- முகமது அலி …
58. முகமது அலி (உலக குத்துச்சண்டை வீரர்)
58. முகமது அலி (உலக குத்துச்சண்டை வீரர்)
2012-02-27T20:08:00.000+08:00
எந்த ஒரு துறையிலும் உச்சத்தை எட்டுவோருக்கு The Great அல்லது The Greatest என்ற உயரிய அங்கீகாரத்தை வழங்குகிறது வரலாறு. விளையாட்டுத் துறையில் அந்தத் தகுதியை எட்டிய ஒரு வீரரைப் பற்றி தெரிந்துகொள்ளவிருக்கிறோம். விளையாட்டுத் துறையில் The Greatest என்ற தகுதியைப் பெற்ற ஒரே வீரர் குத்துச் சண்டை உலகின் முடிசூடா மன்னன் முகமது அலி. 1942 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி அமெரிக்காவில் ஒரு கருப்பினத்தவர் குடும்பத்தில் பிறந்தார் முகமது அலி. பிறந்தபோது அவருக்கு சூட்டப்பட்ட பெயர் Cassius Marcellus Clay.
சிறு வயதிலிருந்தே அவர் உடல் வலிமை மிக்கவராக இருந்தார். அந்த வயதிலேயே மிகவும் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரராக வர வேண்டும் என்ற கனவு அவரிடம் இருந்தது. பின்னர் கருப்பின முஸ்லீம் இயக்கத்தில் சேர்ந்து இஸ்லாமைத் தழுவிய அவர் முகமது அலி என தன் பெயரை மாற்றிக் கொண்டார். பதினெட்டு வயதானபோதே அனைத்துலக குத்துச் சண்டை விருதை வென்றார் அலி. 1960-ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட அவருக்கு தங்கபதக்கம் கிடைத்தது. அப்போதுகூட விளையாட்டு உலகம் அவரை சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
1965-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் நாள்தான் முகமது அலி என்ற புலி வீறுகொண்டு எழுந்து குத்துச் சண்டை உலகில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியது. அந்த ஆண்டில்தான் முகமது அலி சோனி லிஸ்டன் என்ற உலக குத்துச்சண்டை வீரரை வீழ்த்தி “உலக ஹெவி வெய்ட்” (World Heavyweight Champion) குத்துச் சண்டை விருதை முதன் முதலாக வென்றார். குத்துச் சண்டை உலகில் ஒரு மாவீரன் உருவானதை அன்று விளையாட்டு உலகம் கண்டுகொண்டது. 1964 முதல் 1967 வரை “உலக ஹெவி வெய்ட்” குத்துச் சண்டை வீரராக திகழ்ந்தார் அலி. அதன் பின்னர் அமெரிக்கா இராணுவத்தில் கட்டாயச் சேவை புரிய மறுத்ததால் அவரது பட்டம் பறிக்கப்பட்டது. மீண்டும் அந்த பட்டத்தை வெல்ல அவர் Joe Frazier-யுடன் பொருதினார். ஆனால் தோல்வியைத் தழுவினார்.
விளையாட்டில் வெற்றி தோல்வி மாறி மாறி வரும் என்பதை உணர்ந்த அலி மனம் தளராமல் கடும் பயிற்சியில் ஈடுபட்டார். 1974-ஆம் ஆண்டு மீண்டும் ஜோ பிரேசியருடன் பொருதி அவரை வீழ்த்தி உலக விருதை மீண்டும் வென்றார். பிறகு Leon Spinks-யுடன் தோல்வியைத் தழுவிய முகமது அலி 1978-ஆம் ஆண்டு அதே Spinks-ஐ வீழ்த்தி உலக விருதை மூன்றாவது முறையாக மீண்டும் கைப்பற்றினார். உலக குத்துச் சண்டை வரலாற்றில் தன்னை வீழ்த்தியவர்களையே வீழ்த்தி உலக விருதை மூன்று முறை வென்ற முதல் வீரர் முகமது அலி என்பது குறிப்பிடதக்கது. அதன் பிறகுதான் அவருக்கு The Greatest என்ற பட்டம் சூட்டப்பட்டது. அவர் 61 முறை குத்துச் சண்டை போட்டியில் களமிறங்கியிருக்கிறார். அதில் 56 போட்டிகளில் வெற்றி பெற்று ஐந்தே ஐந்து தோல்விகளைதான் தழுவினார்.
37 முறை நாக்-அவுட் முறையில் வென்றார் என்பது குறிப்பிடதக்கது. நான்காவது முறையாக அந்த விருதை வெல்லும் முயற்சியில் Larry Holmes-யுடன் பொருதி தோற்றார் முகமது அலி. அந்த தோல்விக்கு வயதும் ஒரு காரணம். ஆனால் ஏற்கனவே அவருக்கு கிடைத்திருந்த பெயருக்கும், புகழுக்கும் இந்த தோல்வியால் பாதிப்பில்லை. உலகம் முழுவதும் குத்துச் சண்டையைப் பிரபலபடுத்தியதில் முகமது அலிக்கு பெரும் பங்கு உண்டு. அவரைப் பின்பற்றி இப்போது அவரது மகள் லைலா அலி பெண்கள் குத்துச் சண்டை உலகில் கலக்குகிறார். முகமது அலியை மையமாக வைத்து *The Greatest * என்ற திரைப்படமும் வெளியானது.
தமது பலத்தால் பலரை வீழ்த்திய முகமது அலியை Parkinsons நோய் வீழ்த்தியிருப்பது என்னவோ உண்மைதான். குத்துச் சண்டைகளின் போது அவருக்கு தலையில் விழுந்த குத்துகளால்தான் அவருக்கு அந்த நோய் ஏற்பட்டது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் குத்துச்சண்டை உலகுக்கு அவர் கொண்டு வந்த புகழையும், வசீகரத்தையும் இன்னொருவர் எட்டிப்பிடிக்க காலம் பல ஆகலாம் என்பதே விளையாட்டு உலகின் கணிப்பு. கருப்பினத்தவர்கள் தோல் உயர்த்தி நடக்க காரணமாயிருந்த பலரில் முகமது அலிக்கு நிச்சயம் முக்கிய பங்கு உண்டு. அவர் தனது வெற்றியைப்பற்றிக் குறிப்பிடும்போது இவ்வாறு சொல்கிறார்:
“வீரர்கள் வெறும் உடற்பயிற்சி கூடங்களில் உருவாவதில்லை. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அவர்களுக்கு திறமையும் முக்கியம் மனோதிடமும் முக்கியம். ஆனால் திறமையைவிட மனோதிடம்தான் அதிமுக்கியம்”.
உங்கள் மனதிலும் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் உண்டா? திறமைகூட முக்கியம் இல்லை. மனோதிடம் உண்டா? அப்படியென்றால் சிறிது காலம் எடுத்துக்கொண்டாலும் தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியோடு தொடர்ந்து போராடுங்கள். முகமது அலியைப்போல் உங்களுக்கும் நீங்கள் விரும்பும் வானம் வசப்படும்.
(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான். தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்