/ Tamil Pulvarkal / சோழன் …

சோழன் நல்லுருத்திரன்

    • இப்பெயர் சோழன் நல்லுத்தரனெனவும் நல்லுத்திரனெனவும், உருத்திரனெனவும் பிரதிகளில் வேறுபட்டுள்ளது. இவன் முயற்சியுடையோரிடத்து மிக்க விருப்பும் முயற்சியில்லாரிடத்து மிக்க வெறுப்புமுடையானென்றும் சிறந்த நட்புடையவர்பாற் பழகும் இயல்பினனென்றும் இவன் பாடிய பாடல் தெரிவிக்கின்றது; கலித்தொகையில் முல்லைக்கலி இவன் பாடியது.

சோழன் நலங்கிள்ளி

  • இவன் பகைவரை அஞ்சாது, வெல்லும் ஆற்றலுடையவனென்றும் பொதுமகளிரைச் சிறிதும் விரும்பாதவனென்றும் இரப்போர்க்கு எவற்றையும் வரையாதுகொடுக்கும் வள்ளலென்றும் செங்கோலை உடையவனென்றும் இவன்பாடிய பாடல்கள் தெரிவிக்கின்றன. இவனுடைய மற்ற வரலாற்றைப் பாடப்பட்டோர் பெயர் வரிசையிற் காண்க. இவன் இயற்றிய பாடல்கள் புறநானூற்றில் இரண்டு.

சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி

  • இவன் யுத்தத்தில் வல்லவன்; தேர்வண்மலையனென்பவனைத் துணையாகக் கொண்டு சேரமான் மாந்தரஞ் சேரலிரும்பொறையோடு பொருது அவனை வென்றான்; சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில்கடந்த உக்கிரப் பெருவழுதி யென்பவர்களின் நண்பன். இவனைப் பாடியவர்கள்: பாண்டரங்கண்ணனார், ஒளவையார், உலோச்சனார். இன்னும் இவன் காலத்துப் புலவர் வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்.

சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி

  • இவன் சிறந்த வீரன். இவனைப் பாடிய புலவர் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார். காலேகப்பள்ளியெனவும் பிரதிபேத முண்டு.

சோழன் உருவப்பஃறேரிளஞ் சேட்சென்னி

  • இவன் சோழன் கரிகாற் பெருவளத்தான் தந்தை; அழுந்தூர் வேளிடை மகட்கொண்டோன். இதனை, “மன்னர்பாங்கின்” (தொல். அகத்திணை. சூ. 30, ந.) என்பதன் உரையாலுணர்க; “உருவப்பஃறே ரிளையோன் சிறுவன்” (130) என்றார் பொருநராற்றுப்படையிலும்; வீரத்திலும் கொடையிலும் சிறந்தோன். இவன் பெயர் இளையோனெனவும் வழங்கும். இவனைப் பாடிய புலவர்கள்; பரணர், பெருங்குன்றூர்கிழார்.

சோழன் குராப்பள்ளித்துஞ்சிய கிள்ளிவளவன்

  • இவன் ஒரு சேரனோடு பகைமைகொண்டு அவனது கருவூரை யழித்தான். இவனைப் பாடிய புலவர் கோவூர்கிழார்.

சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன்

  • இவன் பாண்டியன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதியோடு நட்புடையவன். இவனைப் பாடிய புலவர்கள்: காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

  • இவனது இராசதானி உறையூர்; மிக்க கொடையும் வீரமும் உடையோன். செய்யுள் செய்தலில் வல்லவன்; கருவூரை முற்றுகைசெய்து சேரனை வென்றவன்.‘ இவனைப் பாடிய புலவர்கள்: ஆலத்தூர்கிழார், மாறோக்கத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார், ஆடுதுறை மாசாத்தனார், ஐயூர் முடவனார், கோவூர்கிழார், நல்லிறையனார், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், வெள்ளைக்குடி நாகனார்; இவருள், இவன் இறந்த பின்பும் இருந்து பிரிவாற்றாது வருந்தியவர்கள்: மறோக்கத்து நப்பசலையார், ஐயூர்முடவனார், ஆடுதுறை மாசாத்தனார்.

சோழன் செங்கணான்

  • இவன் சேரமான் கணைக்கால் இரும்பொறையோடு போர்செய்து அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைப்படுத்தினான். பொய்கையார் பாடிய ‘களவழிநாற்பது’ என்னும் நூலின் தலைவன் இவனை. இவன்காலத்துப் புலவர் பொய்கையார்; இப்புத்தகம் 635-ஆம் பக்கத்தின் அடிக்குறிப்பைப் பார்க்க.

சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி

  • இவன் மிக்க வீரமும் கொடையுமுடையோன்; இவனைப் பாடிய புலவர்; ஊன்பொதி பசுங்குடையார்.

சோழன் நலங்கிள்ளி

  • இவன் கவிசெய்தலில் வல்லவன்; பாண்டிய நாட்டிலிருந்த ஏழரண்களை அழித்துக் கைக்கொண்டு அவற்றில் தனது புலிக்கொடியை நாட்டினான்; தன் தாயத்தாரோடு பகைத்து அவர்கள் இருந்த ஆவூரையும் உறையூரையும் முற்றுகை செய்தான்; மாவளத்தானென்ப வனுக்குத் தமையன்; இவனுக்குச் சேட் சென்னியென்றும் புட்பகையென்றும் தேர்வண்கிள்ளியென்றும் பெயருண்டு; நெடுங்கிள்ளி யென்பவனோடு பகைமையுடையோன்; முன்னர், போர்செய்து வெற்றி கொள்ளுதலையே பொருளாகக் கொண்டிருந்த இவன் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சொல்லாற் பின்பு அதனைத் துறந்து அறஞ்செய்தலையே மேற்கொண்டான்; இவனைப் பாடிய புலவர்கள்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர்கிழார், ஆலத்தூர்கிழார்.

சோழன் நலங்கிள்ளிதம்பி மாவளத்தான்

  • இவனைப் பாடிய புலவர் தாமப்பல்கண்ணனார்.

சோழன் நெய்தலங்கான லிளஞ்சேட்சென்னி

  • இவனைப் பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்; நெய்தலங்காலையெனவும் இப்பெயர் சில பிரதிகளிற் காணப்படுகின்றது.

சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி

  • இவன் தித்தனென்னுஞ் சோழனுடைய மகன். அவனோடு பகைத்து நாடிழந்து வறுமையுற்றுப் புல்லரிசிக்கூழை யுண்டிருந்தான்; முக்காவல்நாட்டு ஆமூர் மல்லனைப் பொருது கொன்றான். இவனைப் பாடிய புலவர்கள்: சாத்தந்தையார், பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார்.

சோழன் முடித்தலைக்கோப்பெருநற்கிள்ளி

  • இவன் சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறையோடு பகைமையுடையவன்; இவனைப் பாடிய புலவர் உறையூர் ஏணிச்சேரிமுடமோசியார்.

சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி

  • இவன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனோடு போர்செய்து இறந்தான். அக்காலத்து இவனைப் பாடிய புலவர்: கழாத்தலையார், பரணர்; இவன் பெயர் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியெனவும் வழங்கும்.