/ புறநானூறு
/ 124: வறிது …
124: வறிது திரும்பார்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.
நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப்,
பதனன்று புக்குத், திறனன்று மொழியினும்,
வறிது பெயர்குநர் அல்லர்; நெறி கொளப்
பாடு ஆன்று, இரங்கும் அருவிப்
பீடு கெழு மலையற் பாடி யோரே. 5
மலையமான் திருமுடிக் காரியைப் பாடிய புலவர் எந்த நாளில் சென்றிருந்தாலும், சகுனத் தடையோடு சென்றிருந்தாலும், அரசனைக் காணுவதற்கு உரிய பதம் பார்த்துச் செல்லாதிருந்தாலும், அவன் திறமை அல்லாத வேறி எதையோ பாடினாலும் வெறுங்கையோடு மீளமாட்டார்கள். அருவி ஒழுகும் மலையனுக்கு அதுதான் பெருமை.