- மோட்ஸார்ட் …
62. மோட்ஸார்ட் (இசை மேதை Mozart)
62. மோட்ஸார்ட் (இசை மேதை Mozart)
2011-06-20T15:04:00.002+08:00
எதற்கும் மயங்காத உள்ளம் இசைக்கு மயங்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். உலகத்திற்கே பொதுவான ஒரு மொழி என்றால் அது இசையாகத்தான் இருக்க முடியும். மனிதனின் எந்த ஒரு மனோநிலைக்கும் உகந்த ஒரு மொழி இசை. அப்படிப்பட்ட இசையை பாமரனால்கூட ரசிக்க முடியும் ஆனால் ஒரு சிலரால்தான் அற்புதமான உயிரோட்டமுள்ள இசையை உருவாக்க முடியும். அந்த ஒருசிலரில் முக்கியமானவர் தன் வாழ்நாளில் இசைபட வாழ்ந்தவரும் உலகிற்கு ஆஸ்திரியா வழங்கிய இசைகொடையுமான இசைமேதை மோட்ஸார்ட்.
1756 ஆம் ஆண்டு ஜனவரி 27ந்தேதி ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் பிறந்தார் வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட் (Wolfgang Amadeus Mozart). மோட்ஸார்ட் பிறவி மேதை என்பதற்கான அறிகுறிகள் ஆரம்பத்திலேயே தென்பட தொடங்கின. மோட்ஸார்ட்டின் தந்தை லேபோல்ட் மோட்ஸார்ட் ஒரு சிறந்த வயலின் இசைக்கலைஞர். மோட்ஸார்ட்டுக்கு அவர் இசை கற்பித்தார். மோட்ஸார்ட் இசைக்கருவியை வாசிக்க தொடங்கியபோது அவருக்கு வயது மூன்றுதான். நான்காவது வயதில் அவர் இசை நூல்களை படிக்கத் தொடங்கினார். ஐந்தாவது வயதில் அவரே பாடல்களை இயற்றி இசையமைக்கத் தொடங்கினார். ஏழு வயதில் சொனாட்டாக்களை எழுதத் தொடங்கிய அவர் தனது எட்டாவது வயதில் ஒரு சிம்ஃபொனியை எழுதி முடித்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!!
மோட்ஸார்ட்டுக்கும் முன்பும் பின்பும் எத்தனையோ இசை மேதைகள் உதித்திருக்கிறார்கள் ஆனால் அவரைப்போல அந்த சிறிய வயதில் அவர்கள் அத்தனை சிகரங்களை தொட்டதில்லை. பத்து வயதுக்குள் அனைத்து இசைக்கருவிகளையும் வாசிக்கக் கற்றுக்கொண்ட மோட்ஸார்ட்டை இசை உலகம் அதிசயமாக பார்த்தது. இசை விற்பன்னர்கள் மோட்ஸார்ட்டை ஒரு தவப்புதல்வனாக பார்த்தனர். இசை கச்சேரிகள் நடத்தித் தருமாறு பல தேசங்கள் அவருக்கு அழைப்பு விடுத்தன. எனவே விளையாடித் திரிய வேண்டிய அந்த பிஞ்சுப் பருவத்தில் ஒவ்வொரு இடமாக பயணம் செய்து இசை கச்சேரிகளை நடத்தினார் மோட்ஸார்ட். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் தனது இசையை கேட்டவர்களையெல்லாம் சொக்க வைத்தார் மோட்ஸார்ட். அதே நேரத்தில் அவர் இசைக்கும்போது ஒட்டுமொத்த அமைதியை எதிர்பார்ப்பார். எவராவது இருமினாலோ அல்லது தும்மினாலோகூட அவருக்கு கோபம் பொங்கிவருமாம் அந்தளவுக்கு தனது இசைக்கு மிக முக்கிய அந்தஸ்த்தை கொடுத்திருந்தார் மோட்ஸார்ட்.
மோட்ஸார்ட்டுக்கு பத்து வயதானபோது அவரது இசைத்திறனைப்பற்றி கேள்விபட்ட வியட்நா மகாராணி மோட்ஸார்ட்டை தனது அரண்மனைக்கு அழைத்து இசை மீட்டச் சொன்னார். அந்த பத்து வயது பாலகனின் இசை பிரபாகத்தை கேட்டு மெய் மறந்துபோன ராணியார் பாராட்ட வார்த்தையின்றி மோட்ஸார்ட்டை தனது மடியில் வைத்து முத்தமிட்டு மகிழ்ந்தார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. பனிரெண்டு வயதானபோது ஜெர்மன் மொழியில் ஒரு இசை கச்சேரியை நடத்தி முடித்தார் மோட்ஸார்ட். பதினான்கு வயதில் அவர் இயக்கி வழங்கிய librettist Lorenzo Da Ponte என்ற ஆப்ரா இசைக்கச்சேரி முடிந்தபோது அனைவரும் எழுந்து நின்று அரங்கம் அதிர கைதட்டு வழங்கினர் அந்த வயதில்தான் தியோப்லஸ் என்ற தன் பெயரை அமதியுஸ் என்று மாற்றிக்கொண்டார் மோட்ஸார்ட். அமதியுஸ் என்ற பெயர் அழகாக இருப்பதாக அவர் நினைத்ததே அதற்கு காரணம். அன்றிலிருந்து அவர் வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட் என்று அழைக்கப்பட்டார்.
மோட்ஸார்ட்டின் இசைத்திறமையை மெச்சிய சால்ஸ்பர்க் இளவரசன் தன் அரண்மனையில் இசைத் தலைவனாக இருக்குமாறு மோட்ஸார்ட்டுக்கு அழைப்பு விடுத்தார். அதில் அவருக்கு ஆர்வம் இல்லையென்றாலும் தனது தந்தையின் விருப்பத்திற்காக அந்த பொறுப்பை ஏற்று ஒன்பது ஆண்டுகள் அரண்மனையில் இருந்தார். ஆனால் இளவரசன் மோட்ஸார்ட்டை ஒரு வேலையாள் போல் நடத்தியதால் தனது 25 ஆவது வயதில் அரண்மனையை விட்டு வெளியேறினார். 26 ஆவது வயதில் மோட்ஸார்ட் கான்ஸ்டண்ட் என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்துகொண்டார். இசை உலகில் கொடிகட்டி பறந்த அவரது குடும்ப வாழ்க்கையில் சோகத்திற்கு மேல் சோகம். மோட்ஸார்ட் தம்பதியினருக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் நான்கு குழந்தைகள் பிறந்து சில மணி நேரத்தில் இறந்தனர். இசையால் எவரையும் மசிய வைத்த அந்த மேதையை அந்த மரணங்கள் வெகுவாக பாதித்தன. அவரது கடைசிக் காலத்தில் கடன் தொல்லையால் அவதியுற்றார் என்று வரலாறு குறித்து வைத்திருக்கிறது.
இசையை கையாண்ட அளவுக்கு மோட்ஸார்ட்டுக்கு நிதியை திறமையாக கையாளத் தெரியவில்லை. இசையில் ஓயாத ஆராய்ட்சி, ஓய்வில்லாத இசை நிகழ்ச்சிகள், புதிய இசைக்கூறுகளை உருவாக்குதல் என்று ஒவ்வொரு மணித்துளியையும் இசைக்காகவே செலவிட்டார் மோட்ஸார்ட் அதனால் அவரது உடல்நிலைகூட பாதிக்கப்பட்டது. நோய்வாய்ப்பட்டு படுத்திருந்தபோதுகூட அவரது படுக்கையில் ஏதாவது ஒரு இசைக்கருவி இருந்துகொண்டே இருக்கும். கண்மூடியபடி அவர் அந்தக் கருவிகளை மீட்டிக்கொண்டிருப்பார். தன் மரணப்படுக்கையில்கூட அவர் ‘ரெக்யும் மாஸ்’ என்ற இசைக்கூறை எப்படி நிறைவு செய்ய வேண்டும் என்று தனது மாணவர்களுக்கு கூறிக்கொண்டிருந்தாராம். இயற்கையையே தனது இசையால் மசிய வைத்த அந்த இசை மேதையின் வாழ்நாளை பொருத்தமட்டில் இயற்கை பாரபட்சமாகவே நடந்துகொண்டிருக்கிறது.
36 வயது நிறைவதற்கு இரண்டு மாதங்கள் இருந்தபோது 1791 ஆம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி அவரது மூச்சு நின்றது. அப்போது இசை உலகம் ஒரு கணம் ஸ்தம்பித்துபோனது. மோட்ஸார்ட்டின் நல்லுடல் ஆராவாரமின்றி கிராமத்து இடுகாட்டில் புதைக்கப்பட்டது. இசைக்கு முகவரி தந்த அந்த மேதைக்கு இடுகாட்டில்கூட முகவரி இல்லை. ஏனெனில் அந்தக்கால வழக்கத்தின்படி கல்லறையில் பெயர் பொறிக்காமலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார். தான் வாழ்ந்த 36 ஆண்டுகளில் இசையின் எல்லாப் பிரிவுகளிலும் அழியா முத்திரைப்பதித்தார் மோட்ஸார்ட். _ *The Marriage of Figaro, Don Giovanni, The Magic Flute * _ஆகிய மூன்று ஆப்ரா கச்சேரிகள் உலக இசை வரலாற்றில் ஆகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. அவரது இசைத் திறமையை மெச்சி அப்போது போப்பாக இருந்த கிளமென்ஸ் மோட்ஸார்ட்டுக்கு “நைட் ஆப் த கோல்டன்ஸ்பர்” என்ற தேவாலயத்தின் செவ்வாலியே விருதை வழங்கி கவுரவித்தார்.
மோட்ஸார்ட் ஒரு பிறவி மேதைதானே அவருக்கு வானம் வசப்பட்டுதானே ஆக வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் அவ்வளவு ஞானம் இருந்தும் மோட்ஸார்ட் இசையையே எல்லாவற்றுக்கும் மேலாக நேசித்தார். ஊண் உறக்கம் மறந்து அந்த இசையையே சுவாசித்தார். அப்படிப்பட்ட ஒரு முழுமையான ஈடுபாடுதான் அவரை இசை உலகின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. பிறவி மேதை என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான். நமக்கும் எதிலும் பிறவித்திறன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் துறை, வேலை, வாழ்க்கை இப்படி எல்லாவற்றிலும் முழு ஈடுபாடு காட்டி முன்னேற்றம் நாடினால் நமக்கும் அந்த வானம் வசப்பட்டே ஆகவேண்டும்.
(தகவலில் உதவி - நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
_* _பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.__ *
_* __வாழ்க வளமுடன்_ *
என்றும் நட்புடன்
*உங்கள். மாணவன் *