- மைக்கலாஞ்சலோ
60. மைக்கலாஞ்சலோ
60. மைக்கலாஞ்சலோ
2012-03-06T13:47:00.001+08:00
வணக்கம் நண்பர்களே,
இன்று (06/03/2012) மார்ச் 06-ஆம் நாள் நான்கு உயிர்கள் கொண்ட ஓர் ஒப்பற்ற மாபெரும் கலைஞன் மைக்கலாஞ்சலோ பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாற்றுப்பதிவு ஒரு சமர்ப்பனம்!.
இன்று நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகரை நான்கு உயிர்கள் கொண்ட ஓர் ஒப்பற்ற கலைஞனாக வருணிக்கிறது வரலாறு. கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, கவிதைக்கலை ஆகிய நான்கு துறைகளுக்கு அவர் புத்துயிர் ஊட்டியதால்தான் அந்த வர்ணனை. அவர் வேறு யாருமல்ல Renaissance எனப்படும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் ஓவியத்திற்கும், சிற்பத்திற்கும் உண்மையான மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த மாபெரும் கலைஞன் மைக்கலாஞ்சலோ.
மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி 1475-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் நாள் இத்தாலியின் Caprese என்ற நகரில் பிறந்தார். அவர் பிறந்த சமயம் அவரது குடும்பம் ஏழ்மையில் உழன்று கொண்டிருந்தது. மைக்கலாஞ்சலோ சிறு வயதாக இருந்தபோது ஒரு கல்வெட்டியின் வீட்டில் அவரது கண்கானிப்பில் விடப்பட்டார். அப்போதிருந்தே உளியையும், சுத்தியலையும் கையாளத் தொடங்கினார் மைக்கலாஞ்சலோ. சிறுவயதிலிருந்தே அவருக்கு ஓவியத்தின் மீது அலாதி பிரியம் இருந்தது. தந்தையும், மாமன்களும் அவரது கவனத்தை திசை திருப்ப முயன்று தோற்றுப் போயினர்.
ஓவியக்கலையைக் கற்றுகொள்ள அவர் அப்போது புகழ்பெற்றிருந்த Domenico Ghirlandaio என்பவரிடம் மாணவராக சேர்ந்தார். மைக்கலாஞ்சலோவின் திறமையைப் பார்த்து அந்த ஆசிரியரே பொறாமைப்பட்டதாக ஒரு வரலாற்று குறிப்பு கூறுகிறது. மீன் சந்தைக்கு அடிக்கடி சென்று மீன்களின் கண்கள், செவுல்கள் ஆகியவற்றை கூர்ந்து கவனித்து பின்னர் அவற்றை தத்ரூபமாக வரைவாராம் மைக்கலாஞ்சலோ. பின்னர் Lorenzo de Medici என்பவரிடம் சிற்பக்கலையை கற்றுக்கொள்ள விரும்பினார் மைக்கலாஞ்சலோ.
ஒருமுறை பளிங்கு கல்லில் ஒரு முதியவர் சிரிப்பதைப்போன்ற சிற்பத்தை வடித்து அதற்கு மெருகேற்றிக்கொண்டிருந்தார் மைக்கலாஞ்சலோ. அதனைப் பார்த்த லொரான்ஸோ கிண்டலாக முதியவருக்கு எல்லாப் பற்களும் இருக்கின்றனவே என்று கேட்க சற்றும் தயங்காமல் உளியையும், சுத்தியலையும் எடுத்து மேல் வரிசையில் இருந்த பல்லை ஒருசில நிமிடங்களில் உடைத்தெடுத்தாராம். அந்த லாவகத்தைக் கண்டு அதிசயித்துப்போன லொரான்ஸோ மைக்கலாஞ்சலோவின் தந்தையின் அனுமதி பெற்று அவரை தன் சொந்த வீட்டிலேயே வைத்துக்கொண்டார். 1492-ஆம் ஆண்டு லொரான்ஸோ இறக்கும் வரை அவர்கூடவே இருந்து தனது சிற்பக்கலையை வளர்த்துக்கொண்டார் மைக்கலாஞ்சலோ.
Lorenzo di Pierfrancesco de Medici என்ற அழகிய பெண்ணை காதலிக்கத் தொடங்கியபோதுதான் அவருக்குள் இருந்த கவிதை ஊற்று பெருக்கெடுக்கத் தொடங்கியது. அவர் பல கவிதைகளை இயற்றினார். 1495-ஆம் ஆண்டில் அவர் Sleeping Cupid என்ற உறங்கும் காமதேவன் சிலையை செதுக்கினார். நான்கு ஆண்டுகள் கழித்து அவர் உருவாக்கிய Pieta சிற்பம் இன்றும் Vatican தேவாலாயத்தை அலங்கரிக்கின்றன. மைக்கலாஞ்சலோவிற்கு பெரும் புகழை சேர்த்த சிற்பம் டேவிட் சிலை. ஓர் உருக்குலைந்து போன பளிங்கு கல்லிருந்து அவர் வார்த்தெடுத்த அற்புத சிற்பம்தான் அந்த டேவிட் சிலை. அந்த சிலையை உருவாக்க அவருக்கு பதினெட்டு மாதங்கள் தேவைப்பட்டன.
1508-ஆம் ஆண்டு அவரது புகழை உலகமெங்கும் பரவச் செய்யப்போகும் ஓர் அழைப்பு வந்தது. அழைப்பு என்பதை விட கட்டளை என்று சொல்லலாம். சிஸ்டீன் தேவாலயம் (Sistine) கட்டப்படத் தொடங்கிய அந்தக் காலகட்டத்தில் அப்போது போப்பாக இருந்த இரண்டாம் ஜூலியஸ் அந்த தேவாலயத்தின் சுவர்களிலும், கூரைகளிலும் பைபிள் காட்சிகளை ஓவியங்களாக தீட்டித்தருமாறு மைக்கலாஞ்சலோவைப் பணித்தார். தான் ஓவியன் அல்ல வெறும் சி்ற்பிதான் என்று மைக்கலாஞ்சலோ எவ்வுளவோ எடுத்துக்கூறியும் போப் நிர்ப்பந்தித்ததால் மிகுந்த தயக்கத்தோடுதான் அவர் அந்த பணியை தொடங்கியதாக வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.
ஓவியங்கள் வரைய வேண்டிய பரப்பளவு சுமார் பத்தாயிரம் சதுர அடி. ஐந்து உதைவியாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு பணியைத் தொடங்கினார் மைக்கலாஞ்சலோ. ஆனால் அவரது முன்கோபத்தை தாளாத உதவியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக விலக தனி மனிதனாக தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. தாமஸ் ஆல்வா எடிசன் அப்போது இல்லை என்பதால் மின் விளக்குகளும் கிடையாது. வெறும் மெழுகுவர்த்தியின் ஒளியில் உணவு, உறக்கம் மறந்து தனது அதீத ஓவியங்களை தேவாலயத்தின் மிக உயரமான உட்கூரைகளில் தீட்டினார் மைக்கலாஞ்சலோ. பல ஓவியங்களை அவர் படுத்துக்கொண்டே தீட்டியதால் தூரிகையிலிருந்து சிதறிய வண்ணங்கள் அவரது கண்களை பதம் பார்த்தன.
ஓவியங்கள் தீட்டும்போது இதுபோன்ற சில இடையூறுகள் ஏற்பட்டாலும் எந்த சிரமமும் பார்க்காமல் இரவு பகலாக உழைத்து நான்கு ஆண்டுகளில் தனது ஓவிய உற்சவத்தை நிறைவு செய்தார் மைக்கலாஞ்சலோ. இன்று தங்களை சிறந்த ஓவியர்கள் என்று சொல்லிக்கொள்ள விரும்பும் எவரும் முதலில் தரிசிக்க வேண்டிய காட்சிக்கூடமாக திகழ்கிறது சிஸ்டீன் தேவாலாயம். மைக்கலாஞ்சலோ வரைந்த ஆதாமின் பிறப்பு என்ற ஓவியம் உலக ஓவியர்கள் இன்றும் பார்த்தும் வியக்கும் ஓர் அற்புத காவியம். இறைவனின் விரல் உயிரற்ற ஆதாமின் விரலைத் தீண்ட ஆதாம் உயிர் பெறுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்த ஓவியத்தில் ஆதாமுக்கே அடையாளம் தந்திருக்கிறார் மைக்கலாஞ்சலோ.
அதேபோன்ற சுமார் 340 ஓவியங்களை சிஸ்டீன் (Sistine) தேவாலயத்தின் சுவர்களிலும், கூரைகளிலும் வடித்து தனது தூரிகையால் ஒரு ஓவிய ராஜாங்கத்தையே நடத்தி முடித்தார் மைக்கலாஞ்சலோ. அவருக்கு 60 வயதானபோது மைக்கலாஞ்சலோவை வத்திகனின் அரசவை கட்டடக்கலை நிபுனராகவும், சிற்பியாகவும் ஓவியராகவும் நியமித்தார் மூன்றாம் போப். அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட மைக்கலாஞ்சலோவின் தூரிகை அடுத்த ஏழு ஆண்டுகளில் தீட்டிக்கொடுத்த ஓர் அற்புத ஓவியம்தான் The Last Judgment. அவருடைய நெருங்கிய நண்பரான Ascanio Condivi மைக்கலாஞ்சலோவை வருணிக்கும்போது இவ்வாறு சொல்கிறார்.
“மைக்கலாஞ்சலோ ஒரு ஓவியத்திலோ அல்லது சிற்பம் செதுக்குவதிலோ ஈடுபட்டால் அவரது கவனத்தை எந்த சக்தியாலும் திசை திருப்ப முடியாது. உணவுகூட அவருக்கு இரண்டாம்பட்சம்தான். பலமுறை உடைகளையும், காலணிகளையும் கழற்றாமலேயே உறங்குவார் வேலை செய்வார். அதனால் சில சமயங்களில் அவர் காலுறையை கழற்றும்போது அவரது தோலும் உரிந்து வரும். தான் செய்யும் வேலையின் மீது அவருக்கு அவ்வுளவு ஈடுபாடு இருந்தது”
திருமணம் செய்துகொள்ளாமல் கடைசிவரை தனியாகவே வாழ்ந்த மைக்கலாஞ்சலோவைப் பார்த்து அவரது நண்பர் ஒருமுறை உங்கள் பெயர் சொல்ல உங்களுக்கு ஒரு வாரிசு இல்லையே என்று கவலையோடு கேட்டார். அதற்கு மைக்கலாஞ்சலோ என்ன சொன்னார் தெரியுமா?
“ஓவியமும் சிற்பமும்தான் எனக்கு வாழ்க்கைப்பட்ட மனைவி, என்னுடைய படைப்புகள்தான் நான் இந்த உலகிற்கு விட்டு செல்லும் எனது குழந்தைகள் அவற்றுக்கு அவ்வுளவாக மதிப்பு இருக்காது என்றாலும் அவற்றில் நான் என்றென்றும் வாழ்வேன்”
மதிப்பு இருக்காது என்று அவர் விட்டுச்சென்ற படைப்புகள் இன்று விலைமதிக்க முடியாதவை. மைக்கலாஞ்சலோவை போன்றவர்களை சந்திக்கும்போதுதான் வரலாறு நெஞ்சு உயர்த்திக்கொள்ள முடிகிறது. அந்த மாபெரும் கலைஞன் 1564-ஆம் ஆண்டு தனது 89-ஆவது அகவையில் இவ்வுலகை விட்டு விடைபெற்றுக்கொண்டபோது இனி இப்படி ஒரு கலைஞனை மீண்டும் எப்போது சந்திக்கப் போகிறோம் என்று எண்ணி அந்த வரலாறும் கண்ணீர் சிந்தியிருக்க வேண்டும். அவ்வுளவு திறமைகளையும் வைத்துக்கொண்டு சோம்பித் திரிந்திருந்தால் மைக்கலாஞ்சலோ மக்கள் தொகையில் ஒரு புள்ளி விபரமாகவே இருந்திருப்பார்.
அவரது வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம் மிக எளிதான ஒன்றுதான். அவருக்கு வானம் வசப்பட்டதற்கான முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுத்த பணியில் காட்டிய ஈடுபாடு, விடாமுயற்சி, பயபக்தியுடன் கூடிய கடின உழைப்பும்தான். மைக்கலாஞ்சலோவைப்போல் நாம் ஊண் உறக்கம் மறந்து காரியங்களில் ஈடுபடத் தேவையில்லை. நாம் செய்யும் எந்த ஒரு வேலையிலும் நூறு சதவீத ஈடுபாடும், விடாமுயற்சியுன் கூடிய கடின உழைப்பும் இருந்தால் போதும் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்.
(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான். தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்