/ வரலாற்று … /
  1. சார்லஸ் …

22. சார்லஸ் டார்வின் ( பரிணாமவியலாரின் தந்தை)

22. சார்லஸ் டார்வின் ( பரிணாமவியலாரின் தந்தை)

2012-02-12T11:51:00.000+08:00

வணக்கம் நண்பர்களே,
இன்று (12/02/2012) பிப்ரவரி-12-ஆம் நாள் “பரிணாமவியலாரின் தந்தை” என்று போற்றப்படும் சார்லஸ் டார்வின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாற்றுப்பதிவு ஒரு சமர்ப்பனம்!.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த இனம் தமிழினம் என்ற சொற்றொடரை நம்மில் பலர் கேட்டிருப்போம். கல் தோன்றுவதற்கு முன்பே மனிதன் தோன்றி விட்டான் என்பது கேட்பதற்கு சற்று அபத்தமாக இருந்தாலும் தமிழினம் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை எடுத்துக்கூற அப்படிப்பட்ட ஒரு மிகையான சொற்றொடர் உருவாக்கப்படிருக்கலாம். சரி கல்லும், மண்ணும் கிடக்கட்டும் மனிதன் எப்படி தோன்றினான் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்தது உண்டா? ஏதாவது ஒரு காலகட்டத்தில் எல்லோருக்கும் உதிக்கும் ஒரு கேள்விதான் அது. கிட்டதட்ட எல்லா மதங்களும் கடவுள்தான் மனிதனை படைத்தார் என்கின்றன. எனவே மத நம்பிக்கையற்ற சிறுபான்மையினரைத் தவிர்த்து உலகின் பெரும்பான்மையினர் தங்களை கடவுளின் படைப்பு என்று அன்றும் நம்பினர், இன்றும் நம்புகின்றனர்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்பபட்டு வந்த அந்த சித்தாந்தத்தை தூக்கி எறிந்தது இன்னொரு சித்தாந்தம் 1859 ஆம் ஆண்டு. “குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்” ஆறு நாட்களில் கடவுள் மனிதனை படைத்தார் என்ற பைபிளின் கூற்றை நம்பியிருந்த இங்கிலாந்து தேசத்தில் மனிதன் குரங்கிலிருந்துதான் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற புரட்சிகரமான அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ஒருவரைத்தான் நாம் இன்று தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் பரிணாம வளர்ச்சி சித்தாந்தத்தின் தந்தை எனப் போற்றப்படும் சார்லஸ் டார்வின். 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் இங்கிலாந்தின் Shrews-bury என்ற நகரில் பிறந்தார் டார்வின். சிறு வயதிலேயே அன்னையை இழந்தார். அவரது தாத்தாவும் தந்தையும் மருத்துவர்களாக இருந்தவர்கள். அதனால் டார்வினையும் மருத்துவம் படிக்க எடின்பர்க் (University of Edinburgh) பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார் தந்தை.

சிறு வயதியிலிருந்தே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சென்ற பிறகும் அவர் கற்கள், செடிகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கினார். இயற்கையின்மீது அப்படி ஒரு ஈடுபாடு அவருக்கு. மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடப்பதை பார்க்க வேண்டிய கட்டாயம் டார்வினுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை இழந்தார் அவர். தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்து அவரை natural theology அதாவது இறையியல் பயிலுமாறு ஆலோசனை கூறினார். அதனை ஏற்று கேம்ஃப்ரிட்ஜ் (University of Cambridge) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் டார்வின்.

தமது 22-ஆவது வயதில் இறையியலில் பட்டம் பெற்றார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் துறையில் பேராசிரியராக இருந்த John Stevens Henslow என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின். அவர் மூலமாக கேப்டன் Robert FitzRoy என்பவரின் நட்பு கிட்டியது. தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் Robert FitzRoy-யின் தலமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர். ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணம்தான் பரினாம வளர்ச்சி சித்தாந்தம் உருவாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது. அந்தப் பயணத்தைத் தொடங்கியபோது டார்வினுக்கு வயது 22.

ஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல் Brazil, Rio de Janiro, Mondivideo, Falkland Island, Galapagos Island, Hobart, Newzealand என உலகையே ஒரு வலம் வந்தது. பல இடரும், இன்னல்களும் நிறைந்ததாக அந்த பயணம் அமைந்தது. ஆனால் இயற்கையின் மீது இருந்த அளவிடமுடியாத ஈடுபாட்டால் டார்வினுக்கு அது பெரும் துன்பமாக படவில்லை. சென்ற இடத்தையெல்லாம் கூர்ந்து ஆராய்ந்த டார்வின் அதுவரை அறியப்படாத பல விநோதமான விலங்குகளின் எலும்புகளை சேகரித்தார். ஊர்வன, நடப்பன, பறப்பன என எல்லாவித உயிரினங்களையும் ஆராய்ந்தார். அவை இடத்துக்கு இடம் மாறுபட்டிருப்பதையும், சில ஒற்றுமைகளை கொண்டிருப்பதை கண்டு வியந்தார் டார்வின். உயிரினங்கள் அனைத்துமே பொதுவான மூதாதையர்களின் வழிதோன்றல்களாக இருக்குமா என்பதும் அவை தொடர்ச்சியாக சிறு சிறு மாற்றங்களைப் பெற்று தற்போதைய வளர்ச்சியை பெற்றிருக்கின்றனவா? என்பதுதான் டார்வினின் கேள்வியாக இருந்தது.

தான் சேகரித்த சில எலும்புகளுக்கு சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்று பகுத்தறிந்தார். கெலபகஸ் (Galapagos Island) தீவுகளில் புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயித்தார். இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1836-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார் டார்வின். ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும், ஆய்வுகளையும் வைத்து அவர் The voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார். தமது 30-ஆவது வயதில் Emma Wedgwood என்ற உறவுக்காரப் பெண்ணை மணந்து கொண்டு ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் டார்வின். திருமணத்திற்கு பின்பும் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.

புதிய உயிரினங்கள் உருவாகும் முறை, பின்னர் அவை தங்களின் மூலத்திலிருந்து முழுமையாக மாறி விடுவதன் காரணங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து 1859-ஆம் ஆண்டு உலகை வியப்பில் ஆழ்த்திய தனது புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். " *The Origin of Species by Natural Selection" * அதாவது இயற்கையில் உயிரினங்களின் தோற்றம் என்ற அந்த புத்தகம் கூறிய சித்தாந்தம்தான் பரிணாம வளர்ச்சி சித்தாந்தம். அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும் என்று கூறினார் டார்வின். அதை *Natural Selection * என்றும் “survival of the fittest” என்றும் அவர் விளக்கினார். ஆனால் அந்த சித்தாந்தத்தின் விளைவை உலகம் அப்போது உணரவில்லை. செடிகொடிகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமே அது பொருந்தும் என்றுதான் நம்பியது. டார்வின்கூட மனிதனைப் பற்றி புத்தகத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.

பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்த வேண்டும் என்பதை உலகம் உணரத் தொடங்கியபோது நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா? என்ற கேள்வி எழுந்தது. டார்வின் அப்படி நேரடியாக சொன்னதில்லை நம்பியதுமில்லை. ஆனால் அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கினர். எதிர்பார்க்கப்பட்டது போலவே தேவாலயங்களின் கண்டனத்துக்கு உள்ளானது டார்வினின் சித்தாந்தம். அவர் வாழ்ந்த போதே அவரது “The Origin of Species” என்ற நூல் உலகம் முழுவதும் பதிக்கப்பட்டது. கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

டார்வின் பரிணாம கோட்பாடு மூன்று அம்சங்களைக் கொண்டது.

1. மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது)

2. மரபு வழி (ஒத்த உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குஎடுத்துச் செல்லும் ஆற்றல்)

3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச்சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப் பெருக்க முறைகளை தீர்மானித்துஉயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது)

இதைத்தான் இன்றைய நாகரீக, விஞ்ஞான உலகம் அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் மகிமைப் பற்றி நமக்கு விளக்கம் தருகிறது. இதை நவீன டார்வினியம் என்கிறார்கள். இதன் விளக்கம் என்பது, ஜீவ போராட்டம் என்பது தனித்தனியான பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல; தன் இனத்தை உற்பத்தி செய்து இனவிருத்தி செய்யும் (குணம்,உடல்வாகு, நிறம், திறமை, அறிவு இவையும் உள்ளடங்கும்) சக்தியைப் பொறுத்ததாகும் என்பது தான். “வலுவுள்ளது வாழ்கிறது, மெலிந்தது வீழ்கிறது” என்கிற இவரின் பரிணாம தத்துவத்தை சிலர் அவர் காலத்திலேயே கேலி செய்தார்கள்.

_“உலகை கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்”. _

மனுகுல மூதாதையரின் முகவரியை உலகிற்குக் காட்டிய முன்னோடி, அறிவு ஒளி 1882-ஆம் ஆண்டு ஏப்ரல்19-ஆம் தேதி அடங்கிப் போனார். இங்கிலாந்தில் விஞ்ஞானிகளின் கார்னர் என்று சொல்லப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் எபியில் (Westminster Abbey) டார்வினின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற பிரச்சனையில் அவர் எப்போதும் ஈடுபட்டதே இல்லை. அப்படி ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்றார். மனிதன் பிறப்பது வாழ்வதற்காக, அது தேவை! அவரின் கண்டுபிடிப்பான பரிணாம கோட்பாட்டிற்கும், மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும், ஏன் மதம் இதில் மூர்க்கமாகத் தலையிடுகிறது என்பதும் தான் அவரின் உரத்தக் கேள்வியாக இருந்தது.

கடவுள் நம்பிக்கை மனிதனின் மனதில் இயற்கையாகத் தோன்றுவதில்லை. அது மனிதனின் அறிவு வளர வளர உண்டானது, இதை வேறு வகையில் சொல்வதென்றால் மனிதனின் வியப்பும், இரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும், கற்பனைத் திறனும் அதிகரிக்க அதிகரிக்க அவனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டானது என்றார்!.

டார்வினின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு குரங்கிலிருந்துதான் நாம் தோன்றினோம் என்று நீங்கள் நம்பினாலும் சரி, இல்லை அது அபத்தமான கருத்து என்று புறம் தள்ளினாலும் சரி ஒன்றை மட்டும் நாம் மறுக்க முடியாது, வரலாற்றாலும் புறக்கணிக்க முடியாது. உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய மனுகுல அறிவை விருத்தி செய்ததில் டார்வின் என்ற தனி ஒரு மனிதன் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார் என்பதுதான் அந்த உண்மை!.

காண்பனவற்றில் உண்மையைத் தேடும் ஆர்வம், புரியாதவற்றையும் அணுக்கமாக ஆராயும் பொறுமை, மத நம்பிக்கையின் ஆணி வேரையே அசைக்கும் என்றும் தெரிந்தும் தாம் உண்மை என்று நம்பியவற்றை அச்சமின்றியும், தயங்காமலும் உலகுக்கு சொன்ன துணிவு. இவைதான் டார்வின் என்ற மாமனிதனுக்கு வானம் வசப்பட்டதற்கான காரணங்கள். அவருக்கு இருந்த ஆர்வம், பொறுமை, துணிவு, தன்னம்பிக்கை ஆகிய பண்புகள் நமக்கு இருந்தால் நாம் விரும்பும் வானம் நிச்சயம் நமக்கும் தயங்காமல் வசப்படும்!.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

வாழ்க வளமுடன்

என்றும் நட்புடன்

உங்கள். மாணவன்

அடுத்த பக்கம்