/ கண்மணித்தமிழ் /
  1. குறுந்தொகை 29, …

2. குறுந்தொகை 29, 99 ம் பாடல்கள்- மீள்பார்வை

முன்னுரை

ஒளவையார் பாடி; குறுந்தொகையில் இடம்பெறும் 29&99ம் பாடல்களை மீள்பார்வை செய்வது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். எட்டுத்தொகையிலுள்ள ஒளவையாரின் 59பாடல்களுள் அகம் சார்ந்த பாடல்கள் 26 உள்ளன. தொகுத்தோரும் உரைகாரரும் ஆணாதிக்கச் சமுதாயக் கொள்கைக்கு ஏற்பப் பொருள் கூறும்போது உண்மை மறைந்து விடுகிறது. கலைக்குழுத் தலைவி, அரசியல் தூதுவர் என்ற பரிமாணங்களைத் தவிர்த்து; சராசரிப் பெண்ணாக ஒளவையைப் புரிந்துகொள்ள மீள்பார்வை தேவைப்படுகிறது.

ஒளவையின் அகவாழ்க்கை:

பெண்ணுக்குத் தோன்றும் வேட்கை இயற்கை; எனினும் அது பற்றிப் பெண் தன் வாயால் பேசுவதே இழுக்கு என்று எண்ணும் சமூகத்தில் தன் வேதனையை மறைக்க முடியாமல்; தன்னுணர்ச்சிப் பாடல்களைப் பாடி இருக்கிறாள் ஒளவை. செவ்விலக்கியக் காலத்தில் சமூகக்கட்டுக்களைத் தகர்த்து; தனக்கென மொழிச் சுதந்திரத்தை அங்கீகரித்துக் கொண்ட பெண்ணியவாதியாகக் காட்சி அளிக்கிறாள் ஒளவை.

ஒளவை தான் காதலித்த தலைவனோடு பொழில் விளையாடினாள் (நற்.187) அவளது காதலன் தேரில் வந்து அவளைச் சந்தித்துத் திரும்பினான். அவளுக்காக அறத்தொடு நிற்க ஒரு தோழி வாய்த்திருந்தாள் (குறு.23). அவளது காதலும் சமுதாயம் போற்றும் திருமணத்தில் முடிந்தது (குறு.15). அவள் வாழ்வில் நிகழ்ந்த பெருத்த ஏமாற்றம்; நிறைவு பெறாத பாலுணர்வு வேட்கை. கடக்க இயலாத

காமவேட்கையை அவள் வெளிப்படுத்தத் தயங்கவில்லை. தன் காமம் வானளவு மிகுதியானது என்று பாடுகிறாள் (குறு.102). காமம் நெஞ்சில் வேர்விட்டு; ஊரார் தம்முள் கூடிப் பேசும்படி கிளைத்து; காதல் பரப்பி; புலவோர் போற்றும் நாணமே சிறிதும் இல்லாத பெரிய மரமாக மாறி; நிலம் முழுதும் பரவி; அலர்ந்த அரும்புகள் கொத்துக் கொத்தாகச் சொரியும் நிலை அடைந்து விட்டது என்கிறாள் (அகம்.273). அந்த விரக்தியின் எல்லையில் அவள் தன் கணவனை 'முலையிடை முனிநர்' (குறுந்.39) என்கிறாள். பாலுறவுச் சிக்கல்

இருந்தபோதும் ஒளவைக்கு அவளது கணவனிடம் இருந்த காதல் குறையவில்லை. பொருளைக் காரணம் காட்டிப் பிரிவைத் தன் கணவன் கூறியபோது ‘உன்னோடு சேர்ந்து வந்தால் காட்டுவழிச் செலவும் இனிதாகவே இருக்கும்’ என்று சொல்லி நின்றாள் (குறு.388). 'செல்வார் அல்லர் என்று இகழ்ந்து இருந்தாள்'. அவள் கணவனோ 'இவள் பிரிவுக்கு ஒருப்பட மாட்டாள்' என்று நன்கு அறிந்து அமைதியாகவே இருந்தான். இருவரின் அழுத்தமான மனங்களும் இரண்டு பேராண்மைகள் (குறுந்.43). அமைதியாகவே பூசலிட்டுப் பிரிந்து சென்ற தன் கணவன் திரும்பி விடுவான் என்று எல்லாப் பெண்களையும் போல் அவளும் காத்திருந்தாள் (குறு.158, 183, 200; நற்.129). குறித்துச் சொன்ன காலம் கடந்துவிட்ட போது; அவன் நிரந்தரமாகப் பிரிந்து விட்டான் என்று புரிந்து அவள் நொந்து புலம்புகிறாள். அவனைத் தேடிச்செல்வேன் என்று மனதோடு பேசுகிறாள் (அகம்.303). காடுகளைக் கடந்து ஊர்ஊராய் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு குடியிருப்பிலும் சென்று தன் காதலுக்குரியவனைத் தேடி அலைந்த வெள்ளிவீதி போலத் தேட விரும்புகிறாள் (அகம்.147).

வெள்ளிவீதியார் பற்றித் தன் ஆய்வுக்கட்டுரையில் சு.மலர்விழி 'பெண்கள் வெளிப்படையாகப் பேசக்கூடாது என்று வரையறுக்கப்பட்ட காமத்தை வெளிப்படுத்தி; பிரிந்து சென்ற காதலனுக்காக காத்திருக்க வேண்டும் என்ற மரபை உடைத்து; அவனைத் தேடி அலைந்து; தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தையும், நோயையும் நுட்பமாகப் பதிவு செய்ததன் மூலம் சமூகக் கட்டுக்களைத் தகர்த்து; தன் இருப்பைப் பதிவு செய்த ஒற்றைக் கலகக் குரல் ' என்று முடித்துள்ளார் (காவ்யா- தமிழிதழ்- ஏப்ரல்-ஜூன் 2018- ப.32). இக்கருத்து ஒளவைக்கும் பொருத்தமானதே.

அவளது காதல்மனம் பாலுறவுச் சிக்கலைப் பொருட்படுத்தாமல்; சேர்ந்து இருக்கும் வழியையே நாடுகிறது. உடற்கூறியல் அடிப்படைச் சிக்கலைப் பெரிதுபடுத்தாமல்; தன்னைத் தானே தேற்றிப் பாடுகிறாள். தலைவனுடன் தானும் சென்றிருந்தால்; ‘காட்டாற்றின் கரையிலே மரக்கிளைகள் தாழ்ந்துள்ள மணல்மேட்டில்; கலவிக்கூட்டம் இல்லாமல்; கைகளால் அணைத்துத் தன் கணவனோடு இருக்க; அவனும் இன்புறுவான்; தானும் அழ நேராது என்கிறாள் (அகம்.11). தன் துன்பத்தை அறிந்து தோழியர் கூட்டம் துன்புற்றது என்கிறாள். அன்னைக்கும் எல்லாம் புரிந்து விட்டது; என்னை இற்செறித்து

விட்டாள் என்கிறாள். கள்ளின் சாடி போன்ற தன் இளமை நலம் வீட்டிற்குள்ளேயே இருந்து முதுமை அடையும் என்கிறாள் (நற்.295) ஏன்? படுக்கையறைப் பிரச்சினையையும் தன் தீராவேட்கையையும் மறைக்கத் தெரியாமல்; தோழியர் தொடங்கி ஊர் முழுதும் அம்பலாக்கக் காரணமான மகளைத் தாய் இற்செறிக்காமல் வேறென்ன செய்வாள்? அந்த இற்செறிப்பு தானே அவளுக்குப் பாதுகாப்பு என்று தாய் எண்ணுவாள்!? இயல்பாக பாலியல் வேட்கை நிறைவேறாத போது பெண்ணுக்குச் சினம் ஏற்படுவதும் இயற்கையே.

‘முட்டுவேனோ? தாக்குவேனோ? ஏதாவது சாக்குச் சொல்லி 'ஆஅ ', 'ஓ ', 'ஒல்' எனக் கூவுவேனோ? என் துன்பத்தை அறியாது இவ்வூர் தூங்குகிறதே’ என்று அச்சினத்தை வெளிப்படுத்துகிறாள் (குறு.28). மனஉளைச்சலுக்கு ஆளாகிறாள். ‘என் துயர் அவனுக்குப் புரியாதா? புரிந்தாலும் என்னைப் போல் மென்மையான மனம் இல்லாததால் என்னை நாடி வரமாட்டானா?’ என்றெல்லாம் நொந்து புலம்புகிறாள்.

ஒளவையின் காமஉணர்வை அவளது தலைவன் தணிக்கவில்லை என்று பிற ஆய்வாளரும் கூறுகின்றனர். (முனைவர் மு.பழனியப்பன்- ‘பெண்ணிய வாசிப்பும் பெண்ணெழுத்துத் திறனாய்வும்'- பெண்ணிய வாசிப்பு- ப.68).

குறுந்தொகை 99ம் பாடல்- மீள்பார்வை

"உள்ளினென் அல்லனோ யானே உள்ளி

நினைந்தனென் அல்லனோ பெரிதே நினைந்து

மருண்டனென் அல்லனோ ,உலகத்துப் பண்பே

நீடிய மரத்த கோடு தோய் மலிர்நிற

இறைத்து உணச் சென்று அற்று ஆங்கு

அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக் கொளவே"

தன்மை இடம் சுட்டி ஒளவை பாடியுள்ள இப்பாடலின் பொருள்:

உள்ளினென் அல்லனோ யானே; உள்ளி நினைந்தனென் அல்லனோ பெரிதே = நான் விரும்பி நாடினேன்; விரும்பியதை மிகவும் சிந்தித்தேன்; நினைந்து மருண்டெனன் அல்லனோ உலகத்துப் பண்பே = சிந்தித்தபோது உலகத்துப் பண்பைக் கருத்தில் கொண்டு மருண்டேன். இறுதி மூன்று அடிகளின் இறைச்சிப் பொருளாவது: நீண்டு உயர்ந்த மரம்; அதன் கிளை ஒன்று ஆறோடும் போக்கில் குறுக்கே தாழ்ந்து உள்ளது; ஓடிவரும் பெருவெள்ளம் அந்தக் கிளையைத் தோய்ந்து செல்கிறது; கிளையில் இருந்து கொண்டு அந்த

வெள்ளநீரை இறைத்து உண்டு தாகம் தீர்க்க இயலுமா? வெள்ளத்தின் வேகம் கிளையில் அமர்ந்திருப்பவரையும் அடித்துச் செல்லும்; கிளையையும் சேதமாக்கும்; அத்தகைய காமம் என்னிடம் உள்ளது. தன்னுடைய வேட்கை உயிரை வாங்கும் தன்மை உடையது என்கிறாள். தன் ஈடுசெய்ய இயலா இழப்பை இறைச்சி மூலம் குறிப்பாகச் சொல்கிறாள்.

இப்பாடலுக்கு பொருள் எழுதிய பெருமழைப் புலவரும் அவருக்கு

முன்னர் கொளு எழுதியோரும் இது ஒரு தலைவன் கூற்று என்கின்றனர். அவன் பொருள் தேடித் சென்ற பொழுது தலைவியை நினைத்தானா என்று தோழி கேட்டாளாம் . அதற்குத் தலைவன் பதில் கூறினானாம். பாடலை வரிசைப்படுத்துவோரும், உரை எழுதுவோரும் இங்ஙனம் வலிந்து கற்பனை செய்யக் காரணம்; வெள்ளம் போல் பெருக்கெடுக்கும் காமம் பற்றி ஒரு பெண் பேசுவது கூடாது என்னும் கொள்கையே.

உரைக்கும், கொளு தரும் செய்திக்கும் முன்னர் பனுவல் செய்திக்கே இடம் தர வேண்டும். "மரபுவழி வந்த இலக்கியங்கள்

எடுத்தாண்டுள்ள பெண் பற்றிய போலியான கருத்தாக்கங்களை உடைத்தெறிவது பெண்ணியத் திறனாய்வு" என்பார் இரா.பிரேமா (பெண்ணியம்- ப.87). இது தான் போலிக் கருத்தாக்க உடைப்பு.

குறுந்தொகை 29ம் பாடல்- மீள்பார்வை:

"நல்லுரை இகந்து புல்லுரை தாஅய்ப்

பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல

உள்ளம் தங்கா வெள்ளம் நீந்தி

அரிது அவா உற்றனை நெஞ்சே நன்றும்

பெரிதால் அம்ம நின் பூசல் உயர்கோட்டு

மகவுடை மந்தி போல

அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே" (குறுந்.- 29)

என்ற பாடற்பொருளாவது: ‘மழைநீர் நிறையும் பச்சை மண்பானை கரைந்து ஓடுவதைப் போல; தாங்க முடியாத ஆசைப்பெருக்கை நீந்திக்கடக்க அவா உற்ற நெஞ்சே’ என்று மனதோடு பேசுகிறாள். ஒளவையை இற்செறித்த அவளது தாய் தன் ஆற்றாமையை மகள் மீது தானே கொட்டியிருப்பாள்!? தாயிடம் பாசம் மிகுந்த சொற்களை அவளால் கேட்க முடியவில்லை; ‘மரத்தின் உச்சியில் குட்டியைத் தழுவிக் கொண்டிருக்கும் மந்தி போல என்னைத் தன் நெஞ்சோடு

தழுவி என் குறையைக் கேட்பவர் எவரும் இல்லையே’ என விம்மும் பாட்டு இது.

ஆனால் உரையாசிரியரும், கொளு எழுதியோரும் இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சை நோக்கிப் பேசுவதாகப் பொருள் கூற முயன்றுள்ளனர். அவ்வாறு சொல்வதன் காரணம் அதில் இடம் பெற்றிருக்கும் ‘மழை நீர் நிறையும் பச்சை மண்பானை கரைந்து

ஓடுவது போல; உள்ளத்தால் தாங்க முடியாத ஆசைப்பெருக்கை நீந்திக் கடக்க அவா உற்ற நெஞ்சே’ என்னும் உவமை. இதை ஒரு பெண் பேசுவது அழகல்ல என்று நினைத்தோர் பாடலைத் தலைமகன் கூற்றாக்குகின்றனர்.

முடிவுரை:

பெண்ணிய நோக்கில் ஒளவையின் பாடல்களை மீள்பார்வைக்கு உட்படுத்தும் போது செவ்வியல் கால இலக்கியத்தைத் தொகுத்தோரின் ஆணாதிக்கப் போக்கும்; அதனின்று விடுபட இயலாத உரையாசிரியர் போக்கும் புலப்படுகின்றன.