- புளோரன்ஸ் …
46. புளோரன்ஸ் நைட்டிங்கேல் (The Lady with the Lamp)
46. புளோரன்ஸ் நைட்டிங்கேல் (The Lady with the Lamp)
2013-07-06T13:47:00.000+08:00
மரணம் எவருக்குமே மகிழ்ச்சியை கொண்டு வருவதில்லை. மரணத்தை தள்ளிப் போடவோ அல்லது தடுக்கவோ ஒரு துறையால் முடியுமென்றால் அது மருத்துவதுறைதான். அதனால்தான் மருத்துவர்களை சிலசமயம் கடவுளுக்கு நிகராக ஒப்பிட்டு பார்க்கின்றனர் மரணவாயில் வரை சென்று திரும்பியோரும் அவர்களது குடும்பத்தினரும். மருத்துவர்களுக்கு கிடைக்கும் அந்த கெளரவம் அவர்களுக்கு உறுதுணையாய் இருக்கும் தாதியர்களுக்கு கிடைக்கிறதா? என்பது கேள்விக்குரிய ஒன்றுதான். ஆனால் ஆயிரமாயிரம் தன்னலமற்ற தாதியர்களை இந்த உலகம் சந்தித்திருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அந்த தாதியர்களுக்கெல்லாம் முன்னொடியாக விளங்கிய ஒரு அதிசய நங்கையைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.
விளக்கேந்திய நங்கை என்று அழைக்கப்படும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) இத்தாலியின் புளொரன்ஸ் (Florence) நகரில் 1820 ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் நாள் பிறந்தார். அவரது பெற்றோர் பெரும் செல்வந்தர்கள். சமூக மற்றும் அரசியல் தலைவர்களிடம் நெருக்கமான தொடர்பு கொண்டவர்கள். தங்களைப்போலவே தங்கள் இளைய மகளும் செளகரியமான செல்வம் கொழிக்கும் வாழ்க்கை வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஆனால் சுகபோக வாழ்க்கையில் நாட்டம் இல்லாத புளோரன்ஸ் தன் வாழ்நாளில் மனுகுலத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே கனவு கண்டார்.
பெற்றோர் ஆரம்பத்தில் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தாலும் புளோரன்ஸின் உயரிய கொள்கைக்கு முன் அவர்களின் எதிர்ப்பு இருந்த இடம் தெரியாமல் போனது. தமது 31-ஆவது வயதில் தனது குடும்பத்தின் செல்வத்தையும், சுகபோகங்களையும் துறந்து நோயாளிகளையும், போரில் காயமடைந்தவர்களையும் கவனித்து கொள்ளும் தமது நீண்ட நாள் விருப்பத்தை நோக்கி புறப்பட்டார். இங்கிலாந்தை பொருத்தமட்டிலும் அந்தக்காலத்தில் தாதிமை தொழில் என்பது பலர் அருவெறுத்து ஒதுக்கிய ஒரு துறையாக இருந்தது. சமூகத்தின் விரும்பதகாத பிரிவுகளை சேர்ந்தவர்கள்தான் தாதியராக பணியாற்ற முன்வந்தனர்.
தாதிமை பயிற்சி என்ற ஒன்று அப்போது கிடையாது. தாதியர்களுக்கான சம்பளமும் கூலிகளுக்கு கிடைப்பதைவிட குறைவாக இருந்தது. படிப்பறிவு இல்லாதவர்கள் சுத்தம் என்பதே என்னவென்று தெரியாதவர்கள், ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவோர் இவர்களைப்போன்றவர்கள்தான் தாதியர்களாக செயல்பட்டனர். இந்த துறையைத்தான் மாற்றி அமைக்க வேண்டும் என்று துணிந்தார் புளோரன்ஸ்.
ஜெர்மனியிலும், பிரான்ஸிலும் தாதியர்களுக்கான அடிப்படை பயிற்சியைப் பெற்றார். அந்த பயிற்சியை வைத்து அவர் பிரிட்டிஷ் மருத்துவமனைகளை மாற்றி அமைக்க முனைந்தார். ஜெர்மனியில் அவர் பயிற்சி பெற்ற போது தன்னைத்தானே வருத்திக்கொண்டார். அதிகாலை எழுந்து எல்லா பணிவிடைகளையும் செய்து எளிய உணவுகளை பகிர்ந்துகொண்டு தாதியர்களுக்கான விரிவுரைகளுக்கு சென்று வந்தார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மிக முக்கியமான அம்சங்கள் தூய்மையும், தூய்மையான காற்றும்தான் என்று நம்பினார் அவர். எனவே அந்தக்கால வழக்கத்திற்கு மாறாக காற்றோட்டமாக இருக்க வேண்டுமென்பதற்காக மருத்துவமனை கட்டடங்களில் பெரிய சன்னல்களை அமைக்க வற்புறுத்தினார். மேலும் தற்போதைய தாதிமை தொழிலில் உள்ள பெரும்பாலான நடைமுறைகளை அவர்தான் முதன்முதலில் சிந்தித்து செயல்படுத்தினார்.
அவரது சிந்தனைகளும், கோட்பாடுகளும் நாடு முழுவதும் பரவத்தொடங்கின. ஆனாலும் அவரது மாபெரும் தொண்டை உலகம் அறிய செய்ய ஒரு போர் தேவைப்பட்டது என்பதுதான் வரலாற்று உண்மை. 1854-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிரைமியன் போர் (Crimean War) வெடித்தது. போரில் படுகாயமடைந்தவர்களையும், உறுப்புகளை இழந்தவர்களையும் கவனிக்கும் முறை என்ற ஒன்றே அப்போது இல்லாமல் இருந்தது. போர் வீரர்களின் அவலநிலை நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்திய சமயம் அவர்களை எப்படி கவனித்து கொள்ளலாம் என்பதை செய்துகாட்ட புளோரன்ஸுக்கு அழைப்பு விடுத்தார் போர்க்கால நாடாளுமன்ற செயலாளர் அதனை ஏற்று இங்கிலாந்தின் விக்டோரியா ராணியும் அவருக்கு ஆசி வழங்கி அனுப்பினார்.
நவம்பர் 4-ஆம் தேதி போர் முகாமான Scutari-ஐ வந்தடைந்தார் புளோரன்ஸ். நாற்பது தேர்ந்தெடுக்கப்பட்ட தாதிகளுடன் அவர் தமது பணியைத் தொடங்கினார். நோயாளிகளை நிர்வகிப்பதில் அவர் வகுத்து தந்த திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. மிக கடுமையான ஒழுங்குமுறையை அடிப்படையாக கொண்டவை. அதனை பின்பற்ற தயங்கியோரும், செயல்படுத்த தவறியோரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். புளோரன்ஸின் அந்த இரும்புகர நடவடிக்கை அபரிமிதமான பலனைத் தந்தது. அவர் வருவதற்கு முன் 42 விழுக்காடாக இருந்த மரண விகிதம் குறைந்து இரண்டு விழுக்காடானாது.
ஒரு நாளுக்கு 20 மணி நேரம் வரை நோயாளிகளின் நலனில் செலவிட்டார் புளோரன்ஸ். திட்டங்களை வகுத்து தந்ததோடு மட்டுமின்றி சமைப்பது, மருத்துவகருவிகளை கழுவி சுத்தமாக்குவது, குப்பைகளை அகற்றுவது மற்றும் அனைத்து வேலைகளையும் அவர் கைப்படவே செய்தார். ஒவ்வொரு இரவும் அல்லது ஒவ்வொரு அதிகாலையிலும் கையில் ஒரு விளக்கை ஏந்தியபடியே எல்லா வார்டுகளையும் ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டு நோயாளிகள் அனைவரும் அமைதியாக உறங்குவதை உறுதி செய்த பிறகே அவர் உறங்க செல்வார். அதனால்தான் வரலாறு அவரை விளக்கேந்திய நங்கை (“The Lady with the Lamp”) என்று நினைவில் வைத்திருக்கிறது. நோயாளிகளின் வாழ்க்கையில் விளக்கேற்ற உதவியவர் என்ற இன்னொரு பொருளையும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.
தமது பணியை செம்மைப்படுத்திக்கொள்ள அவர் மூன்று முறை போர் முனைக்கும் செல்ல தயங்கவில்லை. கடுமையாக உழைத்த அவருக்கு கடுமையான நோய் ஏற்பட்டு தனது கூந்தலையும் அவர் இழந்தார். போர்ப்பணி முடிந்து அவர் 1856-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பியபோது அந்த தேசமே அவரை கைகூப்பி வணங்கியது. இங்கிலாந்தின் செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் நைட்டிங்கேல் தாதியர் பயிற்சிப் பள்ளியை நிறுவினார். 1858-ஆம் ஆண்டு 800 பக்க ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதுவே பிரிட்டிஷ் இராணுவ சுகாதாரத்திற்கு அடிப்படையாக அமைந்தது.
தம் வாழ்நாளில் மருத்துவமனை ஊழியர்களின் பணி, மருத்துவப்பொருட்கள் வாங்குதல், மருத்துவமனை அறைகலன்களை தேர்ந்தெடுத்தல், தூய்மைப்படுத்துதல், நோயாளிகளுக்கான உடை மற்றும் உணவு ஆகிய அனைத்து மருத்துவமனை சார்ந்த நடவடிக்கைக்கும் தேவையான அடிப்படைகளை வகுத்துத் தந்தார் புளோரன்ஸ். உலகம் முழுவது அவர் வகுத்துதந்த முறைகள் பின்பற்றப்பட்டன. அவர் உருவாக்கித்தந்த முறைகள்தான் இன்றைய நவீன தாதிமைத் தொழிலுக்கும், நவீன மருத்துவமனை வசதிகளுக்கும் அடிப்படையாக விளங்குகிறது.
தாதிமைத் துறையில் அவரது அரிய சேவையை பாராட்டி இங்கிலாந்து ராணி Order of Merit என்ற ஆக உயரிய பட்டத்தை 1907-ஆம் ஆண்டு அவருக்கு வழங்கி சிறப்பித்தார். அந்த விருதை பெற்ற முதல் பெண்மனி அவர் என்பது குறிப்பிடதக்கது. அதற்கு அடுத்த ஆண்டு Freedom of the City of London என்ற உயரிய அங்கீகாரத்தையும் பெற்ற புளோரன்ஸ் நைட்டிங்கேல் 1910-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் நாள் தமது 90-ஆவது அகவையில் இங்கிலாந்தில் காலமானார். அவர் மறைந்தாலும் இன்றும் ஒவ்வொரு தாதியரின் உருவிலும் உலா வந்துகொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அடுத்த முறை நீங்கள் ஒரு தாதியரை சந்தித்தால் அவருக்கு நன்றி சொல்லுங்கள். அதற்கும் மேலாக அவரைப் போன்றவர்களை உருவாக்க தமது வாழ்க்கையை அர்ப்பணித்து வலுவான அடித்தளம் அமைத்துத்தந்த அந்த விளக்கேந்திய நங்கை புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு நன்றி கூறுங்கள். புளோரன்ஸ் நைட்டிங்கேல் போல் மனுகுலத்தை ஓர் அங்குலமாவது உயர்த்தி விட வேண்டும் என்று எண்ணுவோருக்கும், எண்ணித்துணிவோருக்கும் எத்தனை தடைகள் வந்தாலும் நிச்சயம் அவர்கள் விரும்பும் வானம் வசப்படும்.
(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்