- தொகையிலக்கியத் …
8. தொகையிலக்கியத்தில் இயல்புடைய மூவர்
முன்னுரை
இல்லறத்தானின் கடமைகளை வரிசைப்படுத்தும் வள்ளுவர்; அவன் நல்வழியில் நின்று; இயல்பாகக் கடமைப்பட்டுள்ள மூவர்க்கும் துணை செய்ய வேண்டும் என்பதை முதன்மை ஆக்குகிறார்.
"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை" (திருக்குறள்-41)
மூவர் யார் என்பதை விதந்துரைப்பதில் தமிழ்ப்பெரியோரின் கொள்கை மாறுபாடுகள் திருக்குறளுக்குரிய பல்வேறு உரைகளைக் காணுங்கால் புலப்படுகின்றன. இதற்கிடையே தொகைநூல்களின் துணைகொண்டு ஒப்பியல் நோக்கில் 'இயல்புடைய மூவரை' இனங்கண்டு உரைப்பது இக் கட்டுரையின் நோக்கம் ஆகும். தொகைநூல்களும் குறிப்பிட்ட குறளும் மட்டுமே ஆய்வெல்லை ஆகின்றன.
தொகையிலக்கியத்தில் ‘மூவர்’
கேளிர், கிளைஞர், கேளல் கேளிர் ஆகியோரே இல்லறத்தான் தாங்க வேண்டிய மூவர் எனத் தொகையிலக்கியம் வலியுறுத்துகிறது.
கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்
கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு" (அகம்.93)
பொருளீட்டச் செல்வதாக இல்லறத் தலைவன் உரைக்கிறான். கேளிர் துன்பம் நீங்கிக்; கிளைஞர் உண்டு; நொதுமலாளர் அன்புடன் ஒழுகவே மனைவியைப் பிரியும் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு ஊக்கத்துடன் செல்வதாகத் தன் நெஞ்சோடு கூறுகிறான். மேற்சுட்டிய மூவருள் ‘கிளை’ என்போர் பங்காளிகள் ஆவர். சுற்றம் எனப்படும் கேளிருள் பிற உறவினர், நண்பர் முதலியோர் அடங்குவர். முழுமையாகவோ ஓரளவிற்கோ இக்கருத்தை வலியுறுத்தும் தொகைநூற் பாடல்கள் பல.
தொகையிலக்கியக் காலக் கிளைஞர்
அகப்பாடல்களில் பண்டைத் தமிழ்க் குடும்ப அமைப்பு இடம்
பெற்றுள்ளது. அது பலதிறப்பட்ட வேட்டைச் சமுதாயத்திற்கும் வேளாண் சமுதாயத்திற்கும் ஏற்பக் கூட்டுக்குடும்பமாக இருந்தது.
"பொத்தில் காழ அத்த யாஅத்துப்
பொரியரை முழுமுதல் உருவக் குத்தி
மறங்கெழு தடக்கையின் வாங்கி உயங்கு நடைச்
சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும்
தடமருப்பு யானை கண்டனர் தோழி
தம்கடன் இறீஇயர் எண்ணி இடந்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம்வெங் காதலர் சென்ற யாறே" (குறு.255)
என்ற பாடலில் யானையின் செயல் குடும்ப அமைப்பையும் குடும்பத் தலைவன் கடமையையும் உள்ளுறுத்தி உரைக்கிறது. பசியார உணவு தேடும் காட்டு யானைக் கூட்டம்; அதன் தலைமை சான்ற தந்தங்களை உடைய களிற்றியானை; பொந்து இல்லாத வைரம் பாய்ந்த யாமரத்தைச் சுற்றிப் பார்த்துச் சோதித்துத் தேர்வு செய்கிறது. மரப்பட்டைகள் பொரிந்து தோன்றும் பருத்த அடிமரத்தைக் குத்தித் துளை செய்கிறது. தனது வலிய துதிக்கையை அப்பொந்தினுள் நுழைத்து உள்ளே அரிதிற் கிடைக்கும் நீர்ப்பொருளை உறிஞ்சித் தனது பெருஞ்சுற்றத்தின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. பெறற்கரும் பொருளைத் தேடிக் கண்டு; தன் கூட்டத்தின் பசிநோயைத் தீர்க்கும் இச்செயலில் பொதிந்திருக்கும் உள்ளுறை உவமம் தலைவனின் கடமையையும் குடும்ப அமைப்பையும் சொல்லாமல் சொல்கிறது. தலைவன் அக்களிற்றியானை போலப் பெருஞ்சுற்றத்தின் வாழ்க்கைக்குத் துணையாக வேண்டியவன் ஆவான். அதனால் தான் காதல் மனைவியைப் பிரிந்து காட்டு வழியாகப் பொருள் ஈட்டச் சென்று இருக்கிறான் என்கிறாள் தலைவி.
"கிளைஅழிய வாழ்பவன் ஆக்கம்போல் புல்லென்று" (கலி.34) என்பதால் பங்காளிகளின் முன்னேற்றம் பற்றிக் கண்டுகொள்ளாதவன்; எவ்வளவு மேனிலை அடைந்தாலும் அது சிறுமையானது ஆகும் என்ற கொள்கையும் பெற்றோம்.
தொகையிலக்கியக் காலக் கேளிரும் கேளல் கேளிரும்
"நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும்
ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ
ஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்ல" (அகம்.279)
என்ற உணர்வு வெளிப்பாட்டில்; நண்பர்கள் செல்வமில்லாது தவிப்பதும்; சுற்றத்தார் துன்பம் அடைவதும்; பகைவர் பெருமிதத்துடன் இருப்பதும்; ஒரே பதியில் வாழ்ந்து கொண்டு பொறுத்திருக்க இயலாதவை என்னும் கருத்து உள்ளது. முன்னர்ச் சுட்டிய ‘கேள்’ இங்கு நண்பர், கேளிர் என்று இரண்டாகப் பிரிந்து விளக்கம் பெறுகிறது. ஒட்டாது உறையும் கேளல் கேளிர் செல்வச்செருக்கால் அன்பின்றி இருப்பது இல்வாழ்வான் பொருள் தேடிச் செல்வதற்குரிய காரணம் ஆகின்றது. செல்வம் சேர்ந்தால் அவர் அன்பு கெழுமியவர் ஆவர். இது போன்றே;
"தம் நயந்து இருப்போர்த் தாங்கித் தாம் நயந்து
இன்அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்" (அகம்.151)
என்றும் சொல்லப்படுகிறது. இங்கே தம் நயந்து இருப்போர் கேளிர்; தாம் நயந்து இன்புறுவோர் நட்டோர்; அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர் கேளல் கேளிர் ஆவர்.
செவ்விலக்கியத்து இல்லறத்தான் கடமை
சோம்பலின்றி முயன்று உழைத்துச் சேர்க்கும் செல்வத்தை ஈந்து நிறைவடைவதே இல்லறநெறியின் முதற்கடமை ஆகிப் புகழ் சேர்க்கும் என்பது பண்டைத்தமிழர் கொள்கை.
நிழல் தரும் மரம் போல் இன்பம் தரவல்லது உழைத்துப் பெற்ற பொருளாகும் (கலி.35). பிறர்க்குக் கொடுக்கும் குற்றமற்ற இல்லறத்தான் செல்வம் ஆற்றங்கரையில் தளிர்த்த மரத்திற்கு உவமையாகிறது (கலி.27). 'வறியோர்க்கு வழங்கும் இன்பம் பொருள் இல்லையேல் இல்லை எனவே; ஊக்கத்துடன் பொருளைப் பெருக்கும் செயலில் ஈடுபட வேண்டும்' எனச் சொல்கிறான் செவ்விலக்கியத்து இல்வாழ்வான் (குறு.63). ‘தலைவியை விடச்சிறந்தது இரப்பார்க்கு ஈதல்’ (அகம்.63) எனத் தலைவன் உரைப்பதன் மூலம் இல்வாழ்வானின் முதற்கடமை பற்றிய தொகைநூற் கொள்கை தெளிவு. ‘மிகுந்த இரக்கமும் பிறரது துன்பத்தைத் தீர்க்கும் நோக்கமும் இருப்பினும்; பொருள் இல்லையேல் நோக்கம் நிறைவேறாது எனப் புரிந்து பேசுகிறான் இல்வாழும் தலைவன். (அகம்.335). ‘முன்பிருந்த பொருள் எல்லாம் ஈந்து முடிந்த பின்பு; இரப்பவர்க்குக் கொடுக்கச் சிறிதும் பொருள் இன்றி இருத்தல் இழிவு; அதனால் தான் உன் கணவன்
பொருள் தேடச் சென்றுள்ளான்’ எனத் தோழி தலைவியை ஆற்றுவிக்கிறாள் (கலி.2). இரப்பவரின் கைநிறையக் கொடுத்து அவர்களைப் புரக்க விரும்புகிறான் இல்வாழ்வான். புதியன தந்து மகிழத் தேவையான பொருளை ஈட்ட நினைக்கிறான். எதிராளிகள் தன்னை இல்லாதவன் எனச் சுட்டிக்காட்டும் துன்பம் ஒழிந்து புகழ் பெற முனைவதை உணர்த்துகிறான் (அகம்.389). இதனால் இல்வாழ்வானுக்குப் புகழைக் கொடுப்பது இரப்பார்க்கு ஈதல் என்னும் கொள்கை வலுப்படுகிறது
உரையாசிரியர் கோணத்தில் 'இயல்புடைய மூவர்'
பின்வரும் பத்து உரையாசிரியர் தத்தம் கொள்கைக்கு ஏற்ப விளக்கம் அளிப்பதால் வள்ளுவர் சொன்ன மூவர் பதினெண் திறத்தவர் ஆகின்றனர். (பார்க்க அட்டவணை-1). மொத்தத்தைக் கணக்கிட ஒவ்வொருவர் கூறும் மூவருள் முற்கூறப்படாத புதிய வகையினர் மட்டும் அட்டவணையுள் இடம் பெறுகின்றனர். எல்லோரும் தாம் வாழும் காலநிலைக்கு ஏற்பவே சிந்தித்து விளக்கி உள்ளதால்; வீட்டில் தவநிலை நிற்போர், ஆசிரியர், ஊர்ப்பொதுமன்றத் தலைவர், மாணவர், தொண்டர் ஆகியோர் மூவருள் அடக்கப்பட்டுள்ளனர்.
எட்டுத்தொகை நூல்களில் சித்தரிக்கப்பட்டுள்ள குடும்பம், சமூகம், அவர்களது சொல்லும் செயலும் புலப்படுத்தும் கொள்கைகள்; இவற்றை அடிப்படையாகக் கொண்டு; திருக்குறள் தொடருக்கு விளக்கம் அளிப்பது திருவள்ளுவரின் உட்கிடக்கையைச் சரிவரப் புரிய வைக்கும். ஏனெனில் வீரயுகமாகிய தொகைநூற் காலத்தை அடுத்த நீதி இலக்கியத்தின் போக்கு வீரயுகத்தேவையை அடியொட்டியே அமைய இயலும்.
‘கற்பிற்சிறந்த பெண் மழைவளம் தரக்கூடியவள்’ எனும் திருக்குறள் கருத்தைக்; கற்புக்கடம் பூண்ட தலைவி பற்றித் தோழி;
“அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே” (கலி.39) என்று கூறக் காண்கிறோம். மற்றொரு பாடலிலும்;
அட்டவணை- 1 | உரையாசிரியரும் ‘இயல்புடைய மூவரும்’ | |||
---|---|---|---|---|
உரையாசிரியர் | மூவர் | எண்ணி க்கை | ||
பரிமேலழகர் பிரமச்சாரி வானப்பிரஸ்தன் சந்நியாசி | 3 | |||
பரிப்பெருமாள் | வைதீகர் | 4 | ||
கா.சுப்பிரமணிய பிள்ளை | மனைத்தவ | 5 | ||
நிலை நிற்பார் | ||||
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை | நண்பர் | 6 | ||
திரு.வி.க. | ஊர்ப்பொது மன்றத் தலைவர் | 7 | ||
மு.கோவிந்தசாமி | அரசர் | ஆசிரியர் | முனிவர் | 10 |
தேவநேயர் | பிராமணர் | வைசியர் | 12 | |
சி.இலக்குவனார் | மாணவர் | தொண்டர் | அறிவர் | 15 |
இரா.இளங்குமரன் | தாய் | தந்தை | மனைவி | 18 |
“வறனோடின் வையத்து வான்தரும் கற்பினள்” (கலி.16)
என்று கற்புடைப்பெண் மழை பொழிய வைக்கும் திறம் கொண்டவள் என வலியுறுத்துவதைக் காண்கிறோம். பெயக் கண்டும் நஞ்சுண்டு அமையும் நயத்தக்க நாகரிகம் பற்றிப் பேசும் குறட்கருத்து;
"முந்தை இருந்து நாட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்" (நற்.355)
எனக் குறிப்பிடப்படுவதும் நோக்கத் தக்கது.
திருவள்ளுவர் இல்வாழ்வானுக்கு வலியுறுத்தும் விருந்து புறந்தரல் தொகையிலக்கியமும் வலியுறுத்துவதாகும். ‘வருவிருந்து’, ‘செல்விருந்து’ எனும் தொடர்கள் கலி.8, அகம்.203, புறம்.326 ஆகிய பாடல்களில் உள. அத்துடன் விருந்து ஓம்பும் மேன்மையை 80பாடல்கள் குறிப்பிடுகின்றன. ([வி]{.ul}) திருக்குறள் கருத்துகள் தொகை நூற் கொள்கைகளை அடியொட்டி அமைந்துள்ளமை உறுதி. இதனால் ‘இயல்புடைய மூவர்’ கிளை, கேளிர், கேளல் கேளிர் எனத்துணியலாம்.
முடிவுரை
திருக்குறள் கூறும் கற்புக்கொள்கையும் விருந்துக் கொள்கையும் நாகரிகமும் தொகைநூல்கள் போற்றும் வாழ்க்கை அறங்களாவதாலும்; இல்லற நெறியின் முதல் கடமை இரப்போர்க்கு ஈதல் என்று தொகை நூல்கள் வலியுறுத்துவதாலும்; வள்ளுவரின் ‘இயல்புடைய மூவர்’ கேளிர், கிளைஞர், கேளல் கேளிர் என்று துணியலாம்.