- கன்பூசியஸ் …
06. கன்பூசியஸ் (தத்துவ மேதை)
06. கன்பூசியஸ் (தத்துவ மேதை)
2012-07-02T18:36:00.000+08:00
தத்துவம் என்றாலே உலகின் நினைவுக்கு வருவது கிரேக்கமாகத்தான் இருக்கும். அந்த தேசம்தான் சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ என்ற மும்மூர்த்திகளை உலகுக்குத் தந்தது. எண்ணிக்கையில் அதிகமான தத்துவஞானிகளை கிரேக்கம் தந்திருந்தாலும், மற்ற தேசங்களும் அந்த துறையில் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கின்றன. வான்புகழ் வள்ளுவனைத் தந்தது தமிழ்நாடு. கன்பூசியஸ் என்ற அறிஞரைத் தந்தது சீனா. இவர்களெல்லாம் வாழ்ந்த காலத்தில் தத்துவம் என்பதே எள்ளி நகையாடப்பட்டது. தத்துவத்தைப் பேசியவர்களை இருட்டறையில் கருப்பு பூனையைத் தேடி அலையும் குருடர்கள் என்று சமுதாயம் முத்திரைக் குத்தியது. அந்த இழிவுகளையெல்லாம் தாண்டிதான் தங்கள் முத்திரைப் பதித்திருக்கின்றனர் உலகம் போற்றும் பல தத்துவ மேதைகள். அவர்களுள் கிட்டதட்ட கடவுள் அந்தஸ்துக்கு வணங்கப்பட்ட ஒருவரைப் பற்றிதான் நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் சீன தேசம் உலகுத்தத் தந்த பெருங்கொடை கன்பூசியஸ்.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கி.மு 551-ஆம் ஆண்டில் சீனாவின் Shandong மாநிலத்தில் பிறந்தார் கன்பூசியஸ். அவரது தந்தை தமது 70-ஆவது வயதில் மறுமணம் செய்து கொண்டார் அந்த மனைவிக்கு மூத்த மகனாக பிறந்தவர்தான் கன்பூசியஸ். அவருக்கு நான்கு வயதானபோது அவரது தந்தை காலமானார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது அந்த பிஞ்சு வயதிலேயே அவருக்கு குடும்ப பாரத்தை சுமக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. பல வேலைகளை செய்து பொருள் ஈட்டினார். சிறு வயதிலேயே தாம் சிரமபட்டதாலோ என்னவோ மனிதனுக்கு துன்பம் ஏன் ஏற்படுகிறது? மக்களின் அறியாமைக்கு என்ன காரணம் என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினார். பதினாறாவது வயதிலேயே அவர் சாக்ரடீஸைப் போலவே உண்மைகளைத் தேடி அலையத் தொடங்கினார்.
இளம் வயதில் அவர் வரலாற்றையும், கட்டடக்கலையையும் கற்றறிந்து மிகச்சிறந்த வரலாற்றாசிரியராக விளங்கினார். தமது 20-ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். சமுதாய நலன் பற்றியே அவரது எண்ணங்கள் இருந்ததால் அவருக்கு திருமண வாழ்க்கை அவ்வுளவாக நிறைவைத் தரவில்லை. இருப்பினும் தமது மூன்று பிள்ளைகளை நல்ல பண்புகளுடன் வளர்த்தார். குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வருமானம் தேவை என்பதால் வேலை தேடி அலைந்தார். அவரது அறிவுக்கூர்மையை உணர்ந்த அரசாங்கம் உணவுப்பொருள் கிடங்கை பராமரிக்கும் அதிகாரியாக அவரை வேலையில் அமர்த்தியது. அதில் பல மாற்றங்களை அவர் அறிமுகபடுத்தியதைக் கண்டு மகிழ்ந்த அரசாங்கம் மற்ற அரசாங்க வேலைகளிலும் அவரை பயன்படுத்திக் கொண்டது.
அரசியலை அறவே வெறுத்தவர் கன்பூசியஸ் ஆனால் அரசியல் நிர்வாகம் அவரைத் தேடி வந்தது. ஓர் அரசாங்கம் சிறப்பாக பணியாற்றத் தேவையான கொள்கைகளை அவர் உருவாக்கித் தந்தார் அதன் மூலம் அவரது மதிப்பு கூடியது. நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கித் தரும்படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். கல்வியே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு என்று நம்பிய கன்பூசியஸ் அரசாங்கத்தின் துணையோடு கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அது அரிஸ்டாட்டில் நிறுவிய லைசியம் அகாடமியைப் போன்றதொரு கலைக்கழகமாக செயல்பட்டது. அதில் அரசாங்க நிர்வாகம், சமுதாய முன்னேற்றம், வாழ்க்கைப் பண்புகள், ஒழுக்கம் போன்ற பாடங்களை இளையர்களுக்கு போதித்தார்.
அறிவைப் பயன்படுத்தி நம் அறியாமையை ஒப்புக்கொள்வதுதான் உண்மையான அறிவு என்பதே கன்பூசியஸின் அடிப்படை சித்தாந்தம். அறியாமையைக் களைவதிலும், உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதிலும், சுதந்திர சிந்தனையை வலியுறுத்துவதிலும் அவரது முனைப்பைக் கண்ட சீனர்கள் அவரை தெய்வமாகவே மதிக்கத் தொடங்கினர். ஆனால் அதனை கன்பூசியஸ் விரும்பவில்லை ஏனெனில் மதத்தின் மீது அவருக்கு நம்பிக்கையில்லை. மக்கள் மத சம்பிராதாயங்களில் மூழ்கி மூடநம்பிக்கைக்கு ஆளாகின்றனர் என்றும், மக்களின் அறியாமைப் போக்குவதற்கு பதில் மதம் அவர்களை பேதைகளாக மாற்றுகிறது என்றும், மதவெறி பிடித்தவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள் என்றும் கூறிய கன்பூசியஸ் தாம் மதத்தை வெறுப்பதாக வெளிப்படையாகவே சொன்னார்.
வாழும் காலத்தில் மனிதன் நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் நீதிக்கு அடிபணிந்து உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டும். அதற்கு மதம் தேவையில்லை என்றார் கன்பூசியஸ். பெரும்பாலோர் மதித்தாலும் சில அரசாங்க அதிகாரிகள் அவரை குறை கூற ஆரம்பிக்கவே அரசாங்கப் பணியிலிருந்து விலகினார் கன்பூசியஸ். பல நாடுகளில் சுற்றித் திரிந்து சென்ற இடத்திலெல்லாம் தன் சிந்தனைகளை விதைத்தார். சில குறுநில மன்னர்கள் அவரது மதிப்பை அறிந்து அவருக்கு மானியம் அளிக்க முன்வந்தனர். ஆனால் வறுமையில் வாடியபோதும் அந்த உதவிகளை ஏற்க மறுத்தார் கன்பூசியஸ். அவரது உயர்ந்த லட்சியங்களை உணரத் தொடங்கிய சீன அரசாங்கம் அவருக்கு உயர்ந்த பதவி அளித்து கெளரவிக்க விரும்பியது ஆனால் அதனை அவர் மறுத்து விட்டார்.
ஓயாத உழைப்பினாலும் வறுமையில் வாடியதாலும் நோய்வாய்ப்பட்ட கன்பூசியஸ் தமது 70-ஆவது வயதில் ஓய்வெடுக்கத் தொடங்கினார். ஒரு மலைப்பாங்கான பகுதியில் வாழ்ந்த அவர் தமது கடைசிக் காலத்தை சீடர்களுக்கு உபதேசம் செய்வதில் கழித்தார். தமது சிந்தனைகளையெல்லாம் ஒருங்கினைத்து “வசந்தமும் இலையுதிர்க் காலமும்” என்ற நூலை உருவாக்கினார். தமது 71-ஆவது அகவையில் கி.மு 479-ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு விடைபெற்றுக் கொண்டார். அவரது மறைவிற்கு பிறகு அவர்மீது நன்மதிப்பால் அவரது கொள்கைகளை கன்பூசியனிஸம் என்று கிட்டதட்ட ஒரு மதமாகவே மதிக்கத் தொடங்கினர் சீனர்கள். சீனாவில் பெளத்தம், தாவிசம், கம்யூனிசம் என்று எத்தனையோ மதங்களும் மாறுதல்களும் வந்தாலும் 2500 ஆண்டுகளாக இன்றும் நிலைத்து நிற்கிறது கன்பூசியனிஸம். அதற்கு காரணம் அந்த தத்துவஞானியின் உயரிய சிந்தனைகள்தான்.
ஏழைகள், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோருக்கு அரசாங்கம் அடைக்கலம் தந்து பாதுகாப்பு தர வேண்டும் என்று அப்போதே சொன்னவர் கன்பூசியஸ். எல்லோருக்கும் சமவாய்ப்பும், சமதகுதியும் வழங்கப்பட வேண்டும் அரசாங்கம் கல்வியை கண்ணாக போற்றி வளர்க்க வேண்டும், இளையர்களின் சுதந்திர சிந்தனைகளை தடை செய்யாமல் ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் கன்பூசியஸ். நாம் எப்படி வள்ளுவரின் திருக்குறளைப் பெரிதாக மதித்துப் போற்றுகிறோமோ அதே போன்று சீனர்கள் கன்பூசியஸின் கருத்துகளை வேதமாகப் பின்பற்றுகின்றனர். சீனா தந்த அந்த அருந்தவப் புதல்வனின் சில சீரிய சிந்தனைகள் இதோ…..
“இருள் இருள் என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதை விட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி வை”.
“உலகின் மிகப் பெரிய ஆயுதம் மெளனம்தான்”.
“சரியானது எது என்று உணர்ந்த பின்பும், அதை செய்யாமல் இருப்பது மகா கோழைத்தனம்”.
இப்படிப்பட்ட அறிய பொன்மொழிகளுக்கு சொந்தக்காரர் கன்பூசியஸ். ஒரு பில்லியன் சீனர்கள் மட்டுமல்ல மற்ற நாட்டவர்களும் இன்றும் அவரை மதிப்பதற்கு காரணம் அவருடைய சிந்தனைத் தெளிவும், செயல் துணிவும்தான். இதுபோன்ற பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் ஏழ்மையில் பிறந்தவர்களுக்குகூட அந்த வானம் வசப்படும் என்பதுதான் தத்துவ மேதை கன்பூசியஸின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம்.
(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்