/ வரலாற்று … /
  1. ஜொஹானேஸ் …

32. ஜொஹானேஸ் குட்டன்பெர்க் (அச்சியந்திரம் உருவான கதை)

32. ஜொஹானேஸ் குட்டன்பெர்க் (அச்சியந்திரம் உருவான கதை)

2012-10-09T11:38:00.003+08:00

புத்தகங்கள் நம் அறிவுக்கண்ணை திறக்கும் திறவுகோல்கள் என்றார் ஓர் அறிஞர். பல்வேறு புத்தகங்களை வாசிக்க வாசிக்கத்தான் மனுக்குலத்தின் அறிவு வளர்கிறது ஆற்றல் பெருகுகிறது. புத்தகங்கள் இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அப்படி ஒரு காலம் இருந்து வந்தது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை புத்தகங்கள் என்பது ஓர் அறிய பொருளாக இருந்தது. ஒரு புத்தகத்தில் ஒரு பிரதி மட்டும்தான் இருந்தது. அதுவும் கைகளால் எழுதப்பட்டு செல்வந்தர்கள் மட்டுமே வைத்துக்கொள்ள கூடியதாக இருந்தது. அதனைப்பார்த்து ஒரு வரலாற்று நாயகர் சிந்திக்கத் தொடங்கினார். செல்வந்தர்கள் மட்டும்தான் புத்தகங்கள் வைத்துக்கொள்ள முடியுமா? ஒரு புத்தகத்தை அப்படியே பிரதி எடுத்து பல புத்தகங்களாக உருவாக்கினால் எல்லோராலும் புத்தகங்களை வைத்துக்கொள்ள முடியுமே என்று சிந்தித்தார். சிந்தித்தொடு நின்று விடாமல் செயலிலும் இறங்கினார்.

தனி ஒரு மனிதனின் வேட்கையாலும், உழைப்பாலும், வியர்வையாலும், விடாமுயற்சியாலும் உலகுக்குக் கிடைத்த அருங்கொடைதான் அச்சியந்திரம். இதுவரை நிகழ்த்தப்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகளில் ஆக பிரசித்தியும், முக்கியத்துவமும் வாய்ந்தது அச்சியந்திரம்தான் என்று பல வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர் அவர்களின் கூற்று உண்மையானதுதான். ஏனெனில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் புத்தகங்கள் உருவாகின. நூலகங்கள் பெருமளவில் தோன்றத் தொடங்கின. உலக மக்களுக்கு அறிவையும், தகவலையும் கொண்டு சேர்க்கும் பணி எளிதானது. ஒட்டுமொத்தத்தில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஐந்து நூற்றாண்டுகளில் உலகம் பல துறைகளில் அபரிமித வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அந்த பெருமைக்கு சொந்தக்காரரைத்தான் நாம் சந்திக்கவிருக்கிறோம். அவர் பெயர் ஜோகேன்ஸ் குட்டன்பெர்க் (Johannes Gutenberg).

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் என்பதால் குட்டன்பெர்க்கைப் பற்றிய குறிப்புகள் துல்லியமாக தெரியவில்லை. அநேகமாக அவர் 1398-ஆம் ஆண்டு அல்லது 1399-ஆம் ஆண்டு பிறந்தார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஜெர்மனியின் Mainz என்ற நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார் குட்டன்பெர்க். ஆரம்பம் முதலே குட்டன்பெர்க்கிற்கு வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது. ஆனால் அப்போதிருந்த புத்தகங்கள் இப்போது இருப்பவை போன்றவை அல்ல. கைகளால் எழுதப்பட்டவை அவற்றை புத்தகங்கள் என்று சொல்வதை விட Menu scripts அதாவது எழுத்துப்படிவங்கள் என்று சொல்லலாம். அவை கிடைப்பதற்கும் அரிதானவை. அவர் வளர்ந்து வந்த சமயத்தில் புத்தகங்களை அச்சடிக்கும் ஒரு புதிய முறை அறிமுகமானது அது அச்சுப்பால அச்சுமுறை (Block printing). ஒரு மரப்பலகையில் ஒவ்வொரு எழுத்தாக செதுக்கி எழுத்துகள் எழும்பி நிற்கும்படி செய்ய வேண்டும். பின்னர் அந்த எழுத்துகளில் மை தடவி அவற்றை தாளில் அழுத்தினால் ஒரு பக்கம் அச்சாகும்.

இந்த முறையில் ஒரே பக்கத்தைப் பல பிரதிகள் அச்சிடலாம். ஆனால் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பலகை செய்தாக வேண்டும். அதற்கு அதிக நேரம் பிடிக்கும் அவற்றை வேறு பக்கங்களுக்கும் பயன்படுத்த முடியாது. எனினும் கைகளால் எழுதுவதைக் காட்டிலும் அச்சுப்பால அச்சுமுறை வேகமானதுதான். புதிய முறையில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும், எழுத்துப் படிவங்களையும் படிப்பதில் குட்டன்பெர்க்கிற்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அவற்றையும் செல்வந்தர்களால்தான் வைத்துக்கொள்ள முடிந்தது. எல்லோரும் வைத்துக்கொண்டு படிக்கும்படி புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். ஒரு பாழடைந்த கட்டடத்தின் ஓர் அறையை சுத்தம் செய்து விட்டு அங்கு ரகசியமாக பரிசோதனைகள் செய்யத் தொடங்கினார். அதிகாலையிலேயே வீட்டை விட்டு வெளியேறுபவர் இரவுதான் திரும்புவார்.

குட்டன்பெர்க் எங்கு செல்கிறார்? என்ன செய்கிறார்? என்பது எவருக்கும் தெரியாது. யார் என்ன சொன்னாலும் நினைத்தாலும் பரவாயில்லை என்று தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். பலமுறை அவர் சோர்ந்தும், ஊக்கமிழந்தும் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் தோல்வியையே சந்தித்தார். கைவசம் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது. அப்போதுதான் செல்வந்தரான Johann Fust என்பவரின் நட்பு அவருக்கு கிடைத்தது. அச்சியந்திரத்தை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட Fust குட்டன்பெர்க்கிறகு தேவையான பணம் கொடுத்து உதவினார். புதிய உற்சாகத்துடன் தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கிய குட்டன்பெர்க் பல முயற்சிகளுக்குப் பிறகு Movable type எனப்படும் இயங்கக்கூடிய எழுத்துருவை உருவாக்கினார். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சு என்று உருவாக்கினால் அவற்றை வேண்டிய மாதிரி தேவைகேற்ப மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதை கண்டறிந்தார். பின்னர் பலகைக்குப் பதில் உலோகத்தாலான அச்சு சிறந்தது என்பதையும் கண்டறிந்தார்.

தாம் கண்டுபிடித்த முறையைக் கொண்டு லத்தீன் மொழியில் பைபிளை அச்சடிக்கும் பணியைத் தொடங்கினார். 1455-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள் நவீன அச்சு முறையில் உருவான உலகின் முதல் புத்தகம் உருவானது. லத்தீன் மொழியில் இரண்டு தொகுதிகளில் பைபிள் வெளியானது. ஒவ்வொன்றும் 300 பக்கங்கள் கொண்டது ஒவ்வொரு பக்கத்திலும் 42 வரிகள் இருக்கும். குட்டன்பெர்க் கண்டுபிடித்த அச்சு முறையில் உருவானது என்பதால் அது குட்டன்பெர்க் விவிலியம் (Gutenberg Bible) என்றே அழைக்கப்பட்டது. அந்த முறையில் 200 பிரதிகள் வரை அச்சிடப்பட்டிருக்கலாம் என்று ஒரு குறிப்பு கூறுகிறது அவற்றில் தற்பொழுது 22 பிரதிகள் எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது. அந்த பைபிள் புத்தகத்தின் ஒரு பக்கம் விற்பனைக்கு வந்தால்கூட அது நூறாயிரம் டாலர் வரை விலை போகும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.

1455-ஆம் ஆண்டில் Bamberg புத்தக சந்தையில் தாம் அச்சிட்ட பைபிள் பிரதிகளை 300 florins-க்கு விற்றார் குட்டன்பெர்க். அது அப்போதைய ஒரு குமாஸ்தாவின் மூன்று ஆண்டு சம்பளத்திற்கு சமம். அனால் கையால் எழுதப்பட்ட பைபிளின் விலையை விட அது குறைவுதான். இதில் ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் அந்தக்காலகட்டத்தில் ஒரு பைபிளை கையால் எழுதி முடிக்க ஒருவருக்கு 20 ஆண்டுகள் வரை தேவைப்படுமாம். புத்தக சந்தையில் கிடைத்த பணம் பெரிய தொகை இல்லை என்பதால் தான் கடன் வாங்கிய பணத்தை குட்டன்பெர்க்கால் திருப்பித்தர இயலவில்லை. பொறுமையிழந்த Fust குட்டன்பெர்க்கின் மீது வழக்குத் தொடர்ந்தார். தனக்கு சேர வேண்டிய பணத்திற்காக நீதிமன்றத்தின் துணையுடன் குட்டன்பெர்க்கின் அச்சு இயந்திரத்தை அப்படியே அபகரித்துக் கொண்டார்.

உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்தும் அதிலிருந்து எந்தவித பலனையும் பெறாமல் ஏழ்மையில் இறந்து போனார் குட்டன்பெர்க் என்பதுதான் வேதனையான உண்மை. 1468-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் இயற்கை எய்திய அவர் ஒரு Franciscan தேவலாயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அந்த தேவலாயம் இரண்டு முறை இடிக்கப்பட்டது இப்போது அவர் புதைக்கப்பட்ட இடம் எது என்பது கூட சரிவரத் தெரியவில்லை. கடந்த 500 ஆண்டுகளில் உலகம் சந்தித்திருக்கும் பல மாற்றங்களுக்கு அடிப்படையான ஒரு கண்டுபிடிப்பு அந்த அச்சு இயந்திரம்தான். புத்தகங்களை விரைவாக பல பிரதிகள் எடுக்க முடியும் என்பதால் உலகம் முழுவதும் புத்தகங்கள் பரவத் தொடங்கின. கிறிஸ்துவ மதத்தில் frattances கிளைகள் உருவானதற்கும் ஒருவகையில் குட்டன்பெர்க்தான் காரணம் என்கின்றனர் வரலாற்று வல்லுனர்கள். ஏனெனில் அதுவரை சமயத்தலைவர்களிடம் மட்டுமே இருந்த பைபிள் சாமானியர்கள் கைகளிலும் தவழத் தொடங்கியது.

சிலர் பைபிளின் கருத்துகளை வெவ்வேறு விதமாக புரிந்துகொள்ள முற்பட்ட போது frattances கிளைகள் தோன்றத் தொடங்கின. இதைத்தவிர்த்து இன்னொன்றையும் வரலாறு சுட்டிக்காட்டுகிறது. குட்டன்பெர்க் இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் ஐரோப்பாவும், சீனாவும் தொழில்நுட்பத் துறையில் சரி நிகராகவே முன்னேறியிருந்தன. அச்சியந்திரம் வந்த பிறகு அதனை பரவலாக பயன்படுத்தத் தொடங்கிய ஐரோப்பா எல்லாத் துறைகளிலும் அபரிமித வளர்ச்சிக் காணத் தொடங்கியது. ஆனால் பழைய அச்சுப் பாலமுறையையே தொடர்ந்துப் பின்பற்றிய சீனா பல துறைகளில் பின்தங்கிவிட்டது. இந்த ஒரு சான்றே போதும் உலக வரலாற்றில் குட்டன்பெர்க்கின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை பறைசாற்ற .

குட்டன்பெர்க்கின் எளிய வாழ்க்கை நமக்கு கூறும் பாடமும் எளிதானதுதான். அவர் பல தோல்விகளை சந்தித்த பிறகுதான் உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்ய முடிந்தது. இன்று நம் கைகளில் தவழும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் நாம் குட்டன்பெர்க்கிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். தோல்விகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால் கடந்த ஐந்து நூற்றாண்டின் உலக வரலாறே மாறிப்போயிருக்கும். தோல்விகளைக் கண்டு துவண்டுபோகாமல் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடருவோருக்குதான் வரலாறும் இடம் தரும் அவர்கள் விரும்பிய வானமும் வசப்படும்.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

அடுத்த பக்கம்