/ கண்மணித்தமிழ் /
  1. வேளாண்மையில் …

13. வேளாண்மையில் காவல் பணி

முன்னுரை:

பண்டைத் தமிழகத்து வேளாண்மையில் காவல் பணி மேற்கொள்ளப்பட்ட திறத்தினைக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.தொகை நூல்களான எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் இக்கட்டுரையின் ஆய்வெல்லை ஆகின்றன. இப்பதினெட்டு நூல்களின் கருத்துக்கள் முதல்நிலைத் தரவுகளாய் அமைய; பிற இலக்கியக் கருத்துக்கள் இரண்டாம் நிலைத் தரவுகள் ஆகின்றன.

விளை பொருட்களும் சேதம் விளைவிக்கும் உயிர்களும்:

மக்கள் விளைவித்த பொருட்கள் பலவற்றையும் பிற உயிரினங்கள் உணவாகக் கொண்டன. பாலூட்டிகள், பறப்பன, ஊர்வன எனப் பல்வேறு உயிரினங்களால் விளைபொருட்களுக்குச் சேதம் நேர்ந்தது. மக்களின் விளைபொருட்கள் மக்களாலேயே கவர்ந்து கொள்ளவும் பட்டன. வேந்தரின் யானை வேளிரின் செறுவில் இறங்கி அழித்தது.

தினை முற்றுங்கால் கிளிகள் கவர்ந்துண்டன. (நற்.373) கழனிக் கதிர்களை எருமைகள் சிதைத்தன. (ஐங்.99) மலைநெல்லைப் பன்றிகள் கவர்ந்தன (ஐங்.267). அவரை விளைந்தவுடன் மந்தி அவற்றை மிகுதியாக உண்டதால் அதன் வயிறு பண்டம் பகர்வோரின் பொதி போன்று காட்சி அளித்தது (ஐங்.271). உளுந்தின் காய்களை மானினம் உண்டன. (குறுந்.-68) பாலாவின் பழங்களைக் குரங்குகள் பறித்தன. (குறு.153) வரகினை எலிகள் விரும்பின (புறம்.321). கருங்கோட்டெருமை கட்டிய கயிற்றை அறுத்துக் கொண்டு சென்று நெடுங்கதிர் நெல்லை மேயும் (ஐங்.95). பசு நெற்கதிர்களை மேய்வதைத் தடுக்க அதைக் காஞ்சி மரத்தில் கட்டி வைத்து அதற்கு கரும்பை உண்ணக் கொடுத்தனர் (அகம்.156). தம் இனத்தைவிட்டுப் பிரிந்த ஒற்றை யானை மலைப்புறத்தில் தினைப்புனத்தில் புகுந்து உண்ணக் காவலர் அதை வளைத்துக் கொண்டு நின்று ஆரவாரித்தனர் (மலை.அடி.- 297-299). கருவுற்ற பெண்யானையின் வயிற்றுக்காக ஆண்யானை கரும்பை ஒடித்துக் கொடுக்கும் (கலி.40). பெண்மான் வரகுக் கதிர்களைத் தின்று

தன் ஆண்மானோடு காட்டில் விளையாடும் (நற்.121). மான்கள் மேய்ந்தால் வரகுக் கதிர் குறைந்த நுனி உடையதாகத் தோற்றியது (குறுந்.220). பலாப் பழத்தைத் தின்ற குரங்கு கானவன் அம்புக்கு பயந்து குதிரை போல் பாய்ந்து சென்றது (குறுந்.385). கட்டளைக்கல் போன்ற கரிய பன்றி பொன் போன்ற திணைக்கதிரை உண்ணும் (ஐங்.263). எலி தன் பொந்து நிறைய கதிர்மணிகளைச் சேர்த்து வைத்து உண்ணும் (புறம்.190). வரகுக் கதிர்களைத் தோகை மயில்கள் தின்று விட்டு வினைஞர் நிழலுக்காக விட்டுவைத்த குருந்த மரக்கிளையில் நின்று அகவின (அகம்.194). கிளிகள் ஆரவாரத்துடன் தினையைக் கொய்தன. (நற்.13). கழனிகளில் இருக்கும் நண்டு உழவர் விதைத்த நெல்முளைகளை அறுத்துத் தன் வளை நிறைய நெல்லின் பூக்களையும் உதிர்க்கும் (ஐங்.27, 29, 30).

கோவலர் தம் நிரைகளை மேய்க்கும் போது கரும்பை முறித்துக் கொண்டு குறுந்தடியாக வீசி மாங்கனியை உதிர்த்தனர். (ஐங்.57) போர்மேற் சென்ற வீரர் எதிரிநாட்டின் பனைவளத்தை எல்லாம் உண்டு அனுபவித்தனர் (புறம்.325). வேந்தர் வேளிரிடம் மகட்கொடைநேரும் போது; கருத்து முரண்பாட்டால் போர் மூளுங்கால் வேந்தனின் யானை வேளிரின் செறுவில் இறங்கி அழிவு ஏற்படுத்தியது (புறம்.340).

நிலமும் காவலும்:

குறிஞ்சி, முல்லை, மருதநிலத்து மக்கள் அவ்வந் நிலத்தில் தாம் செய்த வேளாண்மையில் காவற் பணியினை மேற்கொண்டு ஒழுகினர்.

குறிஞ்சி நிலத்தில் கானவர் புனங்களைக் காத்து நின்றனர் (மலை.அடி.- 278-279). முல்லை நிலத்தில் புறவு தோறும் புட்கடியும் ஓசை கேட்டது (பதிற்.78). மருதநிலத்து வயல்களில் உழவர் புள்ளினங்களை ஓட்டினர் (புறம்.29).

உழவுத் தொழிலில் காவல் பணியின் அவசியத்தை உணர்ந்து வள்ளுவரும் வலியுறுத்துகிறார் (குறள்-1038).

காவலில் ஈடுபட்டோர்:

பெண்கள், ஆண்கள் அனைவரும் காவல் பணியில் ஈடுபட்டனர்.

பெண்டிர் தினைப்புனக் காவலுக்குச் சென்றனர் (ஐங்.260, 281, 283, 285, 296). பறவைகளை விரட்டப் பரண் மேலேறிப் பணியாற்றிய

பெண்கள் வெயிலின் கொடுமை நீங்க நீர்விளையாடிப் பின்னர் பல்வேறு மலர்களையும் கொய்து கட்டித் தழையுடை புனைந்து இன்புற்றனர் (குறி.). தலைவியின் தமையர் தம் புனத்தில் மேய வந்த மான்கூட்டத்தைத் தம் கையிலிருந்த களைக்கொட்டை வீசியெறிந்து விரட்டிப் புழுதி படிந்த மேனியராய்க் காட்சியளித்தனர் (குறு.392).

கானக்குறவர் மடமகள் காதல் மிகுதியால் கடமை தவறுகிறாள் என்று நற்றிணைப் பாடல் சொல்கிறது. தான் தினைப்புனக் காவலுக்கு வந்துள்ள செய்தியைத் தலைவன் அறியும்படிக் கிளியே சென்று கூறவேண்டும் என; அதை ஓட்டாமல் வயிறார உண்ணவிட்டுத் தூது செலுத்துகிறாள் (பா-102).

மலைநிலத்துப் பெண்கள் குருவி ஓப்பியும், கிளி கடிந்தும், காவல் நின்றமையை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சுட்டுகிறார் (குன்றக்குரவை- உரைப்பாட்டு மடை). புனம் மேய வந்த யானையைக் குறத்தியின் பாடல் தூங்க வைத்தது என்றும் காட்டுகிறார் (நீர்ப்.அடி.- 211-217).

காவல் நேரம்:

இரவிலும், பகலிலும், மழையிலும், வெயிலிலும் காவல் காத்தனர். இளம் பெண்கள் பகலில் மட்டும் காவல் நின்றனர்.

தினைப்புனம் காக்கத் தாய் கூறியிருப்பதால் பகலில் தலைவன் தலைவியைச் சந்திக்கப் புனத்திற்கு வரலாம் என இரவுக்குறி மறுக்கும் தோழி கூறுகிறாள் (குறு.217).

பகலில் கானவன் கவண் கல்லுக்கு அஞ்சித் தினைப்புனம் மேயாத யானை இரவில் மேய்ந்து பெரிய குளிர்ந்த தூறைக் கண்டு அஞ்சியது (அகம்.309). இரவுக் காவலின் போது குளிர் காய அகிலை எரித்தனர். பரணின் கழுத்தில் எரிகொள்ளி வைத்து இருந்தனர். களிறு தினைக் கதிர்களை இரவில் வந்து கவர்ந்தது. அதன்மேல் கானவன் கொள்ளியை எடுத்து எய்தான். அக்கொள்ளி மின்னல் போல வேகத்துடன் பாய்ந்தது (நற்.393).

இடியும் மழையும் கூடிய நள்ளிரவில் மின்னல் ஒளியில் பிடியும் வேழமும் ஒருங்கு புனம் மேய்வதன் அடியோசை கேட்ட கானவரின் செயலைக் கபிலர் விரித்துரைக்கிறார் (கலி.41). இரவுக்காவல்

காப்போர் புனத்திலேயே தங்கியதால் காட்டுச்சேவல் கூவியது கேட்டே நாழிகை அறிந்தனர் (புறம்.28).

காவல் பணிக்குரிய கட்டுமானங்கள்:

குறுங்கால்களை உடைய குடில்களை அமைத்துத் தங்கிக் காவல் காத்தனர்.நெடுங்கால்களை உடைய பரண்களை அமைத்தனர். உயர்ந்த மரங்களின் கவட்டிடையிலும், பாறைகளின் மேலும் பரண்கள் அமைத்தனர்.

தினைத்தாளால் வேயப்பட்ட குறுங்காற் குடிலில் இருந்து காவல் காத்த கானவனுடன் அவன் மனைவியும் சேர்ந்து இருந்தாள் (குறி. அடி.- 153-154).

சேணோன் இழைத்த நெடுங்காற் பரணின் உச்சியை மயில் தங்கும் இடமாகக் கொண்டது (நற்.276). பரந்த மேற்கூரை உடைய பரணும் அமைத்தனர் (நற்.306).

சந்தனக் காட்டை அழித்துத் தினை விதைத்துப் பயிர் செய்த போது வேங்கைமரத்தின் கவட்டிடையில் பரண் அமைத்துக் காத்தனர். (அகம்.388)

காவல் பணிக்கெனப் பரண் அமைத்துத் தங்கி மேற்பார்வை செய்வதை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும் காட்டுகிறது. (காட்சி. அடி-30)

காவலுக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள்:

பொறிகளை அமைத்தும்; வில் அம்பு, கவண் முதலிய ஆயுதங்களைப் பயன்படுத்தியும் விலங்குகளையும் பறவைகளையும் வீழ்த்தினர். வலை விரித்தும் பிடித்தனர்.

தினைக் கதிர்கள் பால் முற்றித் தலைசாய மேலே உள்ள தோடுகள் அசைந்து ஒலிக்கக் கிளிகளைக் கடிந்து ஓட்டுவதற்காகக் கவண் கற்களைத் தொடுக்குமாறு தந்தை மகளை அறிவுறுத்தினார் (நற்.206).

புனத்தில் மேய வரும் பன்றியை வீழ்த்த அது வரும் புழையில் பொறி வைத்துக் காத்திருந்தான் கானவன். (நற்.98) அங்குப் பொறி இருப்பதை உணர்ந்து பன்றி பின்வாங்குவது உண்டு. பெரிய கற்பலகையை ஒருபால் சாய்வாக நிமிர்த்தி வைத்துக் கீழே முட்டுக்கொடுத்து உள்ளே உணவு வைக்க அதை விழுங்க வரும்

விலங்கு சென்று தொட்டிழுத்தவுடன் கல்வீழ்ந்து; அவ்விலங்கு சிக்குவதும் உண்டு. விலங்கு நையுமாறு அமைத்த பொறியில் பன்றிக்குப் பதில் புலி வீழ்வதும் உண்டு (நற்.119).

ஆண்பன்றியும் பெண்பன்றியும் சேர்ந்து தினைக்கதிர்களை மிகுதியாகக் கவர்வதை உணர்ந்த கானவன் அவை வரும் புழையைக் கண்காணித்து அம்பு தொடுத்து அந்த ஆண் பன்றியைக் கொன்றான். பின்னர் அதை அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தான். (நற்.- 336) ஊர்ச் சிறார்கள் தம் விளையாட்டு வில் கொண்டு எலிகளை அம்பெய்திக் கொன்றனர் (புறம்.324).

பலாவைத் தின்னும் குரங்கைப் பிடிக்க பலாமரத்தில் வலை விரித்தான் கானவன் (குறு.342).

காவலுக்குப் பயன்படுத்திய இசையும் இசைக்கருவிகளும்:

பறவைகளையும் விலங்குகளையும் ஓட்டத் தட்டை, குளிர், பறை, தழல், தண்ணுமை, கோடு முதலிய இசைக் கருவிகளையும், வாய்ப்பாட்டையும் இசைத்தனர். வீளையிட்டும், ஆரவாரித்தும், கைகொட்டியும், விலங்குகளை மருட்டினர்.

சேம்பும், மஞ்சளும் வளர்ந்த பின்னர் அவற்றைப் பன்றி அகழாது இருக்கப் பறை அறைந்த ஓசை மலைப்புறத்தே கேட்டது (மலை.- அடி.-343-344). மூங்கிலால் தட்டை செய்து புனங்கள் தோறும் கிளியை ஓட்டும் பெண்கள் செய்த ஆரவாரமும் அதே மலையில் கேட்டது. (மேற்.- 328-329) அறுவடையின் போது முழங்கிய தண்ணுமையின் ஒலியாலே சுற்றியிருந்த புட்கள் அனைத்தும் பறந்தோடின. (நற்.350) பிரம்பினால் செய்யப்பட்ட தழல் என்ற கருவியை இசைத்தும் பறவைகளை விரட்டினர் (குறி.அடி.- 43-44). கிளியை விரட்டக் கொடிச்சி இசைத்த குளிர் சிலம்பொலி போலக் கேட்டது. (குறு.- 360) பன்றிகள் கூட்டமாக வந்து புனத்தினை மேய்ந்த போது கானவர்கள் கோட்டினை ஊதி அவற்றை விரட்டினர் (அகம்.279).

கிளிகடி பாடலைப் பாடித் தலைவி புனம்காத்த செய்கை நன்மையாக முடிந்தது (அகம்.118). சில வேளைகளில் அவளது இசை கிளிகளைக் கவர்ந்து இழுத்தது (அகம்.12). அவளது இசை கிளிமொழி போன்று இருந்ததால் மற்ற காவலர்கள் கிளி என்று கருதித் துரத்தினர் (ஐங்.289).

இக்காவல் பணி மிகுந்த ஆரவாரத்தை உடையதாக இருந்தது. ஆர்ப்பு, புடைப்பு, கூவிளி, பூசல், விளி, பயிர்குரல் என பலவகைப்பட்ட ஒலிகளையும், நுட்பமான வேறுபாடுகளையும் மேற்கூறிய சான்றுகள் விளக்கும்.

ஒருவரது புனத்தில் யானை நுழைந்து விட்டால்; பலரும் ஒன்றுகூடி மடிவிடு வீளையராய் வெடிபடுத்து எதிர; யானை பின்வாங்கியமையை அறிகிறோம் (குறி.அடி.- 158-161).

காவல் புனத்தில் எழுந்த ஆரவாரம் பற்றி இளங்கோவடிகளும் பேசுகிறார் (காட்சி.அடி- 26)நெற்கூட்டில் சென்று செங்கட்காரான் உரசப் புரி நெகிழ்ந்து மணிகள் சிதற; உழவர் பலரும் சேர்ந்து ஆர்த்து அதனை விரட்டினர் (நாடு.-அடி.- 121-126).

காவல் தேவைப்படும் பருவம்:

பயிர்கள் கதிர் ஈன்று பால்முற்றும் பருவம் முதல் காவல் தேவைப்பட்டது.

கதிர் பிடித்துப் பால் பற்றியதால் அன்னை கிளி கடியச் சொல்லித் தலைவியைப் புனம் அனுப்புகிறாள் (ஐங்.284; கலி.37, 50, 52).

காவலுக்கு நியமிக்கப்பட்டோர்:

பெருமழைக் காலத்தில் பாசனக் குளங்களின் கரைகளைக் காக்க; காவலரை நியமித்து இருந்தனர். அவர்கள் இரவு பகல் பாராது குளத்தைக் காத்தனர். ஆற்று வெள்ளம் பெருகுங்கால் பயிர்களுக்கு ஏற்படும் ஏதத்தை அறிவிக்க துடியர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். வேளிர் தம் வயல்களில் காவல் பணிக்கென வீரர்களை நியமித்து இருந்தனர்

மழைக்காலத்தில் நீர் நிரம்பிய குளக்கரை உடையாமல் பாதுகாக்கும் தொழில் நடைபெற்றது. இத்தொழிலில் நின்ற தலைவன் பாசி படிந்த காலுடன் தலைவியைக் காண வந்தான் (ஐங்.206).

வையையில் வெள்ளம் பெருகிய போது வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர் மீதும் அரிந்து வைத்த சூட்டின் மீதும் பரந்தமையைத் துடி முழக்கி அறிவித்தனர் (பரி.7).

வேளிர் தம் கழனிகளுக்கு நியமித்த காவலர் வயலாமையைத் தின்றபின் அந்த ஆமையின் ஓட்டில் தட்டி நத்தையை உடைத்தும் தின்றனர் (நற்.280). காவல் புரிந்த வீரருக்கு நெல்லையே கூலியாகக்

கொடுத்தனர் (புறம்.353). வேந்தரின் யானையைத் தம் செறுவிலிருந்து ஓட்டும் வீரம் பொருந்திய காவலருக்கே தம் பெண்ணை மணமுடித்துக் கொடுக்க விரும்பினர் (புறம்.342).

வேலிகள்:

இயற்கையாக அமைந்த வேலிகளும் காவலாக அமைந்தன. மூங்கிலும், வேங்கையும் அவ்வாறு அமைவதுண்டு. வேலியாகச் சில பயிர்களையும் விளைவித்தனர். கரும்பும் பருத்தியும் அத்தகையன.

மூங்கிலை வேலியாகக் கொண்ட பலாமரம் மலைச்சாரலில் இருந்தது (குறு.18). கருங்கால் வேங்கை சூழ்ந்த மேட்டுநிலத்தில் சிவந்த வரகுப்பயிரை விளைத்தனர் (அகம்.367).

நெல்வயல்களில் வேலியாகக் கரும்புப்பாத்தி அமைத்தனர் (புறம்.386). புன்செய் நிலத்தில் பருத்தி வேலிப்பயிராக அமைந்தது (புறம்.324).

வேலியைச் செயற்கையாக அமைத்துக் காவலைப் பலப்படுத்தியது பற்றி முக்கூடற்பள்ளு கூறும் (பா.122).

தொகுப்புரை:

மக்கள் விளைவித்த பொருட்கள் பலவற்றையும் பிற உயிரினங்கள் உணவாகக் கொண்டன. பாலூட்டிகள், பறப்பன, ஊர்வன எனப் பல்வேறு உயிரினங்களால் விளைபொருட்களுக்குச் சேதம் நேர்ந்தது. மக்களின் விளைபொருட்கள் மக்களாலேயே கவர்ந்து கொள்ளவும் பட்டன.

குறிஞ்சி, முல்லை, மருதநிலத்து மக்கள் அவ்வந் நிலத்தில் தாம் செய்த வேளாண்மையில் காவற் பணியினை மேற்கொண்டு ஒழுகினர்.

பெண்கள், ஆண்கள் அனைவரும் காவல் பணியில் ஈடுபட்டனர்.

இரவிலும், பகலிலும், மழையிலும், வெயிலிலும் காவல் காத்தனர். இளம் பெண்கள் பகலில் மட்டும் காவல் நின்றனர்.

குறுங்கால்களை உடைய குடில்களை அமைத்துத் தங்கிக் காவல் காத்தனர். நெடுங்கால்களை உடைய பரண்களை அமைத்தனர். உயர்ந்த மரங்களின் கவட்டிடையிலும், பாறைகளின் மேலும் பரண்கள் அமைத்தனர். அவற்றுள் பரந்த மேற்கூரை உடையனவும் இருந்தன.

பொறிகளை அமைத்தும்; வில் அம்பு, கவண் முதலிய ஆயுதங்களைப் பயன்படுத்தியும் விலங்குகளையும் பறவைகளையும்

வீழ்த்தினர். வலை விரித்தும் பிடித்தனர்.

பறவைகளையும் விலங்குகளையும் ஓட்டத் தட்டை, குளிர், பறை, தழல், தண்ணுமை, கோடு முதலிய இசைக் கருவிகளையும், வாய்ப்பாட்டையும் இசைத்தனர். வீளையிட்டும், ஆரவாரித்தும், கைகொட்டியும், விலங்குகளை மருட்டினர்.

பயிர்கள் கதிர் ஈன்று பால்முற்றும் பருவம் முதல் காவல் தேவைப்பட்டது.

பெருமழைக் காலத்தில் பாசனக் குளங்களின் கரைகளைக் காக்க; காவலரை நியமித்து இருந்தனர். அவர்கள் இரவு பகல் பாராது குளத்தைக் காத்தனர். ஆற்று வெள்ளம் பெருகுங்கால் பயிர்களுக்கு ஏற்படும் ஏதத்தை அறிவிக்க துடியர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். வேளிர் தம் வயல்களில் காவல் பணிக்கென வீரர்களை நியமித்து இருந்தனர்

இயற்கையாக அமைந்த வேலிகளும் காவலாக அமைந்தன. மூங்கிலும், வேங்கையும் அவ்வாறு அமைவதுண்டு. வேலியாகச் சில பயிர்களையும் விளைவித்தனர். கரும்பும் பருத்தியும் அத்தகையன.

செவ்வியல் இலக்கியகால வேளாண்மையில் காவல்பணி முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. பயிர்களையும், பாசனக் குளங்களையும், அறுவடை செய்த பொருட்களையும் பாதுகாத்தனர். உரிய பருவத்தில், உரிய நேரத்தில், உரிய முறையில் அப்பணி மேற்கொள்ளப்பட்டது. வயல்களில் திரிந்த நண்டுகளை எவ்வாறு கட்டுப்படுத்தினர் என்னும் செய்தி காணக் கிடைக்கவில்லை.