாடார் செந்திக்குமார நாடார் கல்லூரியின் தமிழ்த்துறை; செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைந்து 9-11.02.2012 ஆகிய நாட்களில் நடத்திய 'செவ்வியல் இலக்கியங்களில் தமிழர் கலைத்திறம்' எனும் கருத்தரங்கில் 'ஆற்றுப்படை நூல்கள் புலப்படுத்தும் சமையல் கலை' என்ற தலைப்பில் வாசித்து அளித்த கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஆகும்.
'தொல்தமிழகத்தில் தைப்பொங்கல் என்னும் அறுவடை விழா' தொற்று நச்சில் காரணமாக அரசு அறிவித்த முதல் உள்ளிருப்புக் காலத்தில் சென்னை திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தமிழியல் பண்பாட்டுப் புலம் 4-6.06.2020ல் இணைய வழி நடத்திய கருத்தரங்கில் வாசித்து அளித்து; கருத்தரங்க மலரில் பதிப்பிக்கப்பட்டது.
'தொல்தமிழகத்து விருந்துணவில் முதன்மை பெற்ற இனிப்பு' வல்லமை
என்னும் மின்னிதழில் 2020ல் வெளிவந்த எனது முதல் இலக்கியக் கட்டுரை ஆகும்.
'கரும்பனூர் கிழான் அளித்த விருந்து' வல்லமை மின்னிதழில் தேர்வாகி வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரை.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழாய்வுத்துறை இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழுடன் இணைந்து 22.02.2021 அன்று இணையவழி நடத்திய 'தமிழியல் ஆய்வுகள்: அடைவு படுத்துதலும் மதிப்பிடுதலும்' எனும் கருத்தரங்கில் வாசித்துப் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை 'ஒரு ஆய்வுக்கட்டுரை வழிவகுக்கும் புதிய ஆய்வுக்களங்கள்' என்பதாகும்.
'தொகையிலக்கியத்தில் "இயல்புடைய மூவர்'" என்ற ஒப்பியல் கட்டுரை 26-28.02.2021 ஆகிய தேதிகளில் என்னால் நேரில் பங்கேற்க இயலாது; தஞ்சையில் நடந்த உலகத் திருக்குறள் மூன்றாவது மாநாட்டிற்கு அனுப்பிப் பதிப்பிக்கப்பட்டது. சென்னை தமிழ்நாடு அரசு உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சை பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி, ஆஸ்திரேலியா மெல்பர்ன் தமிழ்ச் சங்கம், இளங்காடு நற்றமிழ்ச் சங்கம், தஞ்சைத் தமிழ்த்தாய் அறக்கட்டளை அனைத்தும் கைகோத்து நடந்த இம்மாநாட்டில் 'குறள்நெறிச் செம்மல்' எனும் சிறப்பு விருதும் வழங்கினர்.
'இரட்டைக் காப்பியப்பாத்திரங்களின் முடிவெடுக்கும் திறன்' சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவர் நலன் கருதி 18.01.2021 முதல் 22.01.2021 வரை நடத்திய FEELS 2021 எனும் திறன் மேம்பாட்டு அரங்கில் 22ம் தேதி ஆற்றிய சொற்பொழிவின் சாரம்.
'பெண்ணியப் பார்வையில் பதிற்றுப்பத்து- காக்கைப்பாடினியாரின் நோக்கும் பெண்மொழியும்' மின்தமிழ் மேடை மின்னிதழில் ஜூலை 2018ல் வெளியானது.
**'**ஒளவை என்னும் ஆளுமை' மின்தமிழ் மேடை என்னும் மின்னிதழ் காட்சி-15 அக்டோபர் 2018ல் வெளியிட்ட கட்டுரையின் மறுவரைவு ஆகும்.
‘கோயில் வழிபாடும் கோட்டவழிபாடும்’ என்ற கட்டுரை 26.04.1999 அன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத் தமிழ்த்துறை நடத்திய ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றத்தின் ஐந்தாவது கருத்தரங்கில் வாசித்தளித்த ஆய்வுக்கட்டுரை. ஆய்வுச் சிந்தனைகள் என்னும் கருத்தரங்க மலரில் பதிப்பிக்கப்பட்டது.
'எப்படிப் பொருள் கொள்ள வேண்டும்?' எனும் கட்டுரை ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் 04.12.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்த்திய திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவின் போது வெளியிடப்பட்ட மலரில் உள்ளது.
தமிழ் மாணவர் உலகிற்கு இவை பயனளிக்கக் கூடியவை.