/ வரலாற்று … /
  1. மிக்கைல் …

57. மிக்கைல் கொர்பசோவ்

57. மிக்கைல் கொர்பசோவ்

2012-12-26T20:39:00.000+08:00

இருபதாம் நூற்றாண்டில் உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய ஒன்று அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய Clod War எனப்படும் பனிப்போர். அந்த பனிப்போர் உருவானதற்கு அடிப்படை காரணம் ரஷ்யாவில் லெனினுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஸ்டாலினும், அவருக்கு அடுத்து வரிசையாக வந்த சர்வாதிகாரிகளும் தங்கள் படை பலத்தை அசுர வேகத்தில் பெருக்கிக்கொண்டதொடு தாங்கள் நம்பிய கம்யூனிசத்தை உலக நாடுகளில் திணிக்க முற்பட்டதுதான். ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு மற்ற நாடுகள் வேண்டுமானால் அடிபணியலாம். ஆனால் கம்யூனிசத்தை வெறுத்த அமெரிக்காவோ ரஷ்யாவின் ஆயுத குவிப்பை எதிர்கொள்ள நேரடி ஆயுத போட்டா போட்டியில் இறங்கியது. அதன் விளைவுதான் Clod War எனப்படும் பனிப்போர்.

பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அணு ஆயுத போர் நீளுமோ? மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ? என்று உலகம் அஞ்சிய நாட்கள் ஏராளம். ஆனால் 1917-ஆம் ஆண்டு உலகுக்கு முன்னுதாரணமான ஆட்சி வழங்கும் உறுதியோடு லெனின் மூலம் ரஷ்யாவில் வேருன்றிய கம்யூனிசம் 74 ஆண்டுகளுக்குப் பிறகு 1991-ஆம் ஆண்டில் அடியோடு வேருறந்து போகும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆம் அந்த ஆண்டு சோவியத் யூனியன் சிதறுண்டது. கம்யூனிசம் சிதைந்து போனது பனிப்போரும் ஆவியாகி காற்றில் கரைந்து போனது. ஆயுத போட்டா போட்டியிலிருந்து விடுபட்ட உலகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. அதையெல்லாம் சாத்தியமாக்கியது தனி ஒரு மனிதனின் தெளிந்த பார்வையும், உள்நாட்டு பிரச்சினைகளுக்கு அடக்குமுறை மட்டுமே பதிலாகாது என்ற நம்பிக்கையும், உலகத்திற்கு தேவை பொருளாதார வளர்ச்சியே அன்றி ஆயுத வளர்ச்சி அல்ல என்ற தொலைநோக்கும்தான்.

பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் உலகத்தின் பாதுகாப்பை பன்மடங்கு உயர்த்தி வரலாற்றிலும் உயர்ந்து நிற்கும் அந்த வித்தியாசமான அரசியல் தலைவரின் பெயர் மிக்கைல் கொர்பசோவ் (Mikhail Gorbachev). 1931-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2-ஆம் நாள் தெற்கு ரஷ்யாவின் Stavropol வட்டாரத்தில் உள்ள Privolnoye எனும் கிராமத்தில் பிறந்தார் கொர்பசோவ். அவர் சிறுவயதாக இருந்தபோது ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மிக மோசமான கொடுங்கோலர்களில் ஒருவர் என்று வரலாறு வருணிக்கும் ஸ்டாலினின் ஆட்சியில் ஒன்பது ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார் கொர்பச்சொவின் தாத்தா Andreyevich Gorbachev. ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சியை பார்த்து வளர்ந்தார் கொர்பசோவ்.

பள்ளியில் சிறந்து விளங்கிய அவர் தமது பதினைந்தாவது வயதிலேயே இளையர் கம்யூனிஷ்டு லீகில் சேர்ந்தார். 1950-ஆம் ஆண்டில் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டம் பயின்றார். பல்கலைக்கழக மாணவராக இருந்தபோதே கம்யூனிஷ்டு கட்சியில் உறுப்பினராக இருந்தார். பல்கலைக்கழகத்திலேயே தான் சந்தித்த Raisa Titarenko என்ற பெண்ணை தான் பட்டம் பெற்ற 1953-ஆம் ஆண்டிலேயே மணந்து கொண்டார். சட்டத்தில் பட்டம் பெற்று தாம் பிறந்த Stavropol வட்டாரத்திற்கு திரும்பிய கொர்பசோவ் கம்யூனிஷ்டு கட்சியின் தலைமைத்துவத்தில் படிப்படியாக முன்னேறி பல பொறுப்புகளை வகுத்தார். 1970-ஆம் ஆண்டு கட்சியின் வட்டார செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் அடுத்த ஆண்டே மத்திய ஆளும் குழுவில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

1980-ஆம் ஆண்டு சோவியத் ஆளும் குழுவின் முழு உறுப்பினராக அவர் பதவி உயர்வு பெற்றார். அந்தக்காலகட்டம் வரை சோவியத் யூனியனின் அதிபராக இருந்த Fyodor Kulakov 1982-ஆம் ஆண்டு மறைந்தபோது Andropov-வும், இரண்டு ஆண்டுகளில் அவர் மறைந்தபோது Chernenko-வும் அதிபர் பொறுப்பை ஏற்றனர். 1985-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் நாள் Chernenko இறந்தபோது அடுத்த நாளே கட்சியின் பொது செயலாளர் பொறுப்பும், அதிபர் பொறுப்பும் கொர்பசொவின் கைகளுக்கு வந்தது. முந்தைய சோவியத் அதிபர்களைப்போல் அல்லாமல் மற்ற நாடுகளுக்கு நிறைய பயணங்களை மேற்கொண்டவர் கொர்பசோவ். அதனால் அவரது பார்வையும், அணுகுமுறையும் வேறுபட்டதாக இருந்தது. அவர் பதவியேற்றபோது மிகப்பெரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தது சோவியத் யூனியன். ஆயுத போட்டா போட்டிக்கு அளவுக்கு அதிகமாக சொத்து செலவழிக்கப்பட்டது அதற்கு முக்கிய காரணம்.

பதவியேற்ற வேகத்திலேயே ஆயுத போட்டா போட்டியை முடிவுக்கு கொண்டு வர முடிவெடுத்தார் கொர்பசோவ். அப்போதைய அமெரிக்க அதிபர் Ronald Reagan-னின் அழைப்பை ஏற்று இருவரும் நான்கு உச்ச நிலை சந்திப்புகளை நடத்தினர். அதன் பயனாக 1987-ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களை குறைக்கும் ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர். அந்தக்கணமே சோவியத் யூனியனின் தலையெழுத்தும் மாறத்தொடங்கி விட்டது என்பதனை உலகம் அப்போது உணரவில்லை. அடுத்த ஆண்டே இன்னொரு முடிவையும் அறிவித்து உலகை அசத்தினார் கொர்பசோவ். ஒன்பது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்திருந்த சோவியத் படைகளை மீட்டுக்கொள்வதாக அவர் அறிவித்தார். முன்னைய தலைவர்கள் அவமானம் கருதி செய்ய மறுத்த செயல் அது. வெறும் வீம்புக்காக படைகளை அங்கே வைத்திருந்து இழப்பை அதிகமாக்கிக் கொள்வதை விட அங்கிருந்து வெளியேறி இழப்பை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவரது விவேகத்தை உலகம் பாராட்டியது.

அந்த இரண்டு வெளியுறவுக்கொள்கைகளுக்கும் தந்த அதே முக்கியத்துவத்தை நாட்டின் பொருளியலை சீர்படுத்துவதிலும் தந்தார் கொர்பசோவ். perestroika என்ற பொருளியல் சீர்திருத்தத்தை அவர் அறிவித்தார். அந்த சீர்திருத்தத்தால் கம்யூனிஸ்டு கட்சியின் இரும்புப்பிடி தளரத்தொடங்கியது. சில துறைகளில் தனியார்மயத்திற்கு அனுமதி வழங்கினார். 1986-ஆம் ஆண்டு Glasnost என்ற திறந்த கொள்கையை அறிவித்தார். அந்தக்கொள்கைதான் கம்யூனிசத்தின் அழிவிற்கு அடிகோலியது. சோவியத் யூனியனில் மூடியிருந்த பல கதவுகளை அது திறந்து விட்டது. தனிமனிதர்களும், பத்திரிக்கைகளும் அச்சமின்றி அரசியல் பேச அனுமதிக்கப்பட்டது. 1989-ஆம் ஆண்டு இன்னும் ஓர் அதிசயம் நிகழ்ந்தது முதன்முறையாக சோவியத் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. 1917-ஆம் ஆண்டு லெனின் ஆட்சியை கைபற்றிய பிறகு ரஷ்யாவில் நடைபெற்ற முதல் சுதந்திர தேர்தல் அது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பல்கேரியா, ருமேனியா, போலந்து, ஹங்கேரி, செக்கோஸ்லவாகியா, கிழக்கு ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளில் சோவியத் யூனியனின் கம்யூனிஸ்டு கட்சி ஆதிக்கம் செலுத்தியது. அந்தக்கட்சிகள் அனைத்துமே மக்களால் வெறுக்கப்பட்டன. அந்த நாட்டின் கம்யூனிச தலைவர்கள் சோவியத் இராணுவத்தின் துணையுடனும், ரகசிய போலீஸ் துணையுடனும் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு இரும்புக்கரங்களுடன் கோலோச்சினர். ஆனால் 1989-90 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிசயித்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. 1989-ஆம் ஆண்டில் கிழக்கு ஜெர்மனியில் கொந்தளிப்பு ஏற்பட்டது இரண்டு ஜெர்மனிகளையும் பிரித்த பெர்லின் சுவற்றை (Berlin Wall) தாண்டி மேற்கு ஜெர்மனிக்கு செல்ல மக்கள் முயன்றனர். அப்போது கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக இருந்த Erich Honecker வழக்கம்போல் அடக்கு முறையை கையாள நினைத்த அந்த தருணத்தில் பெர்லினுக்கு அவசர வருகை மேற்கொண்டார் கொர்பசோவ்.

அடக்கு முறையை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்ததோடு சீர்திருத்தத்தை விரைவில் தொடங்குமாறு வலியுறுத்திய கொர்பசோவ் எந்த அடக்கு முறைக்கும் சோவியத் படைகள் பயன்படுத்தக்கூடாது என்றும் Honecker-ரிடம் கூறினார். அப்போது 380 ஆயிரம் ரஷ்யப்படைகள் கிழக்கு ஜெர்மனியில் இருந்தன. தக்க தருணத்தில் அவர் தலையிட்டதால் ரத்தக்களறி தவிர்க்கப்பட்டது இரண்டே வாரங்களில் Honecker பதவி துறக்க நேரிட்டது. அதே ஆண்டு நவம்பர் 9-ஆம் நாள் நம்ப முடியாத ஒன்று நடந்தது ஆம் பெரிலின் சுவர் திறந்து விடப்பட்டது. மில்லியன் கணக்கான கிழக்கு ஜெர்மானியர்கள் சுதந்திரமாக மேற்கு ஜெர்மனிக்குள் நுழைந்தனர். வரலாற்றில் ஒரு களங்கமாக இருந்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. அதன் எதிரொலி மற்ற கம்யூனிச நாடுகளிலும் கேட்கத் தொடங்கியது. பல்கேரியாவில் இரும்புக்கரத்தோடு ஆட்சி செய்து வந்த டோடொ ஜிப்கோப் நவம்பர் 10-ஆம் நாள் பதவி துறக்க நேரிட்டது. ஒரு வாரது கழித்து செக்கோஸ்லவாகியா தலைநகர் ஃப்ராகில் மிகப்பெரிய மக்கள் ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஹங்கேரியில் நவம்பர் 26-ஆம் நாள் சுதந்திர தேர்தல் நடைபெற்றது பெரும் வாக்கு வித்தியாசத்தில் கம்யூனிஸ்டு ஆட்சியாளர் தோல்வியைத் தழுவினர். போலந்திலும் கம்யூனிஸ்டு கட்சி தோற்கடிக்கப்பட்டு 1990-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அங்கு சந்தைப் பொருளியல் அறிமுகமானது. தன்னுடைய சகாக்கள் ஒவ்வொருவராக மண்ணைக் கவ்வுவதைப் பார்த்த போதும் ருமேனியாவின் சர்வாதிகாரி விடாப்பிடியாக ஆட்சியைத் தொடர்ந்தார். ஆனால் மக்களின் ஆவேசம் எந்த சர்வாதிகாரியையும் விட்டு வைக்காது என்பதற்கு இன்னும் ஓர் உதாரணமாக அமைந்தது டிசம்பர் 25-ஆம் நாள் நிகழ்ந்த அந்த சம்பவம். அன்றைய தினம் ஆட்சியிலிருந்து கவிழ்க்கப்பட்டு பின்னர் சிறை பிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார் சர்வாதிகாரி Sakharov. அதோடு கிழக்கு ஐரோப்பாவின் கடைசி கம்யூனிஸ்டு சகாப்தமும் முடிவுக்கு வந்தது. இவற்றையெல்லாம் விரிந்த புருவங்களோடு பார்த்துக் கொண்டிருந்த சில சோவியத் குடியரசுகளும் சுதந்திர கோரிக்கை விடத் தொடங்கின.

1990-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் நாள் சோவியத் யூனியனிலிருந்து தான் சுதந்திரம் பெற்று விட்டதாக தையரியமாக அறிவித்தது Lithuania. கொர்பசோவ் அதை விரும்பாவிட்டாலும் படைபலத்தை பயன்படுத்தவில்லை. அந்த ஆண்டு இறுதிக்குள் சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த 15 குடியரசுகளும் சுதந்திர பிரகடனம் செய்தன. சோவியத் யூனியனின் சிதைவை வைத்த கண் வாங்காமல் உலகம் பார்த்துக் கொண்டிருக்க கொதிப்படைந்த சில பழமைவாத கம்யூனிஸ்டுகளும், இராணுவத் தளபதிகளும் 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு கொர்பசோவை கைது செய்தனர் ஆனால் சில தலைவர்களும் சோவியத் மக்களும் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த முயற்சி பிசுபிசுத்து போனது. அதன் பிறகு ரஷ்யாவில் அசுர வேகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. கம்யூனிஸ்டு ஆட்சி தடை செய்யப்பட்டது அதன் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஆண்டு இறுதிக்குள் அத்தனை சோவியத் குடியரசுகளும் தனித்தனியாக பிரிந்தன.

சோவியத் யூனியன் அதிகாரப்பூர்வமாக கலைந்தது. அதே ஆண்டு சொந்தமாகவே பதவி விலகினார் கொர்பசோவ் அவர் பதவியேற்று ஆறே ஆண்டுகளில் அத்தனையும் நடந்து முடிந்தது. இருபதாம் நூற்றாண்டை பாதுகாப்பற்றதாக மாற்றிய எத்தனையோ தலைவர்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக அதன் பாதுகாப்பை உறுதி செய்தவர் கொர்பசோவ். இன்று உலகில் ஓரளவுக்கு அமைதி நிலவுவதற்கு வித்திட்டு தேவையற்ற கொள்கைகளை தைரியமாக தூக்கியெறிந்தவர் அவர். கெளரவம் கருதி ஆயுதங்களை குவித்த தலைவர்களுக்கு மத்தியில் பொருளாதாரமும், உலக அமைதியும் கருதி ஆயுத போட்டா போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் அவர். வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்த அவரை வரலாறு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். The only disability in life is a bad attitude தவறான மனோபாவம்தான் வாழ்க்கையின் ஒரே குறைபாடு. Luck is a dividend of sweat. The more you sweat, the luckier you get அதிர்ஷ்டம் என்பது நீங்கள் சிந்தும் வியர்வைக்கு கிடைக்கும் வட்டி, எவ்வுளவுக்கு எவ்வுளவு வியர்வை சிந்துகிறீர்களோ அவ்வுளவுக்கு அவ்வுளவு அதிர்ஷ்டம் கூடும்.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

வாழ்க வளமுடன்

என்றும் நட்புடன்

உங்கள். மாணவன்

அடுத்த பக்கம்