315: இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்:
அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை: வல்லான் முல்லை.
உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;
மடவர் மகிழ்துணை; நெடுமான் அஞ்சி;
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்,
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் 5
கான்றுபடு கனைஎரி போலத்,
தோன்றவும் வல்லன்_ தான் தோன்றுங் காலே.
அரசன் நெடுமான் அஞ்சி வீட்டுக் கூரையில் செருகி வைத்திருக்கும் தீக்கடைக்கோல் போல அடங்கிக் கிடக்கவும் தெரிந்தவன். அது தீப் பற்றிக்கொண்ட பின்னர் காட்டையே எரிக்கும் தீயாக மாறுவது போல போர்களத்தில் பகைவரை எரிக்கவும் வல்லவன்.
உடையன் - இருக்கும்போது நன்கு உண்பான்.
கடவர் - கலைக்கடமை பூண்ட வாழ்பவர் இரக்கும்போது வழங்கி மகிழ்பவன்.
மடவர் - மடப்பத் தன்மை பூண்ட மகளிர்க்குத் துணைவனாக வாழ்பவன்.
அவன் பெயர் நெடுமான் அஞ்சி.