/ Tamil Pulvarkal / உறையூர் …

உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

    • ‘முதுகண்’ என்பது பிராயத்தாலும் அறிவாலும் முதிர்ந்து, அரசர்க்கும் பட்டத்தேவிகளுக்கும் உசாத்துணையாக இருந்து நீதிகளைச் செவியறிவுறுத்தும் ஆண்பாலார் பெண்பாலார்க்குரிய பெயராகச் சிலாசாசனம் முதலியவற்றிற் காணப்படுகின்றது; “முற்றிழை மகளிர்க்கு முதுக ணாமென” (பெருங். 1. 36 : 198) என வருதலும் காண்க; இவர், உறையூர் அரசர் பால் அத்தொழிலை உடையவராக இருந்தார்போலும்; இவராற் பாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி; இவர்காலத்துப் புலவர் அவனைப் பாடிய ஆலத்தூர்கிழாரும் கோவூர்கிழாரும்; இவர் சிறந்த குடியிற் பிறந்தவருக்குத் தாமரைப்பூக்களையும், வளர்தல் முதலியவற்றை யடைந்தபொருள் குறைதல் முதலியவற்றையடையுமென்பதற்குத் திங்களையும் உவமைகூறியிருத்தலும், அருளுங் கொடையும் வெற்றிக்கும் அவையின்மை தோல்விக்கும் காரணமென்பது புலப்பட, “அருளவல்லை யாகுமதி யருளிலர், கொடாமை வல்ல ராகுக, கெடாத துப்பினின் பகை யெதிர்ந்தோரே” (27) என விளக்கியிருத்தலும் நன்கு மதிக்கற்பாலன. இவர் செய்தனவாக 6-செய்யுட்கள் உள்ளன : குறுந். 1; புறநா. 5.