- பெஞ்சமின் …
47. பெஞ்சமின் ஃபிராங்கிளின்
47. பெஞ்சமின் ஃபிராங்கிளின்
2012-01-17T13:41:00.002+08:00
ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெற்றாலே வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டதாக கருதுகிறோம். அப்படியென்றால் நான்கு வெவ்வேறு துறைகளில் வெற்றி பெற்ற ஒருவரின் சாதனையை எந்த அளவுகோல் வைத்து அளப்பது. வர்த்தகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்ற ஒருவரின் பெயரை அமெரிக்க வரலாறு பொன் எழுத்துக்களால் பொறித்து வைத்திருக்கிறது. அவர் இளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும், பத்திரிக்கையின் மூலமும் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர்.
Poor Richards Almanack என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்குத் தந்தவர். உலகின் மிகப்பிரபலமான சுயசரிதைகளுள் ஒன்று அவருடையது. மின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், bifocal glasses எனப்படும் வெள்ளெழுத்தக் கண்ணாடியையும் மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்தவர். அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, அரசதந்திரியாக, பிரான்ஸ்க்கான தூதராக விளங்கியவர். அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர். இப்படி பல பரிமாணங்களில் பிரகாசித்த அவரை அமெரிக்காவின் ஆகப் பிரபலமான குடிமகன் என்றும் அழைக்கிறது வரலாறு. அவர்தான் தான் வாழ்ந்த 84 ஆண்டுகளும் மனுகுலத்தின் மேன்மையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த விஞ்ஞானியும், இலக்கியவாதியும், வர்த்தகரும், அரசியல்வாதியுமான பெஞ்சமின் ஃபிராங்கிளின்.
1706 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் நாள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார் ஃபிராங்கிளின். மொத்தம் 17 பிள்ளைகளில் பத்தாவதாக பிறந்தவர் அவர். அவரது தந்தையார் சோப்புக் கடிக்களையும், மெழுகுவர்த்திகளையும் தாயரித்து பாஸ்டன் நகரம் முழுவதும் சுற்றித் திரிந்து விற்பனை செய்வார். பெரிய குடும்பம் என்பதால் அவர்கள் வீட்டில் வறுமை வசதியாக் ஆட்சி செய்தது. குடும்ப ஏழ்மையின் காரணமாக ஃபிராங்கிளினை பள்ளிக்கு அனுப்பகூட அவரிடம் பணம் இல்லை. ஃபிராங்கிளின் பள்ளி சென்றது ஓறாண்டுக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும் தனது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதுமட்டுமல்ல பள்ளிக்கு செல்லாவிட்டாலும் தன் தந்தையின் தொழிலில் உதவி செய்துகொண்டே தனக்குக் கிடைத்த நேரத்தில் அவர் நான்கு மொழிகளைக் கற்றுக்கொண்டார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
வாசிப்பை நேசிப்போம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் நம்மில் பலர் புத்தகங்கள் பக்கமே தலை வைத்து படுப்பதில்லை. ஆனால் ஃபிராங்கிளினுக்கோ இயற்கையிலேயே நூல்கள் வாசிப்பது என்றால் கொள்ளைப் பிரியம். அந்த அவருடைய பண்புதான் பிற்காலத்தில் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தை எழுதும் வீரியத்தை அவருக்கு தந்தது. புத்தகங்கள் வாசிப்பதில் இருந்த ஆர்வம் காரணமாகவே அவர் தனது சகோதரர் ஜேம்ஸின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அச்சுப் பணிகளைக் கற்றுக்கொண்டதோடு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் புழுவாக படித்துத் தீர்த்து ஆனந்தம் அடைவார். நிறைய வாசித்ததாலோ என்னவோ சுவாரசியமாக எழுதும் திறமையும் அவருக்கு இருந்தது.
இங்கு ஒரு சுவாரசியமான நிகழ்வைக் குறிப்பிட வேண்டும். ஃபிராங்கிளின் பல கட்டுரைகளை தானே எழுதி பெயர் குறிப்பிடாமல் அதிகாலையில் அந்த அச்சுக்கூடத்தின் வாயிலில் வைத்து விடுவாராம். சகோதரரும், நண்பர்களும் அவற்றைப் பாராட்ட ஃபிராங்கிளின் மட்டும் அவை நன்றாக இல்லை அப்படி இருக்குமேயானால் எழுதியவர் பெயரைக் குறிப்பிட்டிருப்பார் என்று எதிர்த்துக் கூறுவாராம். தன் தம்பி சொல்வதற்கு எதிராகவே முடிவெடுக்கும் பழக்கமுடையவர் அண்ணன் என்பதால் அவற்றையெல்லாம் அழகாக அச்சிட்டு பிராங்கிளினைக் கொண்டே விற்பனை செய்ய சொல்வாராம் ஜேம்ஸ். எவ்வுளவு சாதுர்யம்? பிறகு தனது சகோதரருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி Philadelphia வந்தடைந்தார். அங்கும் அச்சுத்தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக அச்சு நிறுவனத்தைத் தொடங்கினார்.
பத்திரிக்கைகளில் நிறைய எழுதினார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. 1720 ஆம் ஆண்டு Pennsylvania Gazette என்ற பத்திரிக்கையை விலைக்கு வாங்கி அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ஃபிராங்கிளின். நான்கு ஆண்டுகள் கழித்து Poor Richards Almanack என்ற சஞ்சிகையைத் தொடங்கினார். மிகவும் வித்தியாசமான பாணியில் வெளிவந்த அந்த சஞ்சிகைதான் அவருக்கு செல்வத்தையும், பெரும் புகழையும் கொண்டு வந்து சேர்த்தது. அச்சுத்துறையில் புதுமைகள் செய்த அதே வேளையில் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் இருந்தது. குறைவான எரி சாதனத்துடன் மிகுந்த வெப்பம் தரக்கூடிய அடுப்பை அவர் கண்டுபிடித்தார். அவற்றைத் தயாரித்து விற்கவும் தொடங்கினார். பயிர்களுக்கு செயற்கை உரமிட்டால் அவை செழிப்பாக வளரும் என்று எடுத்துக் கூறினார். ஆரம்பத்தில் புறக்கனிக்கப்பட்டாலும் அதிலிருந்த உண்மையை உலகம் மெதுவாக புரிந்து கொண்டது. இப்போதுகூட உலகம் முழுவதும் செயற்கை உரம் பயன்படுத்தப்படுகிறது.
மின்சாரத்தின் மீது ஆய்வுகள் செய்தவர் மின்னலில்கூட மின்சக்தி இருக்கிறது என்பதை கண்டறிந்தார். கூரிய முனைகளால் மின்சாரம் ஈர்க்கப்படுகிறது அதேபோல் மின்னலும் கூரிய முனைகளால் ஈர்க்கப்படும் என்பதைக் கண்டுபிடித்து மின்னல் இடியிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க இடிதாங்கியைக் கண்டுபிடித்தார். முதியர்வர்கள் எட்டப் பார்வைக்கும், கிட்டப் பார்வைக்கும் சேர்த்து அனியும் ஒரே கண்ணாடியான bifocal lens அவருடைய கண்டுபிடிப்புதான். தன் கண்டுபிடிப்புக்கெல்லாம் அவர் காப்புரிமை பெற்றதில்லை. மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் நாம் பயன்பெறும்போது நமது கண்டுபிடிப்பால் பிறர் பயன்பெறுவதை நாம் பாக்கியமாக கருத வேண்டும் என்பதே அவரது எண்ணம். அறிவியல் துறையில் பெரிய பங்களிப்பைச் செய்த அவர் இன்னும் என்னவெல்லாம் உலகுக்கு தந்திருக்கிறார் தெரியுமா?
நோட்டுப் பணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அதன் புழக்கத்தை அதிகரிக்கச் செய்தார். சப்ஸ்கிரிப்சன் (subscription) எனப்படும் சந்தா முறையில் நூல்களை வாங்கி படிக்கும் முறையை உலகுக்கு அறிமுகம் செய்தவரும் அவர்தான். Philadelphia-வின் தபால் துறையின் பல மாற்றங்களை செய்து தற்கால தபால் துறை பின்பற்றும் பல கொள்கைகளை உருவாக்கித் தந்தார். 1730-ஆம் ஆண்டு நடமாடும் நூல் நிலையம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கு அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் முதல் தீ காப்பீட்டு நிறுவனத்தை அவர் உருவாக்கினார். ஒரு கல்விக் கழகத்தை நிறுவ வேண்டும் என்று அவர் கனவு கண்டார். அவரது காலகட்டத்திலேயே அந்தக் கனவு நனவானது. இன்று உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான Pennsylvania பல்கலைக்கழகம் அவர் நிறுவியதுதான். 1749-ஆம் ஆண்டு அது நிறுவப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத் தோற்றுவித்தார் ஃபிராங்கிளின்.
ஃபிராங்கிளின் சிறந்த சிந்தனையாளர், நேர்மையானவர் என்பதால் அவரை பயன்படுத்திக்கொள்ள விரும்பியது அரசு. அவரும் சட்டமன்ற உறுப்பினர், அரசதந்திரி, தூதர் என பல்வேறு நிலைகளில் அரசியல் பணி புரிந்தார். இங்கிலாந்தின் காலனித்துவ ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த அமெரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர அவர் தன் ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி ஃபிரான்ஸின் உதவியைப் பெற்றார். அவர்மேல் பெரும் மதிப்புக் கொண்டிருந்த ஃபிரான்ஸும் அமெரிக்காவுக்கு உதவ முன்வரவே இங்கிலாந்து பணிந்தது அமெரிக்காவுக்கு சுதந்திரம் கிடைத்தது. 1789 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டென் அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பை பெஞ்சமின் ஃபிராங்கிளினை உள்ளடக்கிய ஒரு குழுவிடம் ஒப்படைத்தார். அவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம்தான் இன்றும் அமெரிக்காவை வழிநடத்துகிறது.
சுதந்திரம் அடைந்த பிறகு அமெரிக்கா முதன் முதலாக இரண்டு அஞ்சல் தலையை வெளியிட்டது. ஒன்றில் அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டெனின் படம். மற்றொன்றில் பெஞ்சமின் ஃபிராங்கிளினின் படம். அமெரிக்காவுக்கும், உலகுக்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்த அந்த மாமனிதனுக்கு அந்த தபால் தலை மூலம் நன்றி தெரிவித்துக்கொண்டது அமெரிக்க தேசம். கடைசி நாள் வரை ஓய்வு என்பதையே அறியாமல் உழைத்த ஃபிராங்கிளின் 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி தனது 84 ஆவது வயதில் காலமானார். அப்போது உலக நாடுகள் துக்கத்தில் மூழ்கின. அரசாங்க மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுமார் இருபதாயிரம் பேர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
பெஞ்சமின் ஃபிராங்கிளின் உதிர்த்த பல பொன்மொழிகளை இன்றும் பல பேச்சாளர்கள் அடிக்கடி பயன்படுத்துகின்றனர். அவற்றுள் மிகவும் பிடித்த பொன்மொழி:
_ *“இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால்; ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்” * _
ஆம் வரலாற்றில் மிகவும் பயனுள்ள அர்த்தமுள்ள வழியில் செலவழிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்கு சொந்தக்காரர் பெஞ்சமின் ஃபிராங்கிளின். அமெரிக்கர்கள் மட்டுமல்ல நாம் அனைவருமே ஒட்டுமொத்த முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய வரலாற்று மாந்தர் பெஞ்சமின் ஃபிராங்கிளின். அவரைப்போல தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முற்படும் எவருக்கும் எந்த வானமும் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மையாகும்.
(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்