- சார்லஸ் …
23. சார்லஸ் டிக்கென்ஸ்
23. சார்லஸ் டிக்கென்ஸ்
2012-02-06T19:44:00.000+08:00
நாம் உயர்நிலைப்பள்ளியில் பயின்றபோது ஆங்கில பாடத்தில் Oliver Twist என்ற நாவலை மறந்திருக்க முடியாது. குடும்ப ஏழ்மையின் காரணமாக சிறு வயதிலேயே குழந்தைத் தொழிலாளியாக மாறி ஒரு சிறுவன் படும் இன்னல்களை சித்தரிக்கும் ஓர் அற்புத நாவல் அது. ஆலிவர் ட்விஸ்ட் என்ற அந்த கதாபாத்திரமும் அந்த நாவலும் தத்ரூபமாக அமைந்ததற்கு முக்கிய காரணம் அந்த கதாசிரியர் தனது சொந்த அனுபவங்களை எழுதியிருப்பதுதான். பொதுவாக கற்பனைக் கதைகளைக் காட்டிலும் அனுபவக் கதைகளுக்கு வீரியம் அதிகமாக இருக்கும். அப்படி வீர்யமிக்க பல இலக்கிய படைப்புகளைத் தந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒரு எழுத்தாளரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.
ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இரண்டாவது உயர்ந்த நிலையை அவருக்கு தந்திருக்கிறது ஆங்கில இலக்கிய உலகம். ஆம் அவர்தான் உலகபுகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கென்ஸ். 1812-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி இங்கிலாந்தின் Portsmouth என்ற இடத்தில் பிறந்தார் டிக்கென்ஸ். ஏழ்மையான குடும்பம் அவரது தந்தை ஜான் டிக்கென்ஸ் கப்பலில் ஓர் எழுத்தராக பணிபுரிந்தார். வரவுக்கு மீறி செலவு செய்யும் பழக்கம் அவருக்கு இருந்ததால் கடன் தொல்லை காரணமாக அவர் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. அப்போது சார்லஸ் டிக்கென்ஸ்க்கு வயது பனிரெண்டுதான். அதுவரை பள்ளியில் நன்கு பாடம் படித்து சார்லஸ்க்கு அதன்பிறகு கல்வியைத் தொடர முடியாத நிலை. அவர் விரும்பி படித்து பாதுகாத்து வந்த கதைப் புத்தகங்களையும், அவருடைய படுக்கையையும்கூட விற்று பணம் சேர்க்க நிலை ஏற்பட்டது.
தந்தை சிறைக்குச் சென்றவுடன் சார்லஸை பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்த்தார் தாயார். பள்ளிக்கூடம் என்றால் கொள்ளைப் பிரியமாக இருந்த சார்லஸ்க்கு குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு வந்ததால் வேறு வழியின்றி வேலை செய்தார். அப்போது அவருக்குக் கிடைத்த சம்பளம் வாரத்திற்கு ஆறு சிலிங்குகள் (Shillings) . அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்தபோது மிகுந்த சிரமங்களை அனுபவித்தார் சார்லஸ். எலிகள் நிறைந்த ஒரு பழைய கட்டடத்தில் அந்த தொழிற்சாலை அமைந்திருந்தது. சின்ன சிறிய நெஞ்சங்களில் காயங்களை ஏற்படுத்தும் அளவுக்கு அங்கு வாழ்க்கை சிரமமாக இருந்தது. அந்த பிஞ்சு வயதில் தான் பட்ட சிரமங்களை எண்ணி அவர் பின்னாளில் நிறைய எழுதினார். அப்படி அவர் எழுதிய பிரபலமான நாவல்தான் Oliver Twist.
சில மாதங்களுக்குப் பிறகு அவர் அந்த வேலையை விட்டு விட்டு மீண்டும் பள்ளியில் சேர்ந்தார். புதிய பள்ளியில் அவர் சிறிய கதைகளை எழுதி தன் நண்பர்களிடம் காட்டுவார், சிறு வயதிலேயே அவருக்கு கதைகள் எழுதுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. பள்ளியில் மொழி சம்பந்தபட்ட நடவடிக்கைகளுக்கு அவர் மாணவர் தலைவரானார். பதினைந்தாவது வயதில் ஒரு சட்ட நிறுவனத்தில் அவர் ஒரு எழுத்தராக பணிக்கு சேர்ந்து சட்ட நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். பிறகு The Morning Chronicle, Mirror of Parliament, Joe son போன்ற செய்தித்தாள்களில் நிருபராக பணிபுரிந்தார். நாடாளுமன்ற நிருபராகவும் சிலகாலம் பணிபுரிந்தார். 1837-ஆம் ஆண்டு முதல் 1839 வரை The Pickwick Papers என்ற தலைப்பில் ஒரு சஞ்சிகையில் தொடர் கட்டுரைகளை எழுதினார். அந்தக் கட்டுரைகள் அவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்தன.
ஆங்கில உலகில் அடுத்த வார இதழ் எப்போது வரும் என்று பலரை எதிர்பார்க்க வைத்த முதல் எழுத்தாளர் சார்லஸ் டிக்கென்ஸ்தான். அதன் பிறகு அவரது எழுத்துல வாழ்க்கை பிரகாசமானது முழுநேர நாவலாசிரியானார். Oliver Twist, Nicholas Nickleby, Barnaby Rudge, A Christmas Carol, Martin Chuzzlewit, A Tale of Two Cities, David Copperfield, Great Expectations போன்ற புகழ்பெற்ற சமூக மற்றும் வரலாற்று நாவல்களை அவர் எழுதினார். ஆங்கில இலக்கிய உலகில் ஷேக்ஸ்பியரை தவிர்த்து நினைவில் நிற்கும் பல உன்னத கதாபாத்திரங்களை உருவாக்கியவர் சார்லஸ் டிக்கென்ஸ் மட்டுமே. சார்லஸ் டிக்கென்ஸின் படைப்புகள் ஆங்கில இலக்கிய உலகின் நிரந்தர கருவூலங்களாக கருதப்படுகின்றன.
விறுவிறுப்பான கதையொட்டமும், சுவாரசியமான நகைச்சுவையும், தரமான வசனநடையும், உயிரோட்டமுள்ள கதாபாத்திர அமைப்பும் சார்லஸ் டிக்கென்ஸ் எழுத்தின் பலங்கள். எளியவர்களின் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் துயரங்களை அவர் தத்ரூபமாக எடுத்துக்கூறுவதில் வல்லவர். அதனால்தான் தான் வாழ்ந்த காலத்தில் அனைவராலும் மிகவும் விரும்பபட்ட ஒரு நாவலாசிரியராக விளங்கினார். எழுத்துலகில் பிரபலமடைந்ததும் தம் நூல்களை அறிமுகப்படுத்த அவர் பல நாடுகளுக்கு பயணம் செய்தார். 1842-ல் கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் சென்ற அவர் அங்கு அனைத்துலக பதிப்புரிமைக்காகக் குரல் கொடுத்தார். ஏனெனில் அவரது புத்தகங்களை அனுமதியின்றி அச்சடிப்பதில் அமெரிக்கப் பதிப்பகங்கள் ஈடுபட்டிருந்தன. அதனைத் தவிர்த்து அமெரிக்காவில் அடிமைத்தலையை அகற்றுவதற்கும் அவர் குரல் கொடுத்தார்.
தமது 38-ஆவது வயதில் Household Words என்ற வாரப்பத்திரிகையைத் தொடங்கி அதன் ஆசிரியராக செயல்பட்டார். ஒன்பது ஆண்டுகள் கழித்து All the Year Round என்ற மற்றொரு பத்திரிகையைத் தொடங்கி இறக்கும் வரை அதன் ஆசிரியராக இருந்தார். 1865- ஆம் ஆண்டு பார்ஸுக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்த போது கடுமையான இரயில் விபத்தில் சிக்கிக்கொண்டார் டிக்கென்ஸ். அந்த விபத்தில் உடல் வலிமை குன்றிப்போனார். அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் தமது புத்தகங்களை பிரபலபடுத்த அமெரிக்கா சென்றார். அது வெற்றிகரமான பயணமாக அமைந்தாலும் அவரது உடல்நிலை இன்னும் மோசமானது. 1870-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி தமது 58-ஆவது வயதில் இவ்வுலகை விட்டு விடைபெற்றுக்கொண்டார். இறந்தபிறகு தமது உடல் சாதாரண இடுகாட்டில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அவரது விருப்பத்திற்கு எதிராக அவரது உடல் புகழ்பெற்ற Westminster Abbey-யில் Poets Corner என்ற பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
ஆங்கில இலக்கிய உலகம் கொண்டாடும் சார்லஸ் டிக்கென்ஸ் என்ற நாவலாசிரியர் மிகச்சிரமமான பிள்ளைப் பருவத்தையும், ஏழ்மையையும் சந்தித்ததோடுகுழந்தைத் தொழிலாளி என்ற அவலத்தையும் சுமந்து வந்தவர். அவருக்கு ஏற்பட்ட வடுக்களையும், ரணங்களையும், வலிகளையும் எழுத்தாக மாற்றி இலக்கிய உலகில் உயர்வு கண்டவர். சோதனைக்குள்ளாகும்போது சோர்ந்து போனால் சாதனைகளைப்பற்றி நினைத்துகூட பார்க்க முடியாது என்ற உண்மையைத்தான் அந்த இலக்கிய பிரம்மாவின் வாழ்க்கை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது. அதைத்தான் கவிஞர் பா.விஜய் இவ்வாறு கூறுகிறார். *“இழப்பு என்பது எதுவுமே இல்லை உன் நம்பிக்கை உன்னிடம் உள்ள வரை” * வாழ்க்கையில் நம்பிக்கையோடு எதிர்நீச்சல் போடும் எவருக்கும் சார்லஸ் டிக்கென்ஸ்க்கு வசப்பட்டதைப் போன்று நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்!.
(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்