/ கண்மணித்தமிழ் /
  1. பண்டைத் …

8. பண்டைத் தமிழகத்தில் வேளாண்மைசார் இசையும் இசைக்கருவிகளும்

0 முன்னுரை:

0.1 காலத்தால் முற்பட்டனவாக நமக்குக் கிடைத்திருக்கும் தொகை நூல்களில் காணக்கிடைக்கும் தமிழகத்தையே நாம் பண்டைத் தமிழகம் என்று சொல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அன்றைய தமிழ்ச் சமுதாயம் வேளாண்மை சார்ந்து இருந்தது. எட்டுத்தொகையிலும், பத்துப்பாட்டிலும் பொதிந்து கிடக்கும் வேளாண்மை தொடர்பான இசையும் இசைக்கருவிகளும் பற்றிய செய்திகளைத் தொகுத்தும், வகுத்தும், விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

0.2 நாட்டார் வழக்காறுகள் காலந்தோறும் எல்லாச் சமுதாயங்களிலும் நிலவின; நிலவுகின்றன. கவிதை காலத்தின் கண்ணாடி. அது தோன்றிய காலத்து நாட்டார் வழக்காறு அதனுள் பொதிந்திருக்கும். பண்டை இலக்கியம் இவ்வழக்காறுகளை இனம் காட்டுகிறது. அவற்றைப் பற்றிய ஆய்வு அடிப்படையைக் காணும் முயற்சியாக அமைந்து; இன்றைய வழக்காறுகள் பற்றிய தெளிவிற்கு வழிவகுக்கும். எனவே சங்க இலக்கியத்தில் இடம்பெறும் வேளாண்மைசார் இசையும், இசைக்கருவிகளும் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

0.3 பதினெண்மேற்கணக்கு என்று தொகுக்கப்பட்ட நூல்கள் பதினெட்டும் ஆய்வுக்கு உரிய எல்லை ஆகின்றன. அந்நூற்தரவுகள் முதன்மை ஆதாரங்களாக அமைகின்றன. சிலப்பதிகாரத்தில் கிடைக்கும் ஆதாரங்கள் இரண்டாம் நிலைத் தரவுகளாக அமைந்து; . மரபுவழிப்பட்ட பகுப்பாய்வாக இக்கட்டுரை அமைகிறது.

1.0 வேளாண்மையின் பல்வேறு நிலைகளும் இசையும்:

பல்வேறு படிநிலைகளாக அமையும் வேளாண்மையில் இசை

இடம்பெறும் காலகட்டங்கள் பின்வருவனவாம்:

  1. நாற்று நடல்

  2. களை எடுத்தல்

  3. கதிரில் பால்பிடிக்கும் பருவம்முதல் முற்றும்வரை

காவலிருத்தல்

  1. அறுவடை செய்தல் (புறம்.- 348& அகம்.204)

  2. பகடு ஓம்புதல் (அகம்.155)

  3. மழை வெள்ள அபாயத்தை அறிவித்தல்

  4. விளைந்த மணிகளை உணவுக்குப் பக்குவப்படுத்தல்

1.1 நாற்று நடும் போது ஆரவாரத்துடன் எழுந்த இசை; ஊர்த் திருவிழாவின் பேரொலி மிகுந்த இசையோடு மாறுகொண்டு கேட்டது.

“ஒருசார் சாறுகொள் ஓதத்து இசையொடு மாறுற்று

உழவின் ஓதை பயின்று ……ஆர்த்து நடுநரும்

ஈண்டித் திருநயத்தக்க வயல்” (பரி.திரட்டு- 1)

என்பது இரண்டுவகை இசை தம்முள் முரண் கொண்டமையைக் காட்டுகிறது.

1.2 களை எடுக்கும்போது வெயில் தாக்காதபடி தலையில் குடைசூடிய வினைஞர் தாம் சோர்வடையாது வேலை செய்யப் பறைமுழக்கினர்.

“கறங்கு பறைச்சீரின் இறங்க வாங்கிக்

களைகால் கழீஇய பெரும்புன வரகின்” (அகம்.194)

எனும் பாடலடிகள் வரகுப் பயிருக்குக் களையெடுத்த போது உழவர் எவ்வாறு அலுப்புத் தெரியாமல் வேலை செய்தனர் என்று காட்டுகின்றன.

1.3 தினைப்பயிர் கதிரீன்று பால்பிடிக்கும் பருவம் ஆனதால் தலைவி

அவற்றைக் காக்கச் செல்லவேண்டும் என்று தாய் புனம் அனுப்புகிறாள். தலைவன்;

“படிகிளி பாயும் பசுங்குரல் ஏனல்” (கலி.50)

கடிதல் மறப்பித்தான்

“சிறுதினைப் படுகிளி கடீஇயர் பன்மாண்

குளிர்கொள் தட்டை மதனில புடையா” (அகம்.274)

கதிர்களைக் காத்தனர் என்று தோழி கூறுகிறாள். தினைக்கதிர்கள் பசுமையாக இருந்தன என்பதால் அது பால் பிடிக்கும் பருவம் என்பது தெளிவாகிறது. கதிர் முற்றும் போதும் காவல் செய்ய வேண்டிய தேவை கிளிகளால் ஏற்பட்ட போது குளிர் என்னும் இசைக்கருவியால் தலைவி அவற்றை விரட்டினாள் என்பது;

“பிடிக்கை அன்ன பெருங்குரல் ஏனல்

உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே” (குறுந்.360)

என்ற பாடற்பகுதியால் புலனாகிறது.

1.4 தண்ணுமை இசையுடன் அறுவடை செய்தனர். இசையோடு கூடிய காவல்

“வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்

பழனப் பல்புள் இரியக்” (நற்.350)

கழனியில் நிகழ்ந்தது.

1.5 பகடு ஓம்புதல் வேளாண்மையின் ஒரு அங்கமாகும். இப்பணியைக் கோவலர் செய்தனர். அவற்றை மேய்ச்சலுக்கு விடும்பொழுதும், மேய்ச்சல் முடிந்த பின்னர் மீண்டு கொட்டிலை அடையும் பொழுதும் சூழ்நிலைக்கேற்பக் குழல் ஊதினர்.

“அந்திக் கோவலர் அம்பணை இமிழிசை

அரமிய வியலகத்து இயம்பும்” (அகம்.124)

என்பதால் மாலையில் மூங்கில் குழலை இசைத்து நிரைகளைக் ஓட்டிச் சென்றமை புலப்படுகிறது.

1.6 பயிர்த் தொழிலின் வெற்றி நீர்மேலாண்மையில் உள்ளது. மழை மிதமிஞ்சிப் பொழியுங்கால்; எதிர்வரும் இடரைத் தண்ணுமை முழக்கி எல்லோருக்கும் தெரிவித்தனர் வெள்ள அபாய எச்சரிக்கைக்கு இசைக்கருவி பயன்பட்டது.

“அழிதுளி தலைஇய பொழுதிற் புலையன்

பேழ்வாய்த் தண்ணுமை இடந்தொட்டன்ன” (நற். 347)

என்னும் உவமை சமூகத் தொண்டில் இசைக்கருவியின் பங்கினைப் பற்றிக் கூறுகிறது.

1.7 விளைந்த கதிர்கள் வீடு வந்து சேர்ந்த பின்னர் உணவாகும் முன்னர் அதனைக் குற்றி உமிநீக்கி மணிகளைச் சேகரிப்பதற்கு உலக்கைப்பாட்டு வழக்கில் இருந்துள்ளது. வாய்ப்பாட்டு பாடிக்

கொண்டே பெண்கள் வினையாற்றினர். அப்போது;

“...தந்தை

மைபடு நெடுவரை பாடினள் கொடிச்சி

ஐவன வெண்ணெல் குறூஉம்” (நற்.373)

என்பதால் தன் பிறந்த வீட்டைப் பற்றிய பெருமை அவளது பாட்டில் இடம் பெற்றதெனத் தெரிகிறது.

2.0 இசையின் வகைப்பாடு:

2.1.0 வேளாண்மைசார் இசையில் வாய்ப்பாட்டும், கருவி இசையும், நிகழ்த்து கலைகளும் இருந்தன.

2.1.1.0 தினைப் புனத்தில் கொடிச்சி குறிஞ்சிப்பண் பாடினாள். கிளி கடியும் பெண்கள் வாய்ப்பாட்டுப் பாடினர். அவ்வாய்ப்பாட்டின் விளைவுகள் இலக்கியங்களில் ஆங்காங்கே நயமாகச் சொல்லப்பட்டுள்ளன.

2.1.1.1 கொடிச்சி பாடிய குறிஞ்சிப்பண் கேட்ட யானை தூங்கி விட்டதாம். தன் கணவன் கள்ளின் போதையில் மயங்கியிருக்கப் புனத்திற்குள் நுழைந்த ஒற்றை யானை கதிரைத் தின்னாமல்; தன் நிலையினின்றும் பெயராமல் இருக்கும்படியாக அவள் பாடிய பாட்டு அமைந்தமையைப் பின்வரும் பாடற்பகுதி காட்சிப்படுத்துகிறது.

“பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்

குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது

படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென

மறம்புகல் மழகளிறு உறங்கும்” (அகம்.- 102)

புனம் மேய வந்த யானையைக் குறத்தியின் பாடல் தூங்க வைத்தது என்று இளங்கோவடிகளும் பாடுகிறார். (சிலப்.- நீர்ப்.- 211-217)

2.1.1.2 பெண்டிர் கிளிகடி பாடலைப் பாடித் தம் புனம்காத்த செய்கை;

“...புலர்குரல் ஏனல்

கிளி கடி பாடலும் ஒழிந்தனள்” (அகம்.118)

என்னும் பாடலில் பொதிந்துள்ளது. கதிர் முற்றி அறுவடை நடக்க உள்ளதால் இனித் தலைவி காவலுக்கு வரமாட்டாள் என்கிறாள் தோழி. சில வேளைகளில் கிளி ஓப்பும் மகளிர் குரலைக் கிளியின் குரலெனக் கருதிப் புனத்திலுள்ள கிளிகள் தம் இனத்தை அழைக்கும் (அகம்.12);

பாடிய மகளிரைப் பிற காவலர்கள் கிளி என்று கருதித் துரத்தினர் (ஐங்.289). இதனால் தினைப்புனக் காவலுக்குப் பாடிய பாடலின் இனிமை புரிகிறது.

மலைநிலத்துப் பெண்கள் குருவி ஓப்பியும், கிளி கடிந்தும், காவல் நின்றமையை இளங்கோவடிகள் காட்டுகிறார் (சிலப்.- குன்றக் குரவை- உரைப்பாட்டு மடை) அத்துடன் கவுந்தி முதலியோர் சோழ நாட்டைக்

கடக்கும் போது; நிலத்தை உழுபவரின் ஏர்மங்கலப் பாட்டும், நெல்லை அரிந்து சூட்டைக் கடாவிட்ட பின்னர் தூற்றுபவர் பாடுகின்ற முகவைப் பாட்டும் கேட்டனர் (சிலப்.நாடு.- அடி.-134-137). சேரநாட்டு வருணனையில் கொடிச்சி தினையைக் குற்றும்போது பாடிய வள்ளைப்பாட்டும் (சிலப்.காட்சிக்.- அடி-26), கண்ணகித்தெய்வம் வாழ்த்திய பின்னர் மகளிர் மூவேந்தரைப் போற்றிப் பாடிய வள்ளைப்பாட்டும் (சிலப்.- வாழ்த்துக்காதை) உழவர் ஏரோட்டும் போது பாடிய ஓதையும் இடம்பெறுகின்றன (சிலப்.- நீர்ப்.- அடி.- 227-230).

2.1.2.0 கருவிகளால் எழுப்பிய இசை கறங்கிசையாகவும்; சிலம்பொலி, மழையொலி போன்றும் இருந்தது.

2.1.2.1 கழனி உழவரின் கறங்கிசை பறை கொண்டு எழுப்பப்பட்டது (க.எ.1.1). கறங்கிசை கேட்டு மயில் வெருவி வெளியேறியமையை;

“கழனி உழவர் கலிசிறந்து எடுத்த

கறங்கிசை வெரீஇப் பறந்த தோகை” (அகம்.266)

எனும் அடிகள் உணர்த்துகின்றன.

2.1.2.2 கொடிச்சி கையில் இருந்த குளிர் சிலம்பொலியைச் செய்தது. (க.எ.-1.3)

2.1.2.3 தண்ணுமையின் ஒலி மழையொலி போன்று இருந்தது. மயில்கள் தண்ணுமை இசை கேட்டு மழை என மயங்கி ஆடத் தொடங்கியமையை;

“கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்

பழன மஞ்ஞை மழை செத்து ஆலும்” (பதிற்.90)

என்ற பாடற் பகுதியால் அறியலாம்.

2.1.3 அறுவடையின் போது இசைநிகழ்ச்சி நடந்தேறியது.

“வெண்ணெல் அறிநர் தண்ணுமை வெரீஇக்

கண்மடற் கொண்ட தீந்தேன் இரிய” (புறம்.348)

என்ற பாடல் அறுவடையையும் தண்ணுமையையும் தொடர்புறுத்துகிறது. கழனியுழவர் தண்ணுமை கேட்டு மயில் ஆடியதென்றும் கண்டோம் (க.எ.-2.1.2.3). வெண்ணெல் அறுப்போரின் தண்ணுமை நாரையை வெருட்டியது (அகம்.40); பொய்கைப் புட்களை எல்லாம் ஓட்டியது (அகம்.204). நெல்லறுக்கும் போது இனக்களமரின் இசை பெருகியது (பொரு.அடி.- 193-194) என்று பாடி இருப்பது இவ்வழக்கம் ஒரு நிகழ்த்து கலையாக அன்று இருந்துள்ளமையை உணர்த்துகிறது.

3.0 இசைக்கருவிகளின் வகைப்பாடு:

புடைக்கும் கருவிகள், சுழற்றி ஒலிக்கும் கருவி, தெறித்து மீட்டும் கருவிகள், ஊதுகருவிகள் முதலியவை வேளாண்மைசார் இசை வழக்காறுகளில் இடம் பெற்றன.

3.1.0 பறை, தட்டை, தண்ணுமை முதலியவை வேளாண் தொழிலில் ஈடுபட்டோர் பயன்படுத்திய புடைக்கும் கருவிகளாம்.

3.1.1.0 சேம்பும், மஞ்சளும் வளர்ந்த பின்னர் அவற்றைப் பன்றி அகழாது இருக்கப் பறை முழக்கினர். பன்றி மருண்டு ஓடும்படி இசைத்தமையும் மலைப்புறத்தில் கேட்டமையும்;

“சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்

பன்றிப்பறையும் குன்றகச் சிலம்பும்” (மலை.- அடி.- 343-344)

என்னும் அடிகளால் விளங்குகின்றன. தோற்கருவிகளான துடிப்பறையும் கிணைப்பறையும்; வேளாண்மை சார்ந்து பயன்படுத்தப்பட்டன.

3.1.1.1 வெள்ளம் வயலுக்குள் புகுந்துவிட இளநெல்லுக்கு நேர்ந்த ஆபத்தைத் துடியடித்து அறிவிக்கும் வழக்கம் இருந்துள்ளமை பின்வரும் பாடற்பகுதியால் விளங்குகிறது.

“அகவயல் இளநெல் அரிகாற் சூடு

தொகுபுனல் பரந்தெனத் துடிபட ஒருசார்” (பரி.7)

3.1.1.2 மலைப்புறத்தில் இருந்த தினைப்புனத்தில் துணையை விட்டு அகன்ற மதமிக்க யானையைக் கண்டவுடன் குறவர்;

“கணையர் கிணையர் கைபுனை கவணர்

விளியர்” (நற்.108)

ஆக அதனை ஓட்டினர். அவரது செயல்களில் கிணைப்பறை முழக்கியமை குறிப்பிடத்தக்கது.

சிலப்பதிகாரம் சோழநாட்டு வயற்புறத்தில் கிணைப்பொருநர் செருக்குடன் மண்கணை முழவினை முழக்கினர் என்கிறது (நாடு.- அடி.-138-139).

3.1.2 மூங்கிலை அறுத்துத் தட்டை செய்து புடைத்துப் புனங்கள் தோறும் கிளியை ஓட்டினர் என்பதை; உணர்த்துகிறது.

“ஒலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்” (மலை. அடி.-

328-329) எனும் பாடலடி உணர்த்துகிறது.

3.1.3 தண்ணுமை என்னும் தோற்கருவியிசை புட்களை ஒட்டியது.

அறுவடை செய்வோரின் தண்ணுமையிசை பொய்கைப் புட்களை எல்லாம் விரட்டியது என்பதை;

“வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை

பன்மலர்ப் பொய்கை படுபுள் ஓப்பும்” (அகம்.204)

என்று பாடி இருப்பது காண்க.

3.1.4 பிரம்பினால் செய்யப்பட்ட தழலைக் கையாற் சுற்றியவிடத்தே ஓசை பிறக்கும். அக்கருவி கொண்டும் பறவைகளை விரட்டினர்.

“தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும்…

...குறமகள் காக்கும் ஏனம்” (அகம்.188)

எனவரும் பகுதி நோக்குக

3.2.0 குளிர், யாழ் முதலியவை தெறித்து இசையெழுப்பும் கருவிகளாம்.

3.2.1 குளிர் என்னும் கருவி மூங்கிலை வளைத்துக் கட்டித் தெறித்து ஓசை எழுப்புவது. அது சிலம்பு போல் ஓசை எழுப்பும் என்பதையும் முன்னர் கண்டோம். (க.எ.1.3& 2.1.2.2)

3.2.2 கதிர்கள் முற்றித் தலைசாய்த்தவுடன் வயிரியர் யாழிசையுடன் பண்ணிசைத்து ஊர்மன்றத்தில் இசைநிகழ்ச்சி நடத்தினர் (க.எ.-2.1.3). இதனை விரிவாகக் கூறுவது பதிற்றுப்பத்து. இங்கு திவவு என்பது யாழ் ஆகும்.

“அழியா விழவின் இழியாத் திவவின்

வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ” (பதிற்.29)

3.3.0 குழல், கோடு, வயிர் முதலிய ஊதுகருவிகள் புழக்கத்தில் இருந்தன.

3.3.1.0 ஆம்பலங் குழல், கொன்றையங் குழல், மூங்கில் குழல் எனப் பலவகைக் குழல்கள் வழங்கின (அகம்.74, நற்.69).

3.3.1.1 பகடு ஓம்பிய கோவலர் மூங்கில் குழல் ஊதி நிரைகளை அழைத்தனர் (க.எ.-1.5).

3.3.1.2 கோவலர் ஊதிய ஆம்பல்குழலுடன் பகடுகளின் கழுத்தில் கட்டிய மணியிசை இயைந்து மாலைநேரத்து யாழிசையின் செவ்வழிப் பண்ணோடு ஒத்துப்போனது.

“...ஓங்கு விடைப்

படுசுவற் கொண்ட பகுவாய்த் தெண்மணி

ஆபெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇப்

பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப” (அகம்.214);

காளையின் கழுத்துமணி தாளமாகவும், குழலிசை பக்க வாத்தியமாகவும், யாழிசை ஒரு முழுமையான இசைநிகழ்ச்சியாகவும் அமைந்தமையை அறிகிறோம்.

3.3.1.3 கொன்றையங் குழலையும் கோவலர் ஊதினர்.

“...கோவலர்

கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க” (அகம்.54);

தலைவன் தேர்ப்பாகனிடம் தலைவியிடத்து உடன்செல்ல வேண்டிய நிலையை எடுத்துரைக்கிறான்.

சிலப்பதிகாரத்து ஆய்ச்சியர் குரவை கண்ணன் கொன்றையங் குழலும், ஆம்பலங் குழலும் ஊதுவான் .என்கிறது (பா. 1&2).

3.3.2 பன்றிகள் கூட்டமாக வந்து புனத்தினை மேய்ந்த போது கானவர் கோடு ஊதி அவற்றை விரட்டினர்.

“சிறுகட் பன்றிப் பெருநிரை கடிய

முதைப்புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்

கருங்கோட் டோசை”- (அகம். 94& 279)

எனும் பகுதி காணற்குரியது.

3.3.3 அறுவடை சார்ந்த நிகழ்த்து கலையில்(க.எ.-3.2.2) வயிரியர்

யாழோடும் சேர்ந்து இசைத்தனர் என்பதால் வயிர் என்னும் ஊதுகருவி வேளாண்மை சார்ந்த இசைக்கருவிப் பட்டியலில் சேர்கிறது (பதிற். 29). இக்கருவி இன்றைய நாதஸ்வரத்தின் முந்தைய கால வடிவம் என்பர். மரக்கொம்பிலிருந்து செய்யப்பட்டதால் இடைக்காலத்தில் கொம்பு என்றும் வழங்கினர். கோடு என்பது விலங்கின் கொம்பினால் ஆனது

4.0 புன்செய் வழக்காறும்; நன்செய் வழக்காறும்:

4.1 புன்செய்க்காட்டில் வாய்ப்பாட்டும், குளிர், தட்டை, தழல்,கோடு முதலிய கருவிகளும் பெரிதும் பயன்பாட்டில் இருப்பதைக் காண்கிறோம் (க.எ.- 3.1.2).

“மழலையங் குறுமகள் மிழலையந் தீங்குரல்

கிளியும் தாமறி பவ்வே” (நற்.209)

என்பதால் புனத்தின் காவலுக்கு வாய்ப்பாட்டு பயன்பாட்டில் இருந்தமை மீண்டும் தெளிவாகிறது (க.எ.- 2.1.1.0- 2.1.1.2).

புன்செய்ப்பயிர் விளைந்த காட்டில் புடைத்த தட்டையின் ஒலியால் தலை சாய்ந்த கதிர் இருக்கும் கழனியிலிருந்தும் பறவைகள் பறந்தோடின.

“புனவர் தட்டை புடைப்பின் அயலது

இறங்குகதிர் அலமரு கழனியும்

பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ளொருங்கு எழுமே” (புறம்.49).

அத்துடன் குளிரும், தழலும் தந்து தாய் தினைப்புனம் காக்க அனுப்பினாள் (குறுந்.223). தினைப்புனத்துக் கிளி கடியச் சென்ற தலைவி குளிரும், தட்டையும் கொண்டு சென்றாள் (அகம்.- 32). பச்சைக்கிளிகளை விரட்டத் தட்டையோடு புனத்திற்குச் செல்வாயாக என்கிறாள் அன்னை (நற்.134). புனத்தில் தட்டையின் பயன்பாடு மிகுதி (மது.- அடி.-302-314).

4.2 நன்செயில் தண்ணுமையின் பயன்பாடு குறிப்பிடத்தக்கதாக

உள்ளது (அகம்.204, புறம்.348, & பதிற்.90). ஊதுகருவியுடன் கூடிய யாழிசை வயிரியரால் நிகழ்த்து கலையாக நடைபெற்றுள்ளது (க.எ. 2.1.3, 3.2.2& 3.3.3).

5.0 இசைக் கூறுபாடு கொண்ட ஒலிகள்:

வேளாண்மை மிகுந்த ஆரவாரத்தை உடையதாக இருந்தது. விலங்குகளை மருட்ட ஆர்ப்பு, புடைப்பு, வீளை எனப் பலவகை ஒலிகளையும் எழுப்பினர். வீளையொலியில் இருந்த இசைக்கூறுபாடும் பொருள் மாறுபாடும் வியந்து போற்றத்தக்கன.

5.1 கலிகொள் மள்ளர்

‘கலிகொள் மள்ளர்’ (அகம்.185) என்னும் தொடர் நோக்குக. ‘வெவ்வாய்த் தட்டை’ (அகம்.388) என்ற தொடர் தட்டையிலிருந்து எழுந்த ஒலியின் மிகுதியை உணர்த்துகிறது. தட்டையுடன் குளிர் இணைத்து ஒலிக்கப்பட்டது (க.எ.-1.2). தழல், தட்டை இரண்டையும் ஒருங்கு ஒலித்தும் பறவைகளை ஓட்டினர். (க.எ.-4.1). மூன்றையும் தேவைக்கேற்பப் பயன்படுத்தினர்.

“தழலும் தட்டையும் குளிரும் பிறவும்

கிளிகடி மரபின ஊழூழ் வாங்கி” (குறி.- அடி-43)

என்பது காண்க. ஒருவரது புனத்தில் யானை நுழைந்துவிட்டால்; பலரும் ஒன்றுகூடி மடிவிடு வீளையராய் வெடிபடுத்தெதிர; யானை பின்வாங்கியதென அறிகிறோம் (குறி.-அடி.-158-161) மான் கூட்டத்தையும் வீளையிட்டு விரட்டினர் (நற். 265).

5.2 கோவலரின் வீளையொலி கால்நடைகளுக்குச் செய்தி கூறியது.

“தண்டுகால் வைத்த ஒடுங்குநிலை மடிவிளி

சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்

புறவினதுவே” (நற்.142)

என்னும் பாடற்பகுதி சொல்லும் நுட்பமான செய்தி என்னவெனில் கோவலரின் வீளையொலிக்கேற்பக் கால்நடை வேற்றுப்புனத்தில்

நுழையாமல் காட்டில் மேய்ந்தது என்பதாகும்.

புனக்காவலில் எழுந்த ஆரவாரம் பற்றி இளங்கோவடிகளும் பேசுகிறார். (காட்சிக்காதை- அடி.-26& 30) நெற்கூட்டில் சென்று செங்கட்காரான் உரசப் புரி நெகிழ்ந்து மணிகள் சிதற; உழவர் பலரும் சேர்ந்து ஆர்த்து அதனை விரட்டினர். (சிலப்.- நாடு.- அடி.- 121-126)

6.0 தொகுப்புரை:

பல படிநிலைகளாக அமையும் வேளாண்மையில் இசை ஏழு காலக்கட்டங்களில் பயின்று வந்தது. அவையாவன: நாற்று நடல், களை எடுத்தல், கதிரில் பால் பிடிக்கும் பருவமுதல் முற்றும் வரை தொடர்ந்து காத்தல், அறுவடை செய்தல், பகடு ஓம்புதல், மழை வெள்ள அபாயத்தை அறிவித்தல், விளைந்த மணிகளை உணவுக்காகப் பக்குவப்படுத்தல் முதலியனவாம்.

வேளாண்மைசார் இசையில் வாய்ப்பாட்டும், கருவி இசையும் இருந்தன. தினைப் புனத்தில் கொடிச்சி குறிஞ்சிப்பண் பாடினாள். இன்றைய நடவுப் பாட்டுக்கும், உலக்கைப் பாட்டுக்கும் சங்க இலக்கியத்தில் வேரைக் காண முடிகிறது. கருவிகளால் எழுப்பிய இசை கறங்கிசை ஆகவும்; சிலம்பொலி, மழையொலி போன்றும் இருந்தது. அறுவடையின் போது இசைநிகழ்ச்சி நடந்தேறியது.

துடிப்பறை, கிணைப்பறை, தண்ணுமை, மூங்கிலை அறுத்துச் செய்த தட்டை, முதலியவை அவர்கள் பயன்படுத்திய புடைக்கும் கருவிகளாம். பிரம்பினால் செய்த தழல் சுழற்றி ஒலியெழுப்பும் கருவி. மூங்கிலை வளைத்துச் செய்த குளிர் தெறித்து ஒலியெழுப்பும் கருவியாகும். யாழ் நரம்புக்கருவியாம். ஆம்பலங்குழல், கொன்றையங் குழல், மூங்கில்குழல் எனப் பலவகைக் குழல்களும்; கோடும், வயிரும் வழக்கில் இருந்த ஊதுகருவிகளாம்.

புன்செய்க்காட்டில் வாய்ப்பாட்டும், குளிர், தட்டை, தழல்,கோடு முதலிய கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. நெற்கழனிகளில் நடவுப்பாட்டும், தண்ணுமையின் பயன்பாடும், யாழுடன் வயிரியரின் நிகழ்த்து கலையும் குறிப்பிடத்தக்கனவாக இருந்தன. வேளாண்மை ஆரவாரத்தில் ஆர்ப்பு, புடைப்பு, எனப் பலவகை ஒலிகளும் விலங்குகளை மருட்ட; வீளை ஒலியில் இருந்த இசைக்கூறுபாடு பொருள் பொதிந்த செய்தி கூறப் பயன்பட்டது.

களைப்புத் தெரியாமல் வினையாற்ற கருவியிசையும் வாய்ப்பாட்டும் நிகழ்த்து கலையும் பண்டைத் தமிழகத்தில் பேரிடம் வகித்தன.