/ வரலாற்று … /
  1. ஹமில்டன் நாகி …

82. ஹமில்டன் நாகி (மருத்துவ உலகில் ஒரு மாறுபட்ட மனிதரின் கதை)

82. ஹமில்டன் நாகி (மருத்துவ உலகில் ஒரு மாறுபட்ட மனிதரின் கதை)

2011-05-23T15:14:00.001+08:00

1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ந்தேதி தென்னாப்பிரிக்காவின் கேப்டான் நகரில் எதிர்பாராத கோரவிபத்து ஒன்றினால் ஒரு காரால் மோதி தள்ளப்பட்டு உயிருக்கு ஊசலாடிய நிலையில் ஓர் இளம்பெண் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.அவரது உடலில் இதயம் மட்டும்தான் துடித்துக்கொண்டிருந்தது வேறு எந்த அசைவும் இல்லை. அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணின் இதயத்தை அகற்ற வேண்டிய பொறுப்பு ஹமில்டனுக்கு ஆனால் அந்த நாட்டின் சட்டப்படி அவர் அந்தப் பெண்ணை தொடக்கூட முடியாது ஏனெனில் ஹமில்டன் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர்.

உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த இளம்பெண் டெனிஸ் டார்வால் வெள்ளை இனப்பெண். தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் உச்சகட்டத்தில் இருந்த அந்த சமயத்தில் வெள்ளையர்களின் அறுவை சிகிச்சை அறைக்குள் நுழையவோ மருத்துவமனையில் வெள்ளையர்களை தொடவோ அறுவை சிகிச்சை செய்யவோ கருப்பர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஹமில்டனுக்காக மட்டும் ரகசியமாக தனது குருட்டு சட்டங்களை மீற முடிவெடுத்தது அந்த மருத்துவமனை. அதற்கு காரணம் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதில் ஹமில்டனுக்கு இருந்த அசாத்திய திறமைதான்.

அதுமட்டுமல்ல அன்றைய தினம் மருத்துவ உலகில் ஓர் வரலாற்று சிறப்பு வாய்ந்த தினம். ஆம் அன்றுதான் உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை புகழ்பெற்ற மருத்துவர் கிறிஸ்டியான் பெர்னாடின் தலைமையில் நடைபெற்றது. டெனிஸின் இருதயத்தை ஹமில்டன் லாவகமாக அறுத்து எடுக்க அதனை லூயிஸ் வஸ்கான்ஷி என்பவருக்கு பொருத்தினார் கிறிஸ்டியான் பெர்னாட். உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த அறுவை சிகிச்சையில் பெயரும் புகழும் கிறிஸ்டியான் பெர்னாட்க்குப்போக அதில் ஹமில்டனின் பங்களிப்பு மறைக்கப்பட்டது மறுக்கப்பட்டது. உண்மையில் நீ ஒரு வெள்ளை இனத்தவரின் உடலை அறுக்கிறாய் என்பதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக்கொண்ட பின்னரே ஹமில்டனை அந்த அறுவை சிகிச்சை செய்ய அனுமதித்தாம் அந்த மருத்துவமணை நிர்வாகம். உலக பத்திரிக்கைகளின் பக்கங்களில் அந்த அறுவை சிகிச்சை சம்பந்தபட்ட படங்கள் பிரசுரமாயின. அதில் சில படங்களில் டாக்டர் பெர்னாடின் பின்புறம் புன்னகையோடு நின்றிருந்தார் ஹமில்டன், அவர் யார் என்று எழுந்த கேள்விகளுக்கு துப்புறவு ஊழியர் என்றும், பூங்கா காவலர் என்றும் பதில் கூறி சமாளித்தது மருத்துவமனை நிர்வாகம்.

இந்த சம்பவம் நடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் இறப்பதற்கு முன்புதான் ஹமில்டன் பற்றிய உண்மைகள் வெளியாகத் தொடங்கின. தன் மரணத்திற்கு முன் ஹமில்டன் என்னைவிட சிறந்த அறுவை சிகிச்சை நிபுனர் என்று மனம் திறந்து புகழ்ந்தார் கிறிஸ்டியான் பெர்னாட் இத்தனைக்கும் உயர்நிலை கல்விகூட படிக்காதவர் ஹமில்டன் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா!! இதோ அவரது வாழ்க்கை பயணத்தின் பதிவு…

1926 ஆம் ஆண்டு ஜூன் 26 ந்தேதி தென்னாப்பிரிக்காவின் ஹாக்-கேன் என்ற பகுதியில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் ஹமில்டன் நாகி சிரமபட்டு தொடக்கப்பள்ளி கல்வியை முடிந்த ஹமில்டனை அதற்குமேல் அவரது குடும்பத்தால் படிக்க வைக்க முடியவில்லை. எனவே தனது 14 ஆவது வயதில் வேலை தேடி கேப்டான் நகருக்கு வந்தார். கேப்டான் பல்கலைக்கழகம் ஹமில்டனை தோட்ட ஊழியராக பணியில் சேர்த்துக்கொண்டது. அடுத்த பத்து ஆண்டுகள் அந்த பல்கலைகழகத்தின் தோட்ட வேலைகளையும் டென்னிஸ் மைதானத்தையும் பரமாரித்து வந்தார். துப்புறவு வேலை செய்தாலும் எப்போதுமே தூய்மையாக இருப்பார் ஹமில்டன்.

1954ல் தோட்ட வேலையையும் பார்த்துக்கொண்டு பல்கலைகழகத்தின் மருத்துவ ஆய்வு கூடத்தில் உதவுமாறு ஹமில்டனை கேட்டுக்கொண்டார் ராபர்ட் கோட்ஸ் என்ற மருத்துவதுறைத் தலைவர், ஹமில்டனும் அதற்கு இணங்கி அங்கு ஆய்வுக்காக வைக்கப்படிருந்த விலங்குகளை பராமரித்து வந்தார். ஒருமுறை ஓர் ஒட்டகசிவிங்கியை அறுத்து பரிசோதிக்கும்போது தனக்கு உதவுமாறு ஹமில்டனை கேட்டுக்கொண்டார் ராபர்ட் கோட்ஸ் அப்போது ஹமில்டனின் செய்ல்பாடுகளை கவணித்து வியந்த கோட்ஸ் தனது உதவியாளராக சேர்த்துக்கொண்டார். அந்த ஆய்வுகூடத்தில் எல்லாவிதமான விலங்கினங்களையும் அறுத்து மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடக்கப்பள்ளியோடு கல்வியை முடித்துக்கொண்ட ஹமில்டன் அந்த பரிசோதனைக்கூடத்தில் கண்களால் பார்த்தே பலவற்றைக் கற்றுக்கொண்டார். விலங்கின் உறுப்புகளை லாவகமாக அறுத்து எடுப்பதில் ஹமில்டன் தனித்திறமை காட்டினார்.வெகுவிரைவில் மருத்துவதுறை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அளவுக்கு ஹமில்டன் சிறந்து விளங்கினார்.அடுத்த நாற்பது ஆண்டுகளில் சுமார் 5000 மருத்துவ மாணவர்களுக்கு அவர் பயிற்சி அளித்தார். அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களில் பலர் பின்னாளில் மருத்துவதுறையில் சிறந்த நிபுனர்களாக உயர்ந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

ஆனால் அந்த நாற்பது ஆண்டுகளில் ஹமில்டனுக்கு ஒரு மருத்துவருக்கான ஊதியமோ, மரியாதையோ, கவுரமோ வழங்கப்படவில்லை. பல்கலைகழக பதிவேட்டில் ஹமில்டன் ஒரு துப்புறவு ஊழியர் என்றே குறிக்கப்பட்டிருந்தது. 1991 ஆம் ஆண்டு அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்றபோது அவருக்கு கிடைத்த மாதாந்திர ஓய்வூதியம் 760 ராண்ட் அதாவது 275 அமெரிக்க டாலர்தான். டிப்ளமோகூட படிக்காத ஒருவருக்கு அவ்வளவுதான் சம்பளம் கொடுக்க முடியும் என்றது பல்கலைக்கழக நிர்வாகம். பல அறுவை சிகிச்சை வல்லுநர்களை உருவாக்கிய ஹமில்டனால் தனது ஐந்து பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை ஒரு பிள்ளையை மட்டும் உயர்நிலைப்பள்ளி கல்விவரை படிக்க வைத்தார். மிகவும் சிரமமான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர் ஹமில்டன்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த உலகின் முதல் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அன்றைய தினம்கூட டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்க ஹமில்டன் அங்கிருந்து கிளம்பி தனது ஓரறை வீட்டிற்குதான் சென்றார். அந்த வீட்டில் அடிப்படை வசதியோ மின்சார வசதியோ கிடையாது. கிடைத்த சொற்ப சம்பளத்தில் பெரும்பகுதியை தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அனுப்பிவிட்டு எந்த வசதியுமின்றி எளிமையாக வாழ்ந்தார் ஹமில்டன். கடவுள் பக்திகொண்ட அவர் பல்கலைகழகத்தில் இருந்த நாட்களில் மதிய உணவு நேரத்தில் பக்கத்திலிருந்த இடுகாட்டில் கூடும் வீடு அற்றவர்களுக்கு பைபிளை வாசித்துக்காட்டுவதிலும், மது மற்றும் போதைப் பொருட்களைப்பற்றி எச்சரிப்பதிலும் செலவிட்டார்.

ஓய்வுபெற்ற பிறகு சொற்ப சொத்தே இருந்தபோதும் ஹமில்டன் பழைய பஸ் ஒன்றை நடமாடும் மருந்தகமாக மாற்றி தான் பிறந்த ஊருக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தந்தார். இன ஒதுக்கல் கொள்கை முடிவுக்கு வந்த பிறகு டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் மூலம் ஹமில்டனின் மருத்துவ பங்களிப்பு உலகுக்கு தெரிய வந்தது. 2002 ஆம் ஆண்டு ஹமில்டனுக்கு _* _National Orders. The Order of Mapungubwe __ *எனப்படும் தென்னாப்பிரிக்காவின் ஆக உயரிய விருது வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது கேப்டான் பல்கலைக்கழகம். வாழ்ந்த காலம் முழுவதும் அங்கீகாரம் பெறாத ஹமில்டன் சிறப்பான அந்த இரண்டு அங்கீகாரங்களைபெற்ற இரண்டு ஆண்டுகளில் அதாவது 2005 ஆம் ஆண்டு மே மாதம் 29ந்தேதி தனது 78 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

இயற்கை ஹமில்டனுக்கு மிக உன்னதமான திறமையை கொடுத்திருந்தது. அந்த திறமையை மட்டும் விரும்பிய அந்த தேசத்தின் வெள்ளை இன சிறுபான்மையினர் அவரது தோலின் நிறத்தை வெறுத்தனர். கருப்பர் என்ற ஒரே காரணத்திற்காக ஹமில்டனுக்கு எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டது. ஹமில்டன் நாகிக்கு வானம் என்ன வாழ்க்கைகூட வசப்படவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் அவர் போர்க்கொடி தூக்கவில்லை தனக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்காக நீதிப்போராட்டம் நடத்தவில்லை தோலின் நிறத்தை அடையாளம் காட்டி உலகம் பாரபட்சம் காட்டினாலும் கடவுள் தனக்குத் தந்த திறமையை பாரபட்சமின்றி பிறர் நலனுக்காக பயன்படுத்திய ஒரு குணத்துக்காகவே ஹமில்டன் நாகி போற்றப்படவும் மதிக்கப்படவும் வேண்டியவர்.

_* _ஹமில்டன் நாகியின் வாழ்க்கை வரலாறை படிக்கும்போது சமநீதியில் நம்பிக்கைகொண்ட எந்த வெள்ளை இனத்தவரும் கூனிக்குறுகி போகவும் அதன்மூலம் இதுபோன்ற அநியாங்கள் இனியும் தொடரக்கூடாது என எண்ணித்துணியவும் தயங்கமாட்டார்கள். இது ஒன்றே ஹமில்டன் நாகிக்கு வானம் வசப்பட்டதற்கு சமமாகும். கடவுள் தந்த திறமையை சுயநலமின்றி பிறர் நலனுக்காகப் பயன்படுத்தும் எவரும் வானத்தை வசப்படுத்தலாம் என்பதுதான், வாழும்போது மறக்கப்பட்ட ஆனால் மறைந்த பின்னும் நினைக்கப்படும் ஹமில்டன் நாகியின் வாழ்க்கை நமக்கு சொல்லும் உண்மையாகும். __ *



_ *(தகவலில் உதவி - நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்) * _



_ _* _ **பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்._ * _**_



_ _* _ **_ __ *_ வாழ்க வளமுடன்****_

_ _* **என்றும் நட்புடன்_ _**_
_ *_ **_*** _ _ *_ _* _உங்கள். மாணவன்_ *_ **_

அடுத்த பக்கம்