முன்னுரை
****
பணிக்காலத்தில் கருத்தரங்குகளுக்கும் மாநாடுகளுக்கும் எழுதி இருந்தாலும்; ஓய்வுக்காலத்தில் திருப்பிப் பார்க்கும் போது; அவை குறித்துப் புதிய சிந்தனைகளும் கோணங்களும் தோன்றியதால்; மீளாய்வு செய்தும் மேம்படுத்தியும் எழுதி நிறைவைத் தேடும் போக்கில் இந்நூல் உருப்பெறுகிறது. பொதுவெளியில் பலரோடு சொல்லாடும்போது புதிய முடிவுகளையும் தெளிவையும் எட்ட முடிகிறது. விரல்நுனியில் பிற பல நூல்களையும் ஆய்வுகளையும் தேடி எடுக்கும் உத்திக்குப் புதியவள் எனினும்; கைவருகிறது.
‘பொம்மலும் மிளிர்வையும்’ என்ற முதல் கட்டுரை; பொருளை ஒட்டி ஆழ்ந்து நோக்கிய போது; முத்து கிடைத்தது போல ஒரு விளக்கம் பளிச்சிட; உருவானது. ‘நற்றிணை உழவன் உண்ட சத்துணவு’ என்ற பெயரில் மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் வெளியிடும் ‘உலகத்தமிழ்’ என்ற மின்ஆய்விதழில் வெளிவந்தது.
இரண்டாவதாக இடம்பெறும் ‘குறுந்தொகை 29& 99ம் பாடல்கள்- மீள்பார்வை’ என்ற கட்டுரை பாபநாசம் கலைக்கல்லூரியில் நடக்கவிருந்த கருத்தரங்கிற்காக எழுதப்பட்டது. தொற்று நச்சிலால் ஓராண்டு தாண்டியும் கருத்தரங்கு நடத்த இயலாமல் போய் நூலில் இடம்பெற்று வெளிவந்தது.
மூன்றாவதாக உள்ள ‘சங்ககாலக் குடும்ப உறவுகளும் சமூகஉறவுகளும்’ என்ற கட்டுரை; சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன்; விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி இணைந்து 12-14 திசம்பர் 2012ல் ‘சங்க இலக்கியத்தில் சுற்றுச்சூழலியலும் பண்பாட்டியலும்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய கருத்தரங்கில் வாசித்த 'சங்க இலக்கியத்தில் தனிமனித சமூக உறவுநிலைகள்' என்ற கட்டுரையின் ஒரு கூறு ஆகும். எட்டாண்டு கால இடைவெளியின் கருத்தாக்கங்கள் சேர்த்து மேம்படுத்திய போது இரண்டு கட்டுரைகளாகப் பிரிக்க வேண்டியதாயிற்று. அவற்றில் ஒன்றே இக்கட்டுரை.
நான்காவதாக இடம்பெறும் ‘செவ்வியல் இலக்கியத்தில் சமூகப்
பிரிவுகளுக்கு அடிப்படையாகும் திணைகளும்,தொழில்களும்’ என்ற
கட்டுரை சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து; புது டில்லியிலுள்ள பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவின் உதவியுடன் 2010ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9,10 ஆகிய நாட்களில் ‘சமூக வரலாற்றியல் நோக்கில் சங்க இலக்கியம்’ என்ற தலைப்பில் நடத்திய ஆய்வரங்கில் வாசித்து அளிக்கப்பட்ட “திணை அடிப்படையில் சங்க காலச் சமூகப்பிரிவுகள்” என்ற தலைப்பிலான கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட சாரம் ஆகும்.
ஐந்தாவதாக உள்ள ‘கடுவன் இளவெயினனார் பாடும் தொல்தமிழரின் சமயக்கொள்கை’ 24.02.2020 கோவை பூ.சா.கோ. கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையினரும், உளவியல் துறையும்; யோகா கல்வி மையத்துடனும் ஸ்ரீஆனந்த கல்ப அறக்கட்டளையுடனும் இணைந்து; இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையுடன் கைகோத்து; சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழின் துணையுடன் நடத்திய கருத்தரங்கிற்கு அளித்ததாகும்.
‘தொல் தமிழகத்து அணங்குக் கொள்கை’ மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையினர் அறிவித்த கருத்தரங்கிற்காக அனுப்பியது. தொற்று நச்சிலுக்காகத் தள்ளித் தள்ளிப் போடப்பட்டு மே 2021ல் இணைய வழி நடத்தப்பட்டது.
‘தொல் தமிழகத்து வழிபாடுகளில் இயற்கைப் பொருட்கள்- ஒரு ஒப்பீடு’ எனும் ஆய்வு 11.10.‘19 அன்று சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும்; சென்னை குரு நாணக் கல்லூரியும் இணைந்து ‘ஆசியப் பண்பாட்டிற்குத் தமிழ்ச் சமய இலக்கியங்களின் பங்களிப்பு’ என்ற பொருண்மையில் நடத்திய கருத்தரங்கில் வாசித்து அளிக்கப்பட்டு; கருத்தரங்க மலரில் பதிப்பிக்கப்பட்டது.
2019ம் ஆண்டு டிசம்பர்14,15 ஆகிய நாட்களில்; மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில்; சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய முதலாம் உலகத் தமிழிசை மாநாட்டில் வாசித்தளித்தது ‘பண்டைத் தமிழகத்தில் வேளாண்மைசார் இசையும் இசைக் கருவிகளும்’ எனும் ஆய்வுக்கட்டுரை ஆகும். உலகத் தமிழிசை ஆய்வுகள்- முதல் தொகுதி
என்னும் நூலில் பதிப்பிக்கப்பட்டது.
‘நானிலத் தெய்வங்களும் பண்டைத் தமிழர் வழிபாடுகளும்’ என்ற கட்டுரை; சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும்; விருதுநகர், வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரியும் இணைந்து 13.12.2010 முதல் 22.12.2010 வரை ‘சங்க இலக்கியத்தில் தொல்காப்பிய இலக்கியவியல் கோட்பாடுகளின் தழுவலும் விலகலும்’ என்ற பொருண்மையில் நடத்திய பத்து நாள் பயிலரங்கில் 19.12.2010 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.
'பண்டைத் தமிழ் வேளாளரில் இருவகையினர்' என்ற தலைப்பில் அமைந்த கட்டுரை சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி வெளியிடும் ஆய்வுச்சுடர் என்னும் மின் ஆய்விதழில் ஜனவரி 2019ல் வெளிவந்தது.
பண்டைய மதுரையின் இருபெரு நியமங்கள் ‘மின்தமிழ் மேடை’ மின்னிதழ்: காட்சி 6 ஜனவரி19ல் வெளியிடப்பட்டது
‘புறநானூற்றுக் கிழாரின் சமூகநிலை’ சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரித் தமிழ்த் துறையிலிருந்து வெளியாகும் ஆய்வுச்சுடர் என்னும் மின் ஆய்விதழ் மலர்- 2: இதழ்- 2 ஜூன் ‘19ல் பதிப்பிக்கப்பட்டது.
தஞ்சை அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம் 'இலக்கியங்களில் வேளாண்மை' எனும் பொருளில்; திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தில் வைத்து; பிப்ரவரி 2000ல் நடத்திய கருத்தரங்கில் வாசித்த ஆய்வுக் கட்டுரை ‘வேளாண்மையில் காவல் பணி’. ‘இலக்கியமும் வேளாண்மையும்’ என்ற நூலில் வெளியிடப்பட்டது.
இக்கட்டுரைகள் அனைத்தும் தொகையிலக்கியம் தொடர்பானவை. மாணவ சமுதாயத்திற்கு மிகவும் பயன் தரக்கூடியவை. இம்முதல் தொகுதியைப் மின்பதிப்பாக்கி வெளியிடத் துணைசெய்த நண்பர் இசையினியனுக்கு மிக்க நன்றி.