- புறநானூற்றுக் …
12. புறநானூற்றுக் கிழாரின் சமூகநிலை
0.0. முன்னுரை
0.1 பண்டைத் தமிழகத்துக் கிழார்களின் சமூகநிலை பற்றித் தெளிவுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
0.2 உ.வே.சாமிநாதையர் தனது புறநானூற்றுப் பதிப்பில் கிழார்களின் ஊர், பாடற்செய்தி முதலியவற்றை பாடலின் முதற்குறிப்பாகத் தருகிறார். புலவர் கா.கோவிந்தன் நாற்பத்தொரு கிழார்களைத் தன் நூலில் வரிசைப் படுத்தி உள்ளார். அவர்களது வாழ்விடம், சார்ந்திருந்த வேந்தர் அல்லது குறுநில மன்னர், அவர்களைப் பற்றிய பாடற்பொருள் முதலியவற்றைக் கூறியுள்ளார். சில கல்வெட்டுகளை அடியொட்டிக் கிழார் யார் எனச் சொல்ல முனைகிறார். கிழார்களின் சமூகநிலை பற்றித் தனிப்பட்ட ஆய்வுகள் வெளிவரவில்லை
0.3 இவ் ஆய்வுக்குப் புறநானூறே முதல்நிலை ஆதாரம் ஆகும். பிற சங்க இலக்கியங்களும் ஆய்வாளர் கூற்றுகளும் இரண்டாம்நிலை ஆதாரமாம்.
0.4 மரபு வழிப்பட்ட விளக்கமுறை ஆய்வே பின்பற்றப்படுகிறது.
1.0 கிழார்களின் வாழ்க்கை:
1.1 கிழார்கள் வேளாண்மையில் ஈடுபட்டோர் ஆவர். கிழாரைப் பாடும்போது அவரது தோட்டங்களின் வளமும், புன்செய் வளமும் சுட்டப்படுகின்றன .
சிறுகுடிகிழான் பண்ணன் தன் பெயராலேயே மருதநிலக் குடியிருப்பாகிய சிறுகுடியின் தலைவன் என்பது வெளிப்படை. அவனது உழவுத்தொழிலுக்குரிய எருதுகளையும், ஏற்றத்தையும்; கிணைப்பறை கொட்டி இசைத்துப்
“...பண்ணற் கேட்டிர்அவன் ...
வினைப்பகடு ஏற்றம் எழீஇக் கிணைதொடா
நாடொறும் பாடேனாயின்” (புறம்.388)
என மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
பண்ணனின் படப்பையில் விளைந்த மா, நெல்லி, பாதிரிப்பூ முதலியவை அவனோடு சேர்த்துப் பாடப்பட்டுள்ளன.
“கழல்கால் பண்ணன் காவிரி வடவயின்
நிழல் கயம் தழீஇய நெடுங்கால் மாவின்
தளிரேர் ஆகம்” (அகம்.177)
என்னுங்கால் தலைவியின் இளமையும் வளமையும் பொருந்திய மேனிக்குப் பண்ணனது தோட்டத்தில் விளைந்த மாவின் தளிர் உவமையாக எடுத்தாளப்படுகிறது.
“பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப்
புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்
நீர்குடி சுவையில் தீவிய மிழற்றி”(மேற்.54)
என்ற அடிகளில் மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் தலைவி பேசும் சொல்லின் சுவைக்குப் பண்ணன் தோட்டத்து நெல்லியைத் தின்ற பின் நீரருந்தும் சுவையை உவமையாக்குகிறார்.
விறலியின் கூந்தல் மணத்திற்கு பண்ணன் தோட்டத்துப் பாதிரிப்பூ மணம் உவமையாகிறது. கோவூர்கிழார்,
“கைவள்ளீகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி......விறலி” (புறம்.70)
என்கிறார்.காவிரியின் வடகரையில் வாழ்ந்த பண்ணன் புன்செய்ப் பயிர்களை விளைவித்தான்.
“வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
பெயர்க்கும் பண்ணன்”(புறம்.388)
எனவரும் பாடலடிகள் வெல்கின்ற வாய்மொழியை உடைய புலவர்க்குப் புல்லின் விளைநிலத்தைத் தானமாகக் கொடுக்கக் கூடியவன் என உணர்த்துகின்றன. இங்கு சுட்டப்படும் புல் புன்செய்ப் பயிர்களைக் குறிக்கிறது. பொதுமக்கள் பேச்சு வழக்கில் இன்றுவரை கம்பு தானியத்தைப் புல் என்றே சுட்டுகின்றனர்.
1.2. கிழார்கள் கொடையிலும் சிறந்திருந்தனர். கிள்ளிவளவன் பண்ணனைப்; ‘பசிப்பிணி மருத்துவன்’ (புறம்.173) என்கிறான்.
1.3. கிழார் பொருளாதாரத்தில் சுருங்கியவர் ஆவர்.
கொண்கானக் கிழானை விதந்து போற்றும் மோசிகீரனார்,
“திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்” (மேற்.154)
‘உன்னை நாடி வந்தேன்’ என்கிறார். இப்பாடற்பகுதி மிகுந்த செல்வம் இல்லாதவன் கொண்கானக்கிழான் என்பதை வெளிப்படையாகச்
சொல்கிறது. ‘கடலுக்கு அருகே இருந்தாலும் தாகம் தீர்க்க; அறிந்தோரிடம் சிறிதளவு நீர் கேட்பதைப் போல’ என்பதால் கிழார் பொருள்வளம் மிக்கவரல்லர் என்பது உறுதி.
1.4. கிழார் தமிழகத்தின் பூர்வ குடிகள். வேளாண்மை நிகழ்ந்த குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய மூன்று நிலங்களிலும் பரவி வாழ்ந்தனர்.
தமிழகத்தில் வேளாண்மையில் ஈடுபட்டிருந்த வேளிர் வந்தேறிகள் என்று மு.இராகவையங்கார் நிறுவியுள்ளார். குடிப்பெயருடன் சேர்த்தே வழங்கப்பெறும் வேளிரினின்றும் வேறுபிரித்து அறிவதற்கேற்ப கிழார்கள் இடப்பெயருடன் சேர்த்தே சுட்டப்படுகின்றனர். கொண்கானக்கிழான் குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்தவன். மல்லிகிழான் காரியாதி முல்லை நிலத்தைச் சேர்ந்தவன். சிறுகுடி கிழான் பண்ணன் மருதம் சார்ந்தவன்.
1.5. கிழார் நெருங்கிய குறிய பல குறும்புகளில் வாழ்ந்தனர்.
மல்லிகிழான் காரியாதியைப் பாடும் ஆவூர்மூலங்கிழார்,
“தமரெனின் யாவரும் புகுப அமர்எனின்
திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக்
கண்மாறு நீட்ட நணிநணி இருந்த
குறும்பல் குறும்பில் ததும்ப வைகி...
பெரும்பெயர் ஆதி...” (மேற்.177)
என அவனது வாழிடத்தை வருணிக்கிறார். அதாவது உற்றாரும், உறவினரும் புகுவதற்கெளிது; பகைவர்க்கு நுழைய அரிது; பொறிகள் பொருந்திய வாயிலை உடையது; அத்தகைய அளவிற் சிறிய பல குறும்புகளிடையே; அவனது கிளைகள் கூடி வாழுமிடத்தில் அவனது மனை இருந்தது; அவை ஒருவர்க்கொருவர் கள்ளைப் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருக்குமளவு அருகருகே இருந்தன.
1.6. வேந்தரின் மந்திரச் சுற்றத்துள் கிழார்கள் இருந்தனர்.
சோழன் நலங்கிள்ளிக்கும், நெடுங்கிள்ளிக்கும் இடையே பகை மிகுந்து போர்மூண்ட போது; கோவூர்கிழார் பொதுமக்களின் துன்பத்தை எடுத்துக்கூறி முற்றுகையைத் தவிர்க்கச் செய்தார் (புறம்.44). பின்னர் உலகாயதத்தை எடுத்துக் கூறிச் சந்து செய்விக்கிறார்.
“குடிப்பொருள் அன்றுநும் செய்தி கொடித்தேர்
நும்மொ ரன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யுமிவ் இகலே."(மேற்.45)
என்ற பாடல் அடிகள் கிழார்களின் நிலையையும், வேந்தர் பற்றிய அவர்களது நிலைப்பாட்டையும் புலப்படுத்துகின்றன. ‘ஆத்திமாலை அணிந்திருக்கும் அண்ணன் தம்பி இருவரில் யாரேனும் ஒருவர் தான் வெல்ல முடியும். தோற்பவர் யாராக இருப்பினும் அது உங்கள் குலத்திற்குத் தான் இழுக்கைத் தரும். உம்மைப் போன்ற பிற வேந்தர்கள் உங்களைப் பார்த்துச் சிரிக்கப் போகிறார்கள். உங்கள் குடியின் பெருமையைக் காப்பாற்றுங்கள்’ என்று சொல்லத்தக்க செம்மாந்த வாழ்க்கை கிழார்களுடையது.
இருவேறு வேந்தருக்கிடையில் மாறுபாடு ஏற்படினும் அங்கே கொடுமை நிகழாமல்; மனிதம் நிலைக்க கிழார் முயன்றனர். காரியை அழித்த கிள்ளி வளவன் அவனது மக்கள் இருவரையும் யானைக்காலால் இடறிக் கொலை செய்யத் துணிந்த போது, ‘நீயோ புறாவின் துயர் துடைத்த சோழமரபினன்; இவரோ புலவர்கள் துயர் துடைக்கும் வள்ளல் வழித்தோன்றல்கள்; யானையைக் கண்டவுடன் அழ மறந்த சிறுவர்கள்; என் சொற்களைக் கேட்பாயாயின் நான் விரும்புவதைச் செய்க’ என்று நயமாகப் பேசிக் குழந்தைகளைக் காப்பாறியமை காண்கிறோம். (மேற்.- 46)
நலங்கிள்ளியைப் பார்த்த பிறகு தன்னைக் காணவந்த புலவரை ஒற்றன் என்று ஐயுற்றுக் கொலை செய்யத் துணிந்த நெடுங்கிள்ளியிடம்; தவறைச் சுட்டிக்காட்டிப் புலவரை மீட்கிறார் கோவூர் கிழார் (மேற்.47).
1.7. வேந்தரின் அன்பிற்குரிய வீரராகவும் கிழார் இருந்தனர்.
“...வென்வேல்
இலைநிறம் பெயர ஓச்சி மாற்றோர்
மலைமருள் யானை மண்டமர் ஒழித்த
கழல்கால் பண்ணன்” (அகம்.177)
இப்பாடல் பகைவரது குருதியால் பண்ணனது வேல் சிவந்து இருந்தது என்று சொல்வதன் மூலம்; அவனது போர்வன்மையை வருணிக்கிறது. சோழன் கிள்ளிவளவனின் அன்பிற்கு உரியவனாகப் பண்ணன் இருந்தமையை முன்னர்க் கண்டோம் (க.எண் 1.2).
1.8. கிழார்கள் வேளிருக்காக உழுத உழவரின் தலைவரும் ஆவர். தொழில் அடிப்படையில் வேளிரும் கிழாரும் நெருக்கம் கொண்டிருந்தனர்.
வன்புலமாகிய புன்செய்க் காட்டுடனும் , மென்புலமாகிய நன்செய் வயலுடனும் கிழார் ஒருங்கு தொடர்புறுத்தப் பெறும் காரணம் இதுவே. கரும்பனூர் கிழானைப் பாடும் நன்னாகனாரும், பிடவூர் கிழான்மகன் பெருஞ்சாத்தனைப் பாடும் நக்கீரரும் வேளிர் வேளாண்மைக்குப் பாடுபட்டுப் பெற்ற நன்செய் வளத்துடன்; அவர்தம் பாரம்பரியமான புன்செய் விளைச்சலைச் சேர்த்தே பாடுகின்றனர். (புறம்.384, 395)
கா.கோவிந்தன் ‘கிழார்ப்பெயர் பெற்றோர்’ எனும் நூலில் நாற்பத்தொரு கிழார்களை வரிசைப் படுத்துகிறார். அனைவரும் ஏதேனும் ஓர் ஊர், நாடு அல்லது இடப்பெயருடன் தொடர்புபடுத்தப் பட்டுள்ளனர். இவ்வாறு சுட்டும் முறைக்குக் காரணம்; அவர்கள் தாம் வாழ்ந்த ஊரின் தலைவர்களாய் இருந்தமை எனலாம். உழுவித்த வேளிரின் நிலங்களில் உழுதவர்கள் சிறுகுடியில் வாழ அவர்களுக்குத் தலைவர் ஆயினமையால் தலைவர் என்று பொருள்படும் கிழார் என்ற சொல்லால் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆய்வாளரும் ‘பதிக்குரியோர் என்னும் பொருள் கொண்ட கிழார்’ என்றே விளக்கம் அளிக்கின்றனர் (கா.கோவிந்தன்- மேலது- ப.-21).
ஒருபுறம் வேந்தரோடும்; இன்னொருபுறம் வேளிரோடும் கிழார்க்கு இருந்த தொடர்பு; குன்றூர் கிழார் மகனார் பாடிய மகட்பாற்காஞ்சிப் பாடலில் தெரிகிறது.
“வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
கொற்ற வேந்தர் வரினும் தன்தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன்”(புறநானூறு- 338)
மூவேந்தரும் போர் மேற்கொண்டு வரினும் தம்மைப் பணிந்து பெண் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்ததாகப் பாடி நெடுவேள் ஆதனின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டி உள்ளார். இந்த நெருக்கத்தின் காரணம் அவர் நெடுவேள் ஆதனுக்காக உழுத உழவரின் தலைவன் ஆயினமை எனலாம்.
1.9. தம் அதிகாரத்தைக் காட்டிக் கிழாரின் மகளை வேந்தர் பெண் கேட்குங்கால்; துணிந்து மறுத்து எதிர்த்தனர்.
பெருஞ்சிக்கல் கிழான் மகண்மறுத்ததாக மதுரை மருதனிள நாகனார் பாடியுள்ள பாடல் கையிலிருக்கும் வேலைக் கொண்டு நெற்றி வியர்வையைத் துடைக்கும் வேந்தனைக் காட்சிப்படுத்துகிறது.
“நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்
கடிய கூறும் வேந்தே தந்தையும்
நெடிய வல்லது பணிந்து மொழியலனே “(மேற்.349)
என்று தொடங்கி எதிரெதிர் நிற்கும் வேந்தனையும், தன் சொல்லில் மறுப்பைப் பிடிவாதமாகக் காட்டும் கிழாரையும் வருணிக்கிறது.
பதிற்றுப் பத்துச் சேரரின் பெருஞ்சேரல் இரும்பொறை மையூர் கிழானின் மகளை மணந்தமை பற்றி 9ம் பத்தின் பதிகம் பேசுகிறது .
2.0 அரசர், அந்தணர், வணிகர், வேளாளர்,ஆயர் ஆகிய குடிகளில் உழவுத் தொழில் மேற்கொண்டு சிறந்தார் அனைவரும் கிழார் என்கிறார் ஆய்வாளர். (கா.கோவிந்தன்- மேற். - ப.- 5&6) இம்முரண்பட்ட கூற்றிற்குக் காரணம் என்ன என்று காண வேண்டி உள்ளது. இக்கூற்றிற்கு கல்வெட்டுத் தொடர்களை எடுத்துக் காட்டுவதும் நோக்கத்தக்கது.
கிழார் என்னும் சொல்லின் அடியாக அமைவது; ‘தலைமை’ என்று பொருள்படும் ‘கிழ-’ என்னும் கூறாகும். கிழவன், கிழத்தி, கிழவோன், முதலிய சொற்கள் சங்கஇலக்கியத்தில் ‘தலைமை’ என்ற பொருளில் மிகுதியாகப் பயின்று வருகின்றன. வரலாற்றுக் காலத்தில் ஏற்பட்ட பொருள் மாற்றத்தால் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், ஆயர் என எக்குடியில் பிறப்பினும் தலைமை சான்றோரைக் கிழார் என்று அழைக்கத் தலைப்பட்டனர் எனலாம்.
தொகுப்புரை
கிழார்கள் வேளாண்மையில் ஈடுபட்டோர் ஆவர். வேந்தரின் அன்பிற்குரிய அவர் வீரத்திலும் கொடையிலும் சிறந்து இருந்தனர். கிழார் பொருளாதாரத்தில் சுருங்கியவர் ஆவர். நெருங்கிய குறிய பல குறும்புகளில் தமது சுற்றத்துடன் மனமாறுபாடின்றி நெருங்கி வாழ்ந்தனர். உழுவித்த வேளிருக்காக உழுத உழவர்களின் தலைவராக விளங்கினர். அவர்கள் பாரம்பரியமாக விளைவித்த புன்செய்ப்பயிருடனும், வேளிர்க்காக விளைவித்த நெல்லுடனும் சேர்த்தே புகழப் படுகின்றனர். தமிழ் மண்ணின் பூர்விகக் குடிகள் ஆதலின்; அவர்களைச் சுட்டும் பொழுதெல்லாம் அவர்கள் சார்ந்த ஊர்ப்பெயருடன் சேர்த்தே .அழைப்பர். தொழில் அடிப்படையில்
வேளிரும் கிழாரும் நெருக்கம் கொண்டிருந்தனர். தம் அதிகாரத்தைக் காட்டிக் கிழாரின் மகளை வேந்தர் பெண் கேட்குங்கால்; துணிந்து மறுத்து எதிர்த்தனர். வேந்தரின் மந்திரச்சுற்றத்தில் கிழார் இருந்தனர்.
முடிவுரை:
கிழார் தமிழகத்துத் திணைமாந்தராய்க் குறிஞ்சி, முல்லை, மருத நிலங்களில் வாழ்ந்து வேந்தர் ஆட்சியில் அரசியலில் இடம் பெற்றனர். வயலில் இறங்கி உழுத உழவரின் தலைவராவர்.