/ புறநானூறு / 094: சிறுபிள்ளை …

094: சிறுபிள்ளை பெருங்களிறு!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை: அரச வாகை.

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே. 5

பெரும! நீ, நீர்த்துறையில் படிந்திருக்கும் யானை அதன்மீது ஊர்ந்துவந்து அதன் கொம்புகளைக் கழுவும் மக்களுக்கு அடங்கிக் கிடப்பது போல எம்போன்ற பாணர்க்கும் புலவர்க்கும் இனிமை தருபவன். உன் பகைவர்க்கு அந்த யானையின் மதநீர் போலக் கொடுமையானவன்.