/ கண்மணித்தமிழ் /
  1. செவ்வியல் …

4. செவ்வியல் இலக்கியத்தில் சமூகப் பிரிவுகளுக்கு அடிப்படையாகும் திணைகளும்,தொழில்களும்

முன்னுரை

சங்ககாலத் தமிழக வரலாற்றை அறிவதற்கு இலக்கியங்களே பெரும்பான்மை ஆதாரங்களாக அமைகின்றன. பத்துப்பாட்டையும், எட்டுத் தொகையையும் முதன்மை ஆதாரமாகக் கொண்டு இந்த ஆய்வு அமைகிறது. சிலப்பதிகாரச் செய்திகள் துணைமை ஆதாரங்களாய் அமைகின்றன. பிறநூல்கள் மூன்றாம் நிலைத் தரவுகளாய் அமைகின்றன.

1.0. சங்ககாலத் தமிழகத்தில் புவியியல்

சங்ககாலத் தமிழகத்தில் புவியியல் அடிப்படையிலமைந்த மக்களினப் பாகுபாடு நிலவியது. திணை மாந்தர்கட்கிடையே அவர்கள் மேற்கொண்ட தொழிலுக்கேற்ப சில பிரிவுகளும் நிலவின.

1.1. குறிஞ்சி :

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் குறவர் என்று அழைக்கப்பட்டனர். மலைபடுகடாம் அவர்களைக் குறவர் என்றே சுட்டுகிறது (அடி-275). பொருநராற்றுப்படையும் குறவர் என்றே குறிப்பிடுகிறது (அடி-219). அவர்கள் விளைத்த பயிரைப் பரணமைத்து விலங்குகளிடம் இருந்தும் பறவைகளிடம் இருந்தும் பாதுகாத்தனர். கற்பொறி அமைத்து பன்றிகளிடம் இருந்து பயிரைக் காத்த குறவரை மதுரைக்காஞ்சி “சேணோன்” என்று அழைக்கிறது (அடி.-294& 295).

1.2.முல்லை :

முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் கானவர் என்று அழைக்கப்பட்டனர். காட்டில் அவரைக் கொடியைப் பயிர் செய்து காத்தனர். மதுரைக்காஞ்சி அவரையை மேய்ந்த ஆமாவை விரட்டிய கானவர் பற்றிப் பேசுகிறது (அடி- 29& 293). மலைபடு கடாஅம் தேன் கூட்டிலிருந்து மிக முயன்று தேன் திரட்டும் கானவரின் மகிழ்ச்சியை எடுத்துச் சொல்கிறது. (அடி-318). பொருநராற்றுப்படை கானவர் மருதப்பண்ணும் பாடுவர் என்கிறது (அடி- 220). பெரும்பாணாற்றுப்படை கானவர் குறுமுயலை வேட்டையாடி ஒருங்கு சேர்ந்து உண்டு மகிழ்ந்தமையை வருணிக்கிறது (அடி.- 111-117). கானவரிடையே ஆடு, மாடுகளை வளர்த்தோர் கோவலர்

எனப்பட்டனர். ‘கொடுங் கோவலர்’ என்று நெடுநல் வாடையும் (அடி-3) ‘வளையான் தீம்பால் மிளைசூழ் கோவலர் என்று மலைபடுகடாமும் (அடி-409) ‘மடிவாய்க் கோவலர்’ என்று பெரும்பாணாற்றுப்படையும் (அடி-166) பகர்கின்றன. கடியலூர் உருத்திரங்கண்ணனார் இவர்களை ‘ஒன்றமர் உடுக்கைக் கூழார் இடையன்’ என வருணித்துள்ளார் (பெரு.அடி-175).

1.3. பாலை:

வறங்கூர்ந்த காட்டில் வில்லேந்தி எயினர் காவல் பணியில் ஈடுபட்டனர். அவர்களது பெண்டிர் எயிற்றியர் எனப்பட்டனர். மதுரைக்காஞ்சி வன்சொல் இளைஞர்களாகிய அவர்களது காவல் தொழிலைக் குறிப்பிடுகிறது (அடி.- 311& 312). மலைபடுகடாம் அவர்களைக் கூளியர் என்றழைப்பதுடன்; அவர்கள் கூட்டமாகத் திரிந்ததாகவும் சொல்கிறது (அடி-422). பெரும்பாணாற்றுபபடை அவர்களது பெண்டிர் புல்லரிசியைச் சேகரித்துக் குற்றிய செயலை விவரிக்கிறது (அடி-89-97). சிறுபாணாற்றுப்படை அவ்வெயிற்றியர் இனிய புளியைச் சேர்த்து சோறு சமைத்து விருந்தோம்பினர் என்கிறது (அடி-175). பாலை நிலத்தில் வழிப்பறி செய்தவரைக் கள்ளர் என்று பொருநராற்றுப்படை சுட்டுகிறது (அடி- 21).

1.4. மருதம் :

மருதநிலத்தில் பாடுபட்ட மக்கள் உழவர் எனப்பட்டனர். மதுரைக்காஞ்சி அவர்களை 'வன்கை வினைஞர்' என்று விதந்தோதுகிறது (அடி-262). மலைபடுகடாம் 'வளம்செய் வினைஞர்' என்றே சிறப்பிக்கிறது (அடி-462). பெரும்பாணாற்றுப்படை 'உழவர்' என்று சொல்வதுடன் உழைப்பால் உரமேறிய தன்மையைக் காட்டுமுகமாக 'கருங்கை வினைஞர்' என்றும் விளக்கிச் சொல்கிறது (அடி.-197, 223, 355). சிறுபாணாற்றுப்படையும் எருதுகளின் துணை கொண்டு பயன் விளைக்கும் உழவர்களை 'ஏரோர்' என்று புகழ்கிறது (அடி.-190& 233). பொருநராற்றுப்படை 'அகவர்' என்று அழைக்கிறது (அடி-221). மதுரைக்காஞ்சி வரிசைப்படுத்தும் பாண்டிய நாட்டு ஊர்களில் எழுந்த ஓசைகளில் முதலில் இடம் பெறுவது ஏற்றம்

இறைக்கும் ஓசையே ஆகும். ஏற்றம் இறைப்போரை 'நீர்த்தெவ்வு நிரைத் தொழுவர்' என்கிறார் மாங்குடி மருதனார் (அடி- 89).

மருத நிலத்து நீர்நிலைகளில் மீன் பிடித்தோரை வலைஞர் என்றனர். வலைஞர் மீனைப் பிடித்து விற்றமையை மதுரைக்காஞ்சி கூறுகிறது (அடி.- 255-256). பெரும்பாணாற்றுப்படையும் அவ்வாறே நுவல்கிறது (அடி-274). மலைபடுகடாம் வாளை மீனைப் பிடித்து வந்தவர் 'வலையோர்' என்கிறது (அடி.- 454&455) தூண்டில் இட்டு மீன் பிடித்தோர் பாணர் ஆவர். மதுரைக்காஞ்சி 'மீன்சீவும் பாண்சேரி' என்று கூற (அடி.- 267&268); பெரும்பாணாற்றுப்படையில் அவர்கள் 'நெடுங்கழைத் தூண்டில் நடுங்க' வாளைமீன் பிடித்த வருணனை இடம் பெறுகிறது (அடி.- 273- 290).

நதிக்கரைகளில் வேந்தர் நகர நாகரிகத்தைத் தோற்றுவித்து இருந்தனர். அவர்களது அரண்மனைகளில் இருந்த அரசுப் பணியாளர் சூதர், மாகதர், வைதாளிகர், நாழிகைக் கணக்கர் என்போர் ஆவர். அவர்களை வரிசைப் படுத்துகிறது மதுரைக்காஞ்சி (அடி.- 670&671). சூதர் நின்றேத்துவார் ஆவர். மாகதர் என்போர் இருந்தேத்துவார். வரிக்கூத்துள் ஒன்றாகிய வைதாளிக் கூத்தினை ஆடியோர் வைதாளிகர். மன்னனுக்கு அவ்வப்போது நாழிகை சொல்வோர் நாழிகைக் கணக்கர். பட்டினப் பாலையில் சுங்கவரி வசூலிப்போர் அரசுப் பணியாளராக அறிமுகப்படுத்தப்படுகின்றனர் (அடி.- 121&122).

நால்வருணத்தாரது குடியிருப்புகள் வேந்தரது நதிக்கரைத் தலைநகரங்களிலும், மன்னர் ஊர்களிலும் இருந்தன.

பெருநகர்களில் அந்தணர்கள் வேதம் ஓதும் தவப்பள்ளி இருந்தது. அங்கு வேள்விச்சாலையும் இருந்தது. மாங்குடி மருதனார் “குன்றுகுயின்றன்ன அந்தணர் பள்ளி” மதுரை நகரில் இருந்தது என்கிறார் (அடி-474).

புகார் நகரிலும் அந்தணர்களின் தவப்பள்ளி இருந்தமையை பட்டினப்பாலை உறுதி செய்கிறது. (அடி.- 51-55). மருதநிலத்தில் அந்தணர்க்கே உரிய பதி இருந்தமையை பெரும்பாணாற்றுப்படையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எடுத்துக் காட்டுகிறார் (அடி.- 300-301).

சிறுபாணாற்றுப்படை மருதம் சான்ற மருதத் தண்பணை சார்ந்து அகழி சூழ்ந்த காவல் பொருந்திய பெரிய ஆமூரில் அந்தணர்கள்

குறைவின்றி வாழந்ததாகச் சொல்கிறது (அடி.- 187&188).

மாவிலங்கை மன்னனாக ஓவியர் குடியில் தோன்றிய நல்லியக்கோடன் கலைஞர்களையும், புலவர்களையும் போற்றியதுடன் அந்தணர்களையும் போற்றினான் (சிறு.- 201-206).

நீர்வளம் மிகுந்த பகுதிகளில் கோட்டையும், அகழியும், காவல் காடும் அமைத்து நகரங்களை நிறுவித் தமக்கென படையோடு, கோலோடு, குடையோடு முடிமன்னர் மூவர் ஆண்டனர்; மன்னர் எயில் கட்டி ஆண்டனர். மதுரைக்காஞ்சி பாண்டியமன்னர் குடி ஆண்ட அருமையைப் பாடுகிறது. பட்டினப்பாலை சோழ மன்னர் குடி ஆண்ட பெருமையைப் பாடுகிறது. சிறுபாணாற்றுப்படை நல்லியக்கோடன் எயிலில் ஆண்ட அழகைச் சொல்லுகிறது. அத்துடன் சேரநாட்டு வஞ்சியில் குட்டுவன் கோலோச்சிய பெருமையையும் பேசுகிறது. வேந்தன் குடியிருந்த மாளிகையை கோயில் என்றே பட்டினப்பாலை பகர்கிறது (அடி-40-50). சிலப்பதிகாரம் மூன்று முடிமன்னர் இருந்து ஆண்ட தலைநகரங்களில் அவர்களது அரண்மனை பற்றி ஓதுகிறது. புகார் நகரில் வேந்தன், அரசு ஊழியர், மருத்துவர், வானநூல் வல்லோர், படைப்பிரிவினர், கணிகையர், வேதியர், வணிகர், வேளாளர் முதலியோர் பட்டினப்பாக்கத்தில் குடியிருந்தனரென்று (இந்திர.-) இளங்கோவடிகள் பட்டியலிடுகிறார்.

வணிகர், வேளாளர் ஆகிய இருவருணத்தவரும் நானில மக்களினின்றும் வேறுபட்டவர் ஆவர். உழவு, வாணிகம் என்னும் இருவகையானும் முறையே புகழ் மிகுந்த சிறுகுடி மக்களும், பெரு வாணிகரும் நானிலத்து வாழ்வாரோடும் சேர்ந்து நெடுஞ்செழியனின் ஏவலைக் கேட்டதாக மதுரைக்காஞ்சி சொல்கிறது (அடி.- 119-123). நானிலத்து மக்களுள் உழுவித்தோர் நால்வருணத்துள் நான்காவதாக எண்ணப்பெறும் வேளாளர் ஆவர். இவர்கள் அந்தணர்களைப் போற்றினர். வேதநெறிப்படி வழிபட்டனர். பசுக்களையும், எருதுகளையும் பாதுகாத்ததனால் விருந்தோம்பியதுடன்; பசிய உணவினை; அதாவது சமைக்காத உணவுப்பொருட்களை அந்தணர்க்குக் கொடுத்துப் புண்ணியம் தேடினர். வளைந்த ஏரான் செய்யும் வேளாண் தொழிலை விரும்பிய இவர்கள் சேற்றில் இறங்கிப் பாடுபட்ட உழவரினின்றும் மாறுபட்ட வாழ்க்கை உடையவர் என்பதை பட்டினப்பாலை தெளிவாக்குகிறது (அடி.- 194-205)

தொன்றுதொட்டு ஈட்டிய பொருளை உடைய வணிகர்கள் நுகத்தில் தைத்த பகலாணி போல நடுவுநிலைப் பண்பு மிக்கவர். தமவும் பிறவும் ஒப்ப நாடிக் கொள்வதும் மிகை கொளாது, கொடுப்பதும் குறைகொடாது பல பண்டங்களையும் விலைகூறி விற்பவராவர். (மேற்.அடி.- 206-212). சிலப்பதிகாரம் இவர்களை மன்னர் பின்னோர் என்கிறது. (அடைக்கலக்காதை- அடி-109)

1.5.நெய்தல்:

நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்கள் பரதவர் எனப்பட்டனர். மதுரைக்காஞ்சி பரதவர் மகளிர் ஆடிய குரவை பற்றிக் குறிப்பிடுகிறது (அடி.- 96, 97, 144). பட்டினப்பாலை அவர்களது நெடுந்தூண்டிலில் காழ் சேர்த்துக் குறுங்கூரை வேய்ந்த குடியிருப்பு பற்றியும் பேசுகிறது (அடி.- 80-90). பொருநராற்றுப்படை பரதவர் குறிஞ்சியும் பாடுவர் என்கிறது (அடி-218). பரதவர்களில் கடலில் சென்று மீன் பிடிப்போர் 'நிரை திமில் வேட்டுவர்' என்று சுட்டப்படுகின்றனர் (மது.அடி-114). கடலிலே கப்பலைச் செலுத்தியவரும் பரதவரிடையே இருந்தனர். இவர்களை 'விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்' என்று வேறுபடுத்துகிறது மதுரைக்காஞ்சி (அடி-321). சங்கு குளிப்போரும் பரதவருள் உண்டு. சங்கினை அரம் போழ்ந்து அறுத்து வளையல் செய்தோர் 'கோடு போழ்நர்' ஆவர் (மேற்.அடி-511). சிலப்பதிகாரம் புகார் நகரத்துப் பட்டினப் பாக்கத்திலும் 'அணிவளை போழுநர்' இருந்தனர் (இந்திர.- அடி.- 47-58) என்கிறது.

உப்பினை உற்பத்தி செய்து விற்றவர் உமணர். 'வெள்ளுப்புப் பகர்நர்' பற்றி மதுரைக் காஞ்சியும் (அடி-117), எருது பூட்டிய வண்டிகளில் உப்பினை ஏற்றி பிற பகுதிகளுக்குச் சென்று அவர்கள் விற்றமையை பெரும்பாணாற்றுப் படையும் பேசுகின்றன (அடி-65). புகார் நகரத்து மருவூர்ப் பாக்கத்தில் உப்பினை உற்பத்தி செய்வோர் குடியிருந்தமையை சிலப்பதிகாரம் சுட்டுகிறது (இந்திர.அடி.- 25-27).

2.0. திணை சாராத தொழிலாளர்

திணை சாராத தொழிலாளர் பலரையும் செவ்வியல் இலக்கியம் வரிசைப் படுத்துகிறது.

தெய்வமேறி ஆடுவோர் பண்டைக் காலத்தில் இருந்தமையை மதுரைக் காஞ்சி பேசுகிறது. 'வல்லோன் தைஇய வெறிக்களம்' என்னும் தொடர் (அடி-284) வெறியாடும் வேலனைக் குறிக்கிறது.

பழையர்

கள் விற்பனையில் ஈடுபட்டோர் 'பழையர்' எனப்பட்டனர் (மலை.அடி-459). பழம்படு தேறலை அரித்து வார்ப்பவள் நுளைமகள் எனப்பட்டாள் (சிறு.அடி.- 158&159). சிலப்பதிகாரப் புகார் நகரத்து மருவூர்ப்பாக்கத்தில் 'கண்ணொடையாட்டியர்' (இந்திர.அடி-24) குடியிருந்தனர்.

இயவர்

பல்வேறு இசைக்கருவிகளையும் இசைக்கும் குழு 'இயவர்' என்று அழைக்கப்பட்டது. குறிஞ்சி நிலத்தில் விளைந்த பயிரை யானை மேய அதை ஒட்டுவதற்கு தட்டையைப் புடைத்த ஓசை 'கலித்த இயவர் இயம்' தொட்டது போலிருந்தது என்கிறார் மாங்குடி மருதனார் (மது.அடி.- 303-305).

கோடியர்

கூத்தாடிப் பிழைத்தவர் கோடியர் ஆவர். இவர்களை மதுரைக் காஞ்சி 'கொடும்பறைக் கோடியர்' என்கிறது (அடி-523).

கம்மியர்

நெசவுத் தொழில் செய்தோரை மதுரைக்காஞ்சி 'கம்மியர்' என்று அழைக்கிறது. குறியவும், நெடியவும் ஆகிய மடிப்புடவைகளை விரித்து சிறியரும் பெரியரும் ஆகிய கம்மியர் குழுமி இருந்து விற்ற காட்சியை மதுரைக்காஞ்சி காட்டுகிறது (அடி.- 519-522).

நெடுநல்வாடை தச்சரை 'கம்மியர்' என்று அழைக்கிறது (அடி-85). கைத்திறன் மிகுந்த கம்மியனால் முடுக்கப்பட்ட கதவில் இடுக்கு இல்லை என்கிறார் நக்கீரர். பெரும்பாணாற்றுப்படை தச்சச் சிறார்களும் விரும்பும்படியாக அமைந்த விளையாட்டுத் தேர் பற்றி உரைக்கிறது (அடி.- 248&249).

சிலப்பதிகாரப் புகார் நகரத்து மருவூர்ப்பக்கத்தில் மரவேலை செய்வோரும், தையல் வேலை செய்வோரும் குடியிருந்தனர் (இந்திர.அடி.- 29-39).

திருமணி குயினர்

மணிகளைத் துளையிடுவோரைத் 'திருமணி குயினர்' என்கிறது மதுரைக் காஞ்சி (அடி-511). கோவலன் ஒன்பது வகை மணிகளும் கிடைக்கும் இரத்தினக் கடைத்தெருவை சுற்றிப் பார்க்கிறான் (சிலப்.- ஊர்.- அடி.- 180-200). சிலப்பதிகாரப் புகார் நகர வருணனை மணிகளைத் துளையிடுவோர் பட்டினப் பாக்கத்திலும், பிற மணிவேலைகளைச் செய்வோர் மருவூர்ப் பக்கத்திலும் இருந்ததாகச் சொல்கிறது (இந்திர.அடி.- 46-58, 31-39). அகழ்வாய்வு புகார் நகரில் பல

வண்ணக் கல்மணிகளை வெளிப்படுத்தி உள்ளது. (Indian Archeology- A Review- 1961-1962- ப.-26) பழுப்புநிறக் கல், நீலவெண்மணிக்கல், மங்கிய சிவப்புக்கல், பளிங்குப் படிகக்கல் முதலியன வட்டவடிவிலும், நான்கு மூலைகளைக் கொண்ட பட்டை வடிவிலும், பல வரிப்பள்ளங்களைக் கொண்டவையாகவும், பல்வேறு பருமன்களில் வெட்டப்பட்டு; துளையிடப்பட்டு அணிகலன்களாக்கப்பட்டன (கே.வி.இராமன்- தொல்லியல் ஆய்வுகள்- ப.- 36-37)

கண்ணுள் வினைஞர்

ஓவியம் தீட்ட வல்லார் 'கண்ணுள் வினைஞர்' எனப்பட்டனர். எவ்வகைச் செய்தியும் உவமம் காட்டி, நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கு உடைய அவர்களும் மதுரை நகரத்து அங்காடியில் கடை விரித்து இருந்தமையை மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது (அடி.- 516-518).

கொல்லர்

இரும்புத்தொழில் செய்வோர் கொல்லர் எனப்பட்டனர் (புறம்.312). சிலப்பதிகாரப் புகார் நகரத்து மருவூர்ப் பாக்கத்தில் வெண்கலத்தால் பொருட்கள் செய்து விற்போரும், செப்புப் பண்டங்கள் செய்வோரும், இரும்பு கொண்டு தொழில் செய்வோரும், பொற்பணித் தட்டாரும் இருந்தனர் (இந்திர.அடி.- 28-39). மதுரை நகரத்து அங்காடியில் கோவலன் செப்புப் பொருட்கள், வெண்கலப் பொருட்கள் விற்கப்பட்டமையைக் கண்டு வந்தான் (ஊர்.அடி.- 168-179).

பூவும் புகையும் விற்றவர்களிடம் தரமான 'பூவும் புகையும் ஆயும் மாக்கள்' பற்றி மதுரைக்காஞ்சி பேசுகிறது (அடி.515).

பொன்னுரை காண்மர்

மதுரை நகரத்து அங்காடியில் பொன் ஆபரணங்களைச் செய்வோர் விதந்து ஓதப்படுகின்றனர் (மது.அடி-512). 'நன்பொன் சுடரிழை புனைநர்' என்பதால் இதனை அறியலாம். பொன்னை உரைத்துப் பார்த்து அதன் தரத்தை மதிப்பிட வல்லார் 'பொன்னுரை காண்மர்' எனப்பட்டனர் (மது.அடி-513). நான்கு வகைப் பொன்னும் கிடைக்கும் பொற்கடைத் தெருவைக் கோவலன் கண்டான் (சிலப்.- ஊர்.- அடி.- 201-204).

வம்பு நிறை முடிநர்

புதுமையாகக் கச்சுகளை முடிந்து விற்றவர்களை 'வம்பு நிறை முடிநர்' என்றழைக்கிறார் மாங்குடி மருதனார் (மது.அடி-514). பட்டுநூல், பருத்திநூல், உரோமம் முதலியவை கொண்டு நுண்ணிய

வேலைப்பாடுடன் நெசவு செய்வோரின் இருப்பிடம் இருந்தமையை இளங்கோவடிகள் (மேற்.அடி.- 16-17) சுட்டிக்காட்டுகிறார். பல்வேறு ஆடைவகைகளும் விற்ற அறுவைக்கடை வீதியைக் கோவலனும் மதுரையில் கண்டான் (சிலப்.- ஊர்.- அடி.- 205-207).

3.0 திணை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மக்களெல்லாம் தத்தமக்குரிய குடியிருப்புகளில் வாழ்ந்தனர்.

3.1. குடிப்பாக்கம்

“இலங்கு வளை இருஞ்சேரிக்

கட்கொண்டிக் குடிப்பாக்கம்” (அடி.- 136-138)

கொற்கை நகரில் இருந்தது என சங்கு குளித்து வளையல் செய்வோர் பற்றி மதுரைக்காஞ்சி பேசுகிறது. நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பையின் மாடம் ஓங்கி மணல் மலிந்த மறுகில் பரதர் மிகுதியாக வாழும் பல்வேறு தெருக்கள் இருந்தன என்று பெரும்பாணாற்றுப் படையும் சுட்டிச்செல்கிறது (அடி.- 321-323). பாணர்கள் காலம் காலமாகக் குடியிருந்த பகுதியை 'அழுந்து பட்டிருந்த பெரும்பாண் இருக்கை' என்கிறார் மாங்குடி மருதனார் (மது.- அடி-342). தண்டலை உழவர்களின் குடியிருப்பு பற்றிப் பெரும்பாணாற்றுப்படை விதந்தோதுகிறது. குளிர்ச்சி பொருந்திய விளைச்சல் நிலத்தை ஒட்டி இருந்த உழவர் குடியிருப்பில் பசிநோய் இல்லையாதலால் அது ஒப்பற்றதாகிறது (அடி.- 242, 254-255& 355). வரகுத்தாளால் வேயப்பட்ட கவின்குடிச் சீறூர்களில் கோவலர் வசித்தனர். அவர்களது தேவைக்கேற்ற காடு சூழ்ந்த தொழுவுடை வரைப்பாக அது திகழ்ந்தது. இடுமுள் வேலியுடன் எரு நிறைந்த அவரது குடியிருப்பை கடியலூர் உருத்திரங் கண்ணனார் வருணித்துள்ளார் (பெரு.அடி.- 154, 185, 191). வேட்டுவர் கானகத்தில் சிறுவாயில்களை உடைய அரண்களுள் வாழ்ந்தனர் (முல்லைப்பாட்டு அடி-26). புகார் நகரில் உடல் உழைப்பாளர்கள் குடியிருந்த பகுதி புறச்சேரி என்றே பட்டினப் பாலையில் காட்டுகிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார். கருந்தொழிற்கலி மாக்கள் தம் இருங்கிளை இணைஒக்கலொடு உறைகிணற்றுப் புறச்சேரியில் வசித்தனர் (அடி.- 59-76).

3.2. மருவூர்ப்பக்கம்

இளங்கோவடிகளும் புகார் நகரை வருணிக்கும் போது உடல் உழைப்பாளர் குடியிருந்த பகுதியை மருவூர்ப்பக்கம் என்று

குறிப்பிட்டு; மன்னன் மாளிகையும், செல்வக்கணிகையரும், வணிகர் மாடங்களும், அமைச்சர்களும் இருந்த பட்டினப் பாக்கத்தில் இருந்து அதை வேறு பிரித்துக் காட்டுகிறார் (இந்திர.அடி.- 10-58).

4.0. நால்வருணத்தார்க்கும் தனித்தனித் தெருக்கள்

சங்ககாலத் தமிழகத்து நதிக்கரைப் பெருநகரங்களில் நால்வருணத்தார்க்கும் தனித்தனித் தெருக்கள் இருந்தன.

4.1. மதுரை நகர மக்கட்பெருக்கத்தையும், ஆரவாரத்தையும் சித்தரிக்கும் மதுரைக்காஞ்சி;

“அறங்கூறவையமும்…காவிதி மாக்களும்…சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்…நாற்பெருங்குழுவும்…கோடுபோழ் கடைநரும்... திருமணி குயினரும்... பொன் சுடரிழை புனைநரும்… பொன்னுரை காண்மரும்... வம்புநிறை முடிநரும்; பூவும், புகையும் ஆயுமாக்களும்; கண்ணுள் வினைஞரும், பிறரும்; சிறியரும், பெரியரும் கம்மியர் குழீஇ; நால்வேறு தெருவினும் காலுற நிற்றர” என்கிறது (அடி.-489-522).

மாங்குடி மருதனார் கூறும் நால்வேறு தெருக்கள் முறையே அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் தெருக்கள் எனலாம். கோவலன் மதுரை நகரைச் சுற்றிப் பார்க்குங்கால் நால்வேறு வருணத்தார்க்குரிய தனித்தனித் தெருக்களை அகநகரில்; கோட்டைக்குள்ளே கண்டான் (சிலப்.- ஊர்.- அடி.- 68-218) நகரில் புகையழல் மண்டிய போது அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வருணத்தார்க்குரிய தெருக்களிலும் இருந்த மக்கள் கலக்கம் அடைந்தனர் (சிலப்.- அழற்படுகாதை.- அடி.- 110-112). பெருமழைப்புலவர் பொ.வே.சோம சுந்தரனார் சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதும்போது நால்வேறு தெருக்கள் நான்கு வருணத்தார்க்குரியன என்றே பொருள் தருகிறார். ஆனால் மதுரைக் காஞ்சிக்கு உரையெழுதும்போது நால்வேறு தெருக்கள் முறையே புரோகிதர், ஒற்றர், சேனாதிபதியர், தூதர் முதலியோர்க்குரிய தெருக்கள் என்று கூறியிருப்பது வலிந்து கூறும் பொருளாகிறது. சிலப்பதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் பொருளையே மதுரைக்காஞ்சிக்கும் உரியதாகக் கூறுவதில் முரண்பாடு எழ வழியில்லை.

5.0. செய்யும் பணி அடிப்படையிலும், வாழும் நில அடிப்படையிலும் சார்ந்த வருண அடிப்படையிலும் இருந்த மக்களினப் பாகுபாடு மட்டுமின்றி சிலர் இழிந்தோராகக் கருதப்பட்டனர்.

இந்த இழிவு

அவர்கள் செய்த தொழிலால் மட்டுமின்றி; பிறப்பாலும் அமைந்தது.

5.1. புலைத்தி

உடைகளைத் துவைப்பவள் புலைத்தி என்றழைக்கப்பட்டாள் (புறம்.311). பிணம் எரிப்பவன் புலையன் என்று குறிப்பிடப்படுகிறான் (புறம்.360). சுடுகாட்டில் பிணம் எரிப்போனை ‘இழிபிறப்பினோன்’ என்று ஐயாதிச் சிறுவெண் தேரையார் குறிப்பிடுகிறார் (புறம்.363). துடி அடிப்பவனைப் புலையன் என்றும், கட்டில் பின்னுபவன் இழிசினன் என்றும், பறை முழக்குவன் இழிசினன் என்றும் (புறம்.287, 289) பல குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

6.0. திணைசார்ந்த மக்களினப் பாகுபாடும், வருணப்பாகுபாடும்

மேற்சுட்டிய திணைசார்ந்த மக்களினப் பாகுபாடும், வருணப்பாகுபாடும், தொழிலடிப்படையில் அமைந்த அழுத்தமான பிரிவுகளும், பிறப்பாலமைந்த உயர்வு தாழ்வும் ஒரு திருமண பந்தத்தை உறுதி செய்வதிலும் பங்கேற்றன. பரதவ மகளை விரும்பிய நகர்ப்புறத்துச் செல்வந்தனின் செல்ல மகளிடம் பேசும் தோழி ‘உன் உறவு தேவையில்லை. எம் இனத்தில் நல்ல தலைவர்கள் உளர்’ என்று மறுத்துரைப்பதாக நற்றிணை (பா.45) சுட்டிக் காட்டுகிறது.

முடிவுரை:

சங்ககாலத் தமிழகத்தில்; புவியியல் அடிப்படையில் அமைந்த மக்களினப் பாகுபாடு நிலவியது. நானிலத் திணை மாந்தர்கட்கிடையே அவர்கள் மேற்கொண்ட தொழிலுக்கேற்ப பல பிரிவுகள் நிலவின. நானிலத்திலும் திணைமாந்தர் தலைவர்களும், குறுநில மன்னர்களும் ஆண்டு வந்தனர். ஆற்றின் கரைகளில் கோட்டை அமைத்து ஆண்ட முடிவேந்தர் அரண்மனைகளில் அரசுப் பணியாளர் இருந்தனர். நால் வருணத்தாரது குடியிருப்புகள் நதிக்கரைத் தலைநகரங்களிலும், பிற ஊர்களிலும் இருந்தன. உடல் உழைப்பில் ஈடுபட்டிருந்த மக்களெல்லாம்; தத்தமக்குரிய குடியிருப்புகளில் வாழ்ந்தனர். பெருநகரங்களில் நால்வருணத்தார்க்கும் தனித்தனித் தெருக்கள் இருந்தன. திணை சாராத தொழிலாளர் பலரையும் செவ்வியல் இலக்கியம் வரிசைப்படுத்துகிறது. பிறப்பால் இழிந்தோர் என்ற கொள்கை சங்க காலத்தில் இருந்தது. திருமண பந்தத்தை முடிவு செய்வதில் மேற்கண்ட பாகுபாட்டின் தலையீடும் இருந்தது.