- பொம்மைக் …
2. பொம்மைக் கல்யாணம் என்ற விளையாட்டின் வேர்
முன்னுரை
பண்டைத்தமிழர் விளையாட்டுகளில் பொம்மைக் கல்யாணமும் ஒன்று. இவ்விளையாட்டு பற்றிய செய்திகள் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றன; என்னென்ன பெயர்கள் பெறுகின்றன; எந்தக் காலத்தில் கொண்டாட்டம் தொடங்கியது; காலமாற்றம் ஏற்பட்டதா போன்ற வினாக்களின் விடை காணுமுகமாக இக்கட்டுரைச் செய்திகள் அமைகின்றன.
பொம்மைக் கல்யாணம் பற்றிய முதற்செய்தி:
கபிலரின் பாடலில் பொம்மைக்கல்யாணம் பற்றி செய்தி உளது. ”சுடர்விரி வினைவாய்ந்த தூதையும் பாவையும் விளையாட ………… … …தையில் நீராடிய தவந்தலைப் படுவாளோ … … …பொய்தல் மகளையாய்ப் பிறர்மனைப் பாடிநீ எய்திய பிறர்க்கீத்த பயம்பயக் கிற்பதோ… … …சிறுமுத்தனைப் பேணிச் சிறுசோறு மடுத்துநீ நறுநுத லவரொடு நக்கதுநன் கியைவதோ“(கலி.59-அடி.- 5-21) என்று தலைவன் தைந்நீராடிய தலைவியைப் பார்த்துக் கேட்கிறான். என் காதலை ஏற்றுக் கொள்வதே நீ நோற்றதன் பயன் ஆகும் என்பது அவன் கருத்து. அவள் சிறுவயதில் வேலைப்பாடு அமைந்த ஒளி வீசும் பாவையை வைத்து விளையாடினாள். அத்துடன் பாவை நோன்பிற்காக பிறர் மனைக்கட் சென்று ஐயமேற்றாள். பின்னர் அதைச் சமைத்து ஆயத்தார்க்கும் கொடுத்துத் தன்னுடைய பாவைக்கும் ஊட்டினாள். தன்னொத்த தோழியரோடு அவள் இந்நோன்பை விளையாடிச் செய்ததே இங்கு நகைப்புக்குரியது என்கிறான் தலைவன். விரும்பியபடி மணமுடித்து வாழ்வதற்காக நோற்கும் பாவை நோன்பில் சிறுமுத்தனையும் புனைந்து; பேணி
வளர்த்து; அவனுக்கு வேறொருத்தியின் மகளைக் கோடற்கு; விருந்து சமைத்துச் செய்த விளையாட்டு பொம்மைக் கல்யாணம் என்பது குறிப்பாகப் புலப்படுகிறது. இச் சிறுமுத்தனைக் குழமகன் என்கிறார் நச்சினார்க்கினியர்.நீலகேசி (பா.408) இப்பாவையைக் குழமணர் என்கிறது. அதற்கு கை, கால் இரா என்று பொ.வே.சோமசுந்தரனார் விளக்கம் தருகிறார். அம்பாவாடல்- பாவை நோன்பு- தைந்நீராடல் பரிபாடலில் இந்நோன்பை நல்லந்துவனார் அம்பாவாடல் என்கிறார். அது மார்கழி மாதத்தின் திருவாதிரை நட்சத்திரத்து முழுமதி நாளில் தொடங்கியமை . “பனிப்படு பைதல் விடுதலைப் பருவத்துஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை விரிநூல் அந்தணர் விழவு தொடங்க … … …அம்பாவாடலின் ஆய்தொடிக் கன்னியர்… … …தாயருகா நின்று தவத்தைந் நீராடுதல்“ (பா-11 அடி.- 75-91)என்ற பாடலடிகளில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. குளிரால் நடுங்குகின்ற முன்பனிப் பருவத்தில் சூரியனின் வெம்மை தாக்காத கடைமாரியை உடைய மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்து முழுமதிநாளில் அந்தணர் விழாவைத் தொடங்கினர். அவ்விழா தைமாதம் முழுவதும் தொடர்ந்ததால் தைந்நீராடல் என்றும் அழைக்கப்பட்டது. அம்பாவாடும் பெண்கள் தம் தாயரின் அருகில் இருந்து தைந்நீராடுவதைத் தவம் என்றே சொல்வதால் அதுவே பாவை நோன்பாகிறது. மார்கழி மாதத்து மதிநிறைந்த நன்னாளிலேயே ஆண்டாள் பெண்களை நீராட அழைக்கிறாள் என்பதும் நோக்கத்தக்கது (திருப்பாவை-1)அழகிய பாவை செய்து நீராடி வழிபட்டமையே அம்பாவாடல் என்னும் பெயர் அமையக் காரணம் எனலாம். அம்+பாவையாடல் எனப் பிரித்துப் பொருள் கொள்ள வழியுள்ளது. ‘பாவையாடல்’ என்னும் தொடர் சங்க காலத்திலேயே தமிழரின் முயற்சிச் சுருக்கம் காரணமாக ‘பாவாடல்’ என்று சுருங்கி இருக்க வேண்டும்.
திருவெம்பாவைப் பாடல்கள் அனைத்தும் ‘ஏலோரெம்பாவாய்‘ என்று விளித்துப் பாடியுள்ளமை; பார்வதிதேவியைப் பாவையாக்கி அவர்கள் வழிபட்ட செயலைப் புலப்படுத்துகிறது. வழிபாட்டிற்கு அமைந்த திருவுருவையே ‘பாவை’ என்று அழைத்ததாக ப.இராமநாதபிள்ளை தன் விளக்கவுரையில் கூறியுள்ளார். வைணவத்திலும் பெண்கள் நீராடி சக்திக்குப் பாவை செய்து நோற்றுக் கொண்டாடினர். திருப்பாவைப் பாடல்கள் அனைத்தும் ‘ஏலோரெம்பாவாய்‘ என்று முடிவது பாவை வழிபாட்டின் எதிரொலியே ஆகும். பாகவதமும் ராதை முதலிய கோகுலத்துப் பெண்கள் சக்தியின் பாவை செய்து வழிபட்டமையைப் பேசுகிறது.“நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ” (திருப்பாவை-2) என்னும் பாடலடி ஆண்டாள் பாவை செய்து வழிபட்ட மரபைச் சுட்டுகிறது.
மார்கழி நீராடல்:
பக்தி இயக்க காலத்தில் அம்பாவாடல் மார்கழி நீராடல் என்று பெயர் மாற்றம் பெற்றதுடன்; தைந்நீராடல் தனிப்பொருளும் சிறப்பும் பெற்றது. ஆண்டாளின் திருப்பாவை, ”மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்” (பா-4);என்கையில் ‘மார்கழி நீராடல்’ என்னும் புதுப்பெயர் வழக்கு தோன்றியமை தெளிவு. பின்னர் தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண்டலமிட்டு மாசி முன்னாள் வரை ‘வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே’ என்று தொழுவதாக நாச்சியார் திருமொழி அமைந்துள்ளது. வெள்வரைப்பதன் முன்னம் துறைபடிந்து நோற்றாலும் அது பாவை வழிபாடாகச் சுட்டப்படவில்லை. காமனை வழிபட்டுத் திருமாலைச் சேர நோற்பதாகவே அமைகிறது. மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் பெண்கள் கூடி நீராடுவதைப் பன்னிப் பன்னிப் பல பாடல்களில் பாடிய பிறகு இறுதியில்,“போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்” (பா-20)என முடிகிறது.மார்கழி நீராடல், தைந்நீராடல் என இருவேறு நடைமுறைகளாகத் திரிந்தமையால் பக்தி இயக்கத்திற்குப் பிற்பட்ட காலத்தில்; பாவைநோன்பு திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடங்கியமை மாறி
மார்கழி முதல் தேதியன்றே தொடங்கியமை புலனாகிறது. இதனால் அம்பாவாடல் என்ற தைந்நீராடல் மார்கழி நீராடலாகச் சுருங்கி மாறிய பாவைநோன்பின் வரலாறு தெளிவாகிறது. அம்பாவாடல் நிகழ்ச்சிகள்விழா தொடங்கியவுடன் முப்புரி நூலணிந்த வேதியர் பொற் கலங்களில் பலிப்பொருளை ஏந்தி வேதநெறிப்படி நீர்க்கரையிலே முள்ளும் இல்லாச் சுள்ளி எரிமடுத்துத் தீ வளர்த்தனர். பெண்கள் வைகறையில் நீராடினர்.“புரிநூல் அந்தணர் பொலங்கல மேற்ப … … …… … … உறைசிறை வேதியர் நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பில் தையல் மகளிர் ஈரணி புலர்த்தர“ (பரி.11-அடி.-79-86)என்று அம்பாவாடல் நிகழ்ச்சிகள் நல்லந்துவனார் பாடலில் விரித்துச் சொல்லப் படுகின்றன. வைகைக்கரையில் தைந்நீராடிய பெண்கள் வேதியர் வளர்த்த தீயின் அருகில் வந்து தம் ஆடைபுலர்த்தி நின்றனர் என்று காட்சி தொடர்கிறது. பூதந்தேவனாரின் “பெரும்புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து தழையும் தாரும் தந்தான் இவனென இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத் தைஇத் திங்கள் தண்கயம் படியும் பெருந்தோட் குறுமகள்” (நற்.80) எனும் பாடல் தனக்குத் தழையும், தாரும் தந்த தலைவனை எண்ணித் தைந்நீராடிய தலைவியைக் காட்சிப்படுத்துகிறது. எருமை மாடுகளை மேய்ச்சலுக்குக் கிளம்பும் விடிகாலைப் பொழுதில் தலைவி தன் தோழியரோடு குளத்தில் படிந்து நோன்பு ஆற்றினாளாம். பெண்கள் பலரும் தைமாதத்தில் ஒருங்கு நீராடும் குளிர்ந்த குளத்தை பரத்தமை மேற்கொண்ட தலைவன் மார்புக்கு உவமை ஆக்குகிறது;“நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர் படிந்துண்ணும் நின் பரத்தை மார்பே“ (ஐங் -84) எனும் பாடலடிகள். நீராடும் குளத்திற்குச் சிறப்பளிப்பதன் மூலம்
\நோன்பியற்றும் பெண்களின் பெருக்கத்தையும், நோன்புக் காலத்தையும் நமக்குத் தெளிவாகத் தருகின்றன. பாவைநோன்பின் போது தானத்தையும், பிச்சையையும் குறையின்றிக் கூடியமட்டும் செய்தனர்.“ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்” (திருப்பாவை-2) எனும் அடிகள் நோக்குக.
இறைவியைப் பாவையாகச்செய்து; அவளிடம் விரும்பும் கணவரைப் பெறவேண்டும் என்றும், நிலவுலகிற்கு மழை வேண்டும் என்றும் வேண்டினர்.“உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்அன்னவரே என்கணவ ராவார் அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்”(திருவெம்பாவை) என்று நோன்பிகள் பாவையைத் துதிக்கின்றனர். “ … … … நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்“ என்பதும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை. இறைவனுக்கு முன்னர் இறைவியின் அருள் வந்து சேர்வது போல் மழைவந்து சேர வேண்டுகின்றனர். ஆண்டாளும்,“ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கறுத்து ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சாரங்க முதைத்த சரமழை போல் வாழ உலகினில் பெய்திடாய்“
என்று மழை வேண்டுகிறாள். பரிபாடலும் அம்பாவாடும் போது, ”வெம்பாதாக வியனில வரைப்பென“ப் (பரி.11- அடி-80) பெண்கள் வேண்டியதாகச் சொல்கிறது. அம்பாவாடலும் சமயமும்: மார்கழி மாதத்துத் திருவாதிரையன்று தொடங்கிய விழாவிற்கு உரிய தெய்வம் சிவபெருமான் என்று பொ.வே.சோமசுந்தரனார் பரிபாடல் உரையில் கூறியிருப்பினும்; பாவை நோன்பிற்குரிய தெய்வமாகிய பார்வதிக்குப் பாவை செய்து நோற்றார்கள் என்று பாடலடிகள் உணர்த்துவது கண்டோம். திருவெம்பாவைக்கு விளக்கவுரை கூறும் ப.இராமநாதப்பிள்ளை இது ‘மாதிருக்கும் பாதியன் விழா’ என்று சொல்லித் தொடர்ந்து சிவசக்திக்கு உரியதென்கிறார். சக்தியைப் பாவையாகக் கொண்டு வழிபட்டமையை ஆண்டாளிடமும் காண்கிறோம். இங்கு சைவ வைணவப் போட்டியால் தான் திருவாதிரையன்று தொடங்கிய விழா மார்கழி முதல் தேதியிலிருந்து கொண்டாடப்பட்டதோ என்னும் ஐயம் எழுகிறது.
முடிவுரை:
திருவாதிரை முழுமதிநாளில் தொடங்கி அம்பாவாடல் என்று அழைக்கப் பட்ட தைந்நீராடலின் போது பெண்கள் விடியுமுன் நீர்த்துறைக்குச் சென்று நீராடிப் பாவை செய்து வழிபட்டனர். அந்தணர்கள் வேதமந்திரம் கூறித் தீமுறை வழிபாடும் செய்தனர். பெண்கள் ஐயமேற்று நோன்பிருந்தனர். பாவை நோன்பு தைமாத இறுதிவரை தொடர்ந்தது. பக்திஇயக்கக் காலத்தில் மார்கழி நீராட்டு என்று பாவைநோன்பு சுருங்கியது. தைந்நீராடல் தனியொரு போக்கில் காமனை நோக்கி வழிபடுவதாய் அமைந்தது. சிறுபிராயப் பெண்கள் சேர்ந்து பாவைநோன்பின் போது சிறுமுத்தன் என்று சீராட்டிப் பாராட்டி விருந்தயர்ந்து தன் குழமகனுக்குப் பெண்கேட்டு விளையாடிய போக்கிலிருந்தே பொம்மைக் கல்யாணம் தோன்றியது.