/ கண்மணித்தமிழ் /
  1. கடுவன் …

5. கடுவன் இளவெயினனார் பாடும் தொல்தமிழரின் சமயக்கொள்கை

முன்னுரை:

பரிபாடல் புலவராகிய கடுவன் இளவெயினனார் வெளிப்படுத்தும் தொல்தமிழரின் சமயக்கொள்கையை எடுத்துக்காட்டுவது கட்டுரையின் நோக்கம் ஆகும். மூவேந்தரைச் சிறப்பிக்கும் சங்ககாலத்திற்கு முன்னர் வாழ்ந்த தொல்தமிழகச் சமூகம் பற்றிய வரலாற்றின் ஒரு கூறாக அவரது சமயக்கொள்கை அமையும். சங்கப்பாடல்களில்; இனக்குழுச் சமுதாயமாக வாழ்ந்த தொல்தமிழர் பற்றிய செய்திகளும் விரவிக் கிடக்கின்றன. அவரது சமூகநிலை தெளிவாக்கப்பட வேண்டியதாகவே உள்ளது. கடுவன் இளவெயினனார் பாடிய மூன்று பாடல்கள் முதல்நிலைத் தரவுகளாக அமைய பிற தொகைநூற் பாடல்கள் இரண்டாம் நிலைத் தரவுகளாக அமைகின்றன. மரபுவழிப்பட்ட விளக்கமுறை ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.

கடுவன் இளவெயினனார்: ஒரு அறிமுகம்

திருமாலையும் செவ்வேளையும் பற்றிப் பாடியிருக்கும் இவர்; தன் பெயரால் எயினர் குலத்தைச் சேர்ந்தவர் என்பது வெளிப்படை. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் வருணத்தார் வருகைக்கு முன்னர் வாழ்ந்த திணைமாந்தருள் எயினர் அடங்குவர். இவரைத் தொல்தமிழகச் சார்பாளராக அடையாளப்படுத்திக் கட்டுரை தொடர்கிறது.

சமயக்கொள்கைகள்

இறைவன் நம்மைச் சுற்றி உள்ள எல்லா இயற்கைப் பொருட்களிலும் நிறைந்து இருக்கிறான் என்கிறார் கடுவன் இளவெயினனார்.

“தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ

கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ

வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ

வெண்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ” (பரி.3)

என்று திருமால் நெருப்பில் வெம்மையாகவும், பூவில் மணமாகவும், கல்லுக்குள் மணியாகவும், சொல்லுக்குள் வாய்மையாகவும், அறத்தில் அன்பாகவும், மறத்தில் வன்மையாகவும், வேத மறைபொருளாகவும், பூதங்களின் முதல்வனாகவும், கதிரவனின் ஒளியாகவும், நிலவின் குளிர்ச்சியாகவும், அனைத்துப் பொருட்களாகவும், பொருட்களின் உள்ளீடாகவும் நிறைந்திருப்பதாகப் பாடுகிறார். இதே கருத்தை;

“நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள

நின் தண்மையும் சாயலும் திங்களுள

நின் சுரத்தலும் வண்மையும் மாரியுள

நின் புரத்தலு நோன்மையு ஞாலத்துள

நின் நாற்றமும் வண்மையும் பூவையுள

நின் தோற்றமும் அகலமும் நீரினுள

நின் உருவமும் ஒளியும் ஆகாயத்துள

நின் வருதலும் ஒடுக்கமு மருத்தினுள” (பரி.4)

என மற்றோரு பாடலிலும் விளக்கியுள்ளார். ஞாயிறு, திங்கள், மழை, பூமி, நீர், ஆகாயம், காற்று என பஞ்சபூதங்களில் காணப்படும் பண்புகள் அனைத்தும் திருமாலுக்குரியவை என்கிறார். இங்கு ஞாயிறு நெருப்பைச் சுட்டுகிறது. திங்கள் ஆகாயத்துள்ளும், மழை நீரிலும் அடங்கும். இக்கருத்து நிலம், விண், மலை, மலைக்குகை, சுனை, காடுகள், கடல், நீர்த்துறை, மரங்கள், மணம் மிகுந்த மலர்கள், நிலவு, பறவைகள், விலங்குகள், அவற்றின் உறுப்புகள் அனைத்தையும் தெய்வமாக வணங்கிய இனக்குழுச் சமுதாயத்தின் கொள்கையை அடியொட்டியதாக அமைந்துள்ளது.

தொன்மையான ஆல், கடம்பு, வேம்பு, ஓமை முதலிய மரங்களைத் தொல்தமிழர் வழிபட்டனர் என்பதற்குத் தொகைநூல்களில் மிகுந்த சான்றுகள் உள்ளன (நற்.83, 281, 343; புறம்.199, 260; அகம்.287, 297, 309; கலி.106; குறி.- அடி.-176-177).

மலையுச்சியையும், காட்டையும், நீர்த்துறைகளையும் தொல்தமிழர் வழிபட்டமை பல பாடல்களில் இடம்பெற்றுள்ளன (நற்.7, 34, 155, 165, 288; அகம்.22, 198, 272, 359; குறி.- அடி- 208; புறம்.158; பொருநராற்றுப்படை -52; கலித்.-131; குறு.164).

காடும் மலையும் பொருந்திக் கடலால் சூழப்பட்ட பூமியையும், திசைகளையும் தொல்தமிழர் வழிபட்டமைக்கான ஆதாரங்களும் உள்ளன (பதிற்.-88; நெடுநல்வாடை- அடி.-77-78).

தொல்தமிழர் நிலவை வழிபட்டமைக்குப் பட்டி.அடி.- 86-87) சான்று.

அவர்கள் வழிபட்ட மலர்களின் மணமும், வண்ணமும் விதந்து ஓதப்பட்டுள்ளன (அகம்.152; பரி.2; நற்.34, 216).

விலங்குகளையும் அவற்றின் உறுப்புகளையும் தெய்வத்தன்மை உடையனவாகக் கருதி வழிபட்டனர் (நற்.37, 168; அகம்.72, 381; பட்டி.-அடி.-86-87). காக்கையின் தெய்வத்தன்மை கருதிப் பலிப்பொருள் இட்டனர் (நற்.258; பதிற்.30).

இறைவனுக்கு அன்பர் மனதிற் கொண்ட வடிவம் அன்றிk குறிப்பிட்ட வடிவம் இல்லை.

“மனக்கோள் நினக்கென வடிவு வேறிலையே” (பரி.4)

எனும் பாடலடியால் புலப்படுத்துகிறார். இயற்கை வழிபாட்டுடன் மாறுபட்ட உருவ வழிபாட்டை எள்ளும் தொகைநூற் பாடல்கள் பிறவும் உள. தலைவியின் நோய் தீர்க்க முனையும் தாயின் செய்கையைத் தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவியிடம் கூறும் தோழி;

“தோற்றம் அல்லது நோய்க்கு மருந்தாகா

வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்தி” (குறு.263)

அவள் பலி கொடுத்து வழிபட்ட செய்கையைத் தேவையற்றதென விமர்சிக்கிறாள். தொல்தமிழரினின்றும் வேறான வருணத்தார் வருகை தெய்வங்களுக்குப் பல உருவங்களைக் கொடுத்த வரலாறு இங்கே நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெறியாட்டு நிகழ்த்தும் தாய் பற்றிய பெருஞ்சாத்தனார் கூற்றில் அத்தெய்வங்களின் தோற்றம் குறிப்பிடத் தகுந்ததே அன்றி வேறு சிறப்பேதும் இல்லை என்ற எள்ளற் குறிப்பும் இடம் பெற்றுள்ளமை காண்க. தலைவியின் சலிப்பு மிகுந்த சொற்கள் தொல்தமிழரது இயற்கை வழிபாட்டின் பெருமையைச் சொல்லாமல் சொல்லுகின்றன.

இது போன்றே நெடும்பல்லியத்தனாரின் பாடல்;

“கண்ணிற் காண நண்ணுவழி இருந்தும்

கடவுள் நண்ணிய பாலோர் போல” (குறு.203) என்ற

உவமையில் வருணத்தாரை வெளிப்படையாகவே ‘பாலோர்’ என்று சுட்டி; தம்மைச் சுற்றி இருக்கும் இறைத்தன்மை மிகுந்த இயற்கையைக் கண்ட பின்னும் உருவங்கள் கொடுத்து வழிபடுவது வியப்பிற்குரியதென்கிறது. தொல்தமிழரின் மக்கட்பிரிவுகள், அவர்கள் விளைவித்த பயிர்கள், உண்ட உணவு, வணங்கிய தெய்வம் என்று விதந்தோதும் மாங்குடி கிழாரும்;

"கல்லே பரவின் அல்லது

நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே" (புறம்.335)

என்கிறார். 'கடவுள்' என்று அவர் குறிப்பிடுவது முற்சுட்டிய குறுந்தொகைப் பாடலை அடியொட்டி அமைந்துள்ளது.

வேறுவேறு பெயர்களால் அழைத்தாலும் இறைப்பொருள் ஒன்றே.

“ஆலமும் கடம்பு நல்யாற்று நடுவும்

கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும்

அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்

எவ்வயி னோயு நீயே” (பரி.4)

எனத் திருமாலைப் பார்த்துப் பாடுங்கால்; தொல்தமிழர் வழிபட்ட ஆலமரம், கடம்பமரம், ஆற்றிடைக்குறை, காற்றைத் தடுக்கும் உயர்ந்த மலை எல்லாவற்றிலும் நிறைந்து இருப்பது இறைப்பொருளே என்கிறார். இதனால் திருமாலைப் போற்றிய வாயால் செவ்வேளையும் போற்றுகிறார் (பரி.5).

பரிபாடல் தொகுப்பின் கடவுள் வாழ்த்தாக அமையும் முதல்பாடலும் இதே கருத்தை; “திங்களும் தெறுகதிர்க் கனலியு நீ

ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல்

மைந்துடை ஒருவனு மடங்கலு நீ

நலமுழு தளைஇய புகரறு காட்சிப்

புலமும் பூவனு நாற்றமு நீ

வலனுயர் எழிலி மாகவிசும்பும்

நிலனு நீடிய இமயமும் நீ” என்கிறது. நிலவு, ஞாயிறு,

சிவனும் அழித்தல் தொழிலும், பிரமனும் படைத்தல் தொழிலும், முகில், வானம், நிலம், இமயம் அனைத்தும் ஒரே இறைப்பொருள் என்பது கருத்து. தொல்தமிழகக் குடியினராகிய ஆயர் ஏறுதழுவும் முன்னர்;

"துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும்

முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழூஉ" (கலி.101)

என்கிறது முல்லைக்கலி. இங்கு கடுவன் இளவெயினனார் சொல்லும் வழிபாடுகளாகிய ஆலமரம், கடம்பமரம், நீர்த்துறை முதலியன பொருந்தி இருப்பது காண்க.

முடிவுரை:

இறைவன் நம்மைச் சுற்றி உள்ள எல்லா இயற்கைப் பொருட்களிலும் நிறைந்து இருக்கிறான். இறைவனுக்கு அன்பர் மனதிற் கொண்ட வடிவம் அன்றிக் குறிப்பிட்ட வடிவம் இல்லை. வெவ்வேறு பெயர்களால் அழைப்பினும் இறைப்பொருள் ஒன்றே.