- பண்டைய …
11. பண்டைய மதுரையின் இருபெரு நியமங்கள்
0.0.முன்னுரை:
0.1. மாங்குடிமருதனாரின் மதுரைக்காஞ்சியில் உள்ள;
“ஓவுக் கண்டன்ன இருபெரு நியமத்து”
என்ற தொடர் அறிவுறுத்தும் இரண்டு நியமங்கள் எவை என்பதை வரலாற்றியல் நோக்கில் காண்பதே இவ் ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.
0.2. மதுரைக்காஞ்சி ஆய்வுக்குரிய முதன்மை ஆதாரமாக அமைகிறது. பிற செவ்வியல் இலக்கியங்களும், கள ஆய்வும் துணைமை ஆதாரங்களாகும்.
0.3. மதுரைக்காஞ்சிக்கு உரை எழுதிய பெருமழைப்புலவர் பொ.வே.சோம சுந்தரனார், ‘ஓவியத்தைக் கண்டாலொத்த காட்சியினை உடைய இரண்டாய பெரிய அங்காடித்தெருவின்’ என்று பதவுரையும், ‘இருவகைப்பட்ட அங்காடித் தெருவின்கண்’ என்று கருத்துரையும் (பத்துப்.- 2ம் பாகம்- ப.-129&130) கூறுகிறார். முனைவர் வி. நாகராசன், ‘ஓவியத்தைக் காண்பது போல் கண்ணுக்கு இனிமையைத் தரும் நாளங்காடி, அல்லங்காடி என்ற இரு கூற்றினை உடைய பெரிய அங்காடித்தெரு’ (பத்துப்.- 2ம் பகுதி- ப.-99) என்கிறார். ‘ஓவியத்தைக் கண்டாற்போன்ற காட்சியை உடைய இரு அங்காடித்தெருவில்’ என்கிறார். புலவர் அ.மாணிக்கனார் (பத்துப்.- பகுதி-2- ப.-133). இந்த உரைகள் சிலப்பதிகாரச் செய்தியோடு ஒத்துப் போகாமையே இந்த ஆய்விற்குக் காரணமாக அமைகிறது.
1.0. மாங்குடி மருதனார்
மாங்குடி மருதனார் பேசும் இருபெரு நியமங்கள் மதுரையிலிருந்த இரண்டு பெரிய ஆலயங்களையே சுட்டுகின்றன.
1.1. பாடற்செய்திகள் பின்வரும் வரிசைமுறையில் அமைகின்றன. பாண்டியர் குடி, செங்கோன்மை, வெற்றி, நால்வகைப் படைகள், நெடுஞ்செழியனின் போர்வேட்கை, அவனது முன்னோர் பெருமை, பாண்டிய நாட்டு ஊர்கள், கொடைத்தன்மை, குறுநில மன்னர் இருக்கை, தலையாலங்கானத்துப் போர், கொற்கை, பரதவரை அடக்கல், சான்றாண்மை, போன்ற சிறப்புகளைப், பாடியபின்னர் காஞ்சித்திணைப் பொருளை வலியுறுத்துகிறார்.
தொடர்ந்து ஐந்து நிலவளங்களை அணுகக் கொண்டு இருக்கும் வையை, ஆற்றங்கரைப் பாண்சேரி, அதையொட்டிய அகழி, கோட்டை
வாயில், உள்ளே எழுந்த பேரொலி,என்று அமையும் வருணனையில் அடுத்து வருவதே இருபெரு நியமமும், திருவிழாக் கொடிகளும் ஆகும்.
அதையடுத்து நாற்படைகள் வந்து போகும் மதுரைத் தெருக்களில் ஏழாம் நாள் புனித நீராட்டின் போது எழுந்த நாளங்காடி ஆரவாரம் பேசப்படுகிறது.
தொடர்வது பெருநிதிக்கிழவர் வழிபாடு, மாலையில் தெய்வங்கட்குப் பலியிட்ட விழா ஆரவாரம், பௌத்த சமண அந்தணர் பள்ளிகள், அறங்கூறு அவையத்தார் தெரு, காவிதி மாக்கள் தெரு, வணிகர் தெருக்களில் எழுந்த அல்லங்காடி ஆரவாரம் முதலியனவாம்.
இவ்வாறு நாளங்காடியையும், அல்லங்காடியையும் விரிவாக விதந்து ஓதுவதால் ‘இருபெருநியமம்’ என்பது இரண்டு ஆலயங்கள் என்பதும், அந்த ஆலயங்களில் திருவிழா குறித்த கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன என்பதும் புலனாகிறது. இரண்டு அங்காடிகள் என்று பொருள் கொண்டால் கூறியது கூறல் குறையோடு பொருள் தொடர்நிலை தெளிவுற அமையவும் வழியில்லை.
1.2. பிங்கல நிகண்டு ‘நியமம்’ என்ற சொல்லுக்கு ‘கடைத்தெரு’ என்னும் பொருள் மட்டுமின்றி ‘தெய்வம் வழிபடல்’ என்றும் பொருள் தருகிறது.
1.3. பிற சங்கஇலக்கியங்களிலும் நியமம் என்ற சொல் ஆலயம் என்ற பொருளில் வழங்குகிறது. கோசர் மதுரையை அடுத்த செல்லூரின் கிழக்கே ஒரு நியமத்தை நிறுவினர். அங்கே கடவுள்மங்கலம் செய்ய வேள்வி நிகழ்த்தினர் என்பது மருதனிளநாகனாரின் அகநானூற்றுப் பாடல்கள் (90&220) மூலம் தெரிகிறது.
1.4. பண்டைத் தமிழகத்தில் கோயில், நகர், நியமம், கோட்டம், பள்ளி என ஐந்து வகை வழிபாட்டிடங்கள் இருந்தன என்று சிலப்பதிகார ஊர்காண்காதையில் இளங்கோவடிகள் வரிசைப்படுத்தி உள்ளார். (அடி.- 7-11)
கோயில் என்பது வேதநெறிப்படி தீமுறை வழிபாடு நிகழ்ந்த இடமாகும். கோட்டம் என்பது வேதநெறி அல்லாத வழிபாட்டு முறையைப் பின்பற்றும் இடமாகும். கோட்டத்தில் வேள்விச்சாந்தி நிகழ்த்தும்போது அது கோயில் என்று அழைக்கப்பட்டது. நகர் என்பது அரசுக்குச் சொந்தமான நிலத்தில் மக்களுக்காக மன்னன் அமைத்த
ஆலயம் ஆகும். நியமம் என்பது அரசரும் அந்தணரும் அல்லாத பிற மக்கட்சமூகத்தார் நிறுவிய வழிபாட்டிடம் ஆகும். (‘சிலப்பதிகாரம் காட்டும் வழிபாட்டிடங்கள்’- மின்தமிழ் மேடை- ஜூலை- 2018- ப- 70-82) அறச் சாலையாகவும் கல்விச் சாலையாகவும் அமைந்த வழிபாட்டிடமே பள்ளி என்று அழைக்கப்பட்டது.
மதுரை வருணனையில் இளங்கோ, திருமாலுக்குரிய வழிபாட்டிடத்தை,
“உவணச் சேவல் உயர்த்தோன் நியமம்” (மேற்.-அடி.-8)
என்கிறார்.
2.0 மதுரைக்காஞ்சி
மதுரைக்காஞ்சி சுட்டும் இருபெரு நியமங்களுள்; சுயம்புலிங்கத்தைக் கருவறையில் கொண்டு இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் ‘மழுவாள் நெடியோனி'ன் நியமம் ஒன்று; இன்னொன்று பண்டு உவணச்சேவல் உயர்த்தோன் நியமம் என்று அழைக்கப்பட்டு இன்று பன்னிரண்டு துண்டுகள் ஆக்கப்பட்டிருக்கும் கூடல் அழகர் கோயில் எனலாம்.
2.1.0 சங்ககாலத்தில் ‘மழுவாள் நெடியோன்’ நியமத்தை வடகிழக்கிலும், திருமால் நியமத்தை மேற்கெல்லையிலும் கொண்டிருந்த மதுரை பின்னர் மழுவேந்திய சிவனுக்குரிய ஆலவாய் என்று பெயர் பெற்ற கோவிலை ஊரின் நடுவிடமாகக் கொண்டு விரிந்துள்ளது. இடைக்காலத்தில் ஆவணி மூலவீதியை அடுத்துக் கோட்டையுடன் கூடிய மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் நாலாபுறமும் விரிந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் அங்ஙனமே விரிந்தது. அப்படி விரியும்போது இருபெரு நியமங்களுள் ஒன்றான திருமால் ஆலயம் துண்டாடப்பட்டுள்ளது.
2.1.1 பண்டைத் தமிழகத்தில் ஊர்கள் கீழ், மேல் என்று இருகூறுபட்டிருந்தன. (கீழக்குயில்குடி,மேலக்குயில்குடி; கீழ்மாத்தூர், மேல்மாத்தூர்; கீழ்ப்பனங்குடி, மேல்பனங்குடி முதலியன சான்றாகும்.) கீழ்ப்பகுதியிலேயே பெரும்பாலும் இறந்தோரைப் புதைக்கும் இடங்கள், தவவாழ்க்கை மேற்கொள்வோர்க்குரிய இருப்பிடங்கள் இருந்தன என்பது அகழ்வாய்வு மூலம் புலப்படுவதை ஆய்வாளர் கூறியுள்ளனர் (தேவகுஞ்சரி- Madurai Through The Ages- p.-16). இன்றைய மதுரையின் மையப்பகுதியை ஒட்டித் தென்கிழக்கில் கீழ்மதுரை உள்ளது.
இக்கீழ்மதுரைக்கும் இன்றைய மதுரை தெற்குவெளிவீதியின் கிழக்கு மூலைக்கும் இடையே உள்ள தூரம் நடைப்பயண தூரமே ஆகும். கீழ்மதுரையை அடுத்துள்ள அனுப்பானடியில் வரலாற்றுக்கு முந்திய காலத் தாழிகளும் பிற எச்சங்களும் கிடைத்துள்ளன (B.S.Baliga-Gazetteers Of India-p.393). இதனால் கீழ்மதுரைக்கு நேர்மேற்கிலேயே பண்டைய மதுரை இருந்திருக்க வேண்டும் எனலாம். அவ்வாறு கொண்டால் ஆலவாய்க்கோயில் நகரின் வடகிழக்குத் திசையில் அமைகிறது.
இன்றைய மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் கருவறையில் உள்ள லிங்கம் சுயம்புலிங்கம் எனவும், அது பல ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு கடம்பமரத்தின் படிமம் என்றும் கூறுகின்றனர். (P.V.Jeyachandran- The Madurai Temple Complex-Madurai Kamaraj University- Ph.D.thesis-1979- p.-255&261) மரங்கள் இவ்வாறு காலப்போக்கில் கார்பன் சேர்க்கையால் கல்மரங்களாவது உண்டு என அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர் (சு.கி.செயகரன்- “பாசில்கள்- பூமகளின் காலச் சுவடுகள்- கலைக்கதிர்- செப்டம்பர் 1977- ப.-63). எனவே சங்ககாலம் தொட்டு இக்கோயிலின் கருவறையிலுள்ள லிங்கம் வழிபடுபொருளாக இருக்கக் கூடியது சாத்தியமே. திருவிளையாடற் புராணக்கதையும் தேவர்களெல்லாம் வழிபாடு செய்துகொண்டு இருந்த லிங்கம் கடம்பவனக் காட்டில் இருந்ததாகவே கூறுகிறது (திருநகரம் கண்ட படலம்- பா- 3-12). ஏற்கெனவே வழிபாடு நிகழ்ந்த இடத்தைக் குலசேகர பாண்டியன் கற்கோயில் எடுத்து விரித்துள்ளான்.
சங்ககால மதுரை இன்றைய மதுரை மையப்பகுதியின் தென்கூறை மட்டும் உள்ளடக்கியது என்ற கருத்தை ஆதரிக்கும் வகையில் மயமதம் கூறும் நகரமைப்பு விதிகளும் உள்ளன. பண்டு தமிழகத்தில் மயமதமே பெரிதும் போற்றப்பட்டது. சாத்தனார்,
“மிக்க மயனால் இழைக்கப்பட்ட
சக்கரவாளக் கோட்டைமீங் கிதுகாண்” (மணி.- சக்கர.- அடி-
201-202) என மயனின் மரபு போற்றப்பட்டமையைக் குறிப்பிட்டுள்ளார். திருத்தக்கதேவர்,
“மயனிழைத்த அம்பாவையின் வைகினாள்”(சீவக
சிந்தாமணி- பதுமையார் இலம்பகம்- பா-145) என்று மயமதத்தின் பெருமையை உவமையில் எடுத்தாள்கிறார். வில்லிபுத்தூராரும்,
“சிற்பவல்லபத்தின் மயன் முதலுள்ள தெய்வ வான் தபதியர்”
(பாரதம்- ஆதிபருவம்- இந்திரப்பிரத்தச் சருக்கம்- பா-18) என்று மயனை முதன்மைப் படுத்துகிறார். கம்பரும், இராமனுக்கும் சீதைக்கும்
திருமணம் நிகழ்ந்த மண்டபம் மயனால் நிருமிக்கப்பட்டது என்கிறார். (இராமாயணம்- பால காண்டம்- கடிமணப் படலம்- பா-45) தெய்வத் தச்சர்களில் மயனே தமிழகத்தோரால் பெருமைப்படுத்தப் படுகிறான்.
மயமதம் சிவன்கோயில் நகரின் ஈசான்ய திசையில் அமைய வேண்டும் என்று கூறுகிறது. (பாகம்-1- ப.-76) இதனால் சங்ககால மதுரையில் மழுவேந்திய சிவபெருமானின் கோயில் மயன் விதித்தபடி வடகிழக்குத் திசையில் அமைந்திருந்தது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகிறது. அத்துடன் திருமால் கோயில் ஊரை நோக்கி இருப்பது சுபபலனை அளிக்கும் என்றும் மயமதம் கூறுகிறது (பாகம்-1- ப.-82). இன்றைய கூடலழகர் கோயிலே மதுரையின் பழைய வைணவ ஆலயம் என்பது பரிபாடல் திரட்டு மூலம் தெளிவாகிறது. இக்கோயில் தெற்குமாசி வீதியும், மேற்குமாசி வீதியும் சந்திக்கும் மூலையில் கிழக்கு முகமாக உள்ளது. பண்டு இக்கோயில் நேர்மேற்கில் அமைந்ததாதல் வேண்டும்.
2.1.2 சிவன் கோயிலை மையமாக வைத்து, அதைச் சுற்றி நாற்புறமும் வீதிகள் இணையாகச் செல்லும் அமைப்பு பரிபாடல் திரட்டு காலத்திலேயே உருவாகி இருக்க வேண்டும் என்பது,
“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவோடு புரையும் சீறூர் பூவின்
இதழகத் தனைய தெருவம் இதழகத்து
அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்” (பரி.
திரட்டு 7) என்ற பாடலடிகள் மூலமாகத் தெளிவாகிறது. மதுரையின் அருகில் இருந்தையூர் என்ற குடியிருப்புப் பகுதி இருந்தமையும்,
“நான்மாடக்கூடல் எதிர்கொள்ள ஆனாது
மருந்தாகும் தீநீர் மலிதுறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ “(மேலது- பா-1)
என்ற பரிபாடல் திரட்டு அடிகள் மூலம் தெரிய வருகின்றது. அத்துடன் வையையின் போக்கில் மதுரைக்கு முன்னரே இருந்தையூர் இருந்ததென்பதும் புலனாகிறது. இவ்வூரின் சுற்றுப்புறமும் சூழலும் குறித்து இதே பாடல் மேலும் உரைப்பதாவது:
“ஒருசார் அணிமலர் வேங்கை மராஅ மகிழும்...
மணிநிறங் கொண்ட மலை
ஒருசார் தண்ணறுந் தாமரைப் பூவின் இடையிடை...
கண் வீற்றிருக்கும் கயம்
ஒருசார் சாறுகொள் ஒதத்து இசையொடு மாறுற்று...
திருநயத்தக்க வயல்
ஒருசார் அறத்தொடு வேதம்...
அறத்தில் திரியாப் பதி” (மேலது)
இவ்வாறு ஒருபுறம் மலையும், ஒருபுறம் குளமும், ஒருபுறம் வயலும், ஒருபுறம் ஊரும் கொண்டிருந்த திருமால் கோயில் இன்றைய கூடலழகர் கோயிலின் இருப்பிடத்தோடு பொருந்தியுள்ளது. ஒருபுறம் பசுமலையும், ஒருபுறம் ஆவணிமூல வீதியை அடுத்துக் கோட்டை, அகழியுடன் கூடிய மதுரை ஊரும், ஒருபுறம் மாடக்குளமும், ஒருபுறம் பசுமையான வயற்புறமும் கொண்டது இன்றைய கூடலழகர் கோயில். (1980 வரை இருந்த வயற்புறங்களில் இன்று T.V.S.நகர் வரை பல புறநகர்ப் பகுதிகள் தோன்றி விட்டன.)
கூடலழகர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் திருமால் இருந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவருக்கு இருந்தவளமுடையார் என்றும் பெயர். இருந்த வளமுடையார் கோயில் கொண்டிருக்கும் பகுதி இருந்தையூர் ஆகும். இன்றைய கூடலழகர் கோயிலின் இருப்பிடம் மதுரையின் தென்மேற்குப் பகுதியாதலால் வையை இப்பகுதியைக் கடந்த பின்னரே மதுரை நகர்க் கோட்டையின் வடக்கு வாயிலை அடைய முடியும். மேற்கூறிய பாடல் கருத்துக்கள் முற்றிலும் இக்கோயிலுடன் பொருந்தி வருகின்றன. இந்த ஆலயம் பாண்டியப் பேரரசுக்காலத்தில் மதுரையின் புறநகர்ப் பகுதியாக இருந்தது.
2.1.3 இடைக்கால இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலக் கோட்டை இன்றைய ஆவணிமூல வீதிகளுக்கும் மாசிவீதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்தது. கோட்டைச் சுவரை அடுத்து வெளியே அகழியும், புறநகர்ப் பகுதிகளும் இருந்தன. (பார்க்க - படம் 1) விஸ்வநாத நாயக்கர் மாசிவீதிகளை உருவாக்கும் போது இருந்தையூர், நடுவூர், கரியான் திருவுறை, காளிகோயில், ஹரிஹரபுத்திரர் கோயில், தென்திரு ஆலவாய், சப்தகன்னியர் கோயில் முதலிய புறநகர்ப் பகுதிகளை இணைத்தார். (W.Francis- The Madras District Gazetteers- p.-266& B.S.Baliga- மு.நூ.- p.-48&63)
2.1.4 கி.பி.1559ம் ஆண்டு அரியநாதமுதலியின் துணையோடு விஸ்வநாத நாயக்கர் பாண்டியர்களின் கோட்டையை இடித்து அகழியைத் தூர்த்துவிட்டுப் புதிதாக 72 கொத்தளங்களோடு கூடிய உட்கோட்டைச் சுவரையும், புறக் கோட்டைச் சுவரையும் எழுப்பித்
திசைமாணியின் நான்கு மூலைகளிலும் நான்கு வாயில்களை நிறுவினார். இவ்வமைப்பு ஆற்றின் போக்கினை அடுத்த குறுங்கோணத்தில் இருந்தது. சுற்றிலும் நான்கு திசைகளிலும் அகழி இருந்தது என்று மதுரை மாவட்ட கெசட் கூறுகிறது. இன்றைய வெளிவீதிகளே அகழிகளாக இருந்தன. ஆய்வாளரும் இக்கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். (J.P.L.Shenoy- Madurai The Temple City- p.10) அப்போது திருமாலுக்குரிய பெருநியமத்தின் வாயில் உட்கோட்டைச் சுவரில் பொருந்தி, கோயிற்பகுதி முழுமையும் உட்கோட்டைச் சுவருக்கும், வெளிக்கோட்டைச் சுவருக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்து இருக்க வேண்டும். ஏனெனில் இன்றைய
1)கண்ணன் கோயில்
2) ஹயக்ரீவர் கோயில்
3) இராமர் கோயில்
4)சோனையார் கோயில் (காவல் தெய்வம்- கருப்பசாமி)
5) வைகுண்ட ஏகாதசி இராப்பத்து பல்லாண்டு பாடும்
மண்டபம்
6)வீரராகவப்பெருமாள் கோயில்
7) பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில்
8)சீனிவாசப் பெருமாள் கோயில்
9) ஆஞ்சநேயர் கோயில்
10) கூடலழகர் கோயில்
11)சக்கரத் தாழ்வார் கோயில்
12) மதனகோபாலசாமி கோயில்
முதலிய அத்தனை வழிபாட்டு இடங்களும் மாசிவீதிக்கும் வெளிவீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் உள்ளன.
2.1.5 கி.பி.1837ம் ஆண்டு ஆளுநர் பிளாக்பர்ன் நாயக்கர்காலக் கோட்டையை இடித்து பெருமாள் மேஸ்திரி வீதிகளையும், மாரட் வீதிகளையும் உருவாக்கிய போது (B.S.Baliga- மு.நூ.- ப.395-396) திருமாலுக்குரிய பெருநியமம் 12 கூறுகளாகப் பிரிந்து விட்டது. (பார்க்க - படம் 2& 3)
இன்றைய கூடலழகர் கோயிலுக்கும் மதனகோபாலசாமி கோயிலுக்கும் இடையே ஒரே ஒரு வீதி மட்டுமே கிழக்கு மேற்காகச் செல்கிறது. இவ்வீதியில் தான் சக்கரத்தாழ்வார் கோயில் வாசலும் உள்ளது. இவ்வீதி மாசிவீதியை பெருமாள் மேஸ்திரி, மாரட் வீதிகளுடன் இணைக்கிறது. மேற்கூறிய மூன்று வீதிகளும் உருவாகும் முன்னர்
இருகோயில்களும் அடுத்தடுத்து ஒரு கோயிலின் இரு கூறுகளாக இருந்திருக்க வேண்டும். கண்ணன், ஹயக்ரீவர், ராமர் கோயில்கள் கூடலழகர் கோயிலின் எதிரிலேயே உள்ளன. அங்கிருந்து கூப்பிடு தூரத்திலேயே வீரராகவப்பெருமாள் கோயில் தென்னழகுக்காரத் தெருவில் உள்ளது. சீனிவாசப் பெருமாள் கோயிலும், ஆஞ்சநேயர் கோயிலும் தெற்கு மாரட் வீதியருகில் எதிரெதிரே உள்ளன. பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் இன்று சௌராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் என்று வழங்கப்படுவதன் காரணம் அது அந்த இனத்தவரால் புரக்கப்படுவதாகும்.
கள ஆய்வின்போது இக்கோயில்கள் அனைத்தும் நடந்து சென்று தரிசிக்கும் படியே உள்ளன. குறுக்குமறுக்காகச் செல்லும் குடியிருப்புச் சிறுவீதிகளும், கடை வீதிகளும், மக்கட்பெருக்கமும், நகர விரிவாக்கமும் கோயிலைத் துண்டாடி
உள்ளன.
முடிவுரை:
மாங்குடி மருதனார் பேசும் இருபெரு நியமங்கள் மதுரையிலிருந்த இரண்டு பெரிய ஆலயங்களையே சுட்டுகின்றன.அவை முறையே சுயம்புலிங்கத்தைக் கருவறையில் கொண்டு இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் ‘மழுவாள் நெடியோனி'ன் நியமம் ஒன்று; இன்னொன்று பண்டு உவணச்சேவல் உயர்த்தோன் நியமம் என்று அழைக்கப்பட்டு இன்று பன்னிரண்டு துண்டுகள் ஆக்கப்பட்டிருக்கும் கூடல் அழகர் கோயில் எனலாம்.
படம் 1:
![Plan of Madurai in 1757](img\Plan of Madurai in 1757.jpg)
படம் 2
![Plan of Madurai in 1757-2](img\Plan of Madurai in 1757-2.jpg)
படம் 3:
![Plan of Madurai in 1757-3](img\Plan of Madurai in 1757-3.jpg)