- மாவீரன் …
56. மாவீரன் நெப்போலியன் (ஒரு சாமானியன் சக்ரவர்த்தியான சரித்திரம்)
56. மாவீரன் நெப்போலியன் (ஒரு சாமானியன் சக்ரவர்த்தியான சரித்திரம்)
2011-08-22T13:50:00.002+08:00
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் தந்த மாவீரன் அலெக்ஸாண்டர் தி கிரேட், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் தந்த மாவீரன் நெப்போலியன் பொனபார்ட். அலெக்ஸாண்டர் ஒரு கிரேக்கப் புயல் என்றால் நெப்போலியன் ஒரு பிரெஞ்சு பிரெளயம். இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் ஒரு முக்கியமான வேற்றுமை இருந்தது. ஒரு மன்னனுக்கு மகனாக பிறந்ததால் கிரேக்கத்தை ஆண்டான் அலெக்ஸாண்டர். ஆனால் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தும் பிரான்ஸுக்கு மன்னனானான் நெப்போலியன். உலக வரலாற்றில் ஒரு எழைக்குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒரு தேசத்திற்குச் சக்ரவர்த்தியானது அதுதான் முதல்முறை. விதியை வென்ற நெப்போலியன் என்ற அடைமொழியும் அவருக்கு உண்டு. ஒரு சாமானியன் சக்ரவர்த்தியான சரித்திரம் என்று நெப்போலியனின் வாழ்க்கையை விவரிக்கிறார் திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய்.
1769 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ந்தேதி பிரான்ஸின் கோர்சிக்காவில் ஒரு ஏழ்மையான் குடும்பத்தில் பிறந்தார் நெப்போலியன் 13 பிள்ளைகளில் ஒருவர். சிறு வயதிலேயே பயம் என்றால் என்னவென்று அறியாதவனாக வளர்ந்தார் நெப்போலியன். அரசின் சலுகை பெற்று வியந்நாவிலும் பாரிசிலும் உள்ள இராணுவப் பள்ளியில் கல்வி பயின்றார். கணிதம், வரலாறு, புவியியல் ஆகியவை அவருக்குப் பிடித்தப் பாடங்கள். பள்ளியில் தனிமையை விரும்பிய நெப்போலியன் பொறுப்புணர்ச்சி மிக்கவராக இருந்தார். 16 வயதில் பள்ளிப் படிப்பை முடித்து பிரெஞ்சு இராணுவத்தின் ஆர்ட்டிலரிப் பிரிவில் சேர்ந்தார். டுலால் நகரில் நடைபெற்ற யுத்தத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டதற்காக நெப்போலியன் படைத்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். 1796ல் இத்தாலியில் ஆஸ்திரிய சாடினியப் படைகளை வெற்றிகரமாக முறியடித்தப் பிறகு நெப்போலியனுக்கு தேசிய அளவில் புகழ் கிடைத்தது. பின்னர் பாரிஸில் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு வேறு இருவருடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றினார்.
1804 ஆம் ஆண்டு தனது 35 ஆவது வயதில் தன்னை பிரான்ஸின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டார் நெப்போலியன். அதற்குப் பிரெஞ்சு மக்களின் பேராதரவு இருந்தது. நெப்போலியன் அடுத்தடுத்தத் தொடுத்தப் போர்களால் இங்கிலாந்தைத் தவிர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பாவும் நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இங்கிலாந்து நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கவே Continental System என்ற வர்த்தக முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்த எந்த நாடும் இங்கிலாந்துடன் எந்த வர்த்தகமும் புரியக்கூடாது என்று கட்டளையிட்டார் நெப்போலியன். ஆனால் ரஷ்யா அந்தக் கட்டளையை மீறி இங்கிலாந்துடன் வர்த்தகம் புரிந்ததால் சினம்கொண்டெழுந்த நெப்போலியன் 600 ஆயிரம் வீரர்களுடன் ரஷ்யா மீது படையெடுத்தார் அந்த ஆண்டு 1812.
நெப்போலியனின் படையெடுப்பை முன்கூட்டியே அறிந்தோ என்னவோ அவர் ரஷ்யாவுக்குள் அடியெடுத்து வைத்தபோது மாஸ்கோ வெறிச்சோடி கிடந்தது. சுமார் இரண்டரை லட்டம் ரஷ்யர்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருந்தனர். ரஷ்யாவின் ஷா மன்னன் தன்னிடம் வந்து சரனடைவான் என்று சுமார் ஒரு மாதம் அங்கயே முகாமிட்டுருந்தார் நெப்போலியன். ஆனால் மன்னன் வருவதற்குப் பதில் பனிக்காலமும், கடுங்குளிரும்தான் வந்தன. நெப்போலியன் சுதாரித்துக்கொள்ளும் முன் பசிக்கும், குளிருக்கும் பல்லாயிரம் பிரெஞ்சு வீரர்கள் பலியாயினர். வேறுவழியின்றி மிஞ்சியிருந்த வீரர்களை பாரிஸ் திரும்ப கட்டளையிட்டார் நெப்போலியன். ஆறு லட்சம் வீரர்களுடன் சென்றவர் வெறும் இருபதாயிரம் வீரர்களுடன் திரும்பியதாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. பிரெஞ்சு இராணுவம் நிலைகுலைந்து போயிருந்த அந்த தருணத்தைப் பயன்படுத்தி பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகியவற்றின் கூட்டுப்படைகள் பிரான்ஸைத் தாக்கின. போரில் தனது முதல் தோல்வியைச் சந்தித்தார் நெப்போலியன்.
கூட்டுப்படையால் நெப்போலியன் எல்பா என்ற தீவில் சிறை வைக்கப்பட்டார். ஆனால் ஓராண்டுக்குள் சிறையிலிருந்த தப்பி வந்த நெப்போலியனை பிரெஞ்சு மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள மீண்டும் பிரான்ஸின் சக்ரவர்த்தியானார் நெப்போலியன். புதிய படையை உருவாக்கினார் இரண்டே ஆண்டுகளில் பிரிட்டனும், அதன் நட்பு நாடுகளும் நெப்போலியனுக்கு எதிராக அணி திரண்டன. பெல்ஜியத்தின் வார்ட்டலு என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் இரண்டாவது முறையாக தோல்வியைத் தழுவினார் நெப்போலியன். அவரை சிறைப்பிடித்த பிரிட்டிஷ் இராணுவம் இம்முறை ஆப்பிரிக்காவுக்கு பக்கத்திலுள்ள Saint Helena என்ற தீவில் சிறை வைத்தனர். அந்தத் தீவில் தனிமையில் வாடிய நெப்போலியனுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்பட்டது. ஆறு ஆண்டுகளில் அதாவது 1821 ஆம் ஆண்டு மே மாதம் 5ந்தேதி நெப்போலியன் என்ற வீரசகாப்தம் முடிவுக்கு வந்தது.
பிரெஞ்சு ரெவல்யூசன் எனப்படும் பிரெஞ்சுப்புரட்சியின் தாக்கத்தினால் உருவானவர்தான் நெப்போலியன். அவர் ஆட்சிக்கு வந்தப் பிறகு பிரான்ஸில் அமைதி நிலவியது. பொருளாதார, அரசியல், சட்டத்துறைச் சீர்சிருத்தங்களை அறிமுகம் செய்தார். பிரான்ஸில் செயிண்ட் ஆற்றுக்கு மேல் பாலங்கள் கட்டினார். வீதிகளை திருத்தி அமைத்து புதிய வீதிகளை உருவாக்கினார். நகரின் தண்ணீர் விநியோகத்தை மேம்படுத்தினார். வேலைவாய்ப்புகளைப் பெருக்கினார். வரி வசூலிக்கும் முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்ததோடு பிரான்ஸில் இன்ப்ரீயல் பேங்க் என்ற வங்கியை உருவாக்கினார். ஆனால் நாட்டு நிர்மானத்தில் நெப்போலியனின் மிகப்பெரிய பங்களிப்பு அவர் வகுத்துத் தந்த Civil Code என்ற புதிய சட்டங்கள். அந்தச் சட்டங்கள் Code of Napoleon என்றும் அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 40 போர்களில் கிடைக்காத பெருமை அந்தச்சட்டங்கள் மூலம் நெப்போலியனுக்கு கிடைத்தது.
சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம் என்பதே அதன் சாரம்சம். அவை இன்னும் பிரெஞ்சு சட்டங்களாக நீடிக்கின்றன. நூல்கள் வாசிப்பதில் அதிக விருப்பம் கொண்ட நெப்போலியன் ஒரு நாளில் கிட்டதட்ட நான்கு மணி நேரந்தான் உறங்குவாராம். அப்படி அவர் சிரமபட்டு படித்துச் சேர்த்த அறிவுச்செல்வம்தான் அவரை வெறும் மாவீரன் என்ற நிலையைத் தாண்டி ஒரு தேசத்தையே மிகச்சிறப்பாக நிர்வகிக்கும் மன்னனாக உயர்த்தியது. “வெற்றி என்பது முயற்சியின் பாதி, நம்பிக்கையின் மீதி” இதுதான் நெப்போலியன் என்ற மாவீரனின் தாரக மந்திரமாக இருந்தது. அந்த மந்திரம்தான் வெற்றி மேல் வெற்றிகளை நெப்போலியனிடம் குவித்தது. அரச வம்சத்தில் பிறக்காத ஒரு ஏழைகூட மன்னனாக முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது.
“முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது” என்பது நெப்போலியன் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம். நெப்போலியனிடம் குடிகொண்டிருந்த துணிவு, நம்பிக்கை, முயற்சி ஆகியவை நமக்கு இருந்தால் நமக்கும் நாம் விரும்பும் வெற்றியும் அதன்மூலம் அந்த வானமும் வசப்படும்.
(தகவல் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
_* _பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.__ *
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்