/ கண்மணித்தமிழ் /
  1. பண்டைத் தமிழ் …

10. பண்டைத் தமிழ் வேளாளரில் இருவகையினர்

0.0 முன்னுரை

பண்டை இலக்கியம் வேளிர், கிழார் என்று இருவேறு பெயர்களால் வேளாண்மை செய்பவரைச் சுட்டுகிறது. இரண்டு பெயர்களும் ஒரே இனத்தைச் சுட்டுகின்றனவா? அன்றி வெவ்வேறு இனத்தைச் சுட்டுகின்றனவா? இப்பெயர் வேறுபாட்டின் அடிப்படையாய் அமையும் காரணம் என்ன? என்று காண்பது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். .

1.0 அடையாளங்கள்:

1.1 சங்க இலக்கியம் வேளிரைச் சுட்டும் போதெல்லாம் அவர்கள் விளைவித்த நெல் அல்லது நெல்லுடன் தொடர்புடைய கழனி, அதன் குவியல், ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறு ஆகியவற்றுடன் தொடர்புறுத்தியே பேசுகிறது.

“பழம்பல் நெல்லின் வேளூர்” (அகம்.166)

எனும் அடி பழைய நெல்லின் மிகுதியை வேளிர் ஊருடன் சேர்த்துப் பேசுகிறது.

“கழனி காவலர் கடுநந்து உடைக்கும்

தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்” (நற்றிணை- 280- பரணர்)- இது வேளிரது குன்றூரின் கழனி காவலர்; பழன யாமையின் முதுகில் நத்தையை உடைத்து உண்டமையைக் காட்சிப்படுத்துகிறது.

“...தொன்முதிர் வேளிர்

குப்பை நெல்லின் முத்தூறு” (புறம்.24)

இவ்வடி வேளிர் முத்தூற்றில் குவித்து வைத்திருந்த நெல்லைக் கண் முன்னர் கொண்டு வருகிறது.

“ஏர்பரந்தவயல் நீர்பரந்த செறுவின்

நெல்மலிந்த மனை …

நெடுவேளாதன் போந்தை” (புறம்.338)

இப் பாடல் அடிகளில்; நெடுவேள் ஆதனின் போந்தையில்; ஏரால் உழுத பரந்த வயலில்; நீர் நிறைந்து; அடுத்தகட்ட நடவடிக்கைக்குக் காத்திருப்பதாகக் கூறுவதுடன்; நெல் மிகுந்த வீடும் வருணிக்கப்பட்டுள்ளது.

1.2 வேளாண்மையில் ஈடுபட்ட கிழாரைப் பாடும்போது அவரது தோட்டமும், நெல்லுக்கு மாறான புல்லின் வளமும், அதை ஈவதும்

சுட்டப்படுகின்றன.

பண்ணனின் படப்பையில் விளைந்த மா, நெல்லி, பாதிரிப்பூ முதலியவை அவனோடு சேர்த்துப் பாடப்பட்டுள்ளன.

“கழல்கால் பண்ணன் காவிரி வடவயின்

நிழல் கயம் தழீஇய நெடுங்கால் மாவின்

தளிரேர் ஆகம்” (அகம்.177)

தலைவியின் ஆகத்திற்குப் பண்ணனது மாவின் தளிர் உவமையாக எடுத்தாளப்படுகிறது.

“பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப்

புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்

நீர்குடி சுவையில் தீவிய மிழற்றி” (அகம்.54)

தலைவியின் சொல்லின் சுவைக்குப் பண்ணன் தோட்ட நெல்லியைத் தின்றபின் நீரருந்தும் சுவை உவமையாகிறது.

விறலியின் கூந்தல் மணத்திற்கு பண்ணன் தோட்டத்துப் பாதிரிப்பூ மணம் உவமையாம்.

“கைவள்ளீகைப் பண்ணன் சிறுகுடிப்

பாதிரி கமழும் ஓதி ஒண்ணுதல்

இன்னகை விறலி” (புறம்.70)

எனும் பாடலடிகள்நோக்குக. நீர்வளம் குன்றிய போதும்,

“வெள்ளி தென்புலத் துறைய விளைவயற்

பள்ளம் வாடிய பயனில் காலை...

வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்

பெயர்க்கும் பண்ணன்” (புறம்.388)

எனவரும் பாடலடிகள் நுண்ணிய நூற்பொருளே பெரிய கையாகவும், நாவே மருப்பாகவும் வெல்கின்ற வாய்மொழியை உடைய புலவர்க்குப் புல்லின் விளைநிலத்தைத் தானமாகக் கொடுக்கக் கூடியவன் என உணர்த்துகின்றன. பண்ணனின் சிறுகுடி காவிரியின் வடகரையில் சோணாட்டில் இருந்ததென்றே புலவர் குறிப்பிடுவதால்;

“கழல்கால் பண்ணன் காவிரி வடவயின்” (அகம்.177)

கிழார்கள் வாழ்விடத்திற்கும்; புன்செய்ப்பயிர் விளைவித்தமைக்கும் தொடர்பில்லை என்பதும் தெற்றெனப் புலப்படுகிறது. .

“நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் அங்கே பொசியுமாம்” (மூதுரை 10) எனும்

பாடலில் நெல்லுக்கு மாறாகப் ‘புல்’ என்பது புன்செய்ப் பயிர்களைக் குறிக்கிறது. பொதுமக்கள் பேச்சு வழக்கில் இன்றுவரை கம்பு தானியத்தைப் புல் என்றே சுட்டுகின்றனர்.

அவனது உழவு வினைக்குரிய எருதுகளையும், ஏற்றத்தையும்; கிணைப்பறை கொட்டி இசைத்துப்

“...பண்ணற் கேட்டிர்…

வினைப்பகடு ஏற்றம் எழீஇக் கிணைதொடா

நாடொறும் பாடேனாயின்” (புறம்.388)

எனப் பாடலில் சேர்த்துப் பேசியுள்ளமை காண்க.

2.0 வேளாளர்

வேளிர் தமிழகம் போந்து ஆட்சி செய்த வேளாளர் ஆவர். கிழார் மன்னர் அல்லர்; வயலில் இறங்கி உழும் உழவர் வாழும் சிறுகுடிகளின் தலைவர் ஆவர்.

2.1 மு.இராகவையங்கார் ஆளும் தகுதி பெற்ற வேளிர் தமிழகம் வந்து குடியேறிய வேளாளர் என்பதை நிறுவியுள்ளார். (வேளிர் வரலாறு- ப.1-25)

2.2 கொண்கானத்தை ஆண்ட நன்னன் என்னும் வேளிர்குலத் தோன்றல் பற்றிப் பல சங்கப்பாடல்கள் இருக்க; கொண்கானக் கிழான் விதந்து போற்றப்படுவது; அவரிருவரும் வெவ்வேறு இனத்தினர் என்பதைக் குறிக்கிறது.

“திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்

அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்

சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்” (புறம்.154)

அரசர் அருகிலிருந்தும் உன்னை உள்ளி வந்தேன் எனும் மோசிகீரனாரின் பாடல் அரசரைப் போன்ற செல்வம் இல்லாதவன் கொண்கானக்கிழான் என்பதை வெளிப்படையாகச் சொல்கிறது. கடலுக்கு அருகே இருந்தாலும் தாகம் தீர்க்க; அறிந்தோரிடம் சிறிதளவு நீர் கேட்பதைப் போல என்பதால் கிழார் வேளிரைப் போல் மன்னர் அல்லர் என்பது உறுதி.

3.0 ஓரெயிலும் குறும்பும்:

3.1 வேளிர் ஒரெயில் கொண்ட குறுநில மன்னராகச் சுட்டப்படுகின்றனர்.

“.…வண்தோட்டுப்

பிணங்குகதிர்க் கழனி நாப்பண் ஏமுற்று

உணங்குகலன் ஆழியிற் தோன்றும்

ஓரெயில் மன்னன்” (புறம்.338)

இப்பாடற் பகுதி ‘அகழி, காவற்காடு இன்றி ஓரெயில் கொண்டு நெல்வயல்களின் நடுவே வேளாண்மை செய்து ஆண்ட வேளிர்’ என்று

புலப்படுத்துகிறது. கடல்நடுவே மிதக்கும் கப்பலைப் போல அவனது எயிலுடன் கூடிய மனை நெற்கழனிகளுக்கு நடுவே தோற்றமளித்தது என்கிறார். வேந்தர் போரில் தோற்கடித்த குறுநிலமன்னர் ஓரெயிலுடன் கூடிய மனைகளில் வதிந்தமையைப் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனாரும், அகம்.373ல் உவமையாக்கியுள்ளார்.

3.2 கிழார்கள் நெருங்கிய குறிய பல குறும்புகளில் வாழ்ந்தனர். மல்லிகிழான் காரியாதியைப் பாடும் ஆவூர்மூலங்கிழார் அவனது வாழிடம் உற்றாரும், உறவினரும் புகுவதற்கெளிது; பகைவர்க்கு நுழைய அரிது; பொறிகள் பொருந்திய வாயிலை உடையது; அத்தகைய அளவிற் சிறிய பல குறும்புகளிடையே அவனது செல்வமனை இருந்தது; அவை ஒருவர்க்கொருவர் கள்ளைப் பகிர்ந்து கொள்ள ஏதுவாக அருகருகே இருந்தன (புறம்.177) என்கிறார். எனவே அவர்கள் மன்னர் அல்லர் என்பது வெளிப்படை. அவர்கள் வயலில் இறங்கி உழும் உழவர் வாழும் சிறுகுடிகளின் தலைவர் ஆவர்.

4.0 வேந்தர், வேளிர், கிழார் இடையே இருந்த உறவுநிலை:

4.1.0 வேளிரின் நெல்வளத்தை அழித்தே வேந்தர் தம் ஆட்சியை நிலைநாட்டினர். வேளிர் வேந்தர்க்கு அஞ்சிப் பணிந்து திறை செலுத்தினர்; தம் செல்வத்தைப் பதுக்கி வைத்தனர்; மகட்கொடை மறுத்தனர்.

4.1.1 தம் குடும்பத்துப் பெண்களை வேந்தர் பெண்கேட்டு வருங்கால் வேளிர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பரணர் (புறம்.343& 354), கபிலர் (புறம்.337), அரிசில்கிழார் (புறம்.342), அண்டர் நெடுங்கல்லினார் (புறம். 344& 345), அண்டர்மகன் குறுவழுதியார் (புறம்.346), மதுரைப் படைமங்க மன்னியார் (புறம்.351). காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (புறம்.353) முதலியோரின் பாடல்களில் இடம்பெறும் வயல்வளம்; அப்பாடலில் மகட்கொடை மறுக்கும் தலைவர்கள் வேளிர் என்பதைச் சுட்டி நிற்கின்றன.

4.1.2 கரிகாலன் பாண்டிய சேரருடன் பதினோரு வேளிரையும் தோற்கடித்தான்.

“கரிகால்…பதினொரு வேளிரொடு வேந்தர் சாய” (அகம்.246)

என்கிறார் பரணர். தன் தலைநகராகக் கொண்ட உறந்தையை வெண்ணெல்லை வேலியாகக் கொண்ட தித்தனிடமிருந்து பறித்தான் (புறம்.352) அவன்.

நெடுஞ்செழியன் வேளிரைப் போரில் வென்றமையை மதுரைக்காஞ்சி;

“இருபெரு வேந்தரொடு வேளிர் சாய …

பொலந்தார் மார்பின் நெடியோன்”

என்னும் அடிகளால் உணர்த்துகிறது (அடி.- 55-61). எவ்வியின் நாட்டை அவன் அபகரித்தமையை மாங்குடி கிழார்,

“மாவேள் எவ்வி புனலும் புதவின்

மிழலையொடு கழனி…தந்த” (புறம்.24)

எனப் போற்றுகிறார்.

பதிற்றுப்பத்துச் சேரமன்னர்களான பல்யானைச் செல்கெழு குட்டுவன், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ் சேரலிரும்பொறை ஆகியோர் முன்னர் வேளிர் நடுங்கி நின்றதைப் பல பாடல்கள் எடுத்து உரைக்கின்றன. (பா.30, 45, 75, 88) பதிகங்களும் (3, 5, 8, 9) அதை உறுதி செய்கின்றன.

யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறையைப் பாடும் குறுங்கோழியூர் கிழார்; அவன் திருவில் அல்லது கொலைவில் அறியாத; நாஞ்சில் அல்லது படையும் அறியாதவர்களின் மண்ணைக் கவர்ந்தான் என்கிறார் (புறம்.20). எனவே வானவில்லையும், ஏர்ப்படையையும் மட்டுமே போற்றிய வேளிர் அவனால் அடக்கப்பட்டமை திண்ணம்.

4.1.3 மிகுந்த திறைப்பொருள் கொடுத்துப் பணியத் தயாராக இருந்த வேளிரையும் வேந்தர் போரிட்டு அழித்தனர் (அகம்.84).

பாரி (புறம்.112), நன்னன் (பதிற்.88), இருங்கோவேள் (பட்டி.- அடி.- 282), மூவன் (நற்.18) முதலிய வேளிர் வேந்தரால் கொல்லப்பட்டனர்.

4.1.4 வேந்தர் தம் ஆட்சியை நிலைப்படுத்தி நாட்டை விரிவுபடுத்த வேளிரின் விளைநிலங்களுக்கு எரியூட்டிக் கழுதை ஏர்பூட்டிக் கவடி வித்தி அவர்கள் மீண்டும் தலையெடுக்கா வண்ணம் அழித்தனர். வேளிர் அஞ்சி வாழ வேண்டிய சூழலை எயினந்தையாரின் அகப்பாடல் (நற்.43) உவமையாகக் காட்சிப்படுத்துகிறது.

இமயவரம்பன் தன் நாட்டை விரிவுபடுத்தப் பகைநாட்டை அழித்த பாங்கினைக் குமட்டூர் கண்ணனார் விரித்துப் பாடுகிறார். (பதிற்.13, 15&19)

4.1.5 பல வேளிர் ஒன்று சேர்ந்து தம் செல்வத்தைப் பிறர் அணுக இயலாத நன்னன் மலையின் பாழி என்ற பகுதியில் பாதுகாப்பாக வைத்து இருந்தனர்.

“நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்

தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த பொன்” (அகம்.258)

என்று அந்த வரலாறைப் பரணர் பதிவு செய்துள்ளார்.

4.2 கிழார் வேந்தரின் அன்பிற்குரியவராய் இருந்தனர். சிறுகுடி கிழான் பண்ணன் சோழன் கிள்ளிவளவனின் அன்பிற்கு உரியவன் அவனைப், ‘பசிப்பிணி மருத்துவன்’ (புறம்.173) என்கிறான் சோழன்.

4.3 கிழார் வேளிருடனும் நெருங்கி வாழ்ந்தமை குன்றூர் கிழார் மகனாரின் புறம்.338ம் பாடல் மூலம் தெரிகிறது. மூவேந்தரும் போர் மேற்கொண்டு வரினும் தம்மைப் பணிந்து பெண் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்ததாகப் பாடி நெடுவேள் ஆதனின் மனநிலையைக் காட்டி உள்ளார். இந்த நெருக்கத்தின் காரணம் அவர் நெடுவேள் ஆதனுக்காக உழுத உழவரின் தலைவன் ஆயினமை எனலாம்.

5.0 சுட்டி அழைக்கும் முறை

வேளிரை அவரது குடிப்பெயரோடு இணைத்தே சுட்டும் வழக்கம் சங்க இலக்கியம் எங்கும் காணக் கிடைக்கின்றது. (எ.டு.) வேள் பாரி, வேள் எவ்வி, வேள் ஆய், வேள் ஆவிக்கோ. சங்க இலக்கியம் கிழார்களைச் சுட்டும் பொழுதெல்லாம் அவர்கள் சார்ந்த ஊர்ப் பெயருடன் சேர்த்தே அழைக்கிறது. (எ.டு.) கோவூர் கிழார், ஆவூர்மூலங் கிழார், மாங்குடி கிழார், ஆலத்தூர் கிழார்

தொகுப்புரை:

சங்க இலக்கியம் வேளிரைச் சுட்டும் போதெல்லாம் அவர்கள் விளைவித்த நெல் அல்லது நெல்லோடு தொடர்புடையவற்றுடன் சேர்த்தே பேசுகிறது. கிழாரைப் பாடும்போது அவரது தோட்டமும், நெல்லுக்கு மாறான புல்லின் வளமும், அதை ஈவதும் சுட்டப்படுகின்றன. வேளிர் தமிழகம் போந்து ஆட்சி செய்த வேளாளர்;

கிழார் வயலில் இறங்கி உழும் உழவரின் தலைவர். வேளிர் ஒரெயில் கொண்ட குறுநில மன்னர். கிழார் நெருங்கிய குறிய பல குறும்புகளில் வாழ்ந்தவர். வேளிரின் நெல்வளத்தை அழித்தே வேந்தர் தம் ஆட்சியைத் தமிழகத்தில் நிலைநாட்டினர். இதனால் வேளிர் அஞ்சிப் பணிந்து திறை செலுத்தினர்; சிலர் தம் செல்வத்தைப் பதுக்கி வைத்தனர்; மகட்கொடை மறுத்தனர். கிழார் வேந்தரின் அன்பிற்கு உரியவராய் இருந்தனர். அத்துடன் வேளிருடனும் நெருங்கிய தொடர்பு அவருக்கு இருந்தது. வேளிரை அவரது குடிப்பெயரோடு இணைத்தே சுட்ட; கிழாரை அவர்கள் சார்ந்த ஊர்ப் பெயருடன் சேர்த்தே அழைத்தனர்.