- கெளதம புத்தர் …
13. கெளதம புத்தர் (பகுத்தறிவின் கடவுள் பிறந்த கதை)
13. கெளதம புத்தர் (பகுத்தறிவின் கடவுள் பிறந்த கதை)
2011-05-16T18:37:00.001+08:00
வணக்கம் நண்பர்களே, இன்று கெளதம புத்தரின் பிறந்த நாளான விசாக தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் விசாக தின நல்வாழ்த்துக்களை கூறிக் கொண்டு புத்தரின் வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்கிறேன்…!
இந்த உலகம் உய்வு பெற வேண்டுமானால் அதில் அன்பு செழிக்க வேண்டும். அப்படிப்பட்ட அன்பை உலகிற்க்கு போதித்த பல மகான்களின் பெயர்களை வரலாறு அன்போடும் மரியாதையோடும் இன்றும் சுமந்து நிற்கிறது. அந்த மகான்களில் ஒருவரை சந்திப்போம் அவர் வாழ்ந்த வாழ்க்கையை சிந்திப்போம்.
செல்வ செழிப்பில் பிறந்து உலக பற்றை துறந்து போதி மரத்தடியில் ஞானம் பெற்று அன்பை போதிக்கும் உலகின் மாபெரும் சமயங்களில் ஒன்றான பெளத்த சமயத்தை நிறுவிய கெளதம புத்தரின் பிறந்த தினம்தான் விசாக தினம். இன்றைய நேபாள எல்லைக்குள் இருக்கும் லும்பினி எனும் ஊரில் கி.மு 563 ஆம் ஆண்டு அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார் சித்தார்த்தர். அவர் பிறந்தது மே மாதத்தின் பெளர்னமி தினம். அவரது தந்தை கபிலவஸ்து என்ற நகரின் மன்னனாக இருந்தவர். சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாளில் அவரது தாயார் மகாமயா இறந்து போனார். மகாமயாவின் சகோதரியான மகா கஜபதி சித்தார்த்தரை வளர்த்தெடுத்தார்.
தன் மகன் உலகை ஆளும் மன்னனாக வேண்டும் என்று விரும்பினார் தந்தை. ஆனால் ஒரு நோயாளி, ஒரு முதியவர், மரணமுற்றவர், ஒரு துறவி ஆகியோரை பார்க்க நேர்ந்தால் சித்தார்த்தர் துறவறம் பூண்டுவிடுவார் என்று அரச சோதிடர்கள் கணித்து சொல்லவே சித்தார்த்தரை அரண்மனையை விட்டு வெளியேறா வண்ணம் வளர்க்கத் தொடங்கினார் தந்தை. பல ஆண்டுகள் வெளி உலகம் தெரியாமல் எல்லா சுகபோகங்களையும் அனுபவித்து அரண்மனையிலேயே மகிழ்ச்சியாக வளர்ந்தார் சித்தார்த்தர். உலகத்தின் துன்பங்கள் அவர் கண்ணில் படாதவாறு அவர் பாதுகாத்து வளர்க்கப்பட்டார். 16 வயதிலேயே உறவுப் பெண்ணான யசோதாராவுடன் சித்தார்த்தருக்கு திருமணம் நடந்தது. இல்லற வாழ்விலும் மகிழ்ச்சியாக ஈடுபட்ட அவருக்கு ராகுலன் என்ற குழந்தையும் பிறந்தது.
அதன்பின்னர் கணிக்கப்பட்டது போலவே ஒரு முதியவர், ஒரு நோயாளி, மரணமுற்றவ்ர், ஒரு துறவி ஆகியோரை பார்க்கும் நிலை சித்தார்த்தருக்கு ஏற்பட்டது. அவற்றை கண்டு மனம் வேதனைப்பட்ட சித்தார்த்தர் உலகின் பிணிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் என்ன காரணம் என்று ஆழ்ந்து சித்திக்கத் தொடங்கினார். துறவறம் பூண்டு உண்மையை உணர விரும்பிய அவர் தனது 29 ஆவது வயதில் ஒருநாள் இரவில் மனைவியும் மகனும் உறங்கிய பிறகு எவருக்கும் சொல்லாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார். காவி உடை அணிந்து காட்டில் அலைந்து திரிந்த அவர் சில முனிவர்களிடம் பாடம் கற்கச் சென்றார். தங்கள் உடலை வருத்தி கடுமையான தவம் புரிந்தால் மட்டுமே ஞானம் பெறலாம் என்று எல்லா முனிவர்களுமே கூறினர். அதனை கேட்டு பல ஆண்டுகள் தன் உடலை வருத்திக் கொண்டார் சித்தார்த்தர்.
உணவை படிப்படியாக குறைத்துக்கொண்டு கடைசியில் ஒரு நாளுக்கு ஒரு பருக்கை சோறு மட்டுமே உண்ணுமளவுக்கு வந்தார், உடல் எலும்பும் தோலுமானது. ஆனால் அதுபோன்ற கடுந்துறவால் உடல் சோர்ந்து மூளையும் சோர்வடைவதால் உண்மையை அறிய அதுவல்ல வழி என்று உணர்ந்தார். மீண்டும் உணவு உண்ணத் தொடங்கினார் அவர் வழக்கமாக உணவு உண்ணத் தொடங்கிதைப் பார்த்த அவரது ஐந்து சீடர்கள் அவர்மேல் நம்பிக்கை இழந்து அவரைவிட்டு விலகினர். ஆனால் தான் தேடிய உண்மைகளை கண்டறிய தனிமையில் கடும் சிந்தனையில் நீண்ட நேரங்களை செலவிடத் தொடங்கினார் சித்தார்த்தர்.
ஒருநாள் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது தான் தேடிய கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டதாக உணர்ந்தார் சித்தார்த்தர். அவ்வாறு ஞானம் பெற்றபோது அவருக்கு வயது 35. அதற்கு பிறகுதான் அவர் புத்தர் என்று அழைக்கப்பட்டார். அவர் ஞானம் பெற்ற இடம் பீஹாரில் போத்ஹையா என்று அழைக்கப்படுகிறது. அடுத்த 45 ஆண்டுகள் வட இந்தியா முழுவதும் பயணம் செய்து தான் உணர்ந்த உண்மைகளை போதித்தார் புத்தர். அவரது போதனைகளை நான்கு உயர் உண்மைகள் என்று அழைக்கின்றனர் பெளத்தர்கள்.
- முதலாவது உண்மை மனித வாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது.
- இரண்டாவது உண்மை அந்த துன்பத்திற்கு காரணம் தனனலமும், ஆசையும்.
- மூன்றாவது உண்மை மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்க முடியும்.
- நான்காவது உண்மை மனிதன் தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க எட்டு வகை பாதை உண்டு.
நேர்மையான கருத்து, நேர்மையான எண்ணம், நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான சித்தம், நேர்மையான தியானம் ஆகியவையே அந்த எட்டுப்பாதைகளாகும்.
புத்தர் தனது முதல் போதனையை வரனாசிக்கு அருகில் உள்ள சரனாத் என்ற பகுதியில் நிகழ்த்தினார். அவரது போதனைகள் அவர் வாழ்ந்த காலத்திலும் எழுதப்படவில்லை. அவர் மறைந்து பல நூற்றாண்டுகள் வரையும் எழுதப்படவில்லை. புத்த மதத்தில் சில கிளைகள் ஏற்பட்டதற்கு அது முக்கிய காரணம். தற்போது பெளத்த மதத்தில் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு ஒன்று தேரபதா பிரிவு அது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. மற்றொன்று மகாயானம் இந்த பிரிவு திபெத், சீனா, வடஆசியா ஆகியவற்றில் செழித்தோங்கியது.
ஆசையே துன்பத்திற்கு காரணம், அறியாமையும் சாதிப் பிரிவுகளுமே துன்பம் அனைத்திற்கும் காரணம் என்பதுதான் புத்தரின் அடிப்படை போதனை. பண்பால் ஒரு மனிதன் மதிப்பிடப்பட வேண்டுமே அன்றி பிறப்பால் அல்ல பிறக்கும் போதே எவரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிறப்பதில்லை அவனவன் செய்கையாலயே அது நிர்ணயிக்கப்பட வேண்டும் என புத்தர் வலியுறுத்தினார். கிட்டதட்ட 80 ஆண்டுகள் வாழ்ந்து பல அறிய போதனைகளை தந்த புத்தர் கி.மு 483 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் உள்ள குஸி நகர் என்ற இடத்தில் காலமானார்.
புத்தர் பிறந்தது, ஞானம் அடைந்தது, இவ்வுலக வாழ்வை நீத்தது அனைத்துமே ஒரே தினத்தில்தான். அதாவது மே மாதத்தின் பெளர்னமி தினத்தில்தான் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தான் விசாக தினத்தை பெளத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
_ *எல்லா மதங்களும், சமயங்களும் புத்தம் சொன்ன அன்பைதான் போதிக்கின்றன. அன்பு என்பதே தெய்வமானது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. இன்றைய அவசர உலகில் அன்பு செலுத்த மறவாதோருக்கும், அன்பை போற்றி வளர்ப்போருக்கும் வானம் வசப்படும் என்பதுதான் எல்லா மதங்களும் கூறும் அடிப்படை உண்மையாக இருக்கும்.எனவே நாமும் எல்லா உயிர்களிடமும் தொடர்ந்து அன்பு செலுத்துவோம் அதன்மூலம் நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்துவோம். * _
(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
_ _* _ **பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்._ * _**_
_ _* _ **_ __ *_ வாழ்க வளமுடன்****_
_ _* **என்றும் நட்புடன்_ ***_
_ _* *_ _உங்கள். மாணவன்_ _*_ *_