/ Tamil Pulvarkal
/ அதியமான் தகடூர் …
அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி
-
- இவன் ஓரரசன்; போரில் வல்லவன்; சிறந்த கொடையாளிகளுள் ஒருவன்; செங்கோலையுடையவன்; இவன் யுத்தத்தில் இறந்தபொழுது பிரிவாற்றாது வருந்தி யமனை நோக்கி, “நோயுழந்து வைகிய வுலகினு மிகநனி, நீயிழந்தனையே யறனில் கூற்றம், வாழ்தலின் வரூஉம் வயல்வள னறியான், வீழ்குடி யுழவன் வித்துண் டாஅங், கொருவ னாருயி ருண்ணா யாயின், நேரார் பல்லுயிர் பருகி, ஆர்குவை மன்னோவவ னமரடு களத்தே” என்று அரிசில் கிழார் கூறிய பாட்டே இவன் இத்தன்மையனாதலைப் புலப்படுத்தும்; அதியமான் தகடூரெறிந்துவீழ்ந்த எழினியென்றும் பிரதி பேதமுண்டு.
அதியமான் நெடுமானஞ்சி
- இவன் கடையெழுவள்ளல்களிலொருவன்; யுத்தத்திற் பேர்பெற்ற வீரன்; ஒருவகை வீரர்களாகிய மழவர்களுக்குத் தலைவன்; ஒரு காலத்தில், உண்டோரை நெடுங்காலம் சீவித்திருக்கச் செய்யும் கருநெல்லிப்பழத்தைப் பெற்று அதனை ஒளவைக்குக் கொடுத்துப் புகழ்பெற்றவன்; காஞ்சிநகரத்திருந்த தொண்டைமானென்னும் அரசனிடம் ஒளவையைத் தூதுவிடுத்தோன்; சேரமானுடைய உறவினன்; பனைமாலையை யுடையவன்; வெட்சிப் பூவையும் வேங்கைப் பூவையும் அணிவோன்; அரசரெழுவர்க்குரிய ஏழிலாஞ்சனையும் நாடும் அரசவுரிமையு முடையோன்; மேற்கூறிய அரசர் எழுவரோடு பகைத்து மேற்சென்று அவரைப் போரில் வென்றோன்; பரணர் புகழ்ந்து பாடும்படி கோவலூரையும் வென்றான். இவனுடைய ஊர் தகடூர்; இவன் மலை குதிரைமலை; இவன் மகன் பொகுட்டெழினி; இவன் முன்னோர், தேவர்களைப் போற்றி வழிபட்டு விண்ணுலகிலிருந்து கரும்பை இவ்வுலகிற் கொணர்ந்தனர். அவர்களுக்கு வரங்கொடுக்கும் பொருட்டுத் தேவர்கள் வந்து தங்கியதொரு சோலை இவனூரில் இருந்தது. இவன் பெயர் அதிகமான் நெடுமானஞ்சியெனவும், நெடுமானஞ்சி யெனவும், அஞ்சி யெனவும், எழினி யெனவும் வழங்கும்; 158.
- இவன் சேரமான் பெருஞ்சேரலிரும்பொறையால் வெல்லப்பட்டானென்று பதிற்றுப்பத்துள் எட்டாம்பத்தினால் விளங்குகின்றது. ‘ஒருவன்மேற் சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது தன் மதிற் புறத்து வருந்துணையும் இருப்பின் அஃது உழஞையின் அடங்கும் ; அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதியமானிருந்ததாம்‘ (தொல் புறத்திணை. சூ. 7, ந.) என்றதனால் இவனுடைய வரலாற்றின் ஒரு பகுதி அறியப்படுகின்றது. இவனைப் பாடியவர்கள்; ஒளவையார், பரணர், பெருஞ்சித்திரனார், பொன்முடியார்.
அதியமான் நெடுமாஞ்சிமகன் பொகுட்டெழினி
- இவன் கொடையும் இன்பச்சிறப்பும் வென்றிச்சிறப்புமுடையோன்: இவன் பெயர் அதியமான் மகன் பொகுட்டெழினி எனவும் வழங்கும்; இவனைப் பாடியவர் ஒளவையார்.