/ வரலாற்று … /
  1. லூயி பாஸ்ச்சர் …

71. லூயி பாஸ்ச்சர் (நுண்ணுயிரியலின் தந்தை)

71. லூயி பாஸ்ச்சர் (நுண்ணுயிரியலின் தந்தை)

2013-03-11T19:00:00.000+08:00

மனித வரலாறு எழுதப்படத் தொடங்கிய காலத்திலிருந்து உலகின் ஏதாவது ஒரு மூலையில் போர்களோ, சண்டையோ நிகழாமல் இருந்த நாட்களே கிடையாது. ஆனால் போர்கள் வாங்கிய உயிர்ப்பலியைக் காட்டிலும் இயற்கை வாங்கிய உயிர்ப்பலி அதிகம் என்பதுதான் உண்மை. ஆம் போர்களில் இறந்தவர்களைக்காட்டிலும் எண்ணிலடங்கா நோய்களுக்கு பலியானவர்கள்தான் அதிகம் என்கிறது வரலாறு. இயற்கை மனுகுலும் மீது தொடுக்கும் போர்தான் நோய். எனவேதான் அந்த நோய்களை தோற்கடித்து உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களும், மருந்து கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளும் கடவுள் அந்தஸ்த்திற்கு உயர்த்தப்படுகின்றனர்.

நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகரின் மருத்துவத்துறை பங்களிப்பு மற்றவர்களைக் காட்டிலும் தலையாயது என்று வரலாற்றில் நூறு முக்கியமான மனிதர்கள் என்ற நூலை எழுதியை Michael Hart கூறுகிறார். அந்த நூலில் இந்த வரலாற்று நாயகருக்கு பதினோராவது இடம் வழங்கப்பட்டுள்ளது. அம்மை, ரேபிஸ் போன்ற கொடிய நோய்களுக்கு மருந்தையும் ஆந்தரக்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்ததோடு பாலை கிருமிநீக்கம் செய்யும் முறையையும் கண்டுபிடித்தார் அவர். அவரது கண்டுபிடிப்புகளின் அடிப்படையைக் கொண்டுதான் பிந்நாளில் பல்வேறு தடுப்பூசிகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்தான் உலகப்புகழ் பெற்ற பிரெஞ்சு வேதியியல் அறிஞரும், உயிரியல் விஞ்ஞானியுமான லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur).

1822-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் நாள் கிழக்கு பிரான்சில் உள்ள Dole எனும் ஊரில் பிறந்தார் லூயிபாஸ்ச்சர். சிறுவயதிலிருந்தே நாட்டுப்பற்றும், இயற்கை மீது ஆர்வமிக்கவராக அவர் இருந்தார். அறிவியலும், ஓவியமும் அவருக்கு பிடித்த துறைகள். பதினாறு வயது வரை தாம் பார்த்து ரசித்தவற்றையெல்லாம் ஓவியமாக வரையும் பழக்கம் அவருக்கு இருந்தது. கூச்ச சுபாவம் கொண்ட பாஸ்ச்சர் தமது இருபதாவது வயதில் அறிவியலில் பட்டம் பெற்றார். பிற்காலத்தில் வேதியியல் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை செய்யவிருந்த அவருக்கு பல்கலைக்கழகத்தில் வேதியியல் பாடத்தில் சராசரி மதிப்பென்கள்தான் கிடைத்தது என்பது ஆச்சரியமான உண்மை. பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் காற்றில்கூட கிருமிகள் இருக்கின்றன என்பதை கண்டுபிடித்து சொன்னார் பாஸ்ச்சர். தனது கண்டுபிடிப்பை நிரூபிப்பதற்கு அவர் ஆல்பஸ் மலையின் தூய காற்றை வடிகட்டியும் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்.

புதிதாக கறந்த பாலை அப்படியே வைத்திருந்தால் சிலமணி நேரங்களில் அது புளித்து கெட்டு விடும் என்பது நமக்குத் தெரியும். பாலை புளிக்க செய்வது அதில் இருக்கும் பாக்டீரியா கிருமிகள்தான் என்பதை கண்டுபிடித்தார் பாஸ்ச்சர். மேலும் ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பத்தில் வைத்தால் பெரும்பாலான கிருமிகள் அழிக்கப்படும் என்பதையும் அவர் கண்டுபிடித்தார். அவ்வாறு செய்வதன் மூலம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர் நெய் போன்றவற்றை அதிக காலம் கெடாமல் வைத்திருக்கலாம் என்பதையும் அவர் நிரூபித்துக்காட்டினார். பாலில் உள்ள கிருமிகளை அழித்து அவற்றை பாதுகாப்பாக்கும் முறை அதனை கண்டுபிடித்த பாஸ்ச்சரின் பெயராலேயே பாஸ்ச்சரைசேஷன் என்று அழைக்கப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் அந்த முறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கிருமிகள் பற்றிய அந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானது என்பதை மருத்துவ உலகம் உணர்ந்தது. எப்படி பாலை கொதிக்க வைப்பதால் கிருமிகள் அழிக்கப்படுகின்றனவோ அதேபோல் காச நோய் கிருமிகளை உஷ்ணத்தால் அழிக்க முடியும் என்பதை மருத்துவர்கள் கண்டனர். எனவே காசநோய்க்கும் மருந்து கிடைத்தது.

அடுத்து வெறிநாய்க்கடியால் உண்டாகும் ரேபிஸ் நோய் பற்றி ஆராய்ந்தார் பாஸ்ச்சர். அவரது ஆராய்ச்சின் பலனாக அந்த கொடூரமான நோய்க்கான தடுப்பூசி மனுகுலத்திற்கு கிடைத்தது. அந்த ஆராய்ச்சிகளின்போது அவர் அச்சமின்றி பல வெறிநாய்களை வைத்து சோதனை நடத்தினார். வெறிநாய்களின் எச்சிலில்தான் கிருமிகள் இருக்கின்றன என்பது தெரிந்தும் ஆராய்ச்சிக்காக ஒருமுறை அவர் ஒரு நாயின் வாயில் குழாய் வைத்து தான் வாயால் அதன் எச்சிலை உரிஞ்சு எடுத்ததாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. தப்பித்தவறி அந்த எச்சில் அவர் வாய்க்குள் சென்றிருந்தால் அவரது நிலமை என்னவாகியிருக்கும்? அப்படி அச்சமின்றி தன் உயிரை துச்சமாக மதித்து போராடியதால்தான் பல உயிர்களை காக்கும் மருந்துகளை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. வெறி நாய்க்கான மருந்தை கண்டுபிடித்த போது 1888-ஆம் ஆண்டு பாரிசில் Pasteur institute என்ற கழகம் அவரது பெயராலேயே அமைக்கப்பட்டது. பாஸ்ச்சரின் அடிப்படைக் கொள்கைகளை பயன்படுத்தி typhus எனப்படும் சன்னிக்காய்ச்சல், Polio எனப்படும் இளம்பிள்ளைவாதம் போன்ற நோய்களுக்கும் தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள். பாதுகாப்பான தடுப்பூசி மூலம் அந்த நோய்கள் கிட்டதட்ட துடைத்தொழிக்கப்பட்டன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து உலக மக்களின் ஆயுட்காலம் இரட்டிப்பாகி இருக்கின்றன என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அப்படி உயிர்களை காப்பாற்றியதோடு மட்டுமின்றி மனித வாழ்க்கையை நீட்டிப்பதற்கும் முழுமுதற் காரணம் லூயி பாஸ்ச்சர் புரிந்த மருத்துவ சாதனைகளேயாகும். தமது அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் உலக மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் போக்கிய மாமனிதர் தங்கள் நாட்டவர் என்று அன்றும் சரி இன்றும் சரி நியாயமாக கர்வப்பட்டுக்கொள்கின்றனர் பிரெஞ்சு மக்கள். அங்கு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இதுவரை பிரெஞ்சு தேசம் உருவாக்கியிருக்கும் ஆகச்சிறந்த குடிமக்களில் முதல் இடத்தை லூயி பாஸ்ச்சருக்கு வழங்கி கெளரவித்திருக்கின்றனர் அந்நாட்டு மக்கள். மாவீரன் நெப்போலியனுக்கு அந்த பட்டியலில் ஐந்தாம் இடம்தான்.

லூயி பாஸ்ச்சர் என்ற தனி ஒரு மனிதனின் மருத்துவ பங்களிப்பினால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன என்பதை நம்மால் துல்லியமாக கூற முடியாது என்றாலும் அது மில்லியன் கணக்கில் இருக்கும் என்பதை மட்டும் துணிந்து சொல்லலாம். அப்படி மில்லியன் கணக்கானோரின் வாழ்க்கையை காப்பாற்றித் தந்த அந்த உன்னத விஞ்ஞானி 73-ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தார். தன் இறுதி நாட்கள் வரைக்கும் உழைத்துக்கொண்டேயிருந்த அந்த ஜீவன் தனது மாணவர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா?! உழையுங்கள்.. உழையுங்கள்.. உழைத்துக்கொண்டேயிருங்கள் எக்காரணத்திற்காகவும் உழைப்பதை நிறுத்தாதீர்கள் என்பதுதான். மனுகுலத்திற்கு அளிவிட முடியாத நன்மைகளை செய்த லூயி பாஸ்ச்சர் 1895-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் நாள் காலமானார். மருத்துவ உலகில் அவருக்கு பிறகு அவர் அளவுக்கு உயர்ந்த பங்களிப்பை செய்த ஒரு விஞ்ஞானியை உலகம் இன்னும் சந்திக்கவில்லை. அதனால்தான் அவரை மருத்துவத்தின் தந்தை என்றும், மனுகுலத்தின் இரட்சகர் என்றும் உலகம் போற்றுகிறது. மண்ணில் மட்டுமல்ல விண்ணிலும் அவரது புகழ் நிலைத்திருக்கிறது செவ்வாய் கோளிலும், நிலவிலும் உள்ள grates எனப்படும் பள்ளங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

நோய் என்ற ஆயுதத்தைக் கொண்டு மனுகுலத்தின் மீது இயற்கையே போர் தொடுத்த போது இயற்கையை வெல்ல முடியாது என்றுதான் பலர் வேதாந்தம் பேசினர். அதற்கும் மனிதனின் இயலாமை என்ற நோய்தான் காரணம். ஆனால் தன்னம்பிக்கையோடு முயன்றால் இயற்கையை மட்டுமல்ல, இமயத்தையும் வெல்லலாம் என வாழ்ந்து காட்டியவர்தான் லூயி பாஸ்ச்சர். “எழுந்தவனுக்கு விரல்களெல்லாம் சாவி, சோர்ந்தவனுக்கு கால்கள் முழுக்க பூட்டு” என்று அழகாக கூறுகிறார் கவிஞர் பா.விஜய் இயற்கைக்கு எதிராக எழுந்து நின்றதால்தான் மனுக்குலத்தின் துன்பங்களான நோய்களை குணப்படுத்தும் சாவிகள் பாஸ்ச்சரின் கைகளுக்கு கிடைத்தன. அவரைப்போல் தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் எழுந்து நிற்பவருக்கு அவர்கள் விரும்பும் வானத்தை வசப்படுத்துவது இயற்கையின் கடமை.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

வாழ்க வளமுடன்

என்றும் நட்புடன்

உங்கள். மாணவன்

அடுத்த பக்கம்