/ கண்மணித்தமிழ் /
  1. பொம்மலும் …

1. பொம்மலும் மிளிர்வையும்

முன்னுரை

பண்டைத் தமிழர் உணவுமுறை பற்றி ஆய்வது ஆர்வத்தைத் தூண்டும் ஒரு சுவையான பார்வையாகும். இக்கட்டுரைக்குத் தூண்டுகோலாக அமைவது நற்றிணை பா-60ல் இடம்பெறும் ‘மிளிர்வை’ என்னும் சொல் ஆகும். இச்சொல் அக்குறிப்பிட்ட பாடல் தவிர வேறெங்கும் பயின்று வரவில்லை. ‘மிளிர்வை’ என்பது பொம்மல் பெருஞ்சோற்றுக்குரிய பக்க உணவாகச் சொல்லப் பட்டுள்ளது. பொம்மல் என்றால் என்ன? மிளிர்வை என்னும் பெயர் எதற்குரியது? என்று அறிவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

நற்றிணைப் பாடற் செய்தி:

விடியுமுன்னர் உழவன் தன் பெண்டிரோடு (மனைவியரோடு)

வயலுக்குப் பணியாற்றக் கிளம்புகிறான். கிளம்பும் முன்னர் வயிறார உண்கிறான். ஏனெனில் அன்று அவன் நாற்று நட வேண்டும். அதுவும் மலைபோல் குவித்து வைக்கப் பட்டுள்ளது. வேலையைத் தொடங்கினால் வெயிலேறும் வரை ஓய்விற்கோ உணவிற்கோ வழியில்லை. எனவே பருத்த வரால்மீன் துண்டுகளின் மிளிர்வையுடன் “புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு கவர்படு கையை கழும மாந்து"கிறான். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரையில் ‘உணவுக்குரிய அரிசியால் ஆக்கிய மிக்க சோற்றுத்திரளை விருப்பமிக்க கையை உடையனாய் நிறைய மயக்கமேற உண்டு’ என்கிறார். இன்னும் தெளிவாக பொம்மலைப் புரிந்து கொண்ட பின்னர் தான் பக்கஉணவாகிய வரால்மீன் மிளிர்வையைப் புரிந்து கொள்ள முடியும்.

பொம்மல் பெருஞ்சோறு எது?

‘பொம்மல் பெருஞ்சோறு’ என்ற சொற்றொடரில் பொம்மல் எனும் சொல் பெருஞ்சோறு என்னும் பண்புப்பெயர்த் தொடருக்கு அடையாக அமைந்துள்ளது. இங்கே ஒருபொருட் பன்மொழியாக பொம்மல் சோற்றைக் குறிக்கும் எனக் கொள்ள வழியில்லை. ஏனெனில் கடலைக் குறிப்பிடும்போது ‘பொம்மல் படுதிரை’ எனவும் (நற்.96& அகம்.200), பெண்ணைக் குறிப்பிடும் போது ‘பொம்மல் ஓதி’ எனவும் (நற்.71, 129, 252,

274, 293; குறு.191, 379& அகம்.65, 214, 221, 257, 311, 353) தொகை நூல்களில் பல இடங்களில் பயின்று வருவதைக் காண இயல்கிறது. கடலலையைக் குறிக்குமிடத்தும், பெண்ணின் கூந்தலைக் குறிக்குமிடத்தும் ‘பொம்மல்’ பெயரடையாக வருவதால் சோற்றைக் குறிக்குமிடத்திலும் அது பெயரடையே எனல் திண்ணம். எல்லா இடங்களிலும் ‘பொலிந்த’ என்றே பின்னத்தூர் நாராயணசாமி ஐயரும், நாவலர் வேங்கடசாமி நாட்டாரும், கரந்தைக் கவியரசு வேகடாசலம் பிள்ளையும் ஒருங்கு பொருள் உரைக்கின்றனர்.

பொம்மல் ஓதி = பொலிந்த கூந்தல் எனல் பொருத்தமே.

பொம்மல் படுதிரை = பொலிந்த படுதிரை

என்பது பொருந்தவில்லை. கழகத் தமிழகராதி (கழகப் புலவர் குழுவினர் தொகுத்தது- சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு- 1999- 15ம் பதிப்பு) ‘பொம்மல்’ எனும் சொல்லுக்குப் ‘பூரித்த’/ ‘பொருமிய’ எனும் பொருளையும் சொல்கிறது (ப.716). தமிழ்மொழி அகராதியும் (நா.கதிரைவேற் பிள்ளை திருத்தியது- 6ம் பதிப்பு- Asian Educational Services, New Delhi. Madras-1998) ‘பொருமல்’, ‘பொலிவு’ என்ற பொருள்களைத் தருகிறது (ப.1075).

பொம்மல் படுதிரை = பூரித்த/பொருமிய படுதிரை

எனல் பொருத்தமே. ஏனெனில் கடல் அலைகள் பூரித்துப் பொங்கி கரையை மோதுகின்றன. அவ்வாறாயின் ‘பொம்மல் பெருஞ்சோறு’ எனும் தொடரின் பொருள் யாது? பூரித்த/ பொருமிய சோறு எப்படி உண்டாகும்? இக்கேள்விகளுக்குரிய பொருள் பாடலிலேயே உள்ளது. உழவன் விடியுமுன் உண்டுவிட்டு வேலைக்குக் கிளம்புகிறான். அவன் மனைவியர் முதல்நாள் ஆக்கி நீரில் ஊற வைத்த சோற்றையே உண்ண இயலும். நீர்ச்சோறு பூரித்துப் பொருமி இருப்பது இயற்கை. அதாவது நீரில் ஊறியதால் சோறின் கொள்ளளவு கூடி இருக்கும்; மென்மையாகவும் இருக்கும். இருபதாம் நூற்றாண்டில் நீராகாரம் என்று வழங்கிய பழைய சோறு தான் சங்க காலப் பொம்மல். இதனை மேலும் ஒரு சான்றால் நிறுவலாம்.

கூத்தராற்றுப்படையில்,

“குரூஉக்கண் இறடிப் பொம்மல்” (மலை.அடி- 169)

என்ற அடிக்கு உரை கூறும் பெருமழைப்புலவர் பொ.வே.சோம சுந்தரனார் ‘நிறம் மிக்குத் தோன்றும் தினையின் சோறு’ என்கின்றார். ‘இறடி’ தினையைக் குறிப்பதால்; இறடிப் பொம்மல் தினையின் சோறு எனப் பொருள் கொள்கிறார். அது வெறும் சோறினைக் குறிக்குமா

என்பதும் ஐயமே. ஏனெனில் புன்செய்த் தானியங்களின் உணவை

நீரில் அல்லது மோரில் கரைத்து உண்ணும் வழக்கமே இன்றும் நிலவுகிறது. சங்க காலத்திலும் அவ்வாறு கரைத்து உண்ணும் வழக்கம் தான் இருந்தது என்பதற்குப் புறநானூறு சான்று பகர்கிறது.

கரும்பனூர் கிழான் பற்றி நன்னாகனார் பாடுங்கால்; அவன் நாட்டில் கூலம் விளைந்தது என்னும் செய்தியை,

“இருநிலம் கூலம் பாறக் கோடை”

என்னும் அடியால் குறிப்பிடுகிறார். அத்துடன் பாலில் கரைத்தோ, அல்லது பாகில் கலந்தோ புன்செய்த் தானிய உணவைத் தந்து விருந்தயர்வான் என்பதை,

.“பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்

அளவுபு கலந்து மெல்லிது பருகி

விருந்துறுத்து” (புறம்.381)

என்னும் அடிகளால் உணர்த்துகிறார். இதனால் கூத்தராற்றுப்படையின் தினை உணவும் கரைத்துக் குடிக்கக் கூடியது எனல் பெற்றோம். முடிவாக பொம்மல் என்பது நீரில் கரைத்த / ஊறவைத்த உணவு என்பது உறுதிப் படுகிறது.

அது நீராகாரமாக இருந்ததால் தான் உழவன் ‘மாந்து'வதாகக் குறிக்கிறார் புலவர். அது மட்டுமன்று; “கவர்படு கையை கழும” எனும் தொடர் அவன் தனது விரல்களால் சோற்றினை அரித்து எடுத்து மிளிர்வையோடு உண்கிறான் என்பதைப் புலப்படுத்துகிறது.

மிளிர்வை - விளக்கம் யாது?

இன்றைய தமிழில்

“கருங்கண் வரால் பெருந்தடி மிளிர்வை”

என்பது வரால் மீனின் குழம்பு என்பது வெளிப்படை. இன்றும் முதல்நாள் வைத்த மீன்குழம்பே ருசி மிகுந்தது என்னும் கொள்கை பரவலாக உண்டு. ‘முள்ளும் மலரும்’ திரைப் படத்தில் இடம்பெறும்,

“நித்தம் நித்தம் நெல்லுச்சோறு; நெய் மணக்கும் கத்திரிக்கா

நேத்து வச்ச மீன்குழம்பு என்னை இழுக்குதையா”

என்னும் பாடல் சான்று. ஆனால் மிளிர்வை என்ற சொல்லின் சிறப்புப் பொருள் என்ன?; என்பது ஆய்விற்குரியது.

பால் விட்டு உண்ணும் உணவு பாலின் மிதவை என்று பண்டைத் தமிழில் பெயர் பெறுகிறது. (மலை.அடி- 417, அகம்.37) தயிர் விட்டு

உண்ணும் உணவு தயிரின் மிதவை ஆகும் (அகம்.340& புறம்.215). நீர்ச்சோறாகிய பொம்மல் பெருஞ்சோற்றினில் மீன் குழம்பை ஊற்றிப் பிசைந்து மிசைய வழியில்லை. ஏனெனில் அவ்வுணவு மாந்த வேண்டிய அளவு நீர் மிகுந்து உள்ளது. எனவே வரால் மீனின் பருத்த துண்டுகள் மட்டுமே பக்க உணவாக முடியும். அத்துண்டுகளின் மிதவை மிளிர்வையாக மாறுகிறது; அதாவது ‘சொட்டானம்’ ஆகிறது. சொட்டானம் என்பது கையில் எடுக்கும் சோற்றுக்கவளத்தில் ஒரு சிறு குழிவினை உருவாக்கி அதில் ஆனத்தை ஊற்றி உண்ணுமுறை ஆகும்.

வியப்புரை:

நீர்ச்சோற்றுக்குச் சொட்டானம் ஊற்றி உண்ணும் முறை சென்ற நூற்றாண்டு வரை வழக்கிலிருந்தது. இது இரண்டாயிரம் ஆண்டுக் காலப் பாரம்பரியம் என்பது வியப்பைத் தருகிறது.

சொட்டானமாகும் தகுதி சிலவற்றுக்கே உண்டு என்பது நினைத்துப் பார்க்க வேண்டியது ஆகிறது. திருக்கார்த்திகை விரதமும், வைகுண்ட ஏகாதசி விரதமும் முடிந்த பின்னர்; எஞ்சிய இருபத்தோரு வகைக் காய்கறிகளையும், குழம்பையும், ரசமண்டியையும் சேர்த்து விறகடுப்பின் கணப்பில் போட்டு இரவில் சுண்ட வைத்து மறுநாள் நீர்ச் சோற்றுக்கு சொட்டானமாக ஊற்றி உண்பது ஒரு முறை. விறகடுப்பு வழக்கத்தில் இருந்த காலத்தில் அன்றாடம் கூட சில இல்லங்களில் குழம்பு கூட்டைச் சேர்த்துச் சுண்ட வைத்து மறுநாள் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. பனிப்பெட்டி (refrigerater) இவ்வழக்கத்தை அடியோடு ஒழித்து விட்டது என்றும் சொல்லலாம்.

இன்று; இருபத்தோராம் நூற்றாண்டில் நமது பாரம்பரியத்தை நாம் மீட்டெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பது குறிப்பிடத் தகுந்தது.