- சங்ககாலக் …
3. சங்ககாலக் குடும்ப உறவுகளும் சமூகஉறவுகளும்
முன்னுரை:
சங்ககாலத் தமிழகத்தின் சமூகவரலாற்றை அறிவதற்குச் சங்க இலக்கியம் தலைமை ஆதாரமாக அமைகிறது. குடும்ப, சமூக உறவுநிலைகளைப் புறப்பாடல்களும் அகப்பாடல்களும் சித்தரிக்கின்றன. வீரயுகம் ஆகிய சங்ககாலத்தின் இவ்வுறவு நிலைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேறு காலகட்டத்தைச் சேர்ந்த இலக்கியங்களைத் துணை கொள்ள வழியில்லை.
சமூகநலன் கருதிய செயல்பாடு:
பரதவர் சமூகத்தில் பொதுநலன் கருதி கலங்கரை விளக்கு ஏற்றினர். இரவில் கடலில் வரும் நாவாய்களுக்கும் படகுகளுக்கும் கரை இருக்கும் திசையைத் தெரிவிக்க இது ஏதுவாயிற்று. (நற்.219) தாயங் கண்ணனார் அவ்விளக்கு இளஞாயிறு போல் ஒளிவீசியது என்கிறார்.
பெற்றோர் மக்கள் உறவு:
தாயும் தந்தையும் தம் மக்களைப் பாசத்துடன் வளர்த்தனர். குழந்தைக்கு உணவூட்டும் தாய் பற்றிய சித்தரிப்பு நற்றிணையில் உள்ளது (பா.110). தன் குழந்தை பாலுண்ண மறுக்குங்கால் சிறு கோலால் ஓச்சும் பாசமிகு தந்தையின் செயலைப் பொன்முடியார் வருணிக்கிறார். (புறம்.310)
மணமுடிக்குமுன் செல்லமகள் தந்தையிடம் நகை கேட்டுக் கொஞ்சுவது உண்டு. மகள் விருப்பப்படி தந்தை நகை செய்து போட்டு மகிழ்வது உண்டு. திருமணத்திற்குப் பின்னர் தந்தை தன் செல்லமகள் குடும்பவாழ்வின் வறுமை நீக்க முற்படுவதும் உண்டு. ஆனால் மகள் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதே செம்மாந்த பண்பு என்ற கொள்கை இருந்தது. (நற்.110)
மகளின் வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் தந்தை பொறுப்பெடுத்தான். அவளது இல்லற அமைதிக்கு ஊறு நேரின் அதைத் தந்தை தட்டிக் கேட்பான் என்ற கருத்தும் காணக் கிடக்கிறது. சங்கு வளையல் கேட்டு அழுத மகளுக்குத் தந்தை பொற்றொடி செய்து போட்டதாகவும்; அது தலைவி தன் தலைவனைப் பிரிந்து இருந்தக்கால்
புறத்தார் இவளது தோள்மெலிவை உணரா வகையில் உதவியது என்றும் (நற்.136) நற்றங்கொற்றனாரின் பாடல் சித்தரிக்கிறது.
'தலைவியின் தந்தையும் தமையன்மாரும் மிகுந்த நெஞ்சுரமும் வலிமையும் வலியையும் கொண்டவர். தம் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை ஒருவன் ஏமாற்றி விட்டால்; அவர்கள் கொள்ளும் சினத்தையும் அதன் விளைவாகச் செய்யும் செயலையும் யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. அந்தச் சூழலைப் புரிந்து கொண்டே களவுக்குப் பின் தலைவன் திருமணம் செய்து கொண்டான். இப்போது திருமணத்திற்குப் பின்னர் அவன் புறத்தொழுக்கம் கொண்டதால் தலைவி துன்புறுகிறாள். இச்செய்தி அவள் தந்தைக்குத் தெரிந்தால் என்ன ஆகும்?' என்று தோழி பேசுவதாகச் சீத்தலைச் சாத்தனார் (நற்.127) பாடுகிறார்.
அண்ணன் தம்பி உறவு:
முந்தைய நாள் போரில் அண்ணனை ஒருவன் கொல்ல மறுநாள் போரில் தன் அண்ணனுக்காகப் பழிவாங்கத் துடிக்கும் தம்பி பற்றி அரிசில்கிழார் (புறம்.300) சுட்டிக் காட்டுகிறார்.
'இன்று என் அண்ணனைக் கொன்றவன் தம்பியை நான் நாளை அழிப்பேன்' என்று வஞ்சினம் கூறுவதாகவும் (புறம்.304) பாடல் அமைந்துள்ளது. சகோதர பாசத்தைப் போர் மேற்செல்லும் வீரரிடம் காண இயல்கிறது.
கணவன் மனைவி சுற்றத்தார் உறவு:
இல்லற வாழ்வில் மனைவியே கணவன் பெருமைக்கு ஆதாரம்; அதுபோல் கணவனே மனைவியின் பெருமைக்கு ஆதாரம் என்று பொருள்பட;
"மனைக்கு வரம்பாகிய வாணுதல் கணவன்
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை"
(புறம்.314) என்னும் பாடலடிகளில் ஐயூர் முடவனார் பொருள் பொதியப் பாடியுள்ளார்.
கணவன் மனைவி நெருக்கம் அவருள் ஒருவர் தவறி விடும்போது
தெளிவாகத் தெரிகிறது. போரில் வீரமரணம் அடைந்த தலைவனைக்
கண்டு தலைவி புலம்புங்கால்,
"என்திறத்து அவலங் கொள்ளல் இனியே...
கிளையுள் ஓய்வலோ கூறுநின் உரையே" (புறம்.253)
என்று தான் உயிரை மாய்த்துக் கொள்ள இருப்பதைக் குறிப்பாகப் புலப்படுத்தி; 'உன் சுற்றத்தார் உன் பிரிவை எப்படித் தாங்குவர்?' என்று கையற்று அழுததாகக் குளம்பாதாயனார் பாடியுள்ளார்.
தலைவன் தேடிவரும் பொருளைப் பேணிப் பாதுகாப்பதும், பகுத்துக் கொடுத்தலும் தலைவியின் உரிமையாகவும் கடமையாகவும் இருந்தது. கானவன் வேட்டையாடி வந்த மானிறைச்சியையும், அகழ்ந்து எடுத்துவந்த கிழங்கையும் தலைவியே சுற்றத்தார் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கிறாள் (நற்.85). இல்லறத் தலைவனை நம்பி அவனது மனைவி மட்டுமின்றி சுற்றமும் இருந்தது என்பதால் கூட்டுக் குடும்ப முறை நிலவியது எனலாம்.
மாமியார் மருமகள் உறவு:
மணமுடித்து இல்லறம் நடத்தும் தன் மகனின் செல்வச் செழிப்பும், அவன் விருந்தயரும் ஆரவாரமும் ஒரு தாய்க்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். அது பற்றி அவள் மீண்டும் மீண்டும் எல்லா இடத்திலும் எல்லாரிடமும் பேசிப்பேசி மகிழ்வது இயற்கை. இறந்து போன கணவனின் உடலை வைத்துக் கொண்டு தன் கணவன் இறந்தமையை அவனது தாய் எவ்வாறு ஆற்றுவாள் என்று கூறி அழும் பெண் இதைச் சொல்கிறாள். (புறம்.254) கயமனாரின் பாடலில் தன் மகனின் வளமையான வாழ்வு பற்றிய தாயின் இன்பச்செருக்கு அடிபட்டமை புலனாகிறது. தன் மாமியார் மகனின் பேரில் வைத்திருந்த பேரன்பையும், பெருமிதத்தையும் ஒரு மருமகள் போற்றுவதாக இக்கையறுநிலைப் பாடல் காட்டுகிறது.
இல்லறம் சமூகத்தோடு கொள்ளும் உறவு:
தம்மிடம் வந்து இரப்போர் யாராயினும் அவர்க்கு ஈதலே இசைபட வாழ வழிவகுக்கும் என்று நற்றிணை (பா.84) சுட்டியுள்ளது. இதனால் விருந்து புறந்தரும் நடைமுறை செல்வாக்குப் பெற்றது. அத்துடன் ஊடல் கொண்டு கண் சிவந்திருக்கும் மனைவி தன்னிடம் புன்முறுவல் காட்ட விருந்தே ஏதுவாக அமையும் என்று தலைவன் உறுதியாக நம்பினான் (நற்.120) என்று மாங்குடி கிழார் பாடியுள்ளார்.
இருவர் இணைந்து நடத்தும் இல்லறத்திற்கு கேடு நேரிட்டால்;
தலைவன் மாண்டுவிட்டால் தலைவி தனித்து விருந்து புறந்தர இயலாது. விருந்தினர் கைம்பெண் தனித்து வாழும் வீட்டை நாடுவதில்லை. (புறம்.261) ஆவூர் மூலங்கிழார் தலைவன் உயிரோடிருந்த போது விருந்து புறந்தந்த வளமனையை; அவன் இறந்த பிறகு அது வெறிச்சோடிக் கிடந்ததுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ளார்.
விருந்தயரப் பொருள் இன்றேல் அவ்வாழ்க்கை திருந்தா வாழ்க்கை; அது நன்மையற்றது என்று பெருங்குன்றூர் கிழார் (புறம்.266) பாடுகிறார்.
சமூகத்தின் மிகச்சிறிய அங்கம் குடும்பம். குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் கடமை இருந்தது. குடும்பத்தில் ஒருவனும் ஒருத்தியும் சேர்ந்து நடத்தும் இல்லறத்தின் நோக்கமாவது; பங்காளிகளின் துன்பம் நீக்கி, நட்பினரின் இன்னல் களைந்து, நொதுமலாளரையும் பேணுவதாம் (அகம்.95). கணக்காயனார் மகனார் நக்கீரனார் இதன் காரணமாகவே இல்லறத்தில் பொருள் முக்கியத்துவம் பெறுவதாக விதந்தோதுகிறார்.
குடும்ப உறுப்பினர்களுக்கும், சமூக உறுப்பினர்களுக்கும் உரிய கடமையே அவர்களிடையே உறவை ஏற்படுத்தியது. ‘ஈன்று புறந்தருவது தாயின் கடமை; சான்றோனாக்குதல் தந்தையின் கடமை; வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லன் கடமை; வாகனமும் போர்வாய்ப்பும் நல்குதல் வேந்தனின் கடமை; போரில் வீரத்தைக் காட்டித் திரும்புதல் ஒரு குடிமகனின் கடமை என்று பொன்முடியார் வரிசைப்படுத்தி உள்ளார் (புறம்.312).
தனிமனிதன் சமூகத்தோடு கொள்ளும் உறவு
தனிமனிதன் ஊரோடு ஒட்டி வாழும் போது அந்த உறவுநிலை அவனது உயிரை விலையாகப் பெறுவதும் உண்டு. ஊர் நன்மைக்காக ஒருவன் தான் பொறுப்பேற்கும் தியாகநிலையைத் தனிமகனார் எடுத்துக் காட்டியுள்ளார் (நற்.153). பகைவர் போர் மேற்கொண்டு அலைத்து வரும் போது ஊர்மக்கள் கலங்கிப் பாதுகாப்பிற்காக ஊரைக் காலி செய்து விட்டுச் செல்ல ஒருவன் தனித்திருந்து அந்தப் பாழூரைக் காவல் காத்து நிற்கிறான். அவன் உயிர் பிழைத்தல் அரிது எனினும்; தன் ஊர்மக்களுக்காக இப்பொறுப்பை ஏற்கிறான்.
தன் ஊரின் கால்நடையை எதிரிகள் கவர்ந்து செல்லும் போது அவற்றை மீட்பதற்காக ஒருவன் உயிரை விடும் சூழலும் ஏற்படலாம் என்பது வடமோதங் கிழார் பாடலில் (புறம்.260) புலனாகிறது.
ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் சமூகத்திற்குத் தாம் கடம்பட்டு இருப்பதை உணர்ந்திருந்தனர். முதல்நாள் போரில் தந்தை வீரமரணம் அடைய; இரண்டாம் நாள் போரில் கணவன் கால்நடைகளை மீட்பதற்கு உயிரை விட; மூன்றாம் நாளும் தன் மகனைப் போருக்கு அனுப்பும் தாய் தான் வாழும் சமூகத்திற்குத் தான் பட்ட கடமையை முற்றும் உணர்ந்தவள் ஆவாள். ஒக்கூர் மாசாத்தியார்,
"செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇ
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்கென விடு"த்த (புறம்.279)
தாயைத் தன் பாடல்நாயகி ஆக்கியுள்ளார்.
விழாக்களும் மக்கள் சமூகமாகக் கூடி வாழும் உறவுநிலையை வலுப்படுத்தின. முதுவாய்க் குயவன் சாறு என அறிவித்ததுடன் விழா தொடங்கியது (நற்.200). விழா தொடங்கியவுடன் அந்தக் குடியிருப்பைச் சேர்ந்தோர்க்கு அச்சமூக நிகழ்வில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் இருந்தது. சாத்தந்தையார் வருணிக்கும் கட்டில் முடைவோன்; மனைவி மகப்பேறு உற்ற நிலையில்; பொருளின் தேவை முதற்குறி என்பதால்; ஞாயிறு மறையும் மழைக்கால மாலையில்; ஊர்த் திருவிழாவில் பங்கேற்க விரைந்து செயல் ஆற்றுவது அவனது சமூகக் கடப்பாட்டை எடுத்துக் காட்டுகின்றது (புறம்.82).
சமூகம் தனிமனித வாழ்வுடன் கொண்ட உறவு
திருமணம் என்ற நிறுவனத்தைச் சங்ககாலச் சமூகம் போற்றியது. திருமணத்திற்கு முன்னர் ஒருவனும் ஒருத்தியும் இரவிலோ பகலிலோ களவு மேற்கொள்வதை சமூகம் விரும்பவில்லை. அதனாலேயே களவுக்கால வாழ்க்கை அலர் தூற்றுவதற்கும், அம்பலாக விரிவதற்கும் வாய்ப்பளித்தது. அந்த அலரையும், அம்பலையும் தாங்க இயலாமல் தலைவி உடன்போக முடிவு செய்கிறாள். உலோச்சனார் மறுகில் பெண்டிரின் செயலைச் சொல்லோவியம் ஆக்குகிறார் (நற்.149).
உடன்போன தலைவியையும், தலைவனையும் பின்னால் தேடிச் செல்லும் செவிலியை ஆற்றும் கண்டோரும் திருமணம் என்ற பந்தத்தைப் போற்றுகின்ற பாங்கைக் கலி.9ல் காண்கிறோம்.
சமூகத்தில் காலூன்றி இருந்த வருணப் பாகுபாடும், தொழிலடிப்படையில் அமைந்த அழுத்தமான மக்கட்பிரிவுகளும், ஒரு திருமண பந்தத்தை உறுதி செய்வதில் பங்கேற்றன. பரதவ மகளை
விரும்பிய நகர்ப் புறத்துச் செல்வந்தனின் மகனிடம் பேசும் தோழி 'உன் உறவு தேவையில்லை; எம் இனத்தில் நல்ல தலைவர்கள் உள்ளனர்' என்று மறுத்துரைக்கிறாள் (நற்.45& தமிழ்ப்பேராய்வு- Vol.7- no.2- 30.12.2018).
தொகுப்புரை
தாயும் தந்தையும் ஒருசேரத் தம் மக்களைப் பாசத்துடன் வளர்த்தனர். திருமணத்திற்குப் பின்னர் தந்தை தரும் செல்வத்தை ஏற்காமை பெண்ணின் செம்மாந்த பண்பாகக் கருதப்பட்டது. மகளின் வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் தந்தை பொறுப்பெடுத்தான். மகளின் இல்லற அமைதிக்கு ஊறு நேரின் அதைத் தந்தை தட்டிக் கேட்பான். தம் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை ஒருவன் ஏமாற்றி விட்டால்; தந்தையும், தமையனும் கொள்ளும் சினத்தையும் அதன் விளைவாகச் செய்யும் செயலையும் யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. சகோதர பாசம் போர் மேற்செல்லும் வீரரிடம் விஞ்சி நின்றது.
இல்லற வாழ்வில் மனைவியே கணவன் பெருமைக்கு ஆதாரம்; அதுபோல் கணவனே மனைவியின் பெருமைக்கு ஆதாரம் ஆனாள். தலைவன் தேடிவரும் பொருளைப் பேணிப் பாதுகாப்பதும், பகுத்துக் கொடுத்தலும் தலைவியின் உரிமையாகவும் கடமையாகவும் இருந்தது. கூட்டுக் குடும்ப முறை நிலவியது. மாமியார் மருமகள் உறவுநிலை போற்றும்படியாக இருந்தது. விருந்து புறந்தரும் நடைமுறை செல்வாக்குப் பெற்றது. இதனால் இல்லறத்தில் பொருள் சிறப்பிடம் பெற்றது. தலைவன் மாண்டுவிட்டால் தலைவி தனித்து விருந்து புறந்தர இயலாது. குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் கடமை இருந்தது.
சமூகத்திற்காகத் தனிமனிதன் உயிரை விடவும் தயாராக இருந்தான். ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் சமூகத்திற்குத் தாம் கடம்பட்டு இருப்பதை உணர்ந்து இருந்தனர். விழாக்களும் மக்கள் சமூகமாகக் கூடி வாழும் உறவுநிலையை வலுப்படுத்தின. பரதவர் சமூகத்தில் பொதுநலன் கருதிக் கலங்கரை விளக்கு ஏற்றினர்.
திருமணம் என்ற நிறுவனத்தைச் சங்ககாலச் சமூகம் போற்றியது. வருணப் பாகுபாடும், தொழிலடிப்படையில் அமைந்த மக்கட்பிரிவுகளும் ஒரு திருமண பந்தத்தை உறுதி செய்வதிலும் பங்கேற்றன.