/ Tamil Pulvarkal / கோச்சேரமான் …

கோச்சேரமான் யானைக்கட்சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை

    • இவன் செங்கோலையுடையவன்; யானையினது பார்வைபோலும் பார்வையை யுடையவன்; கொல்லிமலைக்குத் தலைவன்; விளங்கிலென்னும் ஊரார்க்குப் பகைவரான்வந்த துன்பத்தைத் தீர்த்தோன்; கபிலருடைய நண்பன்; கடற்கரையிலுள்ள தொண்டியென்னும் நகரத்தை ஆண்டோன்; ஒரு காலத்து, பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் கட்டப்பட்டுப் பின்பு அதனை நீக்கிக்கொண்டு புகழ் பெற்றோன்; சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு போர் செய்தோன்; இவன் பெயர் யானைக்கட்சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை யெனவும், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை யெனவும், சேரன் மாந்தரஞ் சேரலிரும்பொறை யெனவும் வழங்கும். எட்டுத்தொகையுள் ஒன்றாகிய ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தோன் இவனே. இவனைப் பாடிய புலவர்: குறுங்கோழியூர்கிழார், பொருந்தில் இளங்கீரனார், கூடலூர்கிழார்; இவருள் இவன் இறந்த பின்பும் இருந்தவர்: கூடலூர்கிழார்.

சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரலிரும்பொறை

  • இவனைக் கண்டபொழுது நரிவெரூஉத்தலையார்க்குப் பழைய நல்லுடம்பு கிடைத்தது; இவனைப் பாடிய புலவர் அவரே.

சேரமான் குடக்கோச் சேரலிரும்பொறை

  • இவன் பெயர் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையெனவும் வழங்கும்; பதிற்றுப்பத்தில், ஒன்பதாம் பத்திற்குத் தலைவன் இவனே; இவனைப் பாடியவர் பெருங்குன்றூர்கிழார்.

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை

  • கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையென்னும் பெயரைப் பார்க்க. இதனை ஒட்டுப்பெயரென்பர் (இ. வி. சூ. 38, உரை) . இவனைப் பாடிய புலவர் குறுங்கோழியூர்கிழார். இவனுடைய பிற வரலாறுகள் ஐங்குறுநூற்றிற் காணலாகும்.