- லியொனார்டோ …
70. லியொனார்டோ டாவின்சி
70. லியொனார்டோ டாவின்சி
2012-04-15T11:44:00.001+08:00
வணக்கம் நண்பர்களே,
மாபெரும் ஓவியக் கலைஞன் லியொனார்டோ டாவின்சி பிறந்த தினமான இன்று ஏப்ரல்-15 (15/04/2012) அவரது வாழ்க்கை வரலாறை பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்…!
1911-ஆம் ஆண்டு பாரிஸின் புகழ் பெற்ற லூவர் அரும்பொருளகத்திலிருந்து ஓர் ஓவியம் களவு போனது. ஓவியத்தைக் கூடவா திருடுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுவல்ல ஆச்சர்யம் அந்த ஓவியம் களவு போன பிறகு அது மாட்டப்பட்டிருந்த வெற்று இடத்தைப் பார்க்கவே அரும்பொருளகத்தில் கூட்டம் அலை மோதத் தொடங்கியது. ஓவியம் இருந்த இடத்தைப் பார்க்கவே உலகம் ஆசைப்பட்டது என்றால் அந்த ஓவியத்தில் அப்படி என்னதான் இருந்தது என்று யோசிக்கிறீர்களா? அந்த ஓவியத்தின் பெயரை சொன்னாலே உங்கள் உதடுகள் புன்னகை பூக்கும். சில காலங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அந்த மகா ஓவியம் இப்போது மீண்டும் அதே லூவர் அரும்பொருளகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது என்பது வேறு விசயம்.
மாபெரும் ஓவியர், தேர்ந்த சிற்பி, சிறந்த கவிஞர், இசை விற்பன்னர், தத்துவ மேதை, விளையாட்டு வீரர், பொருளியல் வல்லுநர், கட்டடக்கலை நிபுனர், கடல் ஆராய்ச்சியாளர், வானியல் விஞ்ஞானி, நீர்ப்பாசன நிபுனர், இராணுவ ஆலோசகர் என பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் பிரகாசித்த ஒருவரை எப்படி அறிமுகபடுத்துவது? என்ன சொல்லி கெளரவப்படுத்துவது? அந்தக் கலைஞன் தீட்டிய அந்த அதிசய ஓவியம் மோனலிசா, அந்த தெய்வீக புன்னகையை தன் தூரிகையால் வடித்துத் தந்த மாபெரும் கலைஞன் லியொனார்டோ டாவின்சி.
இத்தாலியின் ப்ளோரன்ஸ் (Republic of Florence) நகருக்கு அருகே இருக்கும் வின்சி (Vinci) என்ற கிராமத்தில் 1452-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் நாள் பிறந்தார் லியொனார்டோ டாவின்சி. அவரது பிறப்பில் கொஞ்சம் களங்கம் வழக்கறிஞரான தந்தைக்கும், விவசாயக் கூலி வேலை பார்த்த தாய்க்கும் திருமணம் ஆகாமலேயே பிறந்தவர்தான் டாவின்சி. அவர் பிறந்ததும் தாயார் வேறு ஒருவரை மணந்து கொண்டு சென்று விட தாய்ப்பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் அவர் வளர்ந்தார். சிறு வயதிலேயே வரைவதிலும், மாதிரி வடிவங்களை உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டினார் டாவின்சி. அவருக்கு இடது கைப்பழக்கம் இருந்தாலும் இரண்டு கைகளாலும் ஒரே சமயத்தில் ஓவியம் வரையக்கூடிய ஒப்பற்ற ஆற்றல் அவரிடம் இருந்தது. அவர் தன் விளக்கக் குறிப்புகளையும், கடிதங்களையும் இடமிருந்து வலமாக எழுதியவர். எனவே அவற்றை படிக்க வேண்டுமென்றால் கண்ணாடி முன் அதை வைத்து கண்ணாடியில் தெரியும் பிரதி பிம்பத்தைப் பார்த்து படிக்க வேண்டும்.
சிறு வயதானபோது சந்தைக்கு சென்று விற்பனைக்காக கூண்டில் அடைக்கப்பட்ட அழகிய பறவைகளை வாங்கி அவற்றை சுதந்திரமாக பறக்க விட்டு அதன் அழகை ரசிப்பாராம். அந்தக் காட்சியை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு ஓவியமாக வரைவார். அந்தளவுக்கு அவருக்கு ஞாபக சக்தி இருந்தது. குதிரைகள் என்றால் டாவின்சிக்கு அலாதி பிரியம். உடல் வலிமையுடன் திகழ்ந்த அவர் குதிரை லாடங்களை வெறும் கைகளால் இரண்டாக உடைக்கக்கூடிய வலிமையும் பெற்றிருந்தார். இயற்கையை அதிகம் நேசித்த டாவின்சிதான் ஓவியங்களில் இயற்கையை பிரதிபலித்த முதல் ஓவியர் என்கிறது வரலாறு. தன் ஓவியங்களில் எந்த கட்டுப்பாட்டையும், விதிமுறைகளையும் அவர் பின்பற்றியதில்லை. ஓவியங்களில் ஒளியையும், அதன் நிழலையும் தத்ரூபமாக வரைந்து காட்டிய முதல் ஓவியர் டாவின்சிதான். அதோடு அவர் நின்று விடவில்லை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தனியாத தாகம் அவரிடம் இருந்தது.
ஒளியையும், நிழலையும் வரைந்த அவர் அவற்றுக்கு பின் உள்ள இயற்கை நியதிகளை அறிந்து கொள்வதற்காக ஒளியின் தன்மைப் பற்றியும், கண்களின் அமைப்புப் பற்றியும் கற்றறிந்தார். அவர் எழுதி வைத்த குறிப்புகள் பதிக்கப்பட்டிருந்தால் பலவற்றை சந்திக்க நாம் பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்திருக்காது. அந்தக் குறிப்புகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை புறக்கணிக்கப்பட்டன. அவருடைய குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டபோது உலகம் வியப்பில் ஆழ்ந்தது ஏன் தெரியுமா? விமானங்கள் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலகட்டத்திலேயே அதாவது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே வான் குடையைப் பற்றி சிந்தித்து துல்லியமாக வரைந்து வைத்திருக்கிறார் டாவின்சி. கடிகாரம் கண்டுபிடிக்கப்படாத ஒரு சூழ்நிலையில் அலாரம் பற்றி சிந்தித்திருக்கிறார்.
எந்த அறிவியல் கருவிகளும் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலகட்டத்திலேயே ஒரு தாயின் கருப்பையில் குழந்தை எப்படி இருக்கிறது என்பதை கற்பனை செய்து வரைந்திருக்கிறார். அந்த ஓவியத்துக்கும், உண்மை நிலைக்கும் வேறுபாட்டை கான்பது அரிது. ஒளி அலைகளைப் பற்றி அவர் செய்த ஆய்வுதான் பிற்காலத்தில் புகைப்பட கருவிக்கு அடிப்படையாக அமைந்தது. மனிதர்களை ஓவியமாக வரைந்த போது மனிதனின் உடற்கூறியலை ஆராய்ச்சி செய்தார். செடிகளையும், மரங்களையும் வரைந்தபோது தாவரவியலை ஆராய்ந்தார். அந்தக் காலகட்டத்திலேயே விமானத்தின் மாதிரியை வடிவமைத்தார். நீராவி பற்றியும், பீரங்கிகள் பற்றியும், கப்பல் வடிவமைப்பு பற்றியும் சிந்தித்து வரைந்தார்.
பல நூற்றாண்டுகள் கழித்து உருவானவற்றையும், அந்த ஓவியங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது விஞ்ஞானிகள் மலைத்தனர். ஏனெனில் எதிர்காலத்தை தத்ரூபமாக சித்தரிந்திருந்தார் டாவின்சி. இவ்வுளவு சிறப்புகள் இருந்தும் டாவின்சியின் பெயரை நமக்கு நினைவு படுத்துவது ’மோனலிசா’ என்ற அந்த மந்திரப் புன்னகை ஓவியம்தான். 1503-ஆம் ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டு அந்த அதீத ஓவியத்தை வரைந்து முடித்தார் டாவின்சி. ஓவியத்தின் அழகை கண்டு தன்னைத்தானே நம்ப முடியாமல் அவர் வியந்து போனார் என்று ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. ஒரு புகைப்படத்தில்கூட அவ்வுளவு தத்ரூபமாக ஒரு புன்னகையைப் பதிவு செய்ய முடியுமா? என்பது ஆச்சர்யமான ஒன்றுதான். அந்தப் படம் வைக்கப்பட்டிருந்த வெற்று இடத்தை பார்க்கத்தான் லூவர் அரும்பொருளகத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
500 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த ஓவியத்தின் வசீகரம் குன்றவில்லை. டாவின்சிக்கு பெருமை சேர்த்த மற்றொரு ஓவியம் _* The Last Supper *_ எனப்படும் இயேசுவின் கடைசி விருந்து. Renaissance எனப்படும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் இத்தாலியில் லியொனார்டோ டாவின்சியைப் போல் பல்வேறு துறைகளில் பிரகாசித்தவர்கள் வேறு யாரும் கிடையாது. அந்த மகா கலைஞனின் புகழ் இத்தாலிக்கும் அப்பால் பரவியது. 1516-ஆம் ஆண்டில் பிரான்ஸ் மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் தம் நாட்டில் வந்து வசிக்குமாறு அழைப்பு விடுக்கவே பிரான்ஸ் சென்றார் டாவின்சி. அவருக்காகவே வழங்கப்பட்ட ஒரு மாளிகையில் வசித்து வந்தார். 1519-ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் தமது 67-ஆவது வயதில் அவர் இயற்கை எய்தினார்.
பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் சிறந்து விளங்கியதால் தசாவதாரம் கண்ட டாவின்சி என்று அவரை என்று வருணிக்கிறது ஒரு குறிப்பு. கடந்த 500 ஆண்டுகளில் அவரைப் போன்ற ஒருவரைத்தான் சந்தித்திருக்கிறது வரலாறு. இன்னும் 500 ஆண்டுகள் கடந்தாலும் அவரைப் போன்ற ஒருவரை நாம் சந்திக்க முடியுமா? என்பது சந்தேகம்தான். இருப்பினும் பத்து வேண்டாம் ஒரு துறையிலாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்த டாவின்சியின் வாழ்க்கை உதவும். அவரைப் போல பல துறைகளிலும் ஒரே நேரத்தில் நாம் பெயர் போட வேண்டியதில்லை. நமக்கு பிடித்த ஒரு துறையில் நமது முழு பலத்துடனும், விடாமுயற்சியுடனும் கடினமாக உழைத்தால் நம் வாழ்க்கையும் அந்த மோனலிசாவின் புன்னகையைப் போல் இனியதாக அமையும். அந்த வானமும் வசப்படும்.
(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான். தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)