/ கண்மணித்தமிழ் 2 /
  1. தொல்தமிழகத்தில …

4. தொல்தமிழகத்தில் தைப்பொங்கல் என்னும் அறுவடை விழா

**

0.0 முன்னுரை

தைத்திருநாள் கொண்டாட்டத்தைத் தொகைநூல்களில் தேடுவது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். கார்த்திகைத் தீபம், ஓணம் போன்ற விழாக்கள் பற்றித் தொகை இலக்கியங்களில் காண இயல்கிறது. தமிழர் திருநாள் எனச் சிறப்புப்பெயர் பெறும் தைப்பொங்கல் எப்போது முதல் நடைமுறையில் உள்ளது என்று அறிந்து கொள்வது; தமிழர் பண்பாட்டின் தொன்மையைத் தெளிவுபடுத்த உதவும் ஆகையால்; இவ் ஆய்வு சிறப்புப் பெறுகிறது. பதிற்றுப்பத்து முதல்நிலைத் தரவை நல்க; பிற தொகைநூற் கருத்துக்களும் உரையாசிரியர் கூற்றுகளும் இரண்டாம்நிலைத் தரவுகள் ஆகின்றன. இது மரபுவழிப்பட்ட விளக்கமுறை ஆய்வாகும்.

1.0 பதிற்றுப்பத்தில் அறுவடை விழா

பதிற்றுப்பத்து தைப்பொங்கல் என்ற தொடரைக் கையாளவில்லை எனினும்; நெல்வேளாண்மை செய்த குறுநிலமன்னர், நெல் அறுவடை, சர்க்கரைப் பொங்கல், ஊர்மன்றில் கொண்டாட்டம், ஏறு பொருதல், நீர் விளையாட்டு, இசைநிகழ்ச்சி அனைத்தையும் தொடர்புறுத்திப் பாடுகிறது.
1.1 பல்யானைச் செல்கெழு குட்டுவன் அடக்கிய குறுநிலமன்னரின் வயலில் கதிர் முற்றித் தலை சாய்ந்தவுடன் ஊர் மன்றில் கலைநிகழ்ச்சியுடன் அறுவடை விழா கொண்டாடப்பட்டது. “முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த … … …அழியா விழவின் இழியாத் திவவின்வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ மன்ற நண்ணி மறுகுசிறை பாடும்அகன்கண் வைப்பின் நாடு” (பதிற்.29) எனும் பாடற்பகுதி கதிர் முற்றித் தலை சாய்த்த நெற்பயிரை ‘முடந்தை நெல்’ என்று விதந்து ஓதுகிறது. அப்போது ஊர்மன்றில் தவறாது விழாவொலி மிகுந்தது என்பது பாலைக்கௌதமனாரின் கூற்று. இது

அறுவடை தொடங்குங்கால் நிகழும் விழா என்பதில் ஐயமில்லை. அவ்விழாவில் குற்றமில்லாத திவவுடைய யாழிசையுடன் வயிரியர் மறுகுகளின் சிறைக்கண் நின்று பண் பாடினர். யாழுடன் வயிர் என்ற ஊதுகருவியும் சேர்த்து இசைக்கப்பட்டதால் கலைநிகழ்ச்சியுடன் அறுவடை விழா தொடங்கியமை தெளிவாகிறது. தைத்திருநாளன்று நிலவுடைமையாளர்களைத் தேடிச் சென்று இசைக்கலைஞர் மங்கள இசை முழக்கிப் பரிசில் பெறுவது இன்றும் நடைமுறையில் உள்ள வழக்கு ஆகும். 1.2 ‘கட்டிப்புழுக்கு’ எனும் சர்க்கரைப் பொங்கலை அடையாளமாகக் கொண்டவர் கொங்கர். இளஞ்சேரலிரும்பொறை ‘கட்டிப்புழுக்கை’த் தம் அடையாளமாகக் கொண்ட கொங்கரின் தலைவன் என்று புகழப்படுகிறான். “கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே” (பதிற்.90) என்னும் தொடர் சர்க்கரைப் பொங்கலை அக்காலத் தமிழில் சுட்டுகிறது. புழுக்கு என்பது நெல்லரிசிச் சோறாகும்.இன்றும் சர்க்கரைப் பொங்கலைக் கட்டிபோட்டு விநியோகிப்பது தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. உதியன், இரும்பொறை என்று இரு வம்சாவழிகளைக் கொண்ட சேரமரபு மேற்கரையிலிருந்து பாலக்காட்டுக் கணவாய் வழியாக நுழைந்து படிப்படியாகக் கொங்குப் பகுதிகளை வென்று அடிப்படுத்தியமை தொகை நூற்செய்திகளால் தெள்ளெனத் தெரிகிறது. கொங்கு வெற்றியும், அதற்குப் பின்னர் நிகழ்ந்த பெருஞ்சோற்று நிலையும் உதியன் சேரலுக்கும் அவனது இளைய மகன் பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கும் ஒருங்கு உரியது (பதிற். 3ம் பத்துப் பதிகம், பா-22, அகம்.169, 233). பல்யானைச் செல்கெழு குட்டுவன் பாலக்காட்டுக் கணவாயில் அகப்பாவை அழித்தவனாகக் காட்டப்பட; செல்வக்கடுங்கோ வாழியாதன் அங்கிருந்து முன்னேறி கொடுமணம், பந்தர் என்ற கொங்குப்பகுதிகளை வென்றவன் ஆகிறான் (பதிற்.67). அவனது மகன் பெருஞ்சேரலிரும்பொறை பந்தர், கொடுமணம் என்ற இரு ஊர்களுக்கும் உரியவனாகவும் (பதிற்.74), சற்று முன்னேறித் தகடூரை வென்றவனாகவும் சொல்லப்படுகிறான் (பதிற்.78). இதனால் கொங்கர் என்று சுட்டப்படுவோர் சேரரால் அடக்கப்பட்ட குறுநில மன்னர் என்பதும் அவர்கள் சர்க்கரைப்பொங்கல் வைத்து அறுவடை

விழாவைக் கொண்டாடினர் என்பதும் ஐயம் திரிபறப் புரிகிறது. ‘கட்டிப்புழுக்கு’ என்பது சர்க்கரையும், அவரையும் சேர்த்துச் செய்தது என்கிறார் பதிற்றுப்பத்தின் பழையவுரைகாரர். ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையும் இதே கருத்தைக் கொண்டுள்ளார் (பதிற்.ப.- 432-433). இவர்கள் சுட்டும் அவரை சர்க்கரைப் பொங்கலுடன் இன்றும் சேர்த்துச் சமைக்கும் பச்சைப்பருப்பு, கடலைப் பருப்பு முதலியவற்றைக் குறிப்பதாகும். அவரை பயறு வகைகளுக்குறிய பொதுச்சொல் எனல் தகும் (Family- Leguminacea).
1.3 உழவர், பொதுமக்கள், வீரர் ஆகியோர் எவ்வாறு கொண்டாடினர் என்பதைப் பின்வரும் பகுதி எடுத்துக் கூறும். “கழனி உழவர் தண்ணுமை இசைப்பிற் பழன மஞ்ஞை மழைசெத்து ஆலும் தண்புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி வெல்போர் மள்ளர் தெண்கிணை கறங்கக் கூழுடை நல்லில் ஏறுமாறு சிலைப்பச் செழும்பல இருந்த கொழும்பஃ றண்பணைக் காவிரிப் படப்பை நன்னாடு” (மேற்.); என்ற பாடலடிகள் காவிரியாறு பாய்ந்து வளப்படுத்திய விளைநிலங்களை உடைய கொங்கு நாடு பற்றிப் பேசுகிறது. அங்கு உழுதோர் தண்ணுமை முழக்கி அறுவடை விழாவைக் கொண்டாடப்; பொதுமக்கள் நீர்விளையாடிக் கொண்டாடினர். போர்வீரர் கிணைப்பறை கொட்டிக் கொண்டாடினர். இந்த ஆரவாரத்திற்கு இடையில் ஏறுகள் தம்முட் பொருதன. பழைய உரைகாரரும், ஒளவை சு.துரைசாமிப்பிள்ளையும் இதே பொருளைக் கூறினும்; அறுவடை விழா நிகழ்ச்சிகள் என்று விதந்தோதவில்லை (பதிற்.ப.- 435-436). தைத்திருநாளை ஒட்டி ஏறுகளைக் கொண்டு விளையாட்டு நடப்பதும்; நீர்நிலைகளை நாடிச்சென்று பொதுமக்கள் மகிழ்வதும் இன்றும் நம் சமுதாயத்தில் தொடரும் வழக்கங்களே.

2.0 அறுவடை விழா

அறுவடை விழா நிகழ்ச்சிகள் பிற தொகைநூல்களிலும் உள்ளன. கரும்போடு சேர்த்தும் பேசப்படுகின்றன. உழவர் முழக்கிய தண்ணுமை எனும் பதிற்றுப்பத்துச் செய்தி மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.

2.1 பரணர் தழும்பனின் ஊணூரில் வெண்ணெல் அறுவடை செய்யும் போது உழவர் தண்ணுமை முழக்கியதன் விளைவைப் பாடுகிறார்.“வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ” (புறம்.348) கரும்பின் கணுக்களில் இருந்த தேனடைகளிலிருந்து தேனீக்கள் நீங்கின என்பது அவரது பாடற்செய்தி. அறுவடையுடன் முற்றிய கரும்பையும் சேர்த்துப் பேசும் பாடல் இதுவாகும். அறுவடை விழாவின் போது இசை நிகழ்ச்சியுடன் கொண்டாட்டம் நடந்தமையை இவ்வாறு பதிவு செய்கிறார். 2.2 நன்னனின் நவிரமலையில் அறுவடையைப் பாடும் புலவர்;“வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ” (மலை.அடி-471) தன் கூட்டத்தைப் பிரிந்த எருமைக்கடா பாயும் என்பர். இங்கும் அறுவடையும் இசையும் ஒருசேரப் பாடப்பட்டுள்ளமை அது விழாநிகழ்ச்சி என்று குறிப்பாகப் புலப்படுத்துகிறது.
2.3 விராஅனின் இருப்பை எனும் ஊரில் அறுவடையின் போது பழனப் புட்கள் எல்லாம் இரிந்தோட முழங்கும் தண்ணுமையால் மருதமரக் கிளையின் பூங்கொத்துக்கள் எல்லாம் உதிர்ந்தன என்பார் பரணர்.“வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ” (நற்.350) எனும் ஒரே தொடர் நற்றிணையிலும் காணப்படுகிறது. எனவே அறுவடை தண்ணுமை இரண்டனுக்கும் இடையிலிருந்த தொடர்பு ஒரு விழாநிகழ்வு என்பதில் ஐயமேற்பட வழியில்லை. 2.4 குன்றியனாரின் பாடலும் அறுவடையைத் தண்ணுமை ஒலியுடன் ஒருங்கு இணைக்கிறது. “வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் தண்ணுமை வெரீஇய” (அகம்.40) நாரை பெண்ணையின் அகமடலைச் சென்று சேர்ந்ததாம். வயலில் அறுவடை செய்த உழவரே தண்ணுமை இசைத்து விழா அயர்ந்தனர் என்பது ஐயமின்றித் தெரிகிறது.
2.5 “வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை” (அகம்.204) பன்மலர்ப் பொய்கையில் இருந்த புட்களை எல்லாம் ஓட்டியது என்று வாணனின் சிறுகுடியில் நெற்படப்பை நிகழ்ச்சி பாடப் பெறுகிறது. இது அறுவடை விழாவன்றி வேறில்லை.

3.0 முடிவுரை

பதிற்றுப்பத்து தைப்பொங்கல் என்ற தொடரைக் கையாளவில்லை எனினும்; நெல்வேளாண்மை செய்த சேர கொங்கு நாடுகளைச் சேர்ந்த குறுநில மன்னர், அறுவடை, சர்க்கரைப் பொங்கல், ஊர்மன்றில் விழா, நீர் விளையாட்டு, ஏறு பொருதல், இசைநிகழ்ச்சி அனைத்தையும் ஒருசேர தொடர்புறுத்துகிறது. கதிர்முற்றித் தலை சாய்ந்தவுடன் ஊர்மன்றில் கலைநிகழ்ச்சியுடன் அறுவடை விழா கொண்டாடப்பட்டது. ‘கட்டிப்புழுக்கு’ எனும் சர்க்கரைப் பொங்கலைத் தம் அடையாளமாகக் கொண்டவர் கொங்கர் என்று அழைக்கப்பட்ட குறுநில மன்னராவர். உழவர் தண்ணுமை முழக்க; பொதுமக்கள் நீர்நிலைகளில் விளையாடிக் களிக்க; போர்வீரர் கிணைப்பறை கொட்ட அறுவடை விழா பலராலும் பலபடியாகக் கொண்டாடப்பட்டது. இந்த ஆரவாரத்திற்கு இடையில் ஏறுகள் பொருதன.