/ புறநானூறு / 358: விடாஅள் …

358: விடாஅள் திருவே!

பாடியவர்: வான்மீகியார்
திணை: காஞ்சி
துறை: மனையறம், துறவறம்

பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே;
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்,
கைவிட் டனரே காதலர்; அதனால் 5

விட்டோரை விடாஅள், திருவே;
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.
 
உலகை ஆளும் பேற்றினையும், தவத்தினையும் சீர்தூக்கி நிறுத்துப் பார்த்தால் தவத்திற்கு ஆட்சிப் பேறானது கடுகளவு கூட ஈடாகாது. (ஐயவி = வெண்சிறு கடுகு)
காரணம், இந்தப் பெருநிலம் ஒரு பகல்-பொழுதில் எழுவர் ஆளுகைக்கு மாறக்கூடியது.
அதனால், உலகப் பற்றை விட்டவரைத் திருமகள் கைவிடமாட்டாள்.
உலகின்மீது பற்றுடையவர்களைத் திருமகள் கைவிட்டுவிடுவாள்