/ கண்மணித்தமிழ் /
  1. தொல்தமிழகத்து …

6. தொல்தமிழகத்து அணங்குக் கொள்கை

0.0 முன்னுரை

0.1 தொகைநூல்களில் பெரிதும் பயிலும் ‘அணங்கு’ என்னும் சொல்லின் முழுமையான பொருள் பரிமாணத்தைக் கண்டறிவதன் மூலம் அணங்குக் கொள்கையை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும். ‘வருத்து’ என்றும் ‘தெய்வம்’ என்றும் இருவேறு பொருளை உரையாசிரியர் கூறுவர். முனைவர் ஜார்ஜ் L.ஹார்ட் தொல் தமிழரின் சமயம் ‘சீரற்றது’ என்கிறார். எனவே அணங்குக் கொள்கை குறித்து ஆழமான பார்வை தேவையாகிறது. தொகை நூல்கள் தரவுகளைத் தருகின்றன. இது மரபுவழிப்பட்ட விளக்க முறை ஆய்வாகும்.

1.0 மனிதஇயல்பிற்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட இயற்கை, கலை, பண்பு, அழகு அனைத்தும் அணங்கு எனப்பட்டன. தெய்வமும் தெய்வத்தன்மையும் அணங்கு ஆகும். முருகனும் அணங்கே. மலை, குகை, காடு, காட்டு விலங்கு, நீர்த் துறைகள், ஊர்முற்றம், முன்றில், வாயில், நிலைகதவு, அரசுகட்டில் எங்கும் அணங்கு இருப்பதாக நம்பினர். கற்பிற்குரிய தெய்வம் அணங்கே. கற்புடைய பெண், அன்பு மனைவி, அழகிய பெண், தெய்வத்தின் படை, இருக்கை, நகர், சுறாக்கொம்பு, யாழ், தெய்வத்தைச் சுட்டிக்கூறும் சூள் எல்லாம் அணங்கே.

1.1 இரவுக்குறியில் வரும் தலைவனைப் பார்த்து; மலையிலிருந்து பலி பெறும் அணங்கு என்று எண்ணிச் சிறுகுடியினர் அஞ்சுவர் என்பவள் தோழி (கலி.52). ‘பலிபெறும் அணங்கு’ என்பதால் தெய்வமென்பது தேற்றம். தெய்வம் இருக்கும் மலை அணங்கு இருப்பதாகச் சுட்டப்படுகிறது (அகம்.22, 72, 198, 266, 272, 338, 378; பெரு.494; புறம்.52, 151). சூருடைச்சிலம்பில் வேண்டிய உருவில் அணங்கு வருமென்று நம்பினர் (அகம்.158).

1.2 தெய்வம் இருந்த நீர்த்துறை; “அணங்குடைப் பனித்துறை"யாகும் (அகம்.240). உண்ணும் நீர்த்துறை அணங்கிற்குச் செய்யும் வழிபாட்டில் குறை ஏற்படுவதால் தலைவி நோயுற்றாள் என்னும் நம்பிக்கை

இருந்தது (ஐங்.28&53). தொண்டித் துறைக்கும் இதே அடைமொழி (ஐங்.174) உரித்து. கடலும் “அணங்குடை முந்நீர்” (அகம்.207; நற்.155; குறு.164) எனப்படும்.

1.3 வச்சிரப்படை உடைய இறைவனை; “அணங்குடை வச்சிரத்தோன்” எனக் குறிப்பதால் தெய்வத்தன்மையுடைய வச்சிரம் எனப் பொருள்படும் (கலி.105). திருமாலின் காத்தல் தொழிலுக்குரிய ஆழி; “தண்ணளி கொண்ட அணங்குடை நேமி” எனப்படுகிறது (பரி.13). “அணங்குடை அருந்தலை ஆயிரம் விரித்த” (பரி.1& பரி.திரட்டு 1) என்று பாடுவதால் திருமாலின் பாம்பணை தெய்வத்தன்மை கொண்டதாகிறது. காளியைச் சூழ இருந்த பேய்க்கணமும் அவ்வாறே (பெரு.அடி-459). போர் முடிவில் மறவர் தலையை ஏற்றும் அடுப்பு “அணங்கடுப்பு” (மது.அடி-29) எனப்பட்டது.

1.4 மணப்பெண் போல அலங்கரித்த யாழ் “அணங்கு மெய்ந்நின்ற"தாகப் போற்றப்படுகிறது (பொரு.அடி-20).

1.5 வானத்து மீனாகிய சாலி; ‘அணங்கருங் கடவுள்’ (அகம்.16) ஆவாள். கற்பிற்சிறந்த தலைவி ‘அணங்குசால் அரிவை’ (அகம்.114, 181, 212, 366) ஆகிறாள். மங்கலமகளிர்க்கு அணங்கு ஒப்புமையாகிறது (மது.அடி-446). அழகு பெண்ணை அணங்கோ என ஐயுற வைக்கிறது (கலி.57). ‘அமிர்தன நோக்கத்து அணங்கொருத்தி’ (பரி.12) என்ற புனைந்துரை பெண்ணுக்குத் தெய்வத்தன்மை ஏற்றுகிறது.

1.6 தெய்வம் எழுந்தருளிய நகர்; ‘அணங்குடை நகர்’ (அகம்.99) ஆகும். தெய்வத்தைச் சுட்டி உரைக்கும் சூள் தெய்வத்தன்மை உடையதாதலால்; ‘அணங்குடை அருஞ்சூள்’ (நற்.386; குறு.53) என்றாகிறது. பரதவர் சினைச் சுறவின் கோடு நட்டு வழிபட்டனர்; மனை ‘வல்லணங்கு’ சேர்ந்ததாயிற்று (பட்டி.அடி- 86-87). வீட்டுமுற்றம்; ‘அணங்குடை முன்றில்’ (புறம்.247) ஆகும். புதுமணம் நிகழும் வரைவின் மகளிர் இல்லம் ‘அணங்குடை நல்லில்’ (மது.அடி-578) ஆயிற்று. வேளிரது ஊர்முற்றமும், ஓரெயிலின் நிலைகதவும், தெய்வத்தன்மை உடையன (மது.அடி.-164, 353, 693). வேந்தன் அரியணை ‘அணங்குடை… கட்டில்’ (பதிற்.79) ஆகும். மனிதப் பண்பினின்று வேறுபட்டு மயிலுக்குப் போர்வை ஈந்த ‘அருந்திறல் அணங்கின் ஆய்’ (சிறு.அடி-86) அணங்கு என்னும் சொல்லுக்குச் சிறந்த விளக்கமாகிறான்.

1.7 அணங்கு என முருகனையும் சுட்டுவதுண்டு (நற்.322, 376; திரு.அடி-289). முருக வேளின் முன்னர் இடப்பட்ட கழங்கு; ‘அணங்குறு கழங்கு’ (நற்.47, 282) எனப்பட்டது. ‘அணங்குடை முருகன் கோட்டம்’ (புறம்.299) என்பதால் முருகனின் தெய்வத்தன்மை விதந்து போற்றப்படுகிறது. தெய்வம் ஏறப் பெற்று வெறியாடும் மகளிர்; ‘நெடுவேள் அணங்குறு மகளிர்’ (குறி.அடி-174-175) என்று அழைக்கப்படுகின்றனர். வேலன் வெறியாட்டு நிகழும் களம்; ‘அணங்கயர் வியன்களம்’ (அகம்.382) ஆனது. முருகன் உறையும் கடம்ப மரம் ‘அணங்குடைக் கடம்பு’ (பதிற்.88) ஆயிற்று.

2.0 தவிர்க்க முடியா அழிவு, மீளமுடியா அச்சம், எதிர்கொள்ள இயலா வருத்தம், அடக்க முடியா வேட்கை ஆகியவற்றின் காரணிகள் அணங்கு எனப்பட்டன.

2.1 சிக்கல் கிழானின் மகளை வேந்தன் பெண்கேட்டு வர; அவன் மறுத்துரைக்க; ஊர் பாழ்படும் நிலையில்; அவள் அந்த ஊரின் அழிவுக்குக் காரணம் என்னும் பொருள்பட; ‘அணங்காயினள் தான் பிறந்த ஊர்க்கே’ (புறம்.349) எனப் பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர். கடல்பிறக்கோட்டிய குட்டுவன் மோகூர் மன்னனின் எயிலை அழித்தமை; ‘அணங்கு நிகழ்ந்தன்ன’ (பதிற்.44) எனப் பதிவு பெறுகிறது.

2.2 ஞாயிற்றை ஒளித்து வைத்து இருளச்செய்த அவுணர்; ‘அணங்குடை அவுணர் கணம்’ (புறம்.174) என்று சுட்டப்படுகின்றனர். பகைவர் அஞ்சப் போரிட்ட படை; ‘அணங்குறுத் தன்ன கணங்கொள் தானை’ (புறம்.362, 78; மது.அடி-140) எனப் புனையப்பெறுகிறது. குட்டுவன் முன்னர் வேளிர் அஞ்சியமை; ‘அரசராப் பனிக்கும் அணங்குறுபொழு'தென உருவகம் பெறும் (புறம்.369). பெருஞ்சேரல் இரும்பொறை பகைவரை வருத்த அவனை அணங்கு என்று துதித்தனர். அவன் பலிகொண்டு பெயரும் பாசம் போலத் திறை கொண்டு பெயர்ந்தான் (பதிற்.71). கரிகாலனின் வலிமை (பட்டி.-298); ‘அணங்குடைத் துப்பு’ எனப்பட்டது. குருதியும் தசையும் பெருகித் தோய்ந்து அச்சத்தைத் தோற்றும் போர்க்களம்; ‘அணங்குடை மரபின் இருங்களம்’ (புறம்.25, 392) எனப்பட்டது. ஆளி, அதன் குட்டி, பாம்பு, மதயானை ஆகிய விலங்குகள் மக்களை அச்சுறுத்தி வருத்துவதால் அணங்கு அடைமொழி பெறுகின்றன (பொரு.அடி-139; பெரு.அடி-258;

நற்.37, 75, 168; புறம்.211; குறு.119, 308; அகம்.108, 381). காமம் அஞ்சுதற்குக் காரணமானதன்று எனவே; ‘காமம் அணங்கும் பிணியும் அன்றே’ என்பர் (குறு.136&204) என்பர்.

2.3 ‘யார் அணங்குற்றனை கடலே’ (குறு.163) என்ற கேள்வி கடலை வருத்தியவர் யார் என்கிறது. பாதையை அரிதாக்கி வருத்திய மூங்கில்புதர் ‘அணங்கிய...வேரல்’ ஆகிறது (மலை.அடி-223). நான் தவறு செய்திருப்பின் தெய்வம் என்னை வருத்தட்டும் என்று தலைவியை அமைதிப்படுத்தும் தலைவன்; ‘அணங்குக’ என்கிறான் (அகம்.166). முருகனுக்குச் செய்ய வேண்டிய முறைமையில் பிழை நேரினும், பொய்ச்சூள் உரைப்பினும் வருத்துவான் (நற்.288, 376; பரி.8; அகம்.98, 388; ஐங்.245, 250). சுங்கச்சாவடியில் இலச்சினை பொறிப்போன் கெடுபிடிக்காரன் ஆதலால் ‘வல்லணங்கினோன்’ (பட்டி.134) ஆகிறான். பரி.4, 9; கலி.24, 58, 77, 132, 144, 148; அகம்.159, 167, 214, 237, 317 அனைத்தும் வருத்தத்தை அணங்கு என்கின்றன.

2.4 அடக்க முடியாத வேட்கைக்குக் காரணமான தலைவி தலைவனை வருத்துவதால் அணங்கு எனப்படுகிறாள் (பொரு.அடி-35; நற்.9, 39, 146; குறு.70, 337; ஐங்.58,149, 173, 256, 363; அகம்.32, 161, 177, 295). கடக்க முடியாத வேட்கையைத் தரும் தலைவனின் மார்பு தலைவியை வருத்துவதால் தலைவனும் அணங்கு ஆகிறான் (நற்.17, 94, 245; பதிற்.-68; புறம்.- 14; குறு.362; அகம்.396).

3.0 ‘மூப்புடை முதுபதி தாக்கணங்கு உடைய’தாகக் கூறப்பட்டுள்ளது (அகம்.7). ஊராரின் கவ்வைக்குத் தலைவி அஞ்சவேண்டி இருப்பதால்; ‘கவ்வை நல்லணங்கு’ (அகம்.20) எனப் பேய் உருவகம் அமைகிறது. இயற்கைப்புணர்ச்சி நிகழ்ந்தபின் திரும்ப வராத தலைவன்; தலைவி வருத்தத்திற்குக் காரணமானதால் ‘தாக்கணங்கு’ (ஐங்.23) என்று வசை பெறுகிறான். பார்வையால் தலைவனைத் துன்புறுத்தும் தலைவி அணங்கு என அழைக்கப்படுகிறாள் (கலி.56, 71, 109, 131; பரி.11; அகம்.319). எருதைக் கொன்று தசையைச்சுட்டுத் தின்ற மறவர் ‘அணங்கு அருமரபிற் பேய்’ (அகம்.265) போன்றவர் என்று உவமிக்கப்படுகின்றனர். இரவு ‘பேயும் அணங்கும்’ (மது.அடி-632; நற்.319) அலையும் பொழுதாம். காட்டுவழியும் ‘அணங்குடை ஆரிடை'யாம் (கலி.49; நற்.144).

தொல்தமிழரின் சமயக்கொள்கை சீரற்றது என்று முனைவர் ஜார்ஜ் ஹார்ட் குறிப்பிடுவது மீளாய்வுக்கு உரியது (“Early Evidence for Caste in South India” p.8). ஏனெனில் அணங்குக் கொள்கைக்கு முறையான விளக்கம் தர இயல்கிறது.

முடிவுரை:

மனிதஇயல்பிற்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட இயற்கை, கலை, பண்பு, அழகு செயல் அனைத்தும் அணங்கு எனப்பட்டன. தெய்வமும் தெய்வத் தன்மையும் அணங்கு ஆகும். மலை, குகை, காடு, காட்டு விலங்கு, நீர்த் துறைகள், ஊர்முற்றம், முன்றில், வாயில், நிலைகதவு, அரசுகட்டில் எங்கும் அணங்கு இருப்பதாக நம்பினர். கற்பிற்குரிய தெய்வம் அணங்கே. கற்புடைய பெண், அன்பு மனைவி, அழகிய பெண், தெய்வத்தின் படை, இருக்கை, நகர், சுறாக்கொம்பு, இசைக்கருவி, தெய்வத்தைச் சுட்டிக்கூறும் சூள் எல்லாம் அணங்காம். முருகனும் அணங்கு ஆவான். தவிர்க்க முடியா அழிவு, மீள முடியா அச்சம், எதிர்கொள்ள இயலா வருத்தம், அடக்கலாகா வேட்கை ஆகியவற்றின் காரணிகள் அணங்கு எனப்பட்டன. தாக்கணங்கு தீண்டி வருத்தும் தன்மையது.