- மாமேதை …
53. மாமேதை பீத்தோவன் (இசை உலகின் பிதாமகன் )
53. மாமேதை பீத்தோவன் (இசை உலகின் பிதாமகன் )
2011-10-10T14:20:00.003+08:00
வரலாற்று நாயகர்கள் (பாகம் - 1) மின்புத்தக வடிவில்! _* தரவிறக்க_ *
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக வரலாற்றில் தனது பங்களிப்பைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது ஆஸ்திரியா. தங்கள் தேசத்தை சேர்ந்த பலர் உலகப் புகழ் பெற்றிருக்கின்றனர் என்பதையும், அவர்களின் உடல்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் உணர்ந்த ஆஸ்திரியர்கள் அவர்கள் எல்லோரையும் வியன்னாவின் மையப்புற இடுகாட்டில் மறு அடக்கம் செய்ய விரும்பினர். grave of honor என்ற ஒரு பகுதியை ஒதுக்கி வியன்னாவின் புகழை உலகெல்லாம் பரவச்செய்த வரலாற்று நாயகர்களின் மிச்சங்களை அங்கு மறு அடக்கம் செய்தனர்.
ஆண்டுதோறும் வியன்னாவுக்கு செல்லும் பல்லாயிரக் கணக்கானோர் grave of honor என்ற அந்த சமாதிக்கு செல்ல தவறியதில்லை. ஒரு குறிப்பிட்ட கல்லறைக்கு முன் நின்று மரியாதை செலுத்தாமல் போவதில்லை. அந்தக் கல்லறையிலும் வரலாற்று ஏடுகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் பீத்தோவன். இசைமேதை மோட்ஸார்ட் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து அவருடைய பாராட்டையும் பெற்று தனது இசையால் உலகையே வசீகரித்த உன்னத இசைக் கலைஞன் பீத்தோவன்.
1770 ஆம் ஆண்டு டிசம்பர் 16ந்தேதி ஜெர்மனியின் பான் நகரில் பிறந்தார் லுட்விக் வான் பீத்தோவன். அவரது தாத்தாவும், தந்தையும் இசைக் கலைஞர்கள் தந்தை மதுவுக்கு அடிமையானவர் என்றாலும் பீத்தோவனின் இசைத் திறமையை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து ஊக்கமூட்டினார். ஜெர்மனியில் சிறு வயதிலேயே நீஃப் என்ற இசைக் கலைஞரிடம் பியானோ இசைக்கக் கற்றுக் கொண்டார் பீத்தோவன். பனிரெண்டு வயதிலேயே அவர் இசைக்கூறுகளை வடிக்கத் தொடங்கினார்.
அவரது இசைத் திறமை அனைவருக்கும் தெரியவர பதினேழாவது இசைக் கச்சேரி நிகழ்த்த வியன்னா சென்றார். அங்கு பதினான்கு வயது மூத்தவரான மோட்ஸார்ட்டுடன் சேர்ந்து இசைக்கச்சேரி நிகழ்த்தி மொஸார்ட்டின் பாராட்டையும் பெற்றார். அப்போது முதல் மோட்ஸார்ட்டும், பீத்தோவனும் இணைந்து பணியாற்றியிருக்கக்கூடும் ஆனால் தாயாருக்கு நோய்வாய்ப் படவே பான் நகர் திரும்பினார் பீத்தோவன். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகுதான் அவர் மீண்டும் வியன்னாவுக்கு வர முடிந்தது. அதற்குள் மோட்ஸார்ட் இயற்கை எய்தியிருந்தார்.
அந்த இரு இசை மேதைகளையும் ஒன்றாக இணைந்து பணியாற்ற இயற்கை அனுமதித்திருந்தால் இன்னும் பல இசை அதிசயங்களை உலகம் சந்தித்திருக்கக்கூடும். ஜெர்மனியில் பிறந்திருந்தாலும் ஆஸ்திரியர்கள் நல்ல புரவலர்களாக இருந்ததால் வியன்னாவில் குடியேறினார் பீத்தோவன். செல்வந்தர்கள் அவரை தத்தெடுத்துக் கொள்ள போட்டி போட்டனர். அதனை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். தந்தையிடம் இருந்த குடிப்பழக்கம் அவரிடம் இல்லாவிட்டாலும் வேறு சில கெட்ட குணங்கள் இருந்தன. நேரம் தவறாமையை அவர் கடைப்பிடித்ததில்லை, எளிதில் ஆத்திரமடைவார் எரிச்சலடைவார், பார்ப்பதற்கு தூய்மையாகவும் இருக்க மாட்டார். ஆனால் பியானோவில் அவர் நிகழ்த்திய அதிசயங்களால் அந்தப் பிழைகள் பெரிதாகப் படவில்லை.
பீத்தோவனை உலகம் வியந்து போற்ற ஒரு முக்கிய காரணம் உண்டு. ஆரம்பத்தில் எந்த குறைபாடும் இல்லாத அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக கேட்கும் திறன் குறைந்து கொண்டே போய் பின்னர் முற்றிலுமாக காது கேளாமல் போனது. தன் குறைபாட்டை நினைத்து மிகவும் நொந்துபோன பீத்தோவன் தற்கொலைக்குகூட முயன்றிருக்கிறார் என்பது வரலாற்று உண்மை. கண் தெரியாத ஒருவர் அழகான ஓவியம் தீட்ட முடியும் என்பதை எப்படி நம் மூளையால் ஏற்றுக்கொள்ள முடியாதோ அதேபோல்தான் காது கேளாத ஒருவரால் அற்புத இசையை பிரசவிக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இசைக்குத் தேவையான புலனே செவிகள்தானே! ஆனால் அதைத்தான் செய்து காட்டினார் அந்த அதிசய மனிதன். ஆம் முழுமையான நிசப்த உலகில் வாழ்ந்து கொண்டே பல அமர படைப்புகளை உருவாக்கினார் பீத்தோவன். பீத்தோவனின் பெயர் சொல்லும் இசைப் படைப்புகள் யாவுமே அவர் கேட்கும் சக்தியை இழந்த பிறகு உருவானவை என்பதை வரலாற்றுக் குறிப்புகள் மெய்ப்பிக்கின்றன.
தான் கேட்டு ரசிக்க முடியாத நிலையில் அவரால் எப்படி மகிழ்ச்சி, காதல், சோகம், வேதனை, விரக்தி, வீரியம், அச்சம், பக்தி, ஹாஸ்யம், எழுச்சி, என பல்வேறு பரிமாணங்களை தன் இசையில் வெளிக்கொணர முடிந்தது என்பதுதான் வரலாற்றுக்குகூட புரியாத புதிராக இருக்கிறது. உலகையே தனது இசையை காதலிக்கச் செய்த அவர் தன் வாழ்நாளில் சில பெண்களை காதலித்தார். ஆனால் ஒரு காதல்கூட கைகூடவில்லை. கடைசி வரை அவர் திருமணமும் செய்து கொள்ளவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது சோர்ந்து போயிருந்த ஐரோப்பியர்களுக்கு எழுச்சியூட்ட உலகப் புகழ்பெற்ற BBC எனப்படும் பிரிட்டிஷ் ஒளிப்பரப்புக் கழகம் என்ன செய்தது தெரியுமா? பீத்தோவனின் எழுச்சியூட்டும் 5th சிம்பொனி எனப்படும் இசைக்கூறின் ஒரு பகுதியை தனது செய்திகளுக்கும், அறிவுப்புகளுக்கும் முன் ஒளிப்பரப்பியது.
(பீத்தோவன் - 5th சிம்பொனி)
இந்த இசையை கேட்ட போதெல்லாம் நலிந்திருந்த தேசமே புத்துயிர் பெற்றனர் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். காது கேளாமல் போனதிலிருந்து மேலும் 25 ஆண்டுகள் வாழ்ந்து 1827 ஆம் ஆண்டு மார்ச் 26ந்தேதி தனது 56 ஆவது வயதில் காலமானார் பீத்தோவன். தன் உடற்குறை காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் அவர் வெற்றி பெற்றிருந்தால் இசை உலகம் தோற்று போயிருக்கும் வரலாறும் அவரை மறந்து போயிருக்கும். ஆனால் அவர் மறைந்தபோது பத்தாயிரம் பேர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். வீட்டிலிருந்து தேவாலயம் சுமார் ஆயிரம் அடி தொலைவில்தான் இருந்தாலும் கூட்ட நெரிசலால் அவரது இறுதிப் பயணம் ஒன்றரை மணிநேரம் நீடித்ததாம்.
காது கேளாமல் போனபோது தன்னம்பிக்கையின் அடி மட்டத்தைத் தொட்டாலும் ஒரு கால் நூற்றாண்டு உதாரண வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போயிருக்கிறார் பீத்தோவன். இயற்கை வரம் தர மறுத்தாலும் திறமையான கரமே அவருக்கு வரமாக பட்டது அதன் மூலம் அவர் விரும்பிய வானமும் வசப்பட்டது. நாமும் நம்மிடம் உள்ள குறைகளை எண்ணி துவண்டு கிடக்காமல் திறமைகளைத் தேடி புடம் போட்டுக்கொண்டால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்.
(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
_* _பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.__ *
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்